ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 26 December 2014

மகாத்மா(?) காந்தியார்

மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியார் சிறந்த தலைவரில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் தனக்கு உண்மையாக இருக்க முயன்றவர். பௌத்தம் சார்ந்த அஹிம்சை வழியைப் பின்பற்றி அதைப் பிறர் மீதும் சுமத்தினார்.
 
அதனால் அதர்மம் கண்டு பொங்கிடும் அறச்சீற்றம் மக்களிடையே மங்கியது. குறிப்பாக க்ஷாத்திரம் எனும் க்ஷத்ரிய குணம் தேயக் காரணமானார் காந்தியார். எதுவானாலும் காந்தி சொல்லே இறுதி என்ற தனிமனிதப் போற்றுதலுக்கு இது இட்டுச் சென்றது. காந்தியாரோ தலைமை என்பது அனைவரையும் அரவணைத்தல் மட்டுமே என்று புரிந்து வைத்திருந்ததால் அவரது பல முடிவுகள் பொது நன்மைக்குப் பங்கமாக அமைந்தன. நன்மை தீமைகளைச் சீர்தூக்கி நோக்காமல் அனைவரும் ஏற்பதே நல்லது என்ற மடத்தனம் அங்கே மேலோங்கி நின்றது. Consensus building என்பது நல்லதை அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைத்து ஏற்கச் செய்வது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாத பல ‘அரவணைப்பு முடிவுகளின்’ விளைவுகள் தேசத்தை இன்னும் பீடித்துள்ளன.

ஆனால் அவரால் லாபம் பெற்ற ஒரு கூட்டம் அவர் மீது எந்தக் குற்றமும் வராது அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் எழுப்பி அவரை மகாத்மா ஆக்கியது. அடித்தால் பட்டுக்கொள், உதைத்தால் வாங்கிக்கொள், கொன்றால் செத்துப் போ போன்ற கொள்கைகள் தனி மனிதனுக்கு ஆன்மிக சாதனைகளில் அடிமேலடி வைத்துப் போகப் பாதையாகலாம். ஆனால் ஆளும் தலைமைக்கு அது உகந்ததல்ல, அந்நிலையில் இத்தகைய அஹிம்சை ஆட்சிக்கோ தலைமைக்கோ உகந்ததல்ல என்ற உண்மையை காந்தியாரும் புரிந்து கொள்ளவில்லை. பிறர் சொன்னதையும் இவ்விஷயத்தில் அவர் கேட்கவில்லை. இவரது இத்தகைய பிடிவாதத்தால் தேசம் இழந்தது ஏராளம்.

 
இவை எல்லாம் நாதுரம் விநாயக் கோட்சேவின் கோபத்துக்குக் காரணமாகின. அவர் கோபத்தின் உச்சத்தில் திட்டமிட்டுக் காந்தியைக் கொன்றார். கோபமிகுதியில் கொலை செய்துவிட்டு வருந்தவில்லை. கோபத்தில் அமைதி கொண்டு யோசித்துத் திட்டமிடும் புத்திவல்லமை தேசத்தின் ஆட்சிப் பொறுப்புகளை - குறிப்பாக ராணுவம், காவல் சார்ந்த பொறுப்புகளை - ஏற்போருக்கு மிக அவசியம்.

காந்தியார் நல்ல தனிமனிதர், ஆனால் தலைமையில் சறுக்கினார். காந்தியார் முற்றிலும் கெட்டவரல்ல. அவரைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் அவரே சிக்கிக் கொண்டார் என்று கருதும்படியாக அவரது பல நடவடிக்கைகள் அமைந்தன. அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போடப்பட்டு மஹானாக காந்தியார் மிகைப்படுத்தப்பட்டார். காந்தியார் தேசத்தந்தை என்பதற்கு எந்த வரலாற்றுச் சான்றுமில்லை என்ற சமீபத்திய மைய அரசின் ஒப்புதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் உடைந்து நொறுங்கும் பிம்பத்தை எழுப்பியே காந்தியாரை உச்சியில் ஏற்றி வைத்திருப்பதற்குச் சான்று.

 கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலம் இருட்டடிக்கப்பட்டு அவர் கொலை வெறி பிடித்துத் துப்பாக்கியோடு தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்த மனம் பிறழ்ந்தவர் என்பது போலச் சித்தரிக்கப்பட்டது அநியாயம். இந்த இருட்டடிப்பு மூலம் காந்தியார் குறித்த தெய்வீகப் பிம்பம் மேலும் உயர்த்தி அமைக்கப்பட்டது. இப்போது கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலம் புத்தகமாக வெளிவருவது மறுபக்கத்தைப் புரிந்து தெளிவதற்கு உதவும்.

கோட்சேவுக்குக் கோவில், சிலை என்று அவருக்கு ஒளிவட்டம் போட்டு காந்தியாருக்குச் செய்த அதே முட்டாள்தனங்களைச் செய்ய ஒரு கூட்டம் விழைகிறது. இது உணர்ச்சிக் கூவல். ஆகவே கால விரயம்.

என் வரையில் காந்தியார் மகாத்மாவுமல்ல கோட்சே மகாபாவியுமல்ல. இருவரது நிலைப்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து நம் நிலைப்பாட்டை தேசத்துக்கு நலம் பயக்கும் வகையில் அமைத்துக் கொண்டு பயணிப்பதே புத்திசாலித்தனம்.

Wednesday 24 December 2014

பாரத ரத்னா விருது பெருமைப்படுத்தப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் அண்ணல் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களுக்கும் பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களுக்கும் இவ்வாண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலின் பீஷ்ம பிதாமகர் என்று போற்றப்படும் அடல்ஜி குறித்து நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அவர் நம் காலத்தில் நம்மிடையே வாழ்ந்தார் என்ற பெருமை நமக்குக் கிட்டியிருக்கிறது.
 
 

போருக்குத் தயாரான பெருவீரனின் அறைகூவல்
தோற்றவன் வெறுப்பில் தேம்பும் விசும்பலல்ல
அரண்டவன் உளறிடும் அரற்றலென எண்ணாதீர்
பாரதியன் வரைந்திட்ட வெற்றிக்கவி கேளீரோ

என்று தன் துவண்ட தம் தொண்டர் படை எழுச்சி கொள்ளக் கவிபாடிய காவியத் தலைவன் நம் அடல்ஜி.

Tuesday 23 December 2014

நம்பிக்கையும் சட்டமும் - இராம ஜென்ம பூமி

இராம ஜென்ம பூமி இராம ஜென்ம பூமியேதான் என்று பிரயாகை (அலாகாபாத்) உயர்நீதிமன்றம் 2010ல் அளித்த தீர்ப்புக்குப் பின் அது மசூதியே என்று வழக்காடிய ஹஷிம் அன்சாரி என்ற முதியவர் உள்ளிட்ட பல முஸ்லிம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இத்தீர்ப்பை விமர்சிப்பவர்கள் வைக்கும் முக்கியமான வாதம் இராமன் பிறந்த இடம் குறித்த முடிவை எடுத்த விதம் பற்றியதே. ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவிவரும் மக்களின் நம்பிக்கை கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 

Saturday 13 December 2014

வந்தே குரு பரம்பராம்‬

நண்பர் விவேக ஜோதி அவர்கள் எழுதியது. முன்னுரை எனது.

ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.

அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை விதந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டக சுலோகமும் அதன் அர்த்தமும் இனி பார்க்கலாம்.

Sunday 7 December 2014

திருமதி தமிழிசை சௌந்தர்ராஜனிடம் சில கேள்விகள்

கேள்விகள் கேட்பவர் - பத்தமடை சுப்பிரமணியன்.

1.    அன்புள்ள சகோதரி, திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடம் என எழுதியும் பேசியும் வருபவர்கள் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?

2.    அவர்கள் அரசியல் கட்சி சாந்தவர்கள் என உங்களால் கூற முடியுமா?

3.    நீங்கள் தி.மு.க. சார்பில் நின்று பேசுவதற்காக திருவள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாக்க் கருத்துக் கூறுபவர்களைப் பார்த்து இதனை அரசியல் ஆக்க வேண்டாம் எனக் கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?4.    இதில் எங்கே வந்தது அரசியல் ?

