ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday, 24 April 2026

தவெக - தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ல் என்ன செய்யும்?

 எனக்குத் தெரிந்தவரை தவெக மிகப்பெரிய ஓட்டுடைப்பியாக வரும். பாதிக்கப்படப் போவது திமுக கூட்டணி பெருமளவில். காரணம்: 


1. திமுகவில் உள்ள <30 ஊப்பிகள், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் விஜய் ஆதரவு மனநிலையில் உள்ளனர். முக்கியக் காரணம் கட்சியில் இன்னும் தாத்தன், அப்பன், மகன், பேரன் என்று போவதால் 200₹க்கு மேல் உயர நினைக்கும் சாதாரணப்பட்டவர்கள் மாற்று ஏற்பாடு தேடுகிறார்கள். விஜய் புதிய ஏற்பாடாக அவர்களுக்குத் தெரிகிறார். கொள்கை எல்லாம் கருணாநிதி காலத்திலேயே நீர்த்துப் போகத் தொடங்கிவிட்டது. பிடிப்பு என்று பணப்புழக்கம் இருந்தது. இம்முறை ஆட்சியில் அதுவும் கட்சிக்காரர்களுக்கு இல்லை. விட்டுப்போவதில் ஆச்சரியமில்லை. 


2. விசிகவில் உள்ள <30 மக்கள் விஜய் கட்சி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். இதற்கு உடனடிக் காரணம் திருமாவளவன் திமுகவிடம் செய்துகொண்ட அதீத சமரசம். மற்ற காரணங்கள்: பிற கட்சிகள் விசிகவை வராதே என்று பல இடங்களில் தடுப்பது, விசிகவுக்கு சமுதாயத்தில் இருக்கும் எதிர்மறை பிம்பம். கூட்டணியில் தேமுதிக பெற்ற மரியாதை, விசிகவுக்கு தேமுதிக பொதுவெளியில் செய்யும் அவமரியாதை. விஜய் கட்சி என்றால் இவை எதுவும் இல்லை. 


3. காங்கிரஸ் ஆடும் கெட்ட ஆட்டம். அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்யும் ராகுல், இன்னும் தவெக ஏக்கத்தில் திமுகவை ஏசிக்கொண்டிருக்கும் சில காங்கிரஸ் தலைவர்கள்/ தொண்டர்கள். காங்கிரஸை வெங்கம்பயல்கள் என்ற வகையில் வசைபாடும் திமுக தொண்டர்கள். களத்தில் ஒருங்கிணையாத காங்கிரஸ் - திமுக கூட்டணி. 


4. சசிகலா: ஆமாம். அந்த அம்மையாரின் அஇபுதமமுக கூட்டத்துக்கு நம்ம இனத்தானுகள்ல என்று வரும் பல முக்குலத்தோர் ஊப்பிகள். இவர்களால் பெருமளவில் ஓட்டுப்போகுமா என்றால் அளவு சொல்ல ஏலாது. ஆனால் ஓரளவு போக வாய்ப்பு. இவர் அதிமுவுக்கும் ஆபத்துத்தான். 


5. அம்மஞ்சல்லிக்குப் பெறாத ஆனால் திமுகவிடம் வாங்கிக் கொழிக்க வரும் தேமுதிக உள்ளிட்ட லெட்டர்பேட் கட்சிகள். அவர்களுக்குத் தரப்பட்ட அசாத்திய முக்கியத்துவம் மற்ற கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் எடுபடாது. வெறுப்பையே தரும். 

இவை போதாதென்று ஆட்சியின் மீதான வெறுப்பு. 


பாஜக மாற்று என்று பார்க்கப்பட்டது போக அதிமுகவுடன் இணைந்துவிட்டதால் பாஜக வேண்டாம் என்று எண்ணும் இளைஞர்கள் சீமானையும் ஏற்காத நிலையில் விஜய் மாற்றாகத் தெரிகிறார். 


இது குறிப்பிடத்தக்க அளவு ஓட்டுகளை மடைமாற்றும். எதிர்நோக்கும் மாற்றம் எப்படி இருக்கும் என்பதற்குச் சொல்லப்படும் பதில்கள் நம்பிக்கை சார்ந்தவை மட்டுமே. தரவுகள் இல்லை. இவர்கள் பெருமளவில் வெல்வதற்கான வாய்ப்பும் குறைவு. பல இடங்களில் பிரிக்கலாம், சிற்சில இடங்களில் மேயலாம். 


மே 4 அன்று பார்க்கலாம்.

Thursday, 1 January 2026

புள்ளிங்கோ கலாச்சாரம் - கொலை, தாக்குதல் - காரணம் என்ன?

 கோவையில் கொலை, திருத்தணியில் திமிருக்கு நடந்த தாக்குதல் இதெல்லாம் சட்டம் ஒழுங்குத் தோல்வி என்ற வகையில் தான் அடங்கும். பெற்றோரின் வளர்ப்புத் தோல்வி, ஆசிரியர்களின் கண்டிப்புத் தோல்வி எல்லாமே அரசின் தலையில் தான் விடியும். 


காரணம்?

Wednesday, 5 November 2025

ஓட்டுத் திருட்டு - கையாலாகாதவன் கூக்குரல்

இங்க பாரு…. உருண்டாச்சு பொரண்டாச்சு… குட்டிக்கரணம் கூட போட்டாச்சு. ஒண்ண்ணும் ஒத்துவல்லே… ஜனங்க சீரியஸா எடுத்துக்க மாட்டேங்கறா… நீங்க gen-z இளசுகள் புரக்ஷி பண்ணுவான்னு வாய ஆன்னு தெறந்து வெச்சுண்டு பாக்கறேள்.… அவங்கதான் மோடி மோடின்னு அந்த மனுஷன் பின்னாடியே போறான். அவங்க கூட உக்காந்து பேசறதுக்கும் அப்டேட்டடா இருக்கார் அந்த மனுஷன்.




உங்காளு என்ன பண்றான்? ஜியோல ரீல்ஸ் போட்டா அதானிக்கு காசு போறதுன்னு ஒளர்றான். அம்பானி மொறைக்கறான். இளசுகள் எதால சிரிக்கறதுன்னு இன்ஸ்டால பேசிக்கறதுகள். எங்க உருப்படறது?


ஓட்டுத் திருட்டுங்கறான். ஆதாரம் ரீம் ரீமா பேப்பர்ல இருக்குங்குங்கறான். கோர்டுக்குப் போயேண்டான்னா போன தடவ அவா ஒதைச்சதே இன்னும் வலிக்கறது. அதனால தெருத்தெருவா இப்படிப் பேசிண்டு திரிவேன், கோர்ட்டுக்கு மட்டும் போக மாட்டேங்கறான். ஜனங்க இருக்கட்டும் ஏ ஹே ஹேய்… பாத்தியா நோக்கே சிரிப்பு வரது.


இவன் தீக்குளிச்சாக்கூட சிரிக்கத்தான் செய்வா தெரியுமோ. ஏன்னு கேக்கறியா? ஊத்திக்கற பெட்ரோல்ல இருந்து அதானிக்கு ரூபிள்ல லாபம் வருதும்பன் இவன். இம்போர்ட் பண்ற அம்பானி பல்லக் கடிப்பன். இளசுகள் தலேல அடிச்சுண்டு போடா பொம்மான்னு டீ குடிக்கப் போயிடும்.


ஒண்ணூ உனக்கா விஷய ஞானம் இருக்கணும். இல்லே சொல்லித்தரவன் புத்திசாலியா இருக்கணும். இங்க ரெண்டும் இல்லே… எங்கிட்ட பொலம்பி என்ன ஆகப் போறது? 


Thursday, 18 September 2025

சௌதி - பாக் ஒப்பந்தம்: அடுத்த நேட்டோ என்றால் பூட்டோ கதி தான்

 நேட்டோ போன்ற ஒரு அரபு அமைப்பை ஏற்படுத்த அரபு நாடுகள் முனைகின்றன. காரணம் அமெரிக்கா தன் நலனுக்காக மட்டுமே செயல்படும் என்பதை வெளிப்படையாக உணர வைக்கின்றனர் ட்ரம்ப் நிர்வாகத்து ஆட்கள். பழையவர்கள் பேசிப்பேசியே ஆளைக் கரைத்துத் தன் நலத்தைச் சாதிப்பார்கள். அதனாலேயே இஸ்ரேல், அரபு நாடுகள் என்று ஒன்றை மற்றொன்று அழிக்க நினைக்கும் இரு சக்திகளைச் சமநிலையில் வைத்துத் தன் நலத்தைப் பேணிக் கொண்டது அமெரிக்கா. 

Sunday, 14 September 2025

தன்னெழுச்சியான “இளசுகள்” போராட்டம் - பின்னணியில் யார்?

நேபாளத்தின் இப்போதைய தன்னெழுச்சியான “இளசுகள்” போராட்டத்தை முன்னின்று நடத்தியது “ஹமி நேபாள்” என்ற NGO. இந்த அமைப்பின் தலைவர் சுடங் குருங் என்பவர்.

இவரது NGOக்கு நிதி அளித்து ஆதரிப்பவர்கள் பட்டியலில் Infinity Holdings என்ற ஆயுத வியாபார நிறுவனத்தின் தலைவர் தீபக் பட்டா முதன்மையானவர். இவர் மீது இத்தாலிய நிறுவனத்திடம் நேபாள போலீசுக்கு துப்பாக்கி வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்கு உள்ளது.

கொரோனா காலத்தில் நேபாளத்தில் தெர்மாமீட்டர் பதுக்கி அதிகவிலைக்கு விற்ற குற்றவாளி சாஹில் அகர்வால் என்பவர் ஹமி நேபாளுக்கு நிதியளிப்பவர்களில் மற்றொருவர்.

டாக்டர் சந்துக் ருயிட் எனும் மகசேசே விருது பெற்ற கண் மருத்துவர் மற்றொரு சர்வதேச ஆதரவு, நிதி திரட்டும் ஆள்.

இப்படியாகத்தான் நேபாளத்தின் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Saturday, 6 September 2025

டாலர் ஆதிக்கம் விழும் - ஸ்டான்ஃபோர்டு பே

 Matteo Maggiori. இவர் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர். குறிப்பாக geo-economics நிபுணர்.  6500 பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியோ, மேற்பார்வை செய்தோ, வழிகாட்டியோ சம்பந்தப்பட்டவர். இவர் ட்ரம்புக்கு ஒரு பாடம் எடுக்க முனைந்திருக்கிறார். டரம்புக்கு ஏறாது. நாம் பார்ப்போம். 


உலக அளவில் ஆதிக்கம் என்பது இரு வகைப்படும். சிறுகூறுகளில் ஆதிக்கம். பேரளவிலான ஆதிக்கம். 

சிறுகூறுகளிலான ஆதிக்கம் என்பது சில துறைகள் சார்ந்த ஆதிக்கம். உதாரணமாக செமி கண்டக்டர், தாதுக்கள், மருந்துகள், ஆயுதங்கள் போன்றவை.

Friday, 15 August 2025

புவி வெப்பத்தினால் ஆன மின்சாரம் - பூகா - லே (லடாக்)

 பூகா (Puga) 14400 அடி உயரத்தில் உள்ள இமாலயப் பள்ளத்தாக்கு. லேயிருந்து 170 கிமீ தூரம். இங்கே வெப்பநிலை கடுங்கோடையில் -10 டிகிரி. குளிர் காலத்தில் -40 டிகிரி. இயற்கையான வெந்நீர் ஊற்றுகள் இப்பகுதியில் அதிகம். இங்கே உள்ள சில கிராமங்களுக்கு மின்சாரம் டீசல் ஜெனரேட்டர் மூலமாகவே இதுவரை கிடைத்துவந்தது. 

இங்கே நம் ராணுவமும் ஓஎன்ஜிசியும் இணைந்து பனிப்படங்களின் அடியில் உறைந்து போன தாதுக்கள் பற்றி ஆராய்ந்தபோது இங்கே இயற்கை வெப்பம் பனிப்படலத்தின் அடியில் அதிகமாக இருப்பதை அறிந்தனர். அதுவே வெந்நீர் ஊற்றுகளுக்கு ஆதாரம் என்று கண்டனர். இந்த வெப்பத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றி ஆராய்ந்து, நம் நாட்டுத் தொழில்நுட்பம் கொண்டு துரப்பண வேலைகள் செய்து Geo thermal energy என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் புவி வெப்பத்தினால் ஆன மின்சாரத்தை எடுத்தனர். 


இப்போது இதை ஓஎன்ஜிசி பெரிய அளவில் செய்யும்.  இதன் மூலம் அங்கிருக்கும் கிராமங்கள் டீசல் மீதான சார்பின்றி மின்சாரம் பெறும். இந்த மின்சாரம் தட்பவெப்ப, சூழல் சார்பின்றி எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். புகை, கரிவாயு போன்ற களுதை குருதைகள் கிடையாது. செலவு மிகக் குறைவு. 

வந்தே மாதரம் 🙏 விடியோ 👇🏻

Thursday, 14 August 2025

பாகிஸ்தானிகளின் சவடால்கள் - சிரிப்புக்குப் பஞ்சமில்லை

 சிறு குழந்தைகளைக் கவனித்திருப்போம். பெரியவர்கள் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பூனை ஒன்று அருகே வந்தாலும் “ஏ பூஞை! உன்ன அதிச்சு நொயிக்கிப்புவேன். ஓதுதா” என்று வீரம் பேசும். அதே குழந்தை பெரியவர்கள் அருகில் இல்லாத வேளையில் பூனை தூரத்தில் இருந்தாலும் ஓடியே போய் பெரியவர்களின் மடியில் அமர்ந்து கொண்டு “பூஞை வட்டு. கயிக்கும்.” என்று பயத்தோடு ஒண்டிக்கொள்ளும். ஃபெயில்டு மார்ஷல் அசீம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் பஹல்காம் கொடூரத்திற்குப் பிறகு நாம் பாகிஸ்தானுக்குள்ளே புகுந்து தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்த போது வசனம் பேசிக்கொண்டே இருந்தார்கள்.  11 விமானத் தளங்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது நேராக அமெரிக்கா போய் ஐயா வலிக்கிதுங்க என்று அழுதார்கள். அமெரிக்கர்கள் நீதான் பேசணுமாம் போய் சமாதானம் பேசு என்றதும் வந்து சமாதானம் பேசிவிட்டு அவர்கள் நாட்டுப் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் வெற்றி வெற்றி என்று கூவினார்கள். 

Saturday, 2 August 2025

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 25% வரி மிரட்டல் - குறுகிய காலத்து வலி

 டோனல்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது Make America Great Again என்ற கோஷத்தை முன் வைத்தார். அதாவது அமெரிக்காவைச் சிறந்த நாடாக்குவோம் என்றார். அதற்காக பல வேலைகளை அமெரிக்காவில் உருவாக்குவோம். கள்ளக்குடியேறிகளை விரட்டுவோம் என்று பல விஷயங்கள் சொன்னார். அதை எல்லாம் செய்யத் தொடங்கி பல ரௌடிக் கும்பல்களைப் பிடித்து தென்னமெரிக்காவில் சிறை வைத்தார். விசா இல்லாது வந்த பலரை அவரவர் நாடுகளுக்குத் திருப்பியனுப்பினார். அதன் பிறகு ஒவ்வொரு அமெரிக்கக் கம்பெனியாகப் பிடித்து அமெரிக்காவில் தொழிற்சாலை தொடங்கு, இங்கே வேலை கொடு என்று ஆரம்பித்தார். இங்கே தான் தொடங்கியது சிக்கல். பல கம்பெனிகள் சோலியைப் பாருமய்யா என்று சொல்லிவிட்டனர். அவர்களுக்கு அமெரிக்காவில் தொழிலைச் செய்வதில் முக்கியமான சிக்கல்கள் தேவையான ஆளில்லாமை, அதிகச் செலவு, கடும் தொழிலாளர் சட்டங்கள்.

