ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 24 October 2013

இராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.

சமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை. ஆனால் விவாதிப்போம் என்று கூடிப் பேசுகிறார்கள். காரணம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷி அவர்கள் “இராமர் கோவில், இராமர் பாலம், பசுப் பாதுகாப்பு, கங்கை சுத்தப்படுத்துதல், 370ஆவது பிரிவை நீக்குதல், பொது உரிமையியல் சட்டம் ஆகியன பாஜகவின் செயல்திட்டத்தின் பிரிக்கவியலாத அம்சங்கள்” என்று கூறியதே.

Wednesday 23 October 2013

தங்க வேட்டையும் சோபனச் சாமியாரும்..

உத்திரப் பிரதேசம் உன்னாவ் தங்கவேட்டை புகழ் சுவாமி ஷோபன் சர்க்கார் மோடியைக் கிழி கிழி என்று கிழித்தார் என்று மானாட மயிலாட எஃபெக்டில் பங்களா ஜந்து சொம்புத்திரன் துவங்கி காதவழி பெயரில்லாத சில கழுதைகள் வரை பலர் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டு திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியைப் படித்துவிட்டு அதை வைத்து புளகாங்கிதம் எய்தி அந்த மனநிலையிலேயே கருத்துப் பேசுகிறார்களோ என்று தோன்றுகிறது.

Sunday 13 October 2013

கட்டுரை என கட்டுக்கதைகளைத் தீட்டும் பழ.கருப்பையா

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை

பலர் தலைகளிலும் வயிறுகளிலும் எரிந்து கொண்டிருக்கிற பொறாமைத்தீயை ஒருவன் எடுத்துத் தன் தலையிலும் வயிற்றிலும் வார்த்துக் கொண்டது போல ஒரு கட்டுரை. ஆனால் வார்த்தவர் வார்த்தை விளையாட்டில் வித்தகர் என்பதால் சற்றே நகைச்சுவை இழையோடவிட முயன்றிருக்கிறார். திராவிட இயக்கத்தின் போர்வாட்கள் என்றறியப்படும் பெருமக்கள் எழுதும் கட்டுரைகளைப் போலவே சொற்களைக் கட்டமைப்பதில் காட்டும் கருத்தைக் கருத்துக்களைக் கட்டமைப்பதில் காட்டத்தவறிய கட்டுக்கதையே இந்தக் கட்டுரை. எதுபற்றிப்பேசுகிறேன் என்று ஊகிக்க ஏலாதோருக்குச் சொல்லிவிடுகிறேன். ஈரொரு தினங்களுக்கு முன் தினமணியில் திரு.பழ.கருப்பையா என்ற பழைய காங்கிரசுக்காரர் எழுதிய கட்டுரை.

புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய்மையை வாய்மையிடத்து வைப்பதில் பெருங்குற்றமில்லை என்று வள்ளுவப் பெருந்தகை வாக்குச் சொல்லிர்யிருக்கிறார். ஆனால் புரைதீர்ந்த நன்மை எதுவென்று அறிந்து கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பலரும் கவலைப்படுவதில்லை. நான் கருதுவதே புரைதீர்ந்த நன்மை. அதைப் பயக்குமென்பதால் பொய் சொல்லுகிறேன். வள்ளூவனே சொல்லிவிட்டான் அது பெருங்குற்றமில்லை என்று, இனி எனக்கென்ன கவலை என்று இறுமாந்து பொய் சொல்லும் பேர்களின் வரிசையில் பழ.கருப்பையா முதலிடத்துக்கு ஓடுகிறார்.

செங்கோட்டைக்கு மோடியோடு போகப் பலர் பிடியாள் வேலைக்குக் கிளம்பிவிட்டார்கள் என்று தான் அதிமுகவில் இணைந்த காலத்து நிகழ்வுகளை முடிச்சுப்போட்டு நினைவுகூர்ந்திருக்கிறார் கருப்பையா. எனக்குச் சோவைத் தெரியும். சோவுக்கு என்னைத்தெரியும். சோவுக்கு அம்மாவையும் தெரியும் ஆகையால் அம்மாவை எனக்குத் தெரியும், எனக்கு அம்மாவைத் தெரியும் என்ற அடிப்படையில் பேசி அதிமுகவில் இணைந்த வரலாறு மிகச்சமீபத்தியது என்பதால் அவ்வளவாக யாருக்கும் மறந்திருக்காது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு எம் எல் ஏ என்ற பதவியுடன் இவர் போனபோது “ஐயா சபாநாயகர் வாங்க” என்று வதந்தியைப் பரப்பும் ஏடுகளில் வந்ததை வைத்துப் பலர் வாழ்த்திய போது, “இல்லை. அப்படிப்பேசாதே” என்று மறுக்கத் தோன்றாமல் புன்சிரிப்புடன் அவர்களை நோக்கிக் கையாட்டியவர் பேராசைக்கார பழ.கருப்பையா.