5.    தை மாதம் இரண்டாம் நாள்- திருவள்ளுவர் பிறந்த நாள் என அறிவித்த கலைஞரின் நிலைப்பாடு சரிதான் எனக் கூறுகிறீர்களா ?

6.    கலைஞர் அறிவிப்பில் நியாயம் உண்டு என உங்களால் கூற முடியுமா?

7.    திருவள்ளுபவர் பிறந்த நாள் தொடர்பான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8.    தமிழ் வருடம் சித்திரையில் தொடங்காது தை மாதத்தில் தொடங்குகிறது எனக் கலைஞர் அறிவித்த போது – நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கே போயிருந்தீர்கள்?

9.    சித்திரை - தை என்ற வருடப் பிறப்பு சர்ச்சையில் தங்கள் நிலைப்பாடு என்ன?

10.    இந்த வருடப் பிறப்பு சர்ச்சை தொடங்கிய காலத்தில் 14-2-14 சனிக்கிழமை தினமணி நாளிதழில் பேராசிரியர் சாமி.தியாகராசன் எழுதிய கட்டுரையைப் படித்துள்ளீர்களா?

11.    1935- 18ஆம் நாள்(வைகாசி அனுடத்தில்) மறைமலை அடிகள் தலைமையில் தமிழகத்தின் பெரும் பேராசிரியர்கள், தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் கூடி வள்ளுவர் நாளைக் கொண்டாடியது உங்கட்குத் தெரியுமா?


12.    1935- 19ஆம் தேதி வைகாசி அனுடத்தில் சென்னையில் உள்ள ஏழுகிணறு, ஏழுகிணற்றுத் தெருவில் அறிஞர் அண்ணா தலைமையில் திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்பட்டது உங்கட்குத் தெரியுமா?

13.    இலங்கை, கொழும்பில் வாழ்ந்த பண்டிதர் கா.பொ.இரத்தினம் தான்கண்ட தமிழ் மறைக் கழகத்தின் சார்பில் “ வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் – அதுவே தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்” என அறிவித்து உலகம் முழுதும் விழா நடத்தியது உங்கட்குத் தெரியுமா?

14.    1966- ஜூன் 2-ஆம் நாள் வைகாசி அனுட நாளில் சென்னை மயிலை சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை – அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்ததை நீங்கள் அறிவீர்களா?

15.    அப்போதைய முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் வைகாசி அனுட நாளை வள்ளுவர் திருநாள் எனக் கொண்டாடி அரசு விடுமுறையாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்களா?

16.    தங்கள் தந்தை இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தனை இது தொடர்பாகக் கேட்டு அறிய முயற்சி மேற் கொண்டீர்களா?

17.    சென்னை, மயிலைத் திருவள்ளுவர் திருக்கோயிலில் வள்ளுவர் அவதாரத்தினமாக  வைகாசி அனுட நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்களா?18.    வள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாகக் கருத்துரைப்பவர்களைக் கண்டு நீங்கள் கலந்து பேசினீர்களா?


19.    அவ்வாறு பேசியிருந்தால் அவர்கள் கருத்தில் உங்கட்கு உடன்பாடா? இல்லையா? என்பதை வெளியிட்டீர்களா?

20.    இப்படி எதுவும் நீங்கள் செய்யாமல் இருந்து கொண்டு “இதனை அரசியல் ஆக்க வேண்டாம்” எனச் சொல்வது நீங்கள் தான் இதனை அரசியலாக்குகிறீர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கவில்லையா?

21.    உங்கள் அரசியல் ஆதாயத்திற்காகத் திருவள்ளுவர் பிறந்த நாளை வைகாசி அனுடத்தில் கொண்டாடிய மறைமலை அடிகள், திரு.வி.க, டாக்டர் உ.வே.சா, அண்ணா, ஈ.வே.ரா, வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ, மா.பொ.சி, கி.வா.ஜ, கல்கி -கிருஷ்ணமூர்த்தி முதலான பெருமக்களை நீங்கள் அவமதிக்கிறீர்களே! இது உங்கட்கு வெட்கமாக இல்லையா?