Sunday, 27 July 2025

AI - தொழில்நுட்ப மாற்றம் - மனிதத் தேவை குறையும் - மேற்செல்ல வழி என்ன?

 Blunt truth. தொழிலநுட்ப மாற்றம் வர வரப் பழைய நுட்பங்கள் போகத்தான் செய்யும். புதியன வரத்தான் செய்யும். 

Phone booth 500₹ செல்ஃபோனால் முற்றாக அழிந்தது. Browsing center ரிலையன்ஸ், ஹாத்வே போன்ற இண்டர்நெட் இணைப்புகளால் வீழ்ச்சி தொடங்கி ஜியோவால் முற்றழிந்தது. 

கொரியன் லேப்டாப் 10000/15000 என்று கிடைக்கத் தொடங்கியபோது கம்பியூட்டர் ஒப்பந்தப் பணி நிலையங்கள் பயனிழந்து போயின.  

இப்போது லேப்டாப் (i-macஏ ஆனாலும்) சுமையாகிறது. 

இது போலவே IT வேலைகள் பழைய ஊதியப் பளபளப்பை இழக்கும். பல வேலைகள் ஏஐ வசம் போகும். இதுவரை மரியாதைக்குரிய வேலைகள் என்று பார்க்கப்பட்டவை மனிதர்கள் தேவையில்லை என்றாகும். உம்: coding, web design, security monitoring/patching, customer care, healthcare basics, basics of any work that involves computers, so to speak. 

Ethics சம்பந்தப்பட்ட வேலைகள், சட்டம்-முறைமைகள் பின்பற்றுதல் உள்ளிட்ட பணிகளில் மனிதத் தலையீடு தேவைப்படும். மருத்துவத்தில் மனிதத் தலையீடு கண்டிப்பாக இருக்கும், ஆனால் மிகக் குறைவாக. பாரா மெடிக்கல் வேலைகள் சில ஏஐக்குப் போகும். 

கணினித் துறை பழைய mass employer, mega paymaster அந்தஸ்தை இழக்கும். ஏஐ கற்றுக்கொண்டு ஓரளவு பிழைக்கலாம். ஆனால் பல விளம்பரங்கள் அளப்பது போல ஏஐ கற்றால் ஆண்டுக்கு 70லட்சம் என்பது எர்வாமேட்டின் கூந்தல் வளர்த்த கதை தான்.

அரசு தலையிட்டுக் காசு தருமா என்றால் ராகுல் காந்தி அவரோடு திரியும் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ உள்ளிட்ட பொர்லாதார வல்லுனிஸ்ட்கள் அப்படித் துட்டு தரச் சொல்ல வாய்ப்புள்ளது. அது விளங்காத செயல்பாடு. மோடி அப்படிக் காசு கொடுத்துச் செலவு செய்யச் சொல்ல மாட்டார். 

எந்த regulated பொருளாதார அமைப்பும் காலத்தால் நிலைக்காது. ஏற்ற இறக்கம் தன்னாலே நிகழும். சில வரைமுறைகள் மாறும். அதற்குப் பழகிக் கொள்வதே நீடித்திருக்க வழி.

மக்கள் IT தவிர்த்து வேறு core வேலைகளுக்குப் போவது நடக்கும். புதிய வேலைகள் தோன்றி அவற்றுக்கும் போகலாம். ஆனால் herd mindsetல் படிப்பில் ஒரே துறையைச் சார்வதும் அதிலும் ஓப்பியடித்தாலும் பட்டம் வாங்கிவிட்டால் போதும் விரல் பாவத் தெரிந்தால் வேலை என்பதும் நடக்காது. கற்றவை கற்றபின் எந்தளவுக்கு நிற்கிறதோ அந்தளவுக்குக் கற்றவன் நிற்கலாம். 

எதையும் ஆழ, அகலப் படித்துக் கூரோடு இருந்தால் மேம்படலாம். அல்லாத நிலையில் also ran அல்லது attempted run என்று வாழ்க்கை முடியும்.

Sunday, 6 July 2025

கூட்டணி, அவமானம் - தமிழக அரசியல்

 யூ நோ கர்நானிதி? இப்படித்தான் விஜயகாந்தை நோக்கி பளம் நளுவும் பால்ல வுளும்னு பொதுவிலேயே பேசி கூட்டணிக்கு ஆசையா இருந்தார். பளம் அவர் தோதுக்கு வுளலை. ஒடனே ஒரு மநகூ போட்டு விஜயகாந்தை ஓச்சுக்கட்டிட்டார். 


ஆகப்பெரிய ஆளுமை அம்புட்டுக்கு ஆவாரா என்றால் நிச்சயம் இல்லை. ஏணி இன்னும் மிதிவாங்கத் தயங்காதிருப்பதால் மட்டுமே அவர் ஆளுமை. சிறு தயக்கம் வந்தாலும் சோலி முடிஞ்.


ஆனால்  திமுகவில் சிலர் இன்னும் இருக்கிறார்கள். ஓரளவு திட்டம் போட்டு ஏற்றிவிட்டு இறக்கி கீஈஈழே வைப்பார்கள். அதில் கில்லாடிகள். அவர்களுக்கென்று திட்டத்தைச் செயல்படுத்த உதிரிகள் கட்சி நடத்துகிறார்கள். செலவுக்கும் அச்சமில்லை. 


உதயா இல்லை விசயா என்று சர்ச் மேலிடம் முடிவு பண்ண வேண்டும். அந்த முடிவில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் திமுகவினர் எம்டன்கள். அங்கே இருக்கிறது விசய்க்கான விசை.


அப்படியானால் தமிழக பாஜக முகத்தைத் மீண்டும் மீண்டும் துடைத்துக் கொண்டு விசயை அழைத்துக்கொண்டே இருக்கிறார்களே? 2024ல் அதிமுக மன்சூரலிகானை சரிக்கு சமமாக உட்கார்த்தி வைத்துத் தொகுதிப் பங்கீடு பேசியது நினைவிருக்கிறதா? அரசியல் அப்படித்தான். 


நிற்க. தமிழக பாஜகவில் திமுகவைத் தள்ளிவிட்டு நமிர்ந்து நிற்பதற்கு வலுவான, தெளிந்த அரசியல் ஆட்டக்காரர்கள் யாரும் எனக்குத் தென்படவில்லை. அண்ணாமலை ஓட்டு % அதிகரித்தார். ஆனால் கட்சி அமைப்பைக் வலுவாகக் கட்டமைத்து திராவிடக் கட்சிகளுக்குச் சவால் விடும் வகையில் அவர் செய்தவை தேவைக்கேற்ப இல்லை. அதற்கென இருப்பவர்கள் தேவையான வலுவில், வேகத்தில் சுழலவில்லை என்பதும் சுணக்கத்தின் காரணம். சச்சின் டெண்டுல்கரே ஆனாலும் அவரும் எதிரே நிற்பவரும் ஒன்றாக ஓடவேண்டும். அப்படி ஓடினால் தான் ரன் கணக்கு வரும். அரசியல் என்பது டெஸ்ட் மேட்ச். பொறுப்பேற்றவர் அனைவரும் அவரவர் பங்கைச் சரியாக அளிக்கவேண்டும். ஒருவர் மட்டும் அடித்து ஆடி வெல்வது நடக்கிற விஷயமில்லை.  