இது கிடக்கட்டும். இவர் அதிமுகவில் சேர்ந்த புதிதில் இவர் இன்னும் காங்கிரசில் இருப்பதாக எண்ணிக் கொண்டு இளைஞர் காங்கிரசின் கூட்டம் ஒன்றுக்கு இவரை அழைத்துவிட்டார்களாம். மரியாதை தெரிந்த அரசியல் பண்பாளர் என்ன செய்திருக்கவேண்டும்? “ஐயா! நான் காங்கிரசில் இருந்து விலகிவிட்டேன். வேறு கட்சியில் இருக்கிறேன். என்னை உங்கள் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பது சரியன்று. நான் வருவதும் முறையாகாது”, என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்? வெள்ளையுடை உடுத்திக் கொண்டு மேல்துண்டு பளபளக்க மேடை கிடைத்ததே என்று மகிழ்ந்து பேசக் கிளம்பிவிட்டாராம் காங்கிரசின் பழைய கருப்பையா. மேடையேறியதும் விவரமறிந்து இவரை இறக்கியனுப்பியது தனிக்கதை.

காசுமீரத்துக்கு அத்துமீறி வழங்கப்பட்ட அநியாய உரிமைகள் குறித்தும் அவற்றைக் கொண்டு அங்குள்ள அரசியல்வாதிகள் அநீதியாய் தேசத்துக்கு விரோதமாகப் பேசுவது குறித்தும் கேள்விகளை மோடி மட்டும் எழுப்பவில்லை. போ என்றதும் ரிக்‌ஷா ஏறிப் போனாரே என்று கருப்பையா மாய்ந்து போகும் அத்வானியும் பேசியுள்ளார். தேசிய உணர்வு இரத்தநாளங்களில் ஓடும் அனைவரும் பேசியிருக்கிறார்கள். மகாவீர் தியாகி என்ற பெரும் தேசியத் தலைவர் நம் நாட்டின் பகுதிகளான அக்சாய் சின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த போது நேருவைக் கேட்ட கேள்விகளைக் கருப்பையா மறந்திருப்பாரோ? காசுமீரத்தைத் தன்நாட்டுடன் இணைத்துக் கொள்ள பாகிசுதான் அதிபர் ஜின்னா தன் படைகளை ஏவினார் என்கிறார் கருப்பையா. ஆனால் அவர் ஏவியது தம் படைகளை அல்ல ஆப்கனிசுதானத்துக் கூலிப்ப்டையினரை என்பது வரலாறு. அந்தக் கூலிப்படையினரை விரட்டிவிட்டு நம் நாட்டுடன் காசுமீரத்தை இணைத்துக் கொண்டிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். அதை ஐநா சபைக்குக் கொண்டு போய் இருவரும் இருபாதிகள் என்று காசுமீரத்தைக் கூறுபோட்ட கூறுகெட்ட செயலைச் செய்தது காங்கிரசின் நேரு என்பது வரலாறு. நம்மிடமிருப்பது பெருமலைப்பரப்பு என்றும் எதிரிக்கு அளிக்கப்பட்ட பாதி ஆட்டாம் புளுக்கை அளவு என்றும் கூறுகையில் கருப்பையா பூகோளம் தெரியாதவரா கணக்குத் தெரியாதவரா அல்லது காசுமீரம் குறித்த பிறர் யாருக்கும் தெரியாத உண்மைகள் பல தெரிந்தவரா என்ற கேள்வி எழுகிறது. பூகோளமும் கணக்கும் வரலாறும் சரிவர அறிந்தவர்கள் கருத்துப்படி கருப்பையா ஒன்று புளுக்கையளவு என்று புளுகவேண்டும் அல்லது காசுமீரத்து வரலாறும் பூகோளமும் பிரிவினைக் கணக்குகளும் குறித்த அடிப்படை அறிவே இல்லாதிருக்கவேண்டும். இது தவிர தன் வசமிருக்கும் காசுமீரின் ஒரு சிறு பகுதியை பாகிசுதான் சீனாவுக்குத் தாரை வார்த்தது குறித்து கருப்பையா கருத்தேதும் சொல்லவில்லை. இது அவருக்குத் தெரியுமா? தெரிந்தாலும் ஆட்டாம்புளுக்கையில் அரைப்புளுக்கை போனால் போகட்டுமே என்பாரோ? பழைய காங்கிரசுக்காரர் என்பதால் இது குறித்த ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

