சீனாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனம் எவர்கிராண்ட் கழுத்துவரை கடன் பிடியில் உள்ளது. 300 பில்லியன் டாலர் கடன் அந்த நிறுவனத்துக்கு உள்ளது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி. கணக்குப் போடுங்கள் 2ஜி ஊழலை விட அதிகத் தொகை வரும். இவ்வளவு கடனில் உள்ள நிறுவனம் நொடித்துப் போனால் சீனப் பொருளாதாரம் படுத்துவிடும். அதுதவிர உலகில் அந்தக் கம்பெனியில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்கள் பலத்த அடிவாங்கும். சில பல லீமேன் பிரதர்ஸ் சம்பவங்கள் நிகழலாம். சீன அரசு நொடித்தால் நொடிக்கட்டும் என்றே சென்ற வாரம் வரை இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் உள்நாட்டிலும் பண விஷயத்தில் பலமான அடிவிழ வாய்ப்பு என்ற நிலையில் வங்கிகள், நிதி ஆலோசகர்கள் என்று பலரையும் அமர்த்தி அடி கொஞ்சம் மெதுவாக விழும்படி என்ன செய்ய முடியும் பாருங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. காப்பாற்ற முனையவில்லை என்பதே அங்கிருந்து வரும் தகவல்.
சில மாதங்களாகப் பார்த்தால் சீனாவின் பல்வேறு தனியார் பெரு நிறுவனங்கள் குற்றச்சாட்டுகள் எதிலாவது சிக்கி அரசுடமை ஆக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா காணாமல் போனார். திரும்பி வந்து டிவியில் பேசினார். அதன் பிறகு என்ன ஏதென்று விவரம் இல்லை. சீனக் காப்பீட்டு நிறுவனம் ஆன்பாங் அரசுடமை ஆக்கப்பட்டு அதன் நிறுவனர் சிறை சென்றுள்ளார். இவர் முன்னாள் தலைவர் டெங்க் ஸியோ பிங்கின் பேரன் முறை ஆவார். HNA என்ற தனியார் நிறுவனம் கடந்த ஜனவரியில் அரசுடமை ஆனது. அதன் நிறுவனர் சிறை சென்றுள்ளார். இதெல்லாம் சீன அரசின் திட்டங்களின் ஏதாவது பாகமா என்று கேட்டால் சதித்திட்ட வதந்திகள் பற்றி நாம் இங்கே பேசப்போவதில்லை.
கட்டுமானத் தொழில் என்று எடுத்துக்கொண்டால் எவர்கிராண்ட் தவிர சீன நிறுவனங்கள் பல உள்ளன. அனைத்துமே சற்றே அயர்ந்து போய் நிற்பது உண்மை. கட்டுமானத் துறை மட்டும் சீனப் பொருளாதாரத்தில் 29-30% பங்கு வகிக்கிறது. மேலும் வீட்டுக்கடன், தனிநபர் வீட்டுத்தேவைக்கான கடன் என்று பார்க்கிறபோது மொத்தப் பொருளாதாரப் புழக்கத்தில் ஏறத்தாழ 65-67% வரை உள்ளது. (இவை சீனக் கம்பெனிகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்கள் தொகுத்த புள்ளிவிவரங்கள். இணையத்தில் உள்ளன.)
சீனாவில் நம்மூர் போல சொந்த வீடு வாங்க முடியாது. பணம் சேர்த்துக் கொடுத்தாலோ அல்லது வங்கியில் கடன் பெற்றுக் காசு கொடுத்தாலோ 70 ஆண்டுகள் குத்தகைக்கு வீடு தருவார்கள். பிறகு அதைத் திருப்பித் தரவேண்டும். குத்தகையை நீட்டிக்க மேலும் பணம் கட்டி நீட்டிக்கலாம். என் சொத்து என் வாரிசுக்கு என்றால் எல்லாம் அரசாங்கச் சொத்து என்று முடித்துவிடுவார்கள். உங்கள் மகனோ மகளோ வீடு வாங்க வேண்டும் என்றால் மறுபடி வங்கிக்கடன், குத்தகை என்று ஆரம்பிக்க வேண்டும், 70 ஆண்டுகளுக்கு. இந்த நிலையில் எவர்கிராண்ட் நிறுவனம் மட்டுமே 16லட்சம் வாடிக்கையாளர்களிடம் குத்தகைப் பணம் பெற்றுக் கொண்டுள்ளது. வீடு கட்டவே ஆரம்பிக்கவில்லை. அரசு தலையிட்டு இப்போது மறு சீரமைப்பு என்று வங்கிகளுக்கு வட்டி/அசல் பணமும் வாடிக்கையாளர்களும் வீடும் கொடுப்பதற்கான தேதிகள் தள்ளி வைப்பதைச் செய்கிறது.
இந்நிலையில் நம் நாட்டில் இது போன்ற பெரும் பாதிப்பு நிகழுமா என்றால் இல்லை என்பதே பதில். நம் நாட்டில் 2019-20ல் கட்டுமானத் தொழில் மொத்தப் பொருளாதாரத்தில் 7% மட்டுமே இருந்தது. 2021ல் சில சதவிகிதங்கள் ஏறி இருக்கலாம். சரியான புள்ளிவிவரம் இன்னும் வரவில்லை. ஏற்றம் ஏனென்று பார்த்தால் அரசு செய்துவரும் கட்டுமானங்கள், உள்கட்டமைப்பு விஸ்தரிப்புகள் போன்றவற்றால் நிகழ்கிறது. தனியார் வீட்டுக்கடன்/கட்டுமானக்கடன் என்று எடுத்துக்கொண்டால் நம் கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டில் ஏற்றம் என்பது இல்லை. காரணம் கட்டுமானத் தொழில் உச்சத்தை அடைந்தது கடந்த 2011ல். அதன் பிறகு சற்றே இறங்குமுகம் தான். இதில் பாதிப்பு என்று பார்த்தால் முதலீடு என்று வீடுகள் வாங்கிப் போட்டவர்கள் விலை வீழ்ச்சியால் சொத்துமதிப்புக் குறைந்தும் வாடகை வருமானம் குறைந்தோ அல்லது ஏற்றமில்லாமலோ போனதால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்கள் வீடுகளில் ஆளில்லாமல் நீண்டகாலம் பூட்டுப் போடப்பட்டு ghost city என்று வர்ணிக்கப்படும் உயிரற்ற நகரங்களாகக் காணப்படுகின்றன. கொரோனாவுக்கு முன்பிருந்தே இந்நிலை உள்ளது. கொரோனாவுக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்துள்ளது.
கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்று பலர் கூறிவருகிறார்கள். காரணம் என்று அவர்கள் சொல்வது:
1. சுலபமான வேலைவாய்ப்பு
2.திறம் குறைந்த வேலையாட்களுக்குப் பணி
3.விரைந்த பணச்சுழற்சி
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டுமானத் தொழிலாளர்கள் தொடங்கிக் கட்டுமானப் பொருட்கள் கட்டுமானம் சார்ந்த தொழில்கள் இவற்றின் செயல்பாடுகள்/வளர்ச்சி இவற்றையும் சேர்த்தே வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். வங்கிகள் கடன் கொடுத்து மக்கள் வீடு வாங்க பதிவு செய்வதும், காத்திருப்பதும் பணச்சுழற்சிக்கு ஓரளவு வழி செய்தாலும் தொழில் வளர்ச்சியோ தனிநபர் நிறைவோ முழுமை பெறாது. நிறுவனங்களும், தனிநபர்களும் கடன்பெற்று தொழில் நிறைவடையாமல் வராக்கடன் என்று சீனத்தின் திசையில் நம் பயணம் அமைவது நல்லதல்ல. ஏற்கனவே நம் வங்கிகளுக்கு வராக்கடன் ஒரு சுமை. ஆகவே வங்கிகள் கட்டுமானம் என்றால் மிகுந்த எச்சரிக்கை கொண்டே தனிநபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ கடன் தரும். பாய்ச்சலான வளர்ச்சி என்பதை உடனே எதிர்பார்க்க முடியாது.
மேற்கூறிய மூன்று காரணிகளும் பிற தொழில்கள் வேலை தொடங்கினாலும் நடக்கும்.
பல தொழில்கள் நம் நாட்டை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் இன்றைய உலகப் பொருளாதாரச் சூழ்நிலையில் அரசு தொழில் பரவலாக்கத்துக்கு முனைந்தால் மேற்சொன்ன நிகழ்வுகள் சாத்தியப்படும். சாலைவசதிகள், அடிப்படைக் கட்டமைப்புகள் போன்றவை இல்லாத/சரியில்லாத நிலை 2014க்குப் பிறகு வேகமாக மாறிவருகிறது. ஒரு துறையில் கவனம் குவிவதும், ஒரு துறையை மட்டுமே நம்பி பொருளாதார வளர்ச்சியைக் கொள்வதும் சிறப்பான எதிர்காலத்துக்குத் தக்க துணை செய்ய வாய்ப்புகள் மிகக் குறைவு. தகவல் தொழில்நுட்பம் நம்முடைய கோட்டை என்கிறோம். ஆனால் அதிலும் சேவைப்பிரிவில் மட்டுமே இதுவரை சாதித்திருக்கிறோம். புதுக்கண்டுபிடிப்புகள், மென்பொருள் சுய தயாரிப்பு, இணையப் பாதுகாப்பு என்று நம் நிறுவனங்கள் சாதிக்கத் தொடங்கியுள்ளன. அதிலும் நம் பிடிமானம் பரவலாக வேண்டும். மின்னணு உற்பத்தித் துறை, கனரகத் தொழில், வாகனத் தொழில் என்று நம் நாட்டில் கால்பதித்துள்ள சர்வதேச நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றின் சார்புத் தொழில்களில் நம்மவர்கள் ஈடுபட்டு சில காலத்தில் தனியான பொருள் உற்பத்திக்குச் செல்லலாம்.
சிறு குறு நிறுவனங்களுக்குக் கடன் தந்து ஊக்குவிக்கலாம். தொழில் வாய்ப்புகளை ஒரே இடத்தில் குவிய விடாது பரவலாக்கலாம். சில நிறுவனங்கள் கடற்கரை ஒட்டிய இடங்களை வேண்டுவார்கள். அந்த நிறுவனங்களுக்கு கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையில் பரவலாகப் பல்வேறு ஊர்களில் இடம் கொடுத்து வளர்ச்சியைப் பரவலாக்கலாம். அது பல்வேறு சார்புத் தொழில்கள் அங்கே வளர உதவும். கடற்கரை என்று குறிப்பிட்டுக் கேட்காத நிறுவனங்களை வேறு ஊர்களுக்கு அனுப்பலாம். வேலைவாய்ப்புகள் பரவலாகப் பெருகுவதோடு பொருளாதார வளர்ச்சி ஒரே இடத்தில் குவிவதைத் தவிர்க்கவும் இது உதவும். கட்டமைப்புகள் சீரமைவதால் பரிமாற்றத் தாமதங்கள் நேர வாய்ப்புகள் குறைவு.
மேலும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில் எல்லா ஊர்களிலும் தரம் உயரவும் கிராம/நகர தர வேறுபாட்டைக் களையவும் இந்த முறை துணைசெய்யும். பணப்புழக்கம் பரவலாகும். வேலைவாய்ப்புகள் திறம் குறைந்த வேலைகளுக்கும் அதிகரித்தால் இளைஞர்கள் வழிமாறுவதும் பெருமளவில் குறையும். வேலை, வளர்ச்சி, குடும்ப நிறைவு, மகிழ்ச்சி என்று மக்களின் நிறைவான வாழ்க்கைக்கு வாய்ப்புகள் கிட்டும்.
வந்தே மாதரம்.
No comments:
Post a Comment