மற்றவர்கள் எதிமுகவையே அண்ணாந்து பார்க்கிற நிலை தான். ஆட்டத்தில் தெளிந்த, துணிந்த சில ஜித்தர்கள் தேறும்வரை அமித்ஷா அவரது புரிதலுக்கேற்ற ஆட்டத்தை ஆடுவார். ஆட்டம் பிடித்திருந்தால் பார்க்கலாம், விரும்பினால் கூடச் சேர்ந்து ஆடலாம். இல்லை என்றால் விதியே என்று தேர்தல் நாளில் தாமரை தென்பட்டால் பொத்தானை அழுத்தலாம். தென்படாத இடங்களில் அவரவர் விருப்பம் போல அழுத்தலாம். 


வந்தே மாதரம். 🕉


ஆபிரகாம் ஒப்பந்தம், பாலஸ்தீனம், அரபு நாடுகள் - பாக்ஸ்டான் சோற்றுப் பிரச்சனை

 பாக்ஸ்டான் Abraham Accordsன் படி இஸ்ரேலை அங்கீகரிக்கவேண்டும் என்று GCC அழுத்துகிறது. ஆனால் பாக்ஸ்டான் ராணுவம் தயங்குகிறது. காரணம் அங்கே பாலஸ்தீனப் பிரச்சனை தீர்ந்தாலோ அல்லது back burner நிலைக்குப் போனால் கூட அரபு நாடுகள் அடுத்த சோலிகளைப் பார்க்கப் போகும். 

Monday, 19 May 2025

காங்கிரசும் துருக்கிய பாசமும் - காந்தி காலத்துத் தொடர்பு

 துருக்கி ஒரு காலத்தில் ஓட்டாமன் பேரரசு என்று அரசியல்ரீதியாக அறியப்பட்டாலும் உலக இஸ்லாமியர்களுக்கு மதத் தலைமை ஏற்று இஸ்லாமியர் என்பவர் துருக்கியர் என்று அழைக்கப்படக் காரணமாக இருந்தது. பாரதியார் கூட திசை தொழும் துருக்கர் என்றே பாடினார். 1914-18 முதலாம் உலகப் போரில் ஓட்டாமன் பேரரசு தோற்றது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வென்றன. ஓட்டாமன் பேரரசின் நிலப்பரப்பும் அதிகாரங்களும் மிகவும் குறைத்து வரையறுக்கப்பட்டு வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இரண்டாம் அப்துல் ஹமீதின் மதத் தலைமைக்கு எந்த ஆபத்தும் வராது என்று போரில் வென்ற ஐரோப்பியத் தலைவர்கள் வாக்களித்தனர். ஆனால் துருக்கியிலேயே தேசிய இயக்கம் இளைஞர்களால் தொடங்கப்பட்டது. அவர்கள் மன்னர், காலிஃப் என்பவற்றை ஏற்காமல் அரசியல் பாதை அமைக்க எண்ணினர்.


ஒரு கட்டத்தில் இவர்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்டு மன்னரை நீக்க விழைந்தனர். இது துருக்கிய விடுதலைப் போர் என்று அறியப்பட்டது. 1919லிருந்து 1923 வரை போர் நடந்தது. 1920ல் லண்டன் மாநாட்டில் காலிஃப் பற்றிப் பேச்சு வரவே அரபு நாடுகள் எதிர்த்தனர். இது தங்கள் தேசங்களை மீண்டும் துருக்கிக்கு அடிபணியச் செய்யும் என்றனர். ஆனால் துருக்கியிலோ முஸ்தபா கமால் ஆத துர்க் எனும் ராணுவத் தளபதி இந்த மன்னர் சரியில்லை நாட்டை உருப்படியாக வழிநடத்தவில்லை என்று களத்தில் இறங்கினார். உள்ளூரில் மக்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் பேச்சு வார்த்தை சரிவரவில்லை என்று ஆயுதப் போரில் இறங்கிய ஆத துர்க்கை சமாளிக்க முடியாமல் மன்னரின் படை பல இடங்களில் பின்வாங்கியது. 1922ல் சுல்தானிய அரசை ஒழித்து ஜனநாயக அரசு அமைப்போம் என்று பதவியேற்றார் ஆத துர்க். 1924ல் காலிஃபெல்லாம் இல்லை என்று மதத் தலைவர் பதவியை ஒழித்துவிட்டார். 

இதனிடையே மெக்காவின் நகரத் தலைவர் உசைன் பின் அலி என்பவர் தன்னைக் காலிஃப் என்று அறிவித்துக்கொண்டு அங்கிருந்த துருக்கியப் படைகளை விரட்டினார். அவர் மீது போர் தொடுத்து அவரை வென்று ஒரு அரசை நிறுவினார் இபன் சௌத் எனும் உள்ளூர் தலைவர். அந்த அரசு தான் இன்றைய சௌதி அரேபியா. பிற முஸ்லிம் நாடுகள் தனித்தனியாகப் பிரிந்து கொண்டன.

இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் காந்தியார் 1919ல் ஒரு போராட்டம் அறிவித்தார். அதாவது துருக்கிய அரசரை காலிஃப் என்ற மதத் தலைவராகத் தொடர விடவேண்டும் என்ற போராட்டம். அந்த நாட்டுமக்கள் என்ன கருதுகிறார்கள், உலகின் மற்ற இஸ்லாமியர் என்ன எண்ணவோட்டத்தில் இருக்கிறார்கள் என்ற திட்டமே தெரியாமல் தொடங்கப்பட்ட போராட்டம் இது. மௌலானா முகமதலி என்பவரும் அவரது சகோதரர் மௌலானா சௌகதலி என்பவரும் சேர்ந்து 1920ல் கிலாபத் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டார்கள். அதில் பிரிட்டன் இரண்டாம் அப்துல்ஹமீது அல்லது அவரது சகோதரர் ஐந்தாம் மகமதுவையோ காலிஃபாக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு நம் நாட்டு விடுதலையைப் பார்க்கலாம் என்று ஜின்னா உள்ளிட்ட பலரும் சொல்ல அதெல்லாம் இல்லை காலிஃப் அவர் தான் என்று அறிவிக்கும் வரை போராடுவோம் என்று காந்தியார் கிலாஃபத் இயக்கத்தை அறிவிக்க, துருக்கி சுல்தானுக்குக் கொடி பிடித்தது காங்கிரஸ். இந்து முஸ்லிம் ஒற்றுமை என்று பேசப்பட்டது. ஆத துர்க் துருக்கி தலைவரான பிறகு துருக்கிக்கு ஆதரவாக காங்கிரஸ் போராடியதாம், நன்றி. நீங்கள் விரைவில் சுயராஜ்ஜியம் பெற வாழ்த்துகள் என்று சொன்னார்.

