ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 27 April 2011

ஸித்தியடைந்தார் ஸத்ய ஸாயி பாபா!!

எத்தனையோ மஹான்கள் இந்த பாரத பூமியில். வந்தார்கள்... சென்றார்கள்...  பலர் தன்னுள் ஒடுங்கி இறையை உணர்ந்து உலகைவிட்டு விலகியே இருந்து சென்றவர்கள். சிலர் உள்ளே கண்டதை உலகுக்கு அறிவித்து அதன்பின் தனக்கு உத்தரவான வழியில் சென்றனர். அந்த வரிசையில் உலகளாவிய பக்தர் கூட்டம் கொண்டு தன் பக்தர்களை ஒரு நிறுவனத்தில் இணைத்து மனிதத் தொண்டு செய்தும் செய்வித்தும் வந்தவர் ஸத்ய ஸாயிபாபா.


கடவுள் அவதாரம் என்று அவர் உரிமை கோரியது விவாதத்துக்கு உரியது எனினும், கடவுளை அடைய அவர் சொன்ன வழிகள் முறையாகப் பின்பற்றினால் சரியாகும் என்ற வகையினது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொன்னதோடு நில்லாது செய்தும் காட்டினார். அதற்குச் சில சாட்சிகள் புட்டபர்த்தியிலும், பெங்களூருவிலும் உள்ள இலவச மருத்துவமனைகள், கல்லூரிகள்,  சென்னைக் குடிநீர் ஆகியன.

நாட்டு அரசாங்கத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு யார் இருந்தாலும் அவர்களைத் தன்வசம் இழுத்துக் கொண்டு அவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டார் பாபா. அப்துல்கலாம் ஐயா முதற்கொண்டு அவர் ஆற்றிய கல்விச் சேவையைப் போற்றாத ஆளில்லை. பாபா காட்டும் சித்து விளையாட்டுக்களைப் பெரிதாகப் பேசும் பொதுஜனம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்டுப் பின்பற்றியதா என்பது சந்தேகமே! பகவத் கீதை துவங்கி உபநிஷத்துக்கள் வரை அவரது விளக்கங்கள் தனித்தன்மையது.

இவ்வளவு இருந்தும் ஆசிரமத்தில் அவ்வப்போது உரசல்கள், சச்சரவுகள் நடக்கிறதே? பாதகங்கள் சில நடந்தனவே என்று கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் "விஷப்பூச்சிகளை நான் என்னருகே வைத்துக் கொண்டேன். அவற்றை வெளியில் விட்டால் உலகம் தாங்காது". சட்டப்படி ஏற்க முடியாது எனினும் சற்றே சிந்திக்க வைத்தது. அமானுஷ்ய சக்திகள் கொண்ட அவரே திணறும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்? எதுக்கும் சாக்கிரதையாவே இருப்போம் என்று நல்லவர்களை இதன்மூலம் முடிவெடுக்க வைத்தார் ஸாயிபாபா.

வேத மந்திரங்கள் பாராயணம் நடந்தால் கவனித்துக் கேட்பாராம். வேத வித்துக்களை ஊக்குவித்து அவர்களுக்கு தனிச்சிறப்பு அளிப்பார் என்று சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பண்டிதர் ஜெயராம ஷர்மா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பாபாவிடம் எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் தாய்மொழிக்கு அவர் தந்த மதிப்பு. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் தம் தாய்மொழியிலேயே பேசுவார். பல சமயங்களில் மொழிபெயர்ப்பாளர் திணறி நிற்க பாபா ஆங்கிலத்தில் சொல்லி அதை மொழிபெயர்ப்பாளர் அப்படியே ஒப்பித்த கதை வாடிக்கை.

மதங்கள் பற்றிப் பேசுகையில் நீ உன் முன்னோர் காட்டிய வழியில் செல்வதே சிறப்பு  என்று வலியுறுத்தினார் பாபா. எங்கிருந்தும் எங்கும் மாறுவதை அவர் ஊக்குவித்ததில்லை. ஸநாதன தர்மத்தை தெளிவுற விளக்கி அதை ஓங்கிப் பிடித்தவர் அவர். பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் கடவுள் ஒருவரே என்று சொல்லி அதற்கு அவர் தாயைக் காட்டித் தந்த உதாரணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. மகள், தாய், மனைவி, மாமி, பாட்டி என்று பலருக்குப் பல வகைகளில் உறவு முறை இருந்தாலும் அந்த முறைகளின் மூலம் குறிப்பிடப்படுவது உன் தாய் தானே! அது போலத்தான் கடவுள். பல பெயர்களில் பலர் அழைத்தாலும் அவர் ஒருவரே என்றார். logic ஓகே.