சரி போகட்டும். வேறென்ன சொல்கிறார் காசுமீரைப் பற்றி என்று பார்த்தால் அவை அத்தனையும் பேத்தல். இயற்கையாகவே காசுமீரிகள் முசுலீம்கள் என்கிறார் கருப்பையா. இது அடுத்த அண்டப் புளுகு, காசுமீரத்தில் இருந்து 1980களில் விரட்டப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் காசுமீரத்து பண்டிட்டுகள் முசுலிம்கள் அல்ல இந்துக்கள். ஆகவே காசுமீரத்தில் இயற்கையாக அமைந்த முசுலீம்கள் கேட்டுப் பெற்றதல்ல அந்தச் சீர்கெட்ட சலுகைகள். இயற்கையாக காசுமீரத்தில் வசித்து வந்த இந்துக்களின் கருத்தை வழமைபோலப் புறந்தள்ளிவிட்டுப் பேரம் பேசிய காங்கிரசின் கூத்தாட்டமே இந்தச் சலுகை. நம் நாட்டின் அங்கமென்றால் அங்கே நாம் சென்று வசிப்பதில் யாருக்கென்ன தடையிருக்க முடியும்? அந்தப் பகுதி நம்மோடு இணைந்திருக்க நாமேன் தனிச் சலுகை தரவேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு? அங்கே வேறு யாரும் வரக்கூடாது. இந்துக்களை அடித்து விரட்டினால் கேட்க நாதியில்லை.

ஆனால் முசுலீம்கள் இயற்கையாக அங்கே வசிப்பவர்கள் என்று புரட்டுவாதம் பேசி போலிச் சமாதானம் செய்யும் காங்கிரசுக் கட்சியில் ஊறித்திளைத்த கருப்பையா வேறெப்படியும் பேசுவார் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. தனி உரிமைகள், தனித்த வாழ்வு, தனிப்பட்டதோர் மாநிலம், அங்கே வேறாரும் வருவதற்கில்லை, இணைந்து அங்கே வாழ வழியுமில்லை என்பன சிறப்புச் சலுகைகள் அல்ல, சீரழிக்கும் சலுகைகள்.

ஆனாலும் காங்கிரசைக் காந்தியார் கலைக்கச் சொன்னது குறித்த விவாதத்தில் ஆதாரங்களைக் கண்டுணர்ந்த பின் சட்டமன்றத்தில் வந்து அது உண்மையே என்று பேசிய ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுள்ளாரே ஒருவேளை ஆதாரம் தேடிச் சேர்த்து கோர்வையாகப் பேசப் பழகியிருப்பாரோ என்று எண்ணியது பிழையாகிவிட்டது. புளுகு காங்கிரசுக்கு தொட்டில் பழக்கம். தன் அரசியல் வாழ்வின் தொட்டில்காலம் முதல் காங்கிரசில் குப்பை கொட்டி வந்த கருப்பையா மாறுவதென்பது மனப்பால் என்று இப்போது புரிகிறது.

நாட்டின் நிலைபெற்ற கொள்கைகளை எதிர்ப்பதா என்று பொங்கும் கருப்பையா நூற்றாண்டுகளாய் நிலைபெற்றுவிட்டிருந்த ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக திலகரும், கோகலேயும், போசும், தாசும் பொங்கியது குறித்தும் இதே கருத்தைக் கொள்வாரா? நிலைபெற்று விட்டவை என்பதற்காக தீமைகளை எதிர்க்காமல் இருந்திருக்கிறோமா? இந்திராகாந்தி தாரைவார்த்த கச்சத்தீவில் இலங்கை நிலைபெற்று பல்லாண்டுகள் ஓடிவிட்டன. அது நிலைபெற்றுவிட்டது என்பதால் எதிர்ப்பது குற்றமென்பாரா பழைய காங்கிரசுக்காரர் கருப்பையா?

இந்தியா ஒரு பன்முக நாடு ஆகவே ஒரே உரிமையியல் சட்டத்தால் ஆள்வது இயலாது என்கிறார் கருப்பையா. சிலருக்கு மட்டும் ஆகி வந்த வழக்கத்துக்கு மதிப்பு மற்றவர் வழக்கங்கள் வழக்கொழிக்கப்படும் என்பது என்ன வகையான உரிமையியல் என்று கருப்பையா விளக்குவாரா? இது குறித்த பல விவாதங்களில் மதச்சட்டங்களே முன்வைக்கப்பட்டு ஒரே உரிமையியல் சட்டம் மறுக்கப்பட்டுள்ளது. ஒரு மதத்தின் சட்டம் ஏற்கப்படும் பிறமதங்களின் சட்டம் ஏற்கப்படாது என்பது என்ன விதமான நீதி? இது ஒரு குறிப்பிட்ட மக்களை மதத்தின் பேராலே வசியப்படுத்தி அவர்களின் ஓட்டுக்களைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்து பிறரை ஏகடியம் செய்யும் எத்தம் அல்லவா? இதுதானா அரசாட்சி?

இந்து என்பார் தமிழரில் இல்லை என்று பழைய புளித்துப் போன விளக்கம் ஒன்றை அளித்து அதை விவேகானந்தரிடம் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை சொன்னார் என்று சொல்கிறார்கள் என்கிறார் கருப்பையா. சொன்னார் என்று சொன்னால் அதற்கு சுவாமி விவேகானந்தரின் பதிலையும் சொல்லவேண்டுமே. அதைச் சொன்னால் தம் வாதம் தேய்ந்தழிந்து போகுமே என்ற அச்சம். சுந்தரம்பிள்ளை தாம் திராவிடன் என்பதால் இந்து என்ற அடையாளத்தில் இருக்க விரும்பவில்லை என்று சொன்னார். ஆனால் தமிழருக்கு சைவம் வைணவம் ஆகிய மதங்கள் உண்டு என்றும் சொல்லியிருக்கிறார்.

அதற்கு சுவாமி விவேகானந்தர் பதிலுறுக்கையில் “இவர் மெத்தப் படித்தவராக இருந்த போதும் ஆங்கிலேயரின் சூழ்ச்சிச் சொல்லாடலில் சிக்கிப் பொய்யை மெய்யெனக் கொண்டு இனவாதம் கற்பித்த இருண்ட கண்டங்களில் இருக்கிறார். இம்மாதிரியான வாதங்களைத் தாம் தென்னிந்தியாவில் சில நிலையற்ற மனமும், உயர்விலாச் சிந்தனையும் கொண்ட பலரிடம் கேட்டிருப்பதாகவும் அவர்கள் ஆரியம் திராவிடம் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்டு பேசினார்” என்றும் வருந்தினார். இன்று ஆரியப் படையெடுப்பு என்பதே அப்பட்டமான பொய் என்று அனைத்துத் தரப்பு வரலாற்று அறிஞர்களும் ஓப்புக் கொண்டுள்ளனர். இனவாதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திவரும் அரசியல் பிச்சைக்காரர்கள் சிலரே அதைத் தாங்கிப் பிடிக்கின்றனர். கருப்பையா இதைத் தூக்கிப் பிடித்துப் பேசுவது அவர் எதையும் ஆராயாமல் அள்ளித் தெளித்த அவசரக் கோலமாகக் கட்டுக்கதைகளை இட்டு நிரப்பி தினமணிக்குத் தந்துள்ளார் என்பதையே காட்டுகிறது.

