ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 9 January 2022

பிரதமரின் பாதுகாப்பும் தேசத்தின் எதிர்காலமும்

கடந்த ஜனவரி 5ஆம் நாள் காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. 40000 கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள மத்திய அரசின் திட்டங்களை அர்ப்பணிப்பதும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும் செய்யவிருந்தார். பஞ்சாபின் படிண்டா விமானப் படைத் தளத்துக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய பலிதானிகள் நினைவிடம் செல்லவிருந்தார் பிரதமர். அங்கே அஞ்சலி செலுத்தியபின் ஃபெரோஸ்பூரில் பொதுக்கூட்டத்துக்குச் சென்று நலத்திட்டங்களைத் துவக்கி வைத்து மக்களிடையே உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். படிண்டா விமான தளத்தில் இறங்கியபோது வானிலை சரியில்லை என்று சற்று நேரம் பொறுத்து ஹெலிகாப்டர் எடுக்கலாம் என்று விமானப்படை ஆலோசனையை ஏற்றுக் காத்திருந்தார். ஆனால் தலைமைத் தளபதி ராவத்தின் விமான விபத்தை அடுத்து வானிலை முற்றிலும் சரியாகாமல் விமானப்படை அனுமதி தருவதாக இல்லை.

பஞ்சாப் டிஜிபியிடம் தொடர்பு கொண்டு பிரதமர் தரை வழியாகப் போகிறார். வழிகளைத் தயார் செய்துவிட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளது பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு. அந்தப் பகுதி ஐஜியிடம் பேசிவிட்டு சாலை வழியே செல்லலாம் என்று பஞ்சாப்  டிஜிபி உறுதி சொல்லியிருக்கிறார். பிரதமர் சாலைவழியே ஹுசைனிவாலா சென்றுள்ளார். பிரதமருடன், மாநில முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி என்று எவரும் வரவில்லை.

                                                

வழியில் ஒரு மேம்பாலத்தில் ஏறிய பிரதமரின் கார் அணிவகுப்பினை நிறுத்தினர் உள்ளூர் போலீஸார். எதிர்ப்பக்கம் இறங்கும் வழியை மறித்து போராட்டக்காரர்கள் வண்டிகளை நிறுத்தியுள்ளனர் என்றும் மாற்றுப்பாதை குறித்து எந்த அறிவுறுத்தலும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். பிரதமர் 15 நிமிடங்கள் காத்திருந்தார். அந்த நேரத்தில் பஞ்சாப் முதல்வர், டிஜிபி உள்ளிட்டோர் பிரதமரின் பாதுகாப்புக் குழுவின் தொடர்புக்கு வரவில்லை. பல முறை முயன்றும் முதல்வரையோ, தலைமைச் செயலரையோ, டிஜிபியையோ தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. உள்ளூர் போலீஸார் ”வேறு வழியில்லை, போராட்டக்காரர்களை விரட்டவும் முடியாது. மாற்றுப்பாதை குறித்தும் எங்களுக்கு உத்தரவு இல்லை”என்று சொல்ல, பிரதமரின் வண்டிகள் திரும்பி படிண்டா விமானத்தளம் வந்துள்ளன.

பிரதமர் மோடி படிண்டா விமானப் படைத்தளம் வந்ததும் உடன் வந்த பஞ்சாப் போலீஸ் அதிகாரியை அழைத்து ”நான் உயிரோடு படிண்டா விமானப் படைத்தளம் வந்துவிட்டேன் என்று உங்கள் முதல்வரிடம் சொல்லி, அவருக்கு மிக்க நன்றி சொன்னேன் என்றும் சொல்லுங்கள்” என்று எள்ளல் தொனிக்கச் சொல்லிவிட்டு விமானம் ஏறியுள்ளார்.