ஜின்னாவே சொன்னாலும் கேட்காமல் துருக்கிக்கு ஆதரவு கொடுத்த காங்கிரசின் துருக்கி பாசம் அளப்பரியது. விடுதலைக்குப் பிறகு காங்கிரசின் நிலைப்பாடுகள் தெரிந்ததே. ஆனால் துருக்கியின் இந்தியப் பாசம் பாகிஸ்தான் பாசமானது. ஏன்? மதம். ஆத துர்க் உள்ளிட்டோர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுக்க நேரு அணி சேரா இயக்கம் என்று எங்கும் சேராமல் நின்றும் கம்யூனிச பாசத்தால் சோவியத் பக்கம் சாய்ந்துகொண்டும் இருந்த நிலை. பாகிஸ்தான் அமெரிக்க ஆதரவு நேட்டோ ஆதரவு என்று நின்றது. துருக்கி பாகிஸ்தானை அணைத்துக் கொண்டது. நம் நாட்டில் துருக்கியில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஆள்கொல்வது முதல் ஆள்பிடிப்பது வரை நடந்தது. ஆனாலும் காங்கிரஸ் அரசுகள் எஜமான் என்று கைகட்டி நின்றதன்றி வேறெதுவும் செய்ததில்லை.  2000ல் பைலேண்ட் எட்ஜவிட் என்பவர் பிரதராகி நம்முடன் நல்லுறவு பேணினார். அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் துருக்கிக்குச் சென்றுவந்து கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல வியாபாரங்களில் பெரிய அளவில் கைகோர்த்து நடைபோட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன் பின்னர் வந்த எர்துவான் ஆரம்பத்தில் நல்லுறவெல்லாம் பேணினார். ஆனால் 2006க்குப் பிறகு மாறினார். 2008ல் மொத்தமாகப் பாகிஸ்தானுடன் கைகோர்த்தார். பாகிஸ்தானிகள் 2008ல் நம் மீது 26/11 தாக்குதல் நடத்தியபோது கூட பாகிஸ்தானுக்கு ஆதரவு பேசினார். கஷ்மீர்தத்தைப் பாகிஸ்தானுக்குக் கொடுப்பதே நல்லது என்று பேசியவர். ஆனாலும் காங்கிரஸ் அரசு துருக்கியைக் கண்டித்து ஒரு சொல் பேசவில்லை. எவ்வளவு அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டேன் என்று மன்மோகன்சிங் பேசியது அவர்களுக்கு அதிக அனுகூலம் ஆனது.

மேலும் துருக்கியின் செலபை என்ற நிறுவனம் (எர்துவானின் குடும்ப நிறுவனம்) இதற்கு நம் நாட்டு விமான நிலைய செயல்பாடுகளை நிர்வகிக்க ஒப்பந்தம் போட்டது. ஆண்டுக்கு ₹1522 கோடி வருமானம் வரும் ஒப்பந்தம் இது. இது தவிர நம் நாட்டு விமான நிலையங்களில் மொத்த நிர்வாகம் பயணிகள் விவரம், தரவுகள் என்று பலவும் இவர்கள் கைக்குப் போகும். 2016க்கு பிறகு சில கட்டுப்பாடுகள் வந்தன.

2014ல் மோடி அவர்கள் பிரதமரான பிறகு ஏன் எங்கள் உள் விவகாரம் கஷ்மீரத்தில் மூக்கு நுழைகிறீர்கள் என்று பேசிப் பார்த்தார். சரிவரவில்லை என்றவுடன். எங்களுக்கும் மூக்கு இருக்கிறது, உங்களுக்கும் கிரேக்கம், சைப்ரஸ், ஆர்மீனியா என்று எல்லைப் பிரச்சனைகள் இருக்கிறது என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இவர்கள் எப்படி இப்படிப் பேசலாம் என்று கொதித்தார் எர்துவான். போய்யா பொம்மா என்று சொன்னார் மோடி. ஆனால் வியாபாரிகள் நாமெல்லாம் நல்ல நண்பர்கள் என்று பேசி வியாபாரம் செய்தனர்.

2019ல் 370ஐ நாம் நீக்கியவுடன் துருக்கி கொதித்தது. ஐநா சபையில் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஆதரவாக அரற்றியது. சிரியாவில் நீ ஏன் ராணுவ நடவடிக்கை எடுக்கிறாய் என்று நாம் கேட்க பிரச்சனை வரும் என்று வாய் மூடியது துருக்கி. நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நம் நடவடிக்கையைக் கண்டித்தது துருக்கி. சோலியைப் பாரு என்றோம் நாம்.

ஆனால் காங்கிரஸ் கட்சி நவம்பர் 2019ல்  வெளிநாட்டுக் காங்கிரஸ் அமைப்பின் சார்பில் துருக்கியில் அலுவலகம் திறந்தது.  துருக்கி ஆபீசுக்கு  முகமது யூசுப் கான் என்பவர் தலைவர் என்று அறிவித்தது. அவர் துருக்கி - பாரத உறவுகளைப் பேண நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றது. இவரால் தான் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும் இந்த ஆபீஸ் திறந்த பிறகு உள்ளூரில் பல பல்கலைக்கழகங்களுடன் துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம் போட்டன. மாணவர் பரிமாற்றம், பாடத்திட்ட பரிமாற்றம் என்று பல விஷயங்களில் ஒப்பநதங்கள் வந்தன. குறிப்பாக JNU, ஜாமியா மிலியா இஸ்லாமியா, Lovely Professional University என்று அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் துருக்கியுடன் ஒப்பந்தங்கள் போட்டன. துருக்கிக்கு வருமானம். அசர்பைஜான் நாட்டுடனும் சில விமானங்கள் சம்பந்தப்பட்ட படிப்புக்காக ஒப்பந்தங்கள் உள்ளன. அங்கே காங்கிரசுக்கு என்ன உறவு என்று விசாரிக்க வேண்டும்.

ஆனால் 2025ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிலை மாறி துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்தததில் நம் மக்கள் பலரும் துருக்கி சுற்றுலாவை ரத்து செய்தனர். வியாபாரிகள் துருக்கியைப் புறக்கணித்தனர். துருக்கிய சுற்றுலாத்துறை ஒரேடியாக நஷ்டப்படுவோம் என்று இந்திய மக்களை பூப்போல சுற்றிக்காட்டி பொன் போலப் பாதுகாப்போம் வாருங்கள் என்று அறிக்கை விட்டது. பூவாவது பொன்னாவது போய்யா என்றனர் நம் மக்கள். வியாபாரிகளும் அதே நிலை எடுக்கின்றனர். நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றாக துருக்கிய, அசர்பைஜான் பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து என்று அறிவிக்கின்றன.

ஆனால் இந்த துருக்கியைப் புறக்கணிப்பது பற்றிக் கருத்துக் கேட்ட போது காங்கிரஸின் ஜெயராம் ரமேஷும் பவர் கேடாவும் மச்சான் நீ பேசேன் மச்சான் நீ பேசேன் என்று மைக்கை ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றித் தள்ளிவிட்டுக் கடைசியில் கேடா மைக் பிடித்து “அதாகப்பட்டது நாங்கள் யோசித்துச் செல்லுவோம்” என்றார். கண்டிக்கக் கூட மாட்டீர்களா துருக்கியை என்று பாஜக கேட்டதற்கு “அரசாங்கம் தான் அயல் நாட்டு உறவைப் பேணவேண்டும் எதிர்க்கட்சி என்னத்துக்கு கண்டிக்கவோ பாராட்டவோ வேண்டும்?” என்றார்கள். அப்போ எதிர்க்கட்சிக்கு எதற்கு அயல்நாட்டில் ஆபீஸ்? அதுவும் கடைந்தெடுத்த பாகிஸ்தான் ஆதரவு நாடான துருக்கியில்? பதில் சொல்ல மறுக்கிறது காங்கிரஸ். கடைந்தெடுத்த பாரத விரோதமே உன் பெயர் தான் காங்கிரஸா? பதில் வரும் வரை விடாது கேள்வி கேட்போம். வந்தே மாதரம்.

