சீனம் இருளில் வீழ்ந்துவிட்டது. ஆமாம். ஊஹான் வைரஸைப் பரப்பிய அதே நாடுதான். இப்போது போக்குவரத்து சிக்னல் தொடங்கி வீட்டு விளக்குகள் வரை அணைத்து வைக்கச் சொல்லி உத்தரவு. கேட்டால் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் அக்கறை என்று மூஞ்சியில் இருக்கிற மஞ்சாக் கலரைக் காட்டுகிறார்கள். (அதாகப்பட்டது பீலா விடுகிறார்கள்)
என்ன தான் நடக்கிறது? அணில் அங்கே மனித ஜனத்தொகை போலப் பெருத்துவிட்டதா? இல்லை. ஆனால் மின்வெட்டு அதிகரித்திருக்கிறது. தொழிற்சாலைகள் நிலக்கரி, எரிபொருள் வாங்கிக் கட்டுபடியாகவில்லை என்று கையறுநிலையில் இருக்கின்றன. புகை வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்த நடவடிக்கை என்கிறது சீன அரசு.
”அதை இப்படியா செய்வான் ஒருத்தன்?” என்று கேட்கிறது உலகம். திடீரென்று தெரு விளக்கை அணைத்து, வீடுகளில் விளக்குப் போடாதே என்று உத்தரவு போட்டு, தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவில் விளக்கெரித்து சூரிய வெளிச்சத்தில் பல வேலைகளை முடியுங்கள் என்று சொல்லி..... என்ன கலாட்டா இது?
சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று போக வேண்டியது தானே? அதற்கு இடவசதி அதிகம் உள்ளதே? சீனாவில் பெரும் பாலை நிலம் உள்ளது. அதில் கூட இந்த ஏற்பாடுகளைச் செய்யலாமே?
செய்வதற்கு துட்டு? மாசேதுங் வைத்துவிட்டுப் போயிருக்கிறாரா இல்லை அவர் வைத்திருந்தவர்கள் வைத்திருக்கிறார்களா? எதுவுமில்லை!உலகை வளைக்கிறேன் என்று கிளம்பி ரோடு போடுகிறேன், கடன் கொடுக்கிறேன் என்று துட்டை நிறைய இழந்திருக்கிறது சீனா. ஆனாலும் ”ஏய் எவம்லே அவன்?” என்று உதார் விட்டுக்கொண்டு திரிகிறது.
இப்போது ஆஸ்திரேலியாவுடன் போன வருடம் கொரொனாவைப் பரப்பியது யார் என்று ஒரண்டை இழுத்துக் கொண்டு ”என் நாட்டுக்கு உன் பொருள் எதுவும் தேவையில்லை போடா” என்று சவடால் பேசியது சீனா. ஆஸ்திரேலிய நிலக்கரியை மட்டுமே நம்பி 60% அனல் மின் உற்பத்திச் சாலைகளை வைத்திருக்கிறது சீனா.
நாம் பெரிய ஆள். ஆஸ்திரேலியாக்காரன் கும்பிட்டு விழுந்து கரி கொடுப்பான் என்று எண்ணியிருந்தது சீனா. ஆனால் ஆஸ்திரேலியா கொரோனா என்று கொஞ்ச நாள் சும்மா இருந்துவிட்டு மீண்டும் இப்போது புதுப்புது நாடுகளைப் பிடித்து நிலக்கரி விற்கிறது. சீனாவைச் சீந்தவில்லை.
சீன அரசு ”அதெல்லாம் இல்லை. நாங்கள் கொஞ்சம் கொரோனாவுக்காக மெதுவாக வேலை செய்தோம். இந்த வருஷம் வெயில் அதிகம். ஜனங்க ஏசி போட்டுக்கறாங்க. அதான் தேவை அதிகம், உற்பத்தி குறைவுன்னு போச்சு. இன்னும் 2 வருஷத்தில சரி பண்ணிருவோம்” என்று மண்ணே இல்லை மீசையில் என்கிறது. (மீசை எங்கய்யா உன் மூஞ்சில?)
பல கம்பெனிகளை வாரத்துக்கு 2 நாட்கள் வேலை என்று கட்டுப்படுத்தியிருக்கிறது சீன அரசு. சில கம்பெனிகள் (பெரும்பாலும் செமிகண்டக்டர் கம்பெனிகள்) 3 நாட்கள் இயங்க உத்தரவு. மற்றபடி கரியுமிழ்தலைத் தடுக்க அரசு உத்தரவுப்படி 2 நாள் வேலை 5 நாள் லீவு.
சம்பளம்? கேடுத்தான் பாருங்களேன்!