22.    “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற நாலாந்தர அரசியல்வாதி போல நீங்கள் பேசலாமா? நீங்கள் இருக்கும் இட்த்திற்கு அழகா?

23.    நீங்கள் கலைஞரின் கருத்துப் பினாமியாக பாரதிய ஜனதா கட்சியில் செயல்படுபவர் எனப் பலர் சொல்வதை உங்கள் பேச்சு உறுதிப்படுத்தவில்லையா?

Saturday 22 November 2014

பாரத பூமி பழம்பெரும் பூமி

2014ஆம் ஆண்டு அம்மன் தரிசனம் தீபாவளி மலரில் வெளியான என் கட்டுரை. 

மஹான்கள் பலரும் தோன்றி அறம் வளர்த்த புண்ணிய பூமி நம் பாரத நாடு. நம் தர்மம் ஸ்நாதனம் என்று அறியப்படும். அழிவற்றது, பழமையானது என்பது இதன் பொருள். நன்மைகள் பெருகிவரும் காலத்தே சற்றே தீமையும் இழையோடிச் செல்லும் என்பது போல நடுவே சிலகாலம் நம் பண்பாட்டுக்குப் பொல்லாக் காலமாகிவிட்டது. மேற்கத்திய உலகின் தாக்கமும் மேற்காசியத்தின் ஆட்சியும் நம் தர்மத்தைச் சற்றே மங்கலான ஒளியில் உலகுக்குக் காட்டிவந்த காலம் சில நூற்றாண்டுகள்.

Wednesday 10 September 2014

ஓம் சக்தி - கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையை உடையவராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும் விட ஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம் இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப் பற்றுடையவனாய் இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படி கருமங்களைச் செய்யும் பொழுது அது தனக்காகவது பிறருக்காகவது நன்மை தருமென்றே செய்வார்.


ஒருவன் கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால் வயிற்றுக்குச் சோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மானமிழந்தும் துன்பமடைய வேண்டியிருக்கிறது; குடியானவனாயிருந்து பயிர்த்தொழில் செய்யவோ அநேக தடங்கல்கள் இருக்கின்றன; பட்டத்தில் மழை பெய்யவில்லை;அப்படி மழை பெய்தாலும், உழ எருதுகள் இல்லை; உழுதாலும், விதைக்க வித்துக்களில்லை; விதை விதைத்தாலும்,களைகளைச் சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்துக் காவல் காத்து மாசூலை அறுவடை செய்து வீடு கொண்டுவந்து சேர்த்து ஸூகிக்க ஐவேஜி இல்லை; அப்படி வீடு கொண்டு வந்து சேர்த்துப் பலனை அநுபவிக்கவும் இடமில்லை; ஏனென்றால் சர்க்கார் தீர்வைக்கே தானிய தவசங்களைக் களத்தில் விற்றுவிட வேண்டியிருக்கிறது. ஆகையால், உழுது உண்ணுவதைவிட வேறு என்ன தொழில் செய்தாயினும் பிழைக்கலாமென்று "கொள்ளைக்கூட்டத்தோடு சேர்ந்து பிரயாணிகளை வழிப்பறி செய்தோ, கன்னம் வைத்துத் திருடியோ பிழைக்க ஆரம்பிக்கிறான்.

அவன் செய்யும்தொழில் ஒரு கொள்கையினடியாய் உண்டானதாயினும், அது அவனுக்குத்தான் நன்மை தருமேயல்லாது இதரர்களுக்குத் தீமையே செய்யும். இருந்தாலும், ஆபத் தர்மம் என்ற கொள்கையை அவன் அனுசரிக்கிறான் மனைவி மக்கள்உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றிப் பார்த்தவரெல்லாம்பரிதாபங் கொள்ளும்படியாய், ஒரு புருஷன் குடும்ப சவரக்ஷனை செய்தால், அவன் மானம் அழிந்து போகிறது.'பயிர்த் தொழிலில் ஒன்றும் கிடைக்காது' என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டது. திருட்டுத் தொழிலில் ஏதேனும் பசியாரஉண்ணக் கிடைக்கும் என்ற திண்ணம் உண்டு. பிரயாணிகளோஆங்கிலேயர் ஆசீர்வாதத்தால் நிராயுதபாணிகளாய் இருக்கிறார்கள். போலீஸ் என்ற உள் நாட்டுக் காவற்காரரோ சம்பளம் சொற்பமானதாலும், அந்நியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாதென்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத் தயாராயிருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு 'எக்கிரிமெண்டு' (உடன்படிக்கை) செய்து கொண்டு அவர் கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத் தள்ளக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தியாதி சவுகரியங்களால் திருட்டுப் பிழைப்பே மேலானதென்று ஒரு குடியானவன்அதைக் கைக் கொள்ளுகிறான். ஆனால், அந்தத் தொழிலில் ஜீவஹிம்ஸை செய்தே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிச்செய்வது பாபமாகும். அந்தப் பாபத்தால் பாபத்திற்குரிய மோட்சத் தடை நேரிடும் என்ற பயமோ, சந்தேகமோஅவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன் வழிப்பறி செய்யுங்காலத்தில் ஒரு தருமத்தை அனுசரிக்கிறான். அதாவது, சில வகுப்பார்களை அவன் தொடுவதில்லை.ஏழைகள், துணையின்றிச் செல்லும் ஸ்திரீகள் நோயாளிகள், தூர ஸ்தலங்களிலிருந்து வரும் யாத்திரைக்காரர்கள் ஆகியஇவர்களையும் இவர்களைப் போன்ற மற்றவர்களையும் ஹிம்ஸிப்பதில்லை.

அதோடு நில்லாமல், தான் கொள்ளையடித்து ஈட்டிய பொருளில் ஒரு பாகத்தைக் கொண்டு தான தருமங்களும் செய்கிறான். தன்னைப் பகலில் கொள்ளையடித்த "சாவுகாரனையும், லேவாதேவி செய்யும் நிஷ்கண்டகனையும், ஏன் இரவிற் கொள்ளையடிக்கக் கூடாதென்று தன்னைத்தானே கேட்கிறான். 'குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, தோல்கேட்டு (Toll Gate) வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டுவரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, - இன்னும் எண்ண முடியாத வரிகளைப் போட்டு, வீடு வாசல், நிலம் கரை, ஆடு - மாடு, சட்டி பொட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலங்கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தை நாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப் படாது?' என்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகிறது.

இவ்விதமாக ஆட்சேபணை ஸமாதானங்களால் தம் மனதில் கொள்ளையடித்துப் பிழைப்பதே நல்லதென்று ஒரு தீர்மானம் செய்து கொள்கிறான். இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்கு விரோதமாய் இருப்பினும், தர்ம சாஸ்திரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், காலசுபாவம் என்ற அவசியத்தால்ஆபத் தர்மமாக அவன் சித்தத்தில் நிலைத்து விடுகிறது. இதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு அவன் காரியங்களை ஆரம்பிக்கிறான். சிலர் இதை நல்லதென்று சொல்லுவார்கள். எவர் எதைச் சொல்லினும், எவர் எதைச் செய்யினும், தான் கொண்டதே கொள்கையென்று அவன் காலத்தைக் கழித்துவருகிறான். அவன் கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று அடுத்துத் தொடர்ந்தே வருகிறது. அவன் மனோதிடம் வாய்ந்த புருஷன் என்றே சொல்லலாம்.

- பாரதியார்.

Wednesday 7 May 2014

பிரிவினைவாதியும் தமிழ்விரோதியுமான கால்டுவெல்லுக்கு தமிழக அரசே 200ம் ஆண்டு நிறைவு விழா எடுப்பது தமிழருக்கு அவமானம்

ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ்ப் பணியைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது 200வது ஆண்டு நிறைவு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. அறிவியல், மொழியியல், வரலாறு, பண்பாடு என அனைத்து மட்டத்திலும் மிகத் தவறு என்று நிரூபிக்கப்பட்ட மோசடியான, ஆரிய-திராவிட இனவாதத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல்.கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழகம் வந்து தமிழ் படித்து, தமிழைத் திரித்து சூழ்ச்சி செய்து தமிழர்களைப் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்தவரே இந்த ராபர்ட் கால்டுவெல். தமிழர் வரலாறு என்ற போர்வையில் சாதிச் சண்டைகளை ஊக்குவிக்கும் விதமாக இவர் எழுதிய பல கருத்துகள் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு இன்றும் தீராத பிரச்னைகளாக நம் முன் தலைவிரித்தாடுகிறது. கமுதி வழக்கில் நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் என்று வெள்ளையர்கள் தீர்ப்பளித்ததற்கு இவரின் சமூக வரலாற்று ஆய்வே காரணமானது. இதன் விளைவாக தென்தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் நாடார்கள் பெருமளவில் மதம் மாற்றப்பட்டார்கள்.

கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் தமிழைச் செம்மொழி என்று உணர்த்தியவர் கால்டுவெல் என்று அவர் அறிவித்தார். கால்டுவெல் தமிழை உயர்தனிச் செம்மொழியாக எங்கும் குறிப்பிடவில்லை. கால்டுவெல் செந்தமிழ், கொடும் தமிழ் என்று தமிழை இரண்டாகப் பிரித்துக் காட்டிய தொல்காப்பியத்தின் மரபை மட்டுமே சுட்டிக் காட்டினார். உலக வரிசையில் உயர்தனிச் செம்மொழியான ஐந்து மொழிகளுடன் கால்டுவெல் தமிழை அங்கீகரித்துச் சொல்லவில்லை. கால்டுவெல் எழுதிய ஒப்பிலணக்கன நூலில் ஹல்ல கன்னடா என்று, கொடும் கன்னடம், செம்மையான கன்னடம் என்ற கன்னட மரபையும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கன்னட மொழிக்கு முகவரி கொடுத்தவர் கால்டுவெல் என்று எந்த கன்னடக்காரர்களும் போற்றுவதில்லை.

தமிழர்களை மதமாற்றுவதற்கு அந்நிய கிறிஸ்துவ மதத்திற்கு சில அடையாளங்கள், பிம்பங்கள் தேவைப்பட்டது. அதற்காக மோசடியாக உருவாக்கப்பட்டவரே ராபர்ட் கால்டுவெல். தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்க்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்த கால்டுவெல்லுக்கு விழா எடுப்பது தமிழருக்கும் தமிழினத்துக்குமே அவமானம். ஆகவே ஓட்டு அரசியலை ஒதுக்கிவைத்து, தமிழ்த் துரோகிகளுக்கு அங்கீகாரம் தரும் ஈனச் செயல்களை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிடுமாறு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கேட்டுக் கொள்கிறது.

- பால. கௌதமன்.
இயக்குனர்
வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்

Thursday 17 April 2014

கவனமாக எழுதுங்கள் தோழரே!புலமைபித்தன் தமிழக அரசியலில் எழுதிய (வழமையான) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பால.கௌதமன் அவர்களின் தெளிவான பதில்.
_____________________________________________________________________________ 
நடுநிலையாளராக விமர்சிப்பதற்கு நாணயம் தேவை. ஈ.வே.ராவின் தொண்டன் என்பதால் மட்டுமே நீங்கள் நடுநிலையாளராகி விட முடியாது. ஐயா புலமைப்பித்தன் அவர்களே, மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில் உறுதியாக உள்ளவர்  என்றும் தாங்கள் ஈ.வே.ராவின் கொள்கையை ”அணு அளவும் பிசகாமல் ஏற்றுக் கொண்டவர்” என்றும் 16.04.2014 தமிழக அரசியலில் எழுதி உள்ளீர்கள். இதில் தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்பது. காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் உங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வீர சாவர்கர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் பொய்யுரைத்து மெய்ப்பிக்கும் கோயாபல்ஸ் தத்துவத்தை நீங்கள் பின்பற்றலாமா? நீங்கள் இம்மியளவும் பிசகாமல் பின்பற்றும் ஈ.வே.ராவின் தத்துவமும் பொய்யின் அடிப்படையிலானது தானோ?

Saturday 25 January 2014

இந்து சின்னங்களுக்கு தடை - இராமநாதபுரம் கலெக்டரின் தாலிபானிஸம்

இக்கட்டுரை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கள ஆய்வு செய்து வெளியிட்டது.
 
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார் பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master)  தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துகள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக்  கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர்.