Sunday, 11 May 2025

ஆபரேஷன் சிந்தூர் - பொட்டு வெச்ச தங்கக் குடம் தான், மற்ற அலங்காரங்களையும் பார்ப்போம்

 ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பாகிஸ்தானை அடக்கவேண்டும் என்று தான் முதலில் திட்டமிட்டார் பிரதமர் மோடி. ஆனால் அவருக்கும் தெரியும் அடங்கமாட்டார்கள் என. ஆனாலும் பக்கத்து நாடு, பகையோ உறவோ பிரச்சனை கொடுக்காமல் இருந்தால் சரி என்ற குருநாதர் கொள்கையில் யோசித்தார். அடங்க வாய்ப்பில்லை என்று அஜித் டோவல் உறுதி செய்ய என்ன செய்தால் நமக்கு நல்லது என்று திட்டமிட்டார்கள். திட்டங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Sunday, 9 January 2022

பிரதமரின் பாதுகாப்பும் தேசத்தின் எதிர்காலமும்

கடந்த ஜனவரி 5ஆம் நாள் காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. 40000 கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள மத்திய அரசின் திட்டங்களை அர்ப்பணிப்பதும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும் செய்யவிருந்தார். பஞ்சாபின் படிண்டா விமானப் படைத் தளத்துக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய பலிதானிகள் நினைவிடம் செல்லவிருந்தார் பிரதமர். அங்கே அஞ்சலி செலுத்தியபின் ஃபெரோஸ்பூரில் பொதுக்கூட்டத்துக்குச் சென்று நலத்திட்டங்களைத் துவக்கி வைத்து மக்களிடையே உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். படிண்டா விமான தளத்தில் இறங்கியபோது வானிலை சரியில்லை என்று சற்று நேரம் பொறுத்து ஹெலிகாப்டர் எடுக்கலாம் என்று விமானப்படை ஆலோசனையை ஏற்றுக் காத்திருந்தார். ஆனால் தலைமைத் தளபதி ராவத்தின் விமான விபத்தை அடுத்து வானிலை முற்றிலும் சரியாகாமல் விமானப்படை அனுமதி தருவதாக இல்லை.

Wednesday, 1 December 2021

விவசாய சட்டங்கள் - 2020, நடைமுறைகள், நீக்கம், விளைவுகள்

ஒரே நாடு - டிசம்பர் 1-15, 2021 இதழில் வெளியானது:

கடந்த 2020ஆம் ஆண்டு நம் மத்திய அரசு 3 விவசாயச் சட்டங்களை இயற்றியது. இவற்றை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த போது எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. எதிர்ப்பு கோஷம், கூச்சல் குழப்பம் வெளிநடப்பு என்று விவகாரம் செய்தனர். இவ்வளவுக்கும் 2019 தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று இதே சட்டங்களைக் கொண்டுவர இதே எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்து வாக்குறுதியும் கொடுத்திருந்தனர். பிறகு ஏன் எதிர்ப்பு? அரசியல் என்பது தவிர வேறு பதில் இல்லை. நல்ல சட்டங்கள் சிறப்பான திட்டங்கள் என்று இருந்த போதும் நடைமுறையில் சில ஓட்டைகளை விட்டு தங்கள் ஓட்டு வங்கி உள்ளிட்ட வங்கி விவரங்களைப் பலப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்தது என்றும், இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதம் அப்படிப்பட்ட வங்கி விவகாரங்களுக்குத் தோதாக இருக்காது என்பதுமே காரணம் என்று அரசியல் கூர்நோக்கர்கள் பலர் கருத்துச் சொல்கிறார்கள்.
 

ஏன் என்று இந்த விவகாரத்தின் உள்ளே புகுந்து ஆராயுமுன்னர் சட்டங்கள் குறித்து சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

2017ஆம் ஆண்டு மத்திய அரசு மாதிரிச் சட்டங்கள் என்று பல வரைவுகளை பொதுமக்கள் பார்வைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வைத்தது. விவசாயத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு 2018-19ல் இந்த மாதிரிச் சட்டங்களில் சொல்லப்பட்ட பல்வேறு நடைமுறைகள் ஏற்கனவே பல்வேறு மாநில/மத்திய சட்டங்களில் இருந்தாலும் பலவும் அமல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தது.

மேலும் விவசாய விளைபொருள் விற்பனைக் குழுமம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மண்டிகள், சந்தைகள் நேர்மையான முறையில் செயல்பட்டு நியாயவிலையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்றும் அதீதமான தரகுத் தொகை, தேவைக்கு மீறிய கட்டணங்கள், மண்டி/சந்தைகளின் ஏகபோகம் என்று விவசாயிகளுக்கு பாதிப்பே அதிகம் என்று நிலைக்குழு அறிக்கை அளித்தது.

விவசாயச் சட்ட அமலாக்கம் குறித்து ஆராய ஜூலை 2019ல் ஏழு முதலமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2020ல் மத்திய அரசு விவசாயச் சட்டங்கள் மூன்றைப் பிறப்பித்து உத்தரவிட்டது. அவற்றின் விவரம் இங்கே:

1.விவசாயப் பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக(விரிவாக்கம் மற்றும் எளிதாக்கல்) சட்டம் 2020
அ. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே விற்பனை என்று இருந்த நடைமுறையை மாற்றி வணிகத்தின் எல்கையை விரிவாக்குகிறது. (திருநெல்வேலி விவசாயி நல்ல விலை கிடைத்தால் நேரடியாக தில்லி வியாபாரிக்கு விற்கலாம். வட்ட, மாவட்ட, மாநில எல்லைகள், முகமைகள் கட்டுப்படுத்தாது)
ஆ. விவசாய விளைபொருட்களை இணையச் சந்தையில் விலைபேசி விற்க வகை செய்கிறது.
இ. மாநில அரசுகள், வரி, கட்டணம் என்று எந்தவிதமான வசூல்களும் விளைபொருள் மீதோ, இணைய வியாபாரத்தின் மீதோ செய்யத் தடை விதிக்கிறது.

2.விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 2020

அ. விவசாயிகள் விளைபொருள் வாங்குவோரிடம் முன் ஒப்பந்தம் செய்து கொள்ளல் (விலை உள்பட)
ஆ. இதில் ஏற்படும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காணவும் வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

3.அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தச்) சட்டம், 2020

அசாதாரணமான சூழ்நிலைகளிள் தவிர பிற நேரங்களில்
அ. தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணை வித்துக்கள், சமையல் எண்ணை இவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவற்றை கிடங்குகளில் வைப்பதற்கு இருந்த வரம்புகள் நீக்கப்பட்டுள்ளது.
ஆ. அசாதாரணமான விலையேற்றம் ஏற்பட்டால் கிடங்குகளில் சரக்கு வைக்கும் அளவுக்கு வரம்புகள் விதிக்கப்படும்.

இவையே மூன்று சட்டங்கள். இவற்றை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி 12 அன்று உச்சநீதிமன்றம் இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் என்னென்ன என்பதை ஆராய்ந்து சொல்ல ஒரு குழுவை அமைத்தது. பிப்ரவரி மாதத்தில் இந்தக் குழு பொதுமக்கள் விவசாயிகளிடம் இந்தச் சட்டங்கள் குறித்த சிக்கல்களை விளக்கிச் சொல்லக் கேட்டது.

பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்தச் சட்டங்களுக்கு மாற்றாக மாநிலச் சட்டங்களை இயற்றின. அவை ஆளுநர் ஒப்புதல் பெறக் காத்திருக்கின்றன.

செப்டம்பர் 20 அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் “விவசாயிகளுக்கு நன்மை செய்ய பல கட்சிகள் வாக்குறுதி கொடுத்தார்கள். நாம் அவற்றை நல்லபடியாகச் சட்டமாக்கியிருக்கிறோம்” என்றார். இதன் மூலம் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மை விளையும். விவசாயம் லாபகரமாக மாறும் என்று பிரதமர் சொன்னார். கீதா கோபிநாத் எனும் ஹார்வார்டு பொருளாதார அறிஞர் (சர்வதேச நிதியத்தின் முன்னாள் பொருளாதார ஆலோசகர்) இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும், இடைத்தரகர்களின் லாபத்தை மட்டுப்படுத்தும் என்று கருத்துச் சொன்னார். மேலும் தில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கோரக்பூர் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களின் 866 பொருளாதார, விவசாயத்துறைப் பேராசிரியர்கள் இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு நல்லது என்று கருத்துக் கூறி அறிக்கை தந்தனர்.

