ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 24 August 2013

தெலுங்கானா - ஒவ்வாத இணைப்பும் உருப்படாத பிரிவும்

தெலுங்கானா என்றறியப்படும் பகுதி பொது ஆண்டு 1310ல் அலாவுதீன் கில்ஜியின் படைகள் வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காகதிய மன்னன் ப்ரதாப ருத்ரனை வென்று கொள்ளையிட்ட போது இசுலாமிய ஆட்சியில் விழுந்தது.

இங்கு கொள்ளையடிக்கபட்ட கோஹினூர் வைரம் உள்ளிட்ட பொருட்கள் 1000 ஒட்டகங்களில் ஏற்றப்பட்டு தில்லி கொண்டு செல்லப்பட்டன. மீண்டும் 1336ல் சிருங்கேரி சாரதா பீடத்தின் ஆச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ வித்யாரண்யர் வழிகாட்டுதலில் சங்கம வம்சத்தைச் சேர்ந்த ஹரிஹரர், புக்கரராயர் எனும் இளைஞர்கள் தலைமையிலான படை இசுலாமியர்களை வென்று ஹிந்து ராஜ்யத்தை அமைத்தது. இந்த ராஜ்யம் 1678 வரை இசுலாமிய ஏகாதிபத்தியத்தைத் தடுத்து பாரத பாரம்பரியத்தைக் காத்தது. இந்த சாம்ராஜ்ஜியம் மதுரை முதல் வடக்கே ஹிமாசலம் வரை மேற்கே சௌராஷ்டிரம் முதல் கிழக்கே அசாம் வரையிலும் பரவியிருந்தது. இதனால் தென்னிந்தியாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முகலாய அரசுக்கு 500 ஆண்டுகள் பிடித்தன. இதன் வீழ்ச்சிக்குப் பிறகு பல நவாபுகள் சுல்தான்களின் ஆட்சிகள் அப்பகுதியில் நடந்தன.




1678ல் கோல்கொண்டாவின் இசுலாமிய ஆட்சியாளர்களிடம் வீழ்ந்தது வாரங்கல். விஜயநகரப் பேரரசு அத்துடன் முடிவுக்கு வந்தது. நிஜாம்களின் ஆட்சியில் இருந்த அந்தப்பகுதியில் 1752ல் கடற்கரை ஆந்திரப்பகுதியை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு அன்பளிப்பாக நிஜாம்கள் வழங்கினர். 1766ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அப்பகுதியைக் கைப்பற்றியது. ஆனாலும் கோல்கொண்டா பகுதி (தெலுங்கானா/ஹைதராபாத் சமஸ்தானம்) தில்லி,
பஹாமன், குதுப் ஷாஹி, மொகலாயர், மற்றும் நிஜாம் வம்சத்தினரின் ஆட்சிகளில் பல நூற்றாண்டுகள் இருந்தது.

ஹிந்துக்களின் அரசியல் கலாசார விழிப்புணர்வு பல்வேறு துறவிகள் பக்திமான்களால் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருந்த போதும் 19ஆம் நூற்றாண்டில் ஹிந்துக்களின் அரசியல் விழிப்புணார்வு தலை தூக்கியது. நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் 90% மக்கள் ஹிந்துக்கள். அவர்கள் அரசியல் பலம் பெறுவது பொறுக்காத நிஜாம் கலாசார அடிப்படையைக் குலைக்கத் திட்டமிட்டார்.

எலகண்டலா, பலமுறு, இந்துரு, மேடுகு ஆகிய பகுதிகளின் பெயர்கள் முறையே கரீம்நகர், மெஹபூப் நகர், நிஜாமாபாத், மேடக் என்று மாற்றப்பட்டன. பாக்கியநகர் ஹைதராபாத் ஆனது. புவனகிரி போங்கிர் ஆனது. பாடு என்று முடியும் ஊர்ப்பெயர்களை பஹாட் என்று உருதுப்படுத்த உத்தரவிட்டார் நிஜாம். அதே வேளையில் 1905ல் ஹைதராபாத் ஒரு இசுலாமிய நாடாக அறிவிக்கப்பட்டது. 1911ல் மீர் உஸ்மான் அலிகான் அதிகாரத்துக்கு வந்ததும் இசுலாமிய மயமாக்கம் வேகம் பிடித்தது. மஜ்லிஸ் இட்டேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பு துவக்கப்பட்டது.

உஸ்மானியா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டு உருதுக்கல்வி போதிக்கப்பட்டது. உருது பேசும் முஸ்லிகளுக்கு முக்கியத்துவம் தந்தும் உருது தெரிந்த ஹிந்துக்களுக்கு சலுகைகள் வழங்கியும் உத்தரவிட்டார் நிஜாம். தெலுங்கு மொழி மதிப்பிழந்தது. ஹிந்து கலாசாரம் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டது.



1937ல் மீலாது நபி கொண்டாட்டங்களில் பேசிய நசருல் ஹசன் கிலானி ”இந்த ராஜ்ஜியத்தில் இன்னும் 22 லட்சம் தின்பண்ட வழிபாட்டாளர்கள் (பசு வழிபடும் ஹிந்துக்கள்) இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம் என்று பேசினார். முகமதலி ஜின்னா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேசும் போது “என் இனிய இஸ்லாமிய மாணவர்களே” என்று அழைத்துப் பேசினார். ஹிந்து மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற போது அவர் முகம் சுளித்தார்.

1947ல் ”விடுதலை! விடுதலை! பாரத மாதா கீ ஜெய்!” என்று பாரதம் முழுவதும் முழங்கிய போது ”ஆஜாத் ஹைதராபாத்” முழக்கம் அங்கே கேட்டது. ரஜாக்கர் படையினர் பத்து லட்சம் பேர் பாரதத்துடன் இணையவேண்டும் எனச் சொல்வோரை அடக்கி ஒடுக்க ஏவப்பட்டனர். பல்லாயிரம் ஹிந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து பாரதத்தில் தஞ்சம் புகுந்தனர். பிற பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஹைதராபாத் வந்தனர். அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் இருப்பிடமும் வழங்கப்பட்டது. ஹைதராபாத் சுதந்திர தேசம் என்று அறிவித்த இரண்டு மாதங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகரித்தது என்று பாண்டுரங்கராவ் குல்கர்னி தெரிவிக்கிறார்.

பாரத அரசு கவலை கொண்டாலும் நிஜாம் இணைப்பு பற்றி முடிவெடுக்க இரண்டு மாத அவகாசம் கேட்டதால் பேசாதிருந்தது. நிஜாம் உலக இசுலாமிய நாடுகளுக்கு இராணுவ அரசியல் உதவி கேட்டு தூதுவர்களை அனுப்பினார். ஹைதராபாத்தில் மக்களுடன் இணைந்து ஹிந்து அமைப்பினர் ரசாக்கர்களை எதிர்த்துப் போரிட்டனர். இந்தப் போராட்டத்தை சுவாமி இராமானந்த தீர்த்தர் வழிநடத்தினார், நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளும் இணைந்தனர். ரஜாக்கர்களின் தலைவர் காசிம் ரிஸ்வி பாகிஸ்தானுடன் இணைய நிஜாமை வலியுறுத்தினார்.

இந்நிலையில் பாரதத்தின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஆப்பரேஷன் போலோ என்ற பெயரில் இந்திய ராணுவம் 5 முனைகளில் ஹைதராபாத்தைத் தாக்கிக் கைப்பற்றியது. நிஜாம் சரணடைந்தார். காசிம் ரிஸ்வி சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் இதற்குள் ஹைதராபாத்தில் இருந்த ஹிந்துக்கள் பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.

ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன, கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன, பயிர்கள் கொளுத்தப்பட்டன, பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். எர்ரபள்ளம் என்ற கிராமத்தில் சந்த் கான் என்ற காவல் அதிகாரியின் துணையுடன் ரஜாக்கர்கள் ஒவ்வொரு வீடாகக் கொள்ளையடித்து மொத்தக் கிராமத்தையும் சூறையாடினர். 70 பெண்கள் கிராமத்தின் நடுவே வைத்து வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஹைதராபாத் வங்கியில் 22லட்சம் ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டது.

இத்தகைய கொடுமைகளைச் செய்த ரஜாக்கர் படையினர் சிறைப்பிடிக்கப்பட்ட போதும் அவர்களின் தலைவர் காசிம் ரிஸ்வி உட்பட பலரும் விடுவிக்கப்பட்டனர். காங்கிரசுக் கட்சி முஸ்லிம்களை திருப்திப்படுத்த அவர்களை குறைந்த தண்டனையுடன் விடுவித்தது. ரிஸ்வி பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் இட்டேஹதுல் முஸ்லிமீன் அமைப்பை யாரிடமாவது ஒப்படைக்க எண்ணி அப்துல் வஹீத் ஒவைஸி என்ற வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார். பின்னர் பாகிஸ்தான் சென்றார்.