அத்வானி ஜின்னாவைப் புகழ்ந்ததும் பதவியிறக்கப்பட்டார் என்று புலம்பும் கருப்பையா சீதாராம் கேசரியை எங்கே வைத்துப் பூட்டிவிட்டு சோனியா பதவிக்கு வந்தார், அந்நிகழ்வு நடந்த போது இவர் எந்த முகாமில் முகம் காட்டிக் கொண்டிருந்தார் என்று எண்ணிப்பார்த்தல் நலம். ஒரு தலைவனை அவன் எப்பேர்ப்பட்ட செல்வாக்குள்ளவனாக இருந்தாலும் தொண்டர்களின் உணர்வுக்கு மாற்றுக்கருத்துக் கொண்டிருந்தால் தொண்டர்கள் தலைவனின் கருத்தை ஏற்பது கட்டாயமில்லை ஜனநாயகக் கட்சிகளின் வழிமுறை. அத்வானி ஜின்னா பற்றிப் பேசியது தொண்டர்களுக்குப் பிடிக்கவில்லை. எதிர்த்தனர் என்பதால் அவர் பதவி விலகினார். விலக்கப்படவில்லை கருப்பையா கூறியிருப்பது போல. பிறகும் கட்சியிலிருந்து முற்றாக அவர் விலகவில்லை, கட்சியில்தான் இன்னும் இருக்கிறார். சகல மரியாதைகளுடன் இருக்கிறார்.

இந்திரா காந்திக்காகக் காங்கிரசு உடைந்ததையும் டாங்கேவுக்காக கம்யூனிஸ்டுகள் ஆடிய ஆட்டத்தையும் சுட்டிக் காட்டும் கருப்பையா ஒருவன் தலைமைப் பதவிக்கு வந்தவுடன் தன்னையொத்தவர்களைக் களையெடுப்பான் அதுவே வழக்கம் என்கிறார். கருத்து வேறுபாடுகளைச் சகியாமல் லலித் நாராயண் மிஷ்ரா முதல் பல்வேறு தலைவர்களையும் களையெடுத்த காங்கிரசில் ஊறித்திளைத்த கருப்பையாவுக்கு உட்கட்சி ஜனநாயகம் என்பது அதிசயமாகும். இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியப்படத் தோன்றும்.

கிணற்றிலே பிறந்து கிணற்றிலே வளர்ந்த தவளையிடம் கடல் கிண்ற்றினும் பெரிதென்ற போது கெக்கலி கொட்டிச் சிரித்ததாம். அதே போல தான் இருந்த பழைய முகாம்களையும் அங்கே நிகழ்ந்த கூட்டல் கழித்தல்களையுமே அரசியல் என்று முழுதாகக் கருத்தில் கொண்டுவிட்ட கருப்பையாவுக்கு தலைமைப் பீடத்தில் இருக்கும் மனிதனை எதிர்த்துக் கருத்துச் சொன்ன தொண்டர்கள் முதல் அதிர்ச்சி. அந்தத் தொண்டர்கள் கருத்தை மதித்து நாடகம் ஏதுமின்றி விலகிய தலைவன் அடுத்த அதிர்ச்சி. அதன்பின் தலைமைக்குத் தகுதியானவன் என்றொருவன் வந்ததும் மாற்றுக் கருத்தைச் சொல்லி அதை மறுத்த சிலரும் பிறகு அனைவரின் ஆசிகளும் பெற்று புடம்போடப்பட்ட புதியவன் பீடமேறியது மூன்றாம் அதிர்ச்சி. அவர் கற்றுத் தேர்ந்த அரசியல் பாடங்களில் இல்லாத விவரங்கள் இவையெல்லாம்.

இதே அத்வானி கருப்பணம் மீட்கப்படவேண்டும் என்று ஆண்டுக்கணக்காகப் போராடிவருகிறாரே, கருப்பையா அப்போதெல்லாம் அத்வானிக்கு ஆதரவாக பேனாவை எடுக்கலாமா என்று யோசித்தது கூட இல்லையே. அத்வானி பதவி துறப்பது புதிதுமல்ல என்பதை சமீபத்திய அரசியல் நடப்புகளை உற்று நோக்கி வந்தாலே புரியும். ஹவாலா ஊழல் என்று அல்லோலப்பட்ட அநாகரிகத்தில் அத்வானியின் பெயரும் இணைத்துப் பேசப்பட்டது. ஆனால் என் பெயரில் குற்றமில்லை என்று தீர்வாகும் வரை தேர்தலில் போட்டியிடுவதோ அரசுப் பொறுப்புகள் வகிப்பதோ இல்லை என்று முடிவெடுத்து விலகினார். ஆண்டுகள் சில கழிந்தபின் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறியபின்னரே தேர்தலில் போட்டியிட்டார்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க வரிசையான தேர்தல்களில் மக்களின் தீர்ப்பைத் தன் திறத்தின்பாற்பட்ட ஆட்சிக்கு அங்கீகாரமாகப் பெற்ற மோடி குறித்து கருப்பையா கொண்டுள்ள கருத்து நாப்பிளக்கப் பொய் பேசி நவநிதியம் தேடியலைவே அரசியல் என்ற கொள்கையுடன் ஆளும் காங்கிரசுப் பாரம்பரியத்தில் ஊறித்திளைத்திருப்பதையே காட்டுகிறது. கட்டுக்கதையைக் கட்டுரை எனத் தீட்டிய பழ.கருப்பையா மோடிக்கு முகம் ஆர் எஸ் எஸ் என்கிறார்.