96 வயது இருப்பேன். அதன் பிறகு மறைந்து மாண்டியாவில் பிறப்பேன், என்று அறிவித்தார். நெடுங்காலம் தன் பேச்சுக்களை மொழிபெயர்த்த கஸ்தூரி என்ற பெரியவர் பெண்ணாகப் பிறப்பெடுத்து தன் அடுத்த அவதாரத்தைப் பெற்றெடுப்பார் என்றும் அறிவித்தார். யாகவா முனிவர் என்றொரு காமெடி பீஸ் இப்படியாகத்தானே பேசியது! இவரும் இப்படியே பேசுகிறாரே! அதைப் போலவே இவரும் குறித்து வைத்த நேரத்துக்கு முன்பே போய்விட்டால் என்ன ஆகும் என்று யோசித்தேன். அவ்வாறே நடந்தும் விட்டது.


இவை போனற சிலபல சர்ச்சைகள், முரண்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஸத்ய ஸாயி பாபா செய்திருப்பது மகத்தான மனிதகுலத் தொண்டு. அதற்காக அந்த மனிதரை வாழ்த்தலாம். அவர் ஸந்நியாச தர்மத்தைக் கைக்கொண்டு ப்ரம்மச்சரியம் காத்து வாழ்ந்து மறைந்தவர். அதற்காக அவரை வணங்கலாம். Help ever; Hurt never என்பதைத் தாரக மந்திரமாகக் கொள்வீர் என்று முழங்கினார் அவர். பின்பற்றுவது சற்றே கடினம் என்றாலும் முயல்வது தவறில்லை.

பணத்தைக் கொள்ளையிட்டுப் பதுக்கும் இன்றைய உலகில் இவர் போன்று பொதுத் தொண்டு செய்யும் பெரியோர் பலர் நமக்கு அவசியத்தேவை. ஆகவே, ஸத்ய ஸாயி பாபாவின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சற்றே இளைப்பாறிவிட்டு மீண்டும் தன் மானிட சேவைப் பயணத்தைத் தொடங்க தென்னாடுடைய சிவபெருமானைப் பிரார்த்திப்போம்.



சிவோஹம்...சிவோஹம்...சிவோஹம்!!!

Tuesday 19 April 2011

செம்மொழியான தமிழ் மொழியாம்!!

நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழைச் செம்மொழி ஆக்கிய கோமகனே என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர் திமுக கூட்டணியினர். 450 கோடி ரூபாய் செலவில் டாஸ்மாக் கடைகளை ஓவர்டைம் பணியாற்ற வைத்து திமுகவின் குடும்பம் குதூகலித்து மகிழ நடத்தப்பட்ட விழா அது என்பது ஊரறியும். அப்படிப்பட்ட விழா நடந்ததால் தமிழுக்கு என்ன பயன்? தமிழனுக்கு என்ன பயன்?

செம்மொழி அறிவிப்பு வந்தவுடன் தமிழனுக்கு என்ன பயன் என்ற கேள்விக்கு பதிலளித்த கவிஞர் அப்துல்ரகுமான் தமிழன் பாக்கெட்டுக்குப் பத்து ரூபாய் வருமா என்று பார்ப்பது தவறு. தமிழ் என்ற மொழியைக் கற்க ஆவலுடன் இருப்போர்க்கு இது பேருதவியாக இருக்கும். நன்மை பல கிடைக்கும். மொழி செம்மை பெறும். தமிழ்ப் பண்பாடு சிறப்பெய்தும் என்றெல்லாம் அடுக்கினார்.

நல்லதுதானே! நல்லமனிதர் சொல்கிறாரே என்று பலரும் ஏற்றோம். ஆனால் தமிழைச் செம்மொழியாக்கிய கோமகன் ஆளும் அரசு இயக்கும் பேருந்துகளில் திருக்குறள் எழுதிப்போட்டு வள்ளுவம் போற்றுதும் என்று மார்தட்டும் வேளையில் மற்ற விஷயங்களை எப்படி தப்பும் தவறுமாக எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.


உலகச் செம்மொழியைப் (ஒருக்கால்) படித்துவிட்டு வரும் பிற மொழிக்காரர்கள் அல்லது பிற நாட்டவர், வாழும் வள்ளுவர் (இது வேற!) ஆளும் அரசு நடத்தும் பேருந்திலேயே இப்படி அவலமாகத் தமிழ் எழுதி வைத்திருப்பதைப் பார்த்து என்ன நினைப்பர்? தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சிக்கு வந்த இந்தக் கூட்டம் தமிழை வைத்தும் எப்படி சம்பாதிக்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறது. தமிழ் என்பது பதவியில் இருப்போருக்குப் பணம் தரும் ATM  இயந்திரம் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில்...முருகா! ஞானபண்டிதா!! எமைக் காக்கும் ஷண்முகா!!! தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்!! வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!!