இத்தகைய கொடுமைகளால் பொருளாதார வளர்ச்சி என்பது தெலுங்கானாவில் கடினமான ஒன்றாகிப் போனது. ஆனால் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருந்தன. வருவாய் அதிகமுள்ள பகுதியாக தெலுங்கானா இருந்தது. பிற பகுதிகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்ததால் வளர்ச்சிப்பணிகள் துரிதமாக நடந்திருந்தன. கிருஷ்ணா கோதாவரி அணைகள் உள்ளிட்ட திட்டங்களால் தெலுங்கானாவுக்கு பலன் ஏதுமிருக்காது என்று அந்த மக்கள் கருதினர்.

ஆங்கிலக் கல்வி பெற்ற ஆந்திர மக்கள் தங்களை ஓரங்கட்டிவிடுவார்கள் என்றும் தெலுங்கானா மக்கள் அஞ்சினர். அது தவிர தெலுங்கானா பகுதியில் பெயருக்கு எதிராக உருது மொழி அதிகம் புழங்கியது. அங்கு பேசப்படும் தெலுங்கு உருது அதிகம் கலந்ததாகவே இருக்கிறது. கலாசார வழியிலும் பல மாறுதல்கள் உள்ளன. 400 ஆண்டுகால தொடர் இசுலாமிய ஆட்சியின் கோரத்தாக்கமும் இருந்தது. ஆகவே அம்மக்கள் ஆந்திரப் பகுதிகளுடன் தெலுங்கானா இணைக்கப்பட்டு ஒரே மாநிலமாவதை விரும்பவில்லை.

புத்திசாலியாகக் காட்டிக் கொள்ள நினைத்த பிரதமர் நேரு திருமணம் நடந்தால் விவாகரத்துக்கு வழி இருப்பது போல இணைப்பு நடந்தால் பிரிவுக்கும் வழி செய்துவிட்டு இணைப்போம் என்று உருப்படாத தத்து(ப்பித்து)வம் பேசினார். 3ல் 2பங்கு பெரும்பான்மை கொண்டு ஆந்திர சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினால் தெலுங்கானா தனி மாநிலமாகலாம் என்ற அறிவிப்புடன் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் 1956ல் உருவானது. அன்றிலிருந்தே தனித் தெலுங்கானா புகைந்து கொண்டிருந்தது.

முன்னாள் தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி தனக்கு அரசியல் சிக்கல் வரும் போதெல்லாம் தெலுங்கானா பிரச்சினையைக் கையிலெடுத்துப் பிரச்சினை தீர்ந்த பிறகு கடாசிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். 2009ல் மத்திய காங்கிரசு அரசு தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று அறிவித்தது. உடனடியாக தான் அப்படி ஏதும் சொல்லவில்லை. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்தார். விடியோக்கள் காட்டப்பட்ட போதும் தாம் சொன்னதன் பொருள் அதுவல்ல என்று சாதித்தார்.

மஜ்லிஸ் அமைப்பு 1957ல் அரசியல் கட்சியாக உருவாகி தற்போது ஒவைசி சகோதரர்களின் கையில் உள்ளது, ஹைதராபாத் உள்ளிட்ட முஸ்லிம் பெரும்பான்மை இடங்களில் இவர்கள் வைத்ததே சட்டம் என்ற வகையில் நாட்டின் சட்டத்தை மதிக்காமல் நடந்து வருபவர்கள். ஆனால் ஓட்டு வங்கி மதசார்பின்மை என்று காங்கிரசுக் கட்சி இவர்களைக் கண்டு கொள்ளாது இருக்கிறது. இவர்களில் இளையவரான அக்பருதீன் ஒவைசி 15 நிமிடம் போலீசை நிறுத்தி வைத்தால் 100 கோடி ஹிந்துக்களை அழித்துவிடுவதாகச் சவால் விட்டவர். இந்த அமைப்பின் கோட்பாடு இந்தியாவை இசுலாமிய நாடாக்குவதே.