அதே நேரம் கௌஷிக் பாசு எனும் உலகவங்கி முன்னாள் பொருளாதார ஆலோசகர் இது தவறான சட்டம், விவசாயிகளுக்கு எதிரானது என்றார். மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், கொல்கத்தாவிலுள்ளா இந்தியப் புள்ளியியல் நிறுவனம், லண்டன் சினிமா பள்ளி, தென்னாப்பிரிக்க ஜோஹானிஸ்பர்க் பல்கலைக்கழகம், ஐஐஎம் கொல்கத்தா, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம், நார்வேயிலுள்ள ஓஸ்லோ பல்கலைக்கழகம், அமெரிக்க மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இவற்றில் இருந்து 413 பேராசிரியர்கள் சட்டங்களுக்கு எதிராகக் கருத்துக்கூறி அறிக்கை அளித்துள்ளனர்.

ஷேத்காரி சங்கடனா எனும் மராட்டிய விவசாயிகள் அமைப்பு இந்தச் சட்டம் அவசியமானது என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளை பலவீனமானவர்களாகவே ஆக்குகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

பாரதிய கிசான் சங்கம் எனும் அமைப்பு பாராளுமன்ற நிலைக்குழு இந்தச் சட்டங்களை ஆராய வேண்டும் என்றும் அவசரமாக இந்தச் சட்டங்களை நிறைவேற்றியது தவறு என்றும் சொன்னது. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று பல விவசாய அமைப்புகள் கூறின. மத்திய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் முந்தைய சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை சேர்க்கப்பட்டதில்லை ஆகவே புதிய சட்டத்தில் சேர்க்கவேண்டியதில்லை என்று சொன்னார். பல்வேறு அமைப்புகள் விவசாயிகளுக்குச் சட்டத்தை விளக்கவும், விவாதிக்கவும் அழைப்பு விடுத்தன. பலனில்லை.

உச்சநீதிமன்றக் கமிட்டியில் போய்க் கருத்துச் சொல்ல போராட்டக்காரர்கள் மறுத்தனர். சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவோம் என்றனர். உச்சநீதிமன்றம் செய்வதறியாது திகைத்து நின்றது.

போராட்டக்காரர்களுக்கு உணவும், இருப்பிடமும் போராட்டம் நடக்கும் இடத்திலேயே அமைத்துக் கொடுக்க கனடா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் சீக்கியர் அமைப்புகள் பண உதவி செய்தன. இதில் அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்தது. வெளிநாட்டு நிதி அளித்தல்/பெறுதல் சட்டங்களின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கொடுத்த நிதி தடுக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஆதரவோடு இந்தப் போராட்டங்களில் கலகம் செய்ய காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் முற்பட்டன என்று தகவல்கள் வந்தன. தில்லியில் கலவரம், தேசியக்கொடி அவமதிப்பு, போராட்ட களத்தில் கொலைகள் என்று அரசு இரும்புக்கரம் நீட்டத் தேவையான அத்தனை வேலைகளும் நடந்தன. ஆனாலும் அரசு அமைதிகாத்து போராட்டக்காரர்களின் பின்புலங்களை ஆராய்ந்து தேசப் பாதுகாப்புக்கு பங்கம் வராமலிருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் சில உள்நாட்டு நிகழ்வுகள் மத்திய அரசின் கவனத்தையும் தேசப்பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் கவனத்தையும் ஈர்த்தன. பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த தகவல்கள், எல்லை கடந்து ஆளில்லா குறு விமானங்கள் (drone) மூலமாக ஆயுதங்கள் கடத்தும் முயற்சிகள் (முறியடிக்கப்பட்டன என்பது நமது காவல்துறை மற்றும் உளவு அமைப்புகளின் சாதனை), போராட்டத்தில் கலவரம் செய்ய ஆள் அனுப்பும் பாகிஸ்தான் முயற்சிகள், ஆஃப்கனிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கமும் அவர்களின் நோக்கமும் என்று பல முனைகளில் எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்கள் எழுந்தன.

பஞ்சாபின் அப்போதைய முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சில விஷயங்கள் பற்றிப் பேசினார். அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. எல்லைக்கோட்டுக்கு இருபுறங்களில் எப்புறம் இருந்தாலும் பஞ்சாபியர்கள் சகோதரர்கள் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து பேசினார். அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்தித்தார் அமரிந்தர் சிங், அப்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முக்கியமாக எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது.

மேலும் அமரிந்தர் சிங்குக்கு நெருக்கமான சிலர் பேசுவதிலும் எழுதுவதிலும் இருந்து நாம் அவதானிப்பது ஒரு விஷயம். இந்த விவசாயிகள் போராட்டம் என்பதை முன்னிலையில் வைத்து அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் நடந்தது போல காவல்துறை அல்லது ராணுவ நடவடிக்கைக்குத் தூண்டி அதைப் பெரிய போராட்டமாக்கி தங்களுக்கு இணக்கமானவர்களை அதிகாரத்தில் அமர்த்த சில சர்வதேச சக்திகள் முயல்கின்றன. அரசு 1984ல் பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்பியது போல ஒரு நடவடிக்கை எடுத்தால் காலிஸ்தான் பிரிப்பது சுலபம், தேசத்தை பலவீனப்படுத்துவது எளிது என்று கணக்குகள் உள்ளன.

விவசாயப் போராட்டத்துக்கு பஞ்சாப் ஹரியாணா மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் என்று வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் முன்னாள் ராணுவ வீரர்கள் அல்லது இந்நாள் ராணுவ வீரர்களின் தந்தை, அண்ணன் தம்பி போன்ற நெருங்கிய உறவினர்கள். போராட்டக்களத்தில் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்து ராணுவ வீரர்களின் நெருங்கிய உறவுகளுக்கு ஏதும் நிகழ்ந்தால் அவர்களை உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கும். உள்நாட்டிலும் கலவரத்தை அடக்க சிறப்புப் படைகள் ராணுவம் என்று வரவேண்டிய நிலை வந்தால் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டு அரசு மீது வெறுப்பை உருவாக்கலாம். இத்தகைய திட்டங்களைக் கண்டறிந்து உளவுத்துறையும் பஞ்சாபின் முதல்வராக இருந்தவரும் மத்திய அரசிடம் தெரிவித்தனர்.

இதை தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவாரின் கருத்தோடு பொருத்திப் பார்க்கவேண்டும். “பஞ்சாபை தொந்தரவு செய்து இந்திராகாந்தி உயிரை இழந்தார். பஞ்சாபைத் தொட்டால் மோடிக்கும் அதுவே கதி.” என்றார் பவார். அவர் சொன்னதன் நோக்கம் பிரதமரை மிரட்டவா அல்லது எச்சரிக்கவா என்பது விவாதத்துக்குரியது. ஏனென்றால் பவார் இரட்டைக் குதிரைகளில் அரசியல் சவாரி செய்பவர். அவருக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், செல்வாக்கான மனிதர்களுடன் தொடர்பில் இருப்பவர். தகவல் கசிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதே உளவுத்துரைகள் சொல்லும் கோணம்.