சீனா 2022ல் குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துகிறது. அதற்கு வருபவர்களுக்கு புகை அடிக்கக் கூடாது. சுற்றுப்புறம் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று அதிபர் ஜின்பிங் உத்தரவு போட்டுள்ளாராம். அதற்காக இப்படிக் கரியுமிழ்தல் புகை வெளிப்பாட்டைத் தடுத்து ஊரைச் சுத்தமாக வைக்க இப்படி ஏற்பாடாம். அதற்காக விளக்கு வைப்பதை தடுத்தால் எப்படி?
அரசு இலக்கு வைத்துவிட்டது. அடைந்தே தீரும் என்கிறார் சீன பொருளாதார ஆலோசகர் லாரி ஹூ. சீனா தன் கையைத் தானே கிழித்துக் கொண்டு நிற்கிறது என்றும் சொல்கிறார் லாரி. கிட்டத்தட்ட 160 கம்பெனிகள் அரசு உத்தரவுப்படி வாரத்துக்கு கண்டிப்பாக 16 மணி நேர வேலை மட்டுமே செய்யவேண்டும்.
ஃபோர்டு, வோல்க்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல். ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குத் தேவையான மின் பொருட்கள் தயாரிப்பு கிட்டத்தட்ட நின்றே விட்டது. செமி கண்டக்டர்கள் தவிர மற்றவை தயாரிக்க முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஏனென்றால் தைவான் அங்கே மொத்த வியாபாரத்தையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் கைப்பற்றக் காத்திருக்கிறது.
ஆப்பிள் உள்ளிட்ட ஃபோன் தயாரிப்பாளர்கள் இந்த நிலை இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்தால் ஒன்று ஃபோன் தயாரிப்பு நிற்கும், அல்லது வேறிடத்துக்கு நகர்வோம் என்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் சோயா பீன்ஸ் முதல் சர்கியூட் போர்டு வரை மூலப் பொருள்/விளை பொருள் விலையேற்றம் என்கிறது சீனா. விவசாய விளைச்சல் வழித்துக் கொண்டு போய்விட்டது. மற்றவற்றின் விலைவாசி வாசி வாசி என்று போய் சிவா சிவா என்று கைலாசம் தொட்டு நிற்கிறது.
காசை எங்கே விட்டார்கள் என்று பார்த்தால் சிலுக்கு ரோடு போடுகிறேன் என்று (Belt & Road Initiative - Silk route of older times) ஜிங்கு ஜிங்கென்று ஆடி கண்ணில் பட்ட நாட்டுக்கெல்லாம் கடன் கொடுத்துவிட்டார்கள். இன்று வாங்கிய எந்த நாடும் திருப்பித் தரவில்லை. ஐரோப்பிய யூனியன் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு வருகிறேன் என்று சொல்கிறது. மற்ற சின்னச்சின்ன ஆப்பிரிக்க நாடுகள் ”வேலை நடக்கலை, காசில்லை. கொரோனாவை பரப்பிவிட்டவனைக் கேளு” என்று சொல்கின்றன. சீன GDPல் பாதி இந்தக் கடனில் அடைபட்டுக் கிடக்கிறது. கடனை அடைக்க ஆளில்லை.கொரோனாவானாலும் 8.2% வளரும் என்று சொல்லப்பட்ட சீனப் பொருளாதாரம் 7.2% தான் வளரும் என்று சிங்கப்பூரில் வசிக்கும் சீனப் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். இல்லை இல்லை 7.7% என்று சீனாவில் வசிக்கும் பொருளாதார நிபுணர்கள் சூடன் அணைக்கிறார்கள். அப்படியானால் நிஜ % இன்னும் பயங்கரமானதாகக் கீழே இருக்கும். பல கம்பெனிகள் சீனாவை விட்டு விலகி வெளியே வரும். Supply Chain எனப்படும் பொருட்கள் நகர்வு விஷயத்தில் இந்த சீனச் சொதப்பல் ஒரு சிறந்த failure case studyஆக அமையும்.
இம்ரான்கான் வகையறாவுக்கு இனி யார் சோறு போடுவார்கள் என்று தெரியவில்லை. நம்மூர் சிண்டு, தீக்கதிர் உள்ளிட்ட அ(ந)ச்சுக் காகிதங்களுக்குப் படியளப்பதும் பெரிதாக இருக்காது.
இந்நிலையில் பாரதம் சோலார், காற்றாலை என்று பல விதங்களில் மின்சாரம் எடுத்து பல்வேறு சிக்கல்களைச் சீரமைத்துத் தொழில் செய்ய ஏதுவான சூழலை உருவாக்கி வைத்துள்ளது. இன்னும் நிறையச் செய்யவேண்டும் என்றாலும் இப்போதே பாய்ச்சலை ஆரம்பித்தால் ஒரு கை பார்க்கலாம். உலகின் முன்னோடி ஆகலாம்.
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் போக்கிலே.
No comments:
Post a Comment