இவர்களில் மூத்த சகோதரர் அசாதுதீன் ஒவைசி தாலிபான்களிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நல்லுறவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசியவர். காவல்துறை அதிகாரி கிருஷ்ணபிரசாத் இந்த அமைப்பின் ஆதரவாளரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதியுமான முஜீப் என்பவனால் கொல்லப்பட்டார். 14 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு இசுலாமியர் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக காங்கிரசு அரசு விடுவித்தது. இந்த மஜ்லிஸ் அமைப்பைச் சேர்ந்த பலரும் லஷ்கர் இ தய்யபா, ஜய்ஷ் ஏ முகமது, சிமி போன்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தெலுங்கானா முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளை இணைத்தே அமையவுள்ளது. ஹைதராபாத், நிஜாமாபாத், மேடக், கரீம் நகர், அடிலாபாத், மெஹபூப்நகர் ஆகியவற்றுடன், மேடக், ரங்காரெட்டி, நல்கொண்டா, கம்மம், வாரங்கல் ஆகிய மாவட்டங்கள் தெலுங்கானாவில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது இருக்கும் என்று அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். தெலுங்கானாவில் மட்டுமின்றி ஆந்திராவிலும் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக மஜ்லிஸ் கட்சி பாடுபடும் என்று அவர் கூறியுள்ளார். 17 பாராளுமன்றத் தொகுதிகளும் 119 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா பல பிரச்சினைகளுக்குத் தீர்வின்றியே அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹபூப்நகர் மாவட்ட தண்ணீர் பிரச்சினை, நாகார்ஜுன சாகர் அணை தெலுங்கானாவுக்குப் போவதால் க்ருஷ்ணா கோதவரி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை, நிஜாமாபாத்தில் இருந்து வங்கக்கடல் வரை கோதவரியில் எந்த ஒரு நீர்த்தேக்கமும் இல்லை. வருடத்துக்கு 1700 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது, இதற்குத் தீர்வுகாணத் திட்டம் கூடத் தீட்டப்படவில்லை. விவசாயம் செய்ய வழியிருந்தும் இப்பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடுவது ஏன் என்று பார்த்தால் வளர்ச்சிப் பணிகள் தவிர மற்றெல்லாவற்றிலும் கவனம் செலுத்தும் அரசியல். மஜ்லிஸ் அமைப்பு எல்லாம் இசுலாமிய மயம் என்பதால் முதலீடு செய்ய மற்றவர்கள் வருவதில்லை. முஸ்லிம்கள் இப்பகுதியில் லாபகரமாகத் தொழில் செய்யமுடியாது என்பதால் முதலீடு செய்வதில்லை. விவசாயம் மஜ்லிஸ் அமைப்பால் முன்னெடுக்கப்படவே இல்லை.

இதற்கெல்லாம் தீர்வென்ன என்பது சொல்லாமலே ஓட்டுக் கணக்கின் அடிப்படையில் முஸ்லிம்கள் அதிகமான பகுதிகளை இணைத்து தெலுங்கானா அறிவித்துள்ளது காங்கிரசு அரசு. இணைப்பின் போது மணமுறிவுக்கு வழிசெய்த பிறகே திருமணம் என்று பேத்திய காங்கிரசுக் கட்சி பிரிவின் போதும் ஓட்டுக் கணக்கைத் தவிர வேறெதுவும் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை. ஆக, ஒருங்கிணைந்த ஆந்திரா என்று 1956ல் அமைத்தபோதும், 2013ல் தெலுங்கானா என்று பிரித்த போதும் குறுகிய அரசியல் தவிர வேறெந்த நோக்கமும் காங்கிரசுக் கட்சிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இனியும் தெலுங்கானாவில் ரஜாக்கர் படையின் மறு அவதரமான மஜ்லிஸ் அமைப்பின் அட்டகாசங்களால் அப்பாவி மக்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே பொருளாதாரம் உள்ளிட்ட வளரச்சிகள் சாத்தியப்படும். இல்லையேல் தெலுங்கானா மற்றொரு பாகிஸ்தானாகச் சீரழியும்.

தன் தேசத்தை உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம்

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை.

உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ராத்மைவ ரிபுராத்மந:

தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்.

இது கீதையில் கண்ணன் சொன்னது. கீதை என்பது போர்க்களத்தில் உறவுகளை எதிரே கண்டு துவண்ட பார்த்தனை ”போரிடுவது தீமையை அழிக்கவே! உறவுகள் தீமையின்பாற்பட்டு நின்றால் எதிர்ப்பது கடமையன்றி வேறில்லை” என தெளிவித்துத் தேற்றிய உரை.