இப்படி ஒரு கலவரத்தை நடத்தி நாட்டின் அமைதியைச் சீர்குலைத்துவிட இந்த விவசாயச் சட்டங்களைப் பயன்படுத்த எதிரிகள் விழைகிறார்கள் என்ற தகவல் பிரதமர் மோடிக்கு ஆதாரங்களுடன் தரப்பட்டன என்றும் அதன் மீதான் ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள், கலந்தாய்வுகள் என்று பலகட்டப் பேச்சுக்களுக்குப் பிறகே பிரதமர் நவம்பர் 20 அன்று குருநானக் ஜெயந்தி அன்று மக்களுக்கு உரையாற்றும் போது இந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இந்தச் சட்டங்களை வைத்துக் கொண்டு தேசத்துக்கு எதிராகச் செயல்பாட்டில் இறங்கத் தீர்மானித்திருந்த எதிரிகளின் கைகளில் இருந்து ஆயுதங்களைப் பிடுங்கிவிட்டார். ஆனால் மக்களிடம் பேசும் போது ”விவசாயிகளின் நன்மை கருதியே இந்தச் சட்டங்களை இயற்றினோம். ஆனால் சில விவசாயிகளுக்கு எங்களால் நன்மைகளைப் புரியவைக்க இயலவில்லை. அது எங்கள் தவத்தில் ஏற்பட்ட குறைபாடாக நான் கொள்கிறேன்” என்றார். மேலும் கூறுகையில் “இந்தச் சட்டங்கள் குறித்துச் சீராய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டும். விவசாயிகள், சட்ட வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் என்று பல தரப்பினரும் இதில் பங்கேற்று அனைவருக்கும் நன்மை தரும் வகையில் சட்டங்களை மீண்டும் இயற்றி நடைமுறைப்படுத்துவோம். ஆகவே விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார்.

ஆனால், போராட்டக்காரர்கள் இப்போது பிரதமர் சொல்வதை ஏற்கமாட்டோம். நாங்கள் திட்டமிட்டபடி ஊர்வலம் பேரணி என்று போவோம் என்கிறார்கள். சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும் புதிய கோரிக்கைகளை வைத்துப் போராட்டத்தைத் தொடர முனைகின்றனர். தில்லியைச் சுற்றிலும் சாலைகளில் நடைபெறும் போராட்டங்கள் அப்படியே தொடரும் என்கிறார்கள். பொதுமக்கள் பாதிக்கப்படுவது பற்றிக் கவலையில்லை. சட்டமன்றத் தேர்தல் நடக்கும் இடங்களில் ஊர்வலம் பேரணி என்று நடத்தி போராட்டத்தின் வேகம் குறையாது பார்த்துக் கொள்வோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

விளைச்சலுக்கு ஆகும் மொத்தச் செலவுகளையும் உள்ளடக்கிய குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உரிமையாக்கித் தரவேண்டும் என்று புதிய கோரிக்கை வைக்கிறார்கள். அந்த குறைந்தபட்ச ஆதரவு விலை தற்போதுள்ள 23 பயிர்களுக்கு மட்டும் இல்லாமல் எந்தப் பயிர் விளைவித்தாலும் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை தரவேண்டும் என்பது அவர்கள் வைத்துள்ள புதிய கோரிக்கைகளில் ஒன்று. அத்துடன் புதிய மின்சாரச் சட்டத்தையும் வாபஸ் பெறச் சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள். இந்தச் சட்டம் இலவச மின்சாரத்தை அளவீடு செய்து வழங்க வகை செய்கிறது. அளவீடு செய்து வழங்கும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை அடுத்ததாகச் செய்வார்கள் என்று அஞ்சுகிறோம் ஆகவே சட்டம் கூடாது என்று சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

இப்படி ஒவ்வொரு கோரிக்கையாக வைத்துப் போராட்டத்தைத் தொடர்வது நல்லதல்ல என்று பல விவசாய அமைப்புகள் சொல்கின்றன. ஆனாலும் ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் எனும் அமைப்பினர் போராட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போன்ற நாடுகளிலும் நடத்தப்படும் என்றும் தங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பாஜகவை எதிர்த்து வரும் சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் சொல்கிறார்கள்.

சட்டங்கள் வாபஸ் ஆன பிறகு வந்திருக்கும் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளால் போராட்டம் விவசாயச் சட்டங்களுக்கு எதிரானதா அல்லது பாஜகவுக்கு எதிரானதா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. முள்ளில் பட்டுத்துணி விழுந்திருக்கிறது. துணி கிழிந்துவிடாமல் பொறுமையாக மீட்டெடுக்கவேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு தேசப்பற்றுக் கொண்ட அனைவரும் துணைநிற்பதே இப்போது செய்யத்தக்கது. வந்தே மாதரம். 

Monday, 15 November 2021

திரும்பும் வரலாறு - ஏர் இந்தியா - மீண்டும் டாடா நிறுவனத்திடம்...

 1,57,339 கோடி ரூபாய்கள். எங்கோ கேட்டது போலவே இருக்கும். இது அது இல்லை. கடந்த பத்தாண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்திற்காக அரசு செலவு செய்த பணம். இந்த ஆண்டு டிசம்பரில் டாடா நிறுவனத்துக்கு கையளித்துவிட்டு உட்கார்ந்து கணக்குப் பார்த்தால் தோராயமாக இவ்வளவு நட்டக்கணக்கு வரும் என்று நிறுவனத்தையும் கணக்கு வழக்குகளையும் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 2000ஆவது ஆண்டில் இருந்து தனியாரிடம் கொடுக்கலாம் என்று அரசு முயன்று முடியாது போய் லாபம் நட்டம் என்று மாறி மாறி வந்துகொண்டிருந்த நிறுவனம் ஏர் இந்தியா.

கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம். 

Thursday, 21 October 2021

Fab India நிறுவனம் சமீப காலங்களில் சர்ச்சைக்கு உள்ளாகிறது. ஏன்?

இந்த  Fab India நிறுவனம் 1960ல் தொடங்கப்பட்டது. ஜான் பிஸ்ஸெல் என்ற அமெரிக்கர் தொடங்கினார். முதலீடாக 20000 அமெரிக்க டாலர்களை இறக்கினார். இன்றைய டாலர் மதிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் அமெரிக்க டாலர்கள். ஏது காசு என்ற கேள்விக்கு பாட்டி உயில் எழுதி வைத்தார். அவர் இறந்து போனதும் வந்த பணம் என்று சொன்னார்.

Friday, 15 October 2021

தொழில் வளர்ச்சியும் சீனப்பாடமும்

 சீனாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனம் எவர்கிராண்ட் கழுத்துவரை கடன் பிடியில் உள்ளது. 300 பில்லியன் டாலர் கடன் அந்த நிறுவனத்துக்கு உள்ளது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி. கணக்குப் போடுங்கள் 2ஜி ஊழலை விட அதிகத் தொகை வரும். இவ்வளவு கடனில் உள்ள நிறுவனம் நொடித்துப் போனால் சீனப் பொருளாதாரம் படுத்துவிடும். அதுதவிர உலகில் அந்தக் கம்பெனியில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்கள் பலத்த அடிவாங்கும். சில பல லீமேன் பிரதர்ஸ் சம்பவங்கள் நிகழலாம். சீன அரசு நொடித்தால் நொடிக்கட்டும் என்றே சென்ற வாரம் வரை இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் உள்நாட்டிலும் பண விஷயத்தில் பலமான அடிவிழ வாய்ப்பு என்ற நிலையில் வங்கிகள், நிதி ஆலோசகர்கள் என்று பலரையும் அமர்த்தி அடி கொஞ்சம் மெதுவாக விழும்படி என்ன செய்ய முடியும் பாருங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. காப்பாற்ற முனையவில்லை என்பதே அங்கிருந்து வரும் தகவல்.

Wednesday, 29 September 2021

இருளும் சீனம் பாயுமா பாரதம்?

 சீனம் இருளில் வீழ்ந்துவிட்டது. ஆமாம். ஊஹான் வைரஸைப் பரப்பிய அதே நாடுதான். இப்போது போக்குவரத்து சிக்னல் தொடங்கி வீட்டு விளக்குகள் வரை அணைத்து வைக்கச் சொல்லி உத்தரவு. கேட்டால் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் அக்கறை என்று மூஞ்சியில் இருக்கிற மஞ்சாக் கலரைக் காட்டுகிறார்கள். (அதாகப்பட்டது பீலா விடுகிறார்கள்)