ஆமாம். மோடிக்கும் முகம் ஆர் எஸ் எஸ். அவர் அவ்வியக்கதிலே தான் தொண்டனாகச் சேர்ந்து இன்று நாடு போற்றும் தலைவனாக மிளிர்ந்திருக்கிறார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் முகம் இந்துத்வம். இந்துத்வத்தின் அடிப்படி ஏகாத்ம மானவ வாதம். அதாவது ஒருதாய் மக்கள் என்பதே அடிநாதம். இப்படி முகங்களின் அடிப்படையும் அடிப்படைகளின் அடிநாதமும் விவரமாகத் தெரிந்ததே பாஜகவின் நிலை.

கருப்பையாவின் முகம் எது என்று இன்னும் தெளிவில்லை. மேற்படிக் கட்டுரை அவரது சொந்தக் கருத்தா அல்லது சமீபத்தில் அவர் சேர்ந்து எம் எல் ஏ ஆன கட்சியின் கருத்தா என்பது புரியவில்லை. சொந்தக் கருத்தெனில் கட்சியின் கருத்தில் இருந்து மாறுபட்டமைக்காக அவர் விசாரிக்கப்படலாம். இவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று உற்றுநோக்குங்கால் காங்கிரசு, சனதா, மீண்டும் காங்கிரசு இப்போது சிலகாலமாக அதிமுக என்று முகாம்கள் மாறிவந்த போதும் பெரும் எதிர்பார்ப்புடன் மாறிய சமீபத்திய முகாமில் இவருக்கு உள்ளம் விரும்பிய வண்ணம் பெருமைகள் கிட்டவில்லை. சற்றே எதிர்ப்புறம் பார்வையைச் செலுத்தினால் காங்கிரசுக் கூடாரத்தில் விவரத்தோடு பலருமில்லை. சற்றே விவரம் இருப்போருக்கும் பேச்சு வரவில்லை. ஆனால் விவராமாக இல்லையென்றாலும் இருப்பது போலப் பேசவல்லவர் கருப்பையா என்பது ஒப்புக் கொண்டாகவேண்டிய உண்மை. மோடி எனும் மனிதரை எதிர்த்துப் பலரும் பலவாறு பேசிவர காசுமீரத்தையும் காங்கிரசுப் பாரம்பரியம் என்ற ஆகாத வழக்கத்தையும் தூக்கிப்பிடித்து வக்காலத்து வாங்கியிருக்கும் கருப்பையாவின் சமீபத்திய கட்டுக்கதைக் கட்டுரை ஒரு செய்தியைச் சொல்லுகிறது.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் 
விற்றற்கு உரியர் விரைந்து.

எனும் வள்ளுவன் வாக்கினுக்கோர் கண்கண்ட சாட்சியாக பல கூடாரங்களில் பரவித்திரிந்து பேசிவரும் பழ.கருப்பையா அதிமுகவில் இலாபம் பெரிதாக ஏதுமில்லை என்பதால் மீண்டும் தாய்கட்சியான காங்கிரசுக்குத் தத்தித்தாவும் தகைமையினாராய் இருப்பது அவரது அரசியல் பயணத்தைக் கூர்ந்து நோக்குங்கால் வெள்ளிடைமலை என விளங்கும். ஆனால் என்ன காரணம் சொல்லிப் போவார், யாரழைத்துப் போவார் இவரை என்பதே சிதம்பர ரகசியம். அதுவும் வெட்டவெளியென்று தெரியாமலா போகும்?