 

மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் டிஜிபியை அழைத்து நடந்த பாதுக்காப்பு அச்சுறுத்தலுக்கு உரிய விளக்கம் சொல்லுங்கள் இல்லை என்றால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று கண்டித்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி “தனக்குக் கொரோனா தொற்று இருப்பதாக ஐயப்படுவதால் பிரதமரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை” என்று அறிக்கை விட்டார். ஆனால் முகக்கவசம் அணியாமல் ஆட்கள் புடைசூழ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ஃபோனை எடுத்தால் கொரோனா வருமா என்றால் பதிலில்லை.  இவரது அரசின் தலைமைச் செயலரும், டிஜிபியும் ஏன் எடுக்கவில்லை, அவர்களுக்கும் கொரோனா சந்தேகமா, வேறேதும் உத்தரவா என்று கேள்வி எழுகிறது. மேலும் பத்திரிகையாளரிடம் (முககவசம் அணியாமல்) பேசிய முதல்வர் சன்னி மத்திய உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விகள் பற்றிக் கேட்ட போது “உள்துறை அமைச்சகத்தை உடைப்பில் போடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

“பிரதமரின் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யாமல் கோட்டை விட்டு மேம்பாலத்தின் மேலே வண்டிகளை நிறுத்தி வைத்தது பாதுகாப்புக் குறைபாடு, இது மாநில அரசின் தவறு” என்று பஞ்சாபின் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறியுள்ளார். பஞ்சாப் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவர் சுனில் ஜாக்கர் “இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். பிரதமரின் பாதுகாப்பில் அரசியல் செய்வது நல்லதில்லை” என்று சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.   

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து “உழவர்கள் வருடக்கணக்கில் விவசாயச் சட்டம் வாபஸ் பெறக் காத்திருந்தார்கள். மோடி 15 நிமிடங்கள் காத்திருந்தது என்ன பெரிய சிக்கல்?” என்று கேட்டுள்ளார். மேலும் அவர் “பஞ்சாப் துணை முதல்வர் ஒரு வேலைக்கும் லாயக்கிலாத ஆள்” என்று பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து பஞ்சாப் துணை முதல்வர் ராஜினாமா செய்வதாகச் சொல்லியிருக்கிறார், மேலும் ”ராகுல் காந்தி ரகசிய வேலைகள் சந்திப்புகளுக்காக வெளிநாடு போயிருக்கிறார், அதற்கு அவருக்கு உரிமையில்லையா?” என்றும் பேசியிருக்கிறார் சித்து.

இந்நிலையில் 16 ஓய்வு பெற்ற டிஜிபிக்கள், 27 முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள் இந்தச் சம்பவம் காவல்துறை வரலாற்றில் பெரிய களங்கம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். மேலும் சில ஓய்வு பெற்ற அதிகாரிகள், ராணுவத்தளபதிகள் பேசுகையில் “டிஜிபி ஒரு பாதையைச் சரி என்று ஒப்புக்கொண்டு பிரதமர் போகலாம் என்று சொன்னபிறகு அந்தப் பாதையை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போக்குவரத்தை முறைப்படுத்தி வைப்பது மாநிலக் காவல்துறையின் கடமை. அதில் மாற்றுப் பாதை என்பது இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலத்தில் அல்லது எதிர்பாராத சம்பவங்கள் நேருங்காலத்தில் மட்டுமே பயன்பாட்டுக்கு வரவேண்டியது. டிஜிபி ஒப்புக்கொண்ட பாதையில் போராட்டக்காரர்களை அனுமதித்தது மாநில காவல்துறையின் தவறு” என்று கூறியிருக்கிறார்கள். மேலும் நெறிமுறைகளின் படி முதல்வரோ, தலைமைச் செயலரோ, டிஜிபியோ பிரதமருடன் ஏன் போகவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் தகவல்களை அலசுகையில் பஞ்சாபின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜனவரி இரண்டாம் தேதி அன்று டிஜிபிக்கும், ஃபெரோஸ்பூர் ஐஜி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் பிரதமரின் கூட்டத்துக்கு வருவார்கள் என்றும் போராட்டக்காரர்கள் அங்கே போய்விட்டால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்றும் ஆகவே போராட்டக்காரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எச்சரித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கெட எப்படி அனுமதித்தார்கள் என்பது கேள்வி. பதில் வரவில்லை.

இந்நிலையில் பாரதிய கிசான் யூனியன் என்ற போராட்ட அமைப்பின் தலைவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ”பிரதமர் வான்வழியே ஹுசைனிவாலா போய்விட்டு மாநாட்டுக்கு வருவார் என்பது தான் செய்தி. நாங்கள் மாநாட்டுப் பகுதியில் போராட்டம் செய்யக் காத்திருந்தோம். ஆனால் திடீரென்று காவல்துறையினர் பிரதமர் தரை மார்க்கமாக ஹுசைனிவாலா வருகிறார் என்று சொன்னார்கள். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நினைத்து பலரிடம் பேசினோம். தரைவழியே தான் போகிறார் என்று உறுதி கிடைத்த பிறகு ஹுசைனிவாலா போகும் வழியிலேயே மறித்துவிட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

