சிறு குழந்தைகளைக் கவனித்திருப்போம். பெரியவர்கள் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பூனை ஒன்று அருகே வந்தாலும் “ஏ பூஞை! உன்ன அதிச்சு நொயிக்கிப்புவேன். ஓதுதா” என்று வீரம் பேசும். அதே குழந்தை பெரியவர்கள் அருகில் இல்லாத வேளையில் பூனை தூரத்தில் இருந்தாலும் ஓடியே போய் பெரியவர்களின் மடியில் அமர்ந்து கொண்டு “பூஞை வட்டு. கயிக்கும்.” என்று பயத்தோடு ஒண்டிக்கொள்ளும். ஃபெயில்டு மார்ஷல் அசீம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் பஹல்காம் கொடூரத்திற்குப் பிறகு நாம் பாகிஸ்தானுக்குள்ளே புகுந்து தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்த போது வசனம் பேசிக்கொண்டே இருந்தார்கள். 11 விமானத் தளங்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது நேராக அமெரிக்கா போய் ஐயா வலிக்கிதுங்க என்று அழுதார்கள். அமெரிக்கர்கள் நீதான் பேசணுமாம் போய் சமாதானம் பேசு என்றதும் வந்து சமாதானம் பேசிவிட்டு அவர்கள் நாட்டுப் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் வெற்றி வெற்றி என்று கூவினார்கள்.
11 விமானத்தளங்களைக் கோட்டைவிட்ட அசீம் முனீருக்குப் பாராட்டும் பதவி உயர்வும். இப்போது அந்த முனீர் பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாக “நாங்கள் அணுகுண்டு வைத்திருக்கோம் தெரியுமா? எங்களை அடித்தால் அணுகுண்டைப் போட்டு பாதி உலகத்தைக் காலி பண்ணிப்புடுவேனாக்கும்” என்று பிதற்றியிருக்கிறார். ஏனப்பா முனீரு! எங்க படைகள் உள்ள புகுந்து உங்க நாட்டுல 11 விமானதளங்களைக் காலி செஞ்சப்போ அணுகுண்டுக்கு அழுக்குத் துடைச்சிட்டு இருந்தியா ராசா? உன் நாட்டு அணுகுண்டுன்னு சொல்லிக்கிற எதுவுமே உன் கட்டுப்பாட்டுல இல்லை. அமெரிக்கர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. நீயே அங்க போக முடியாது. என்னத்த பெரிய பாதி உலகத்தை அழிப்பேன், பேதி மாத்திரை போடுவேன்னு சவடால் பேச்சு? எங்க ராணுவம் அடிச்சப்போ நீ ஒளிஞ்சுக்கிட்ருந்த பங்கர் எதுன்னு கூகிள் மேப் போட்டு லொகேஷன் காட்டுவோம் தெரியுமா ராசா?
மேலும் “எங்கள் நாடு சரளைக் கல் ஏற்றிவரும் குப்பை லாரி போன்றது. பாரதம் மெர்சிடிஸ் பென்ஸ் கார் போன்றது. மோதினால் யாருக்கு நட்டம்?” என்று கேட்டுள்ளார் முனீர். அம்மஞ்சல்லிக்குப் பெறாதவன் கூட சொந்த நாட்டை இப்படிக் கேவலப்படுத்த மாட்டான். இந்த ஆளுக்கு என்ன ஆனது? ஒன்று இவர் தெருச்சண்டை போடும் பேட்டை வஸ்தாது நிலையில் இருந்து மனதால் வளரவில்லை. அல்லது இவரது இயல்பே இப்படிச் சுயக்கேவலம் செய்து கொண்டு அதைப் பெருமை என்று எண்ணிக்கொள்வது. இரண்டில் ஒரு மனநிலை தான் காரணமாக இருக்க முடியும்.
இந்த சவடால்களுக்கு இவருக்கு தைரியம் வந்த காரணம் வேறு. ட்ரம்புக்கு அடிபணிந்து பலோசிஸ்தான் பகுதியை அடகு வைத்து அங்கே பூமியைத் தோண்டி எண்ணை எடுக்கலாம், பாலைக்காய்ச்சி வெண்ணை எடுக்கலாம் என்று தொடங்கி, “தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி, தோண்டினால் தோரியம், சலித்தால் லித்தியம் என்று ட்ரம்புக்கு ஆசை காட்டியிருக்கிறார். ட்ரம்பும் அதை நம்பி ஐஎம்எஃப் அமைப்பில் சொல்லி முனீருக்கு சீ பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் உடனடிக்கடன் கொடுத்துள்ளார். இன்னும் கடன் வரும். திருப்பிக்கட்டவா போகிறார்கள்?
இது போதாதென்று டம்மியாக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் “எங்களிடமிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரை எடுத்தால்.... எடுக்க முடியாது. ஒரு சொட்டுத் தண்ணீரைத் தடுத்துப் பார் இந்துஸ்தானமே!” என்று கொக்கரிக்கிறார். ஐயா! உங்கள் ஊருக்குத் தண்ணீரை நிறுத்தி மாதக்கணக்காகிவிட்டது. தெரியுமா? தெரியாதா? இன்றைய நிலையில் பாகிஸ்தான் தண்ணீர்ப்பஞ்சத்தில் தவிக்கிறது. சிந்து நதியில் போன ஆண்டை விட இந்த ஆண்டு 14% தண்ணீர் குறைவாக வந்துள்ளதாம். இதுபாகிஸ்தான் அரசுக் கணக்கு. பாகிஸ்தான் அணைக்கட்டுகளில் பல இடங்களில் தரை தெரிகிறது. கரண்டைக்கால் நனையும் அளவுக்குக் கூடத் தண்ணீர் இல்லை. இப்போதும் தண்ணீரை நிறுத்தினால் தாக்குவோம் என்கிறார்கள். நடப்பு புரிகிறதா இல்லையா? சிந்து நதி நீரை நிறுத்தியதற்குப் பதிலடியாக இந்தியத் தூதரகத்தின் ஒரு பகுதிக்கு மின்சாரத்தை நிறுத்தினார்கள் பாகிஸ்தானியர். வேறென்ன செய்தார்கள்? குப்பை அள்ள மாட்டோம், சாக்கடையை அடைப்போம் என்று சின்னத்தனமாகச் சீறலாம். தூதரகத்துக்கு மட்டுமல்ல ஐஎஸ்ஐக்கே தெரியாமல் 7-8 ஆண்டுகள் அந்த நாட்டின் இண்டு இடுக்கெல்லாம் சுற்றிய ஆட்கள் நம்மிடம் உள்ளனர். பேசுகிறார்கள் பாகிஸ்தானியர்கள்.
இதில் முனீர் ஜாம்நகர் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்குவோம் என்கிறார். அங்கே ரஷ்ய எண்ணை சுத்திகரிக்கப்படுகிறது. அம்பானியின் கம்பெனி. கை வைக்கத் துணிவிருப்பவன் 11 விமான தளங்களை அடித்த போதே திருப்பி அடித்திருப்பான். ஆடி கழித்த ஐந்தாம் நாள் கோழி அடித்துக் கும்பிட மாட்டான்.
இவர்கள் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஒருவர் இருக்கிறார். வடிவேலுவுக்கு வசனம் எழுதப் பொருத்தமான ஆள். இந்திய விமானங்களை வரிசையாகச் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றார். என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு “ஃபேசுபுக்குல போட்டுருக்கான்ல!” என்று திருவாய் மலர்ந்தவர். இப்போது ஒரு வசனம் சொல்லியிருக்கிறார். அதாவது நாம் ட்ரோன் விட்டு அடித்தோமாம். அவர்கள் அதை கண்காணித்தார்களாம். ஆனால் அடிக்கவில்லையாம். ஏனாம்? அடித்தால் அவர்கள் இருப்பிடம் நமக்குத் தெரிந்து விடுமாம். தெரிந்தால்? “ஹிந்துஸ்தானி ராணுவம் அடிக்கும், அது வலிக்கும்”. இவர்களெல்லாம் சிரிப்புப் போலீசுக்குக் கூட லாயக்கற்றவர்கள்.
ட்ரம்ப் பலோசிஸ்தான் சம்பந்தமான வாக்குறுதிகளை நம்பி இவர்களை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். எண்ணை அண்ணாச்சி கடையில் தான் வாங்கவேண்டும், பலோசிஸ்தானில் தோண்டினால் வராது என்று தெரிந்தால் கீழே போட்டு இடுப்பிலேயே மிதிப்பார். அப்போது என்ன வகையில் கதறுகிறார்கள் என்று பார்க்கலாம்.
இவர்களை எல்லாம் பொருட்டாக மதிப்பதில் பொருளில்லை. ஆனால் இவர்கள் பைத்தியக்காரன் போல எதையாவது செய்து வைக்காமல் இருக்க நாம் எச்சரிக்கை கொள்வது அவசியம்.
வந்தே மாதரம்.
No comments:
Post a Comment