            

நம் நாட்டில் உள்ள 0.5 கும்பல் ”திரும்பி வந்துவிட்டாரா மோடி” என்று வருந்துகிறது. ஆனாலும் 15 நிமிடங்கள் நிறுத்தி வைத்தது பெருமை என்று பீற்றிக்கொள்கிறது. பஞ்சாப் காங்கிரசின் ஐடி செல் ’மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேரவில்லை, அதனால் கூட்டத்துக்குப் போகாமல் பாதுகாப்பு பற்றிக் குறை பேசுகிறார்கள்” என்று கேவலமாகக் கொக்கரிக்கிறது. மோடியைப் பிடிக்காத பத்திரிகைக்காரர்கள் கூகிள் மேப்பில் வழிபார்த்துப் போகத் தெரியாமல் என்ன ஐபிஎஸ் அதிகாரிகள் இவர்கள் என்று பிரதமரின் பாதுகாப்புக் குழுவைக் கேட்கிறார்கள்.

பிரதமர் மோடி மீதான கொலைவெறித் தாக்குதல்களில் இது மூன்றாவது முயற்சி.

முதல் முயற்சி ஜூன் 15, 2004 அன்று இஷ்ரத் ஜஹான் என்ற தீவிரவாதப் பெண் மூலம் தாக்கிக் கொல்ல குஜராத்தில் நடந்த முயற்சி. அதில் மோடி தப்பினார். இஷ்ரத் ஜஹானை காவல்துறை சுட்டுக் கொன்றது. அதை போலி என்கௌண்டர் என்று சொல்லி வழக்காடினர் 0.5 கும்பல். ஆனால் நீதிமன்றத்தில் நிற்கவில்லை.

இரண்டாவது முயற்சி 27 அக்டோபர் 2013 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் மோடியின் கூட்டத்தில் குண்டு வெடித்து மக்கள் காயமுற்றனர். ஆனால் மேடைக்கு அருகே எந்தச் சேதாரமும் ஏற்படும் முன்பே தலைவர்களைக் காவல்துறை பாதுகாப்பாகக் கூட்டிச் சென்றுவிட்டது.

மூன்றாவது இந்த ஜனவரி 5, 2022 அன்று பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவில் மேம்பாலத்தின் உச்சியில் 15 நிமிடங்கள் உட்காரவைத்தது. பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலமாகவோ வேறு வகையிலோ தாக்குதல் வரலாம் என்று எதிர்பார்த்து படிண்டா விமானத்தளத்தின் தளபதி தன் அனைத்து விமானங்களையும் உத்தரவிட்ட நொடி பறக்கத் தயாராக நிறுத்தி வைத்தார். ஏதும் நடந்தால் இந்தப்பக்கமும் 10 கிமீ தூரம் தான் என்று எச்சரிக்கை தரப்பட்டது நவ்ஜோத் சிங் சித்துவின் பாய்ஜான்களுக்கு. பிரதமர் பத்திரமாகத் திரும்பிவந்தார்.

பிரதமர் மூன்று முயற்சிகளிலும் தப்பிவந்தது தெய்வச் செயல் என்று சொல்வது முற்றிலும் தகும். நடந்த சம்பவங்களை அலசிப் பார்க்கிற போது breaking India forces என்று சொல்லப்படும் இந்தியாவைத் துண்டாடும் சக்திகள் முழுமூச்சில் வேலை செய்வது புரிகிறது. அவர்களின் நோக்கம் பல்வேறு வழிகளில் வந்து கொண்டிருந்த வருமானத்துக்கு வேட்டு வைத்து நாட்டின் கடைக்கோடி ஆட்களை முன்னேற்ற முயலும் மோடி மற்றும் அவருக்குத் துணை நிற்பவர்களை அகற்றிவிடுவது. அதை நாம் முடிந்தவரையில் முயன்று தடுப்போம்.

விதிக்கை வரைந்த வினைகளைத் துதிக்கை கொண்டு துடைத்தருளும் விநாயகப் பெருமானைத் துணைவேண்டி தேசப்பணியில் முன்னேறுவோம். வந்தே மாதரம்.

(ஜனவரி 7, 2021 அன்றைய ஒரே நாடு இதழில் வெளிவந்த கட்டுரை)

No comments: