நேட்டோ போன்ற ஒரு அரபு அமைப்பை ஏற்படுத்த அரபு நாடுகள் முனைகின்றன. காரணம் அமெரிக்கா தன் நலனுக்காக மட்டுமே செயல்படும் என்பதை வெளிப்படையாக உணர வைக்கின்றனர் ட்ரம்ப் நிர்வாகத்து ஆட்கள். பழையவர்கள் பேசிப்பேசியே ஆளைக் கரைத்துத் தன் நலத்தைச் சாதிப்பார்கள். அதனாலேயே இஸ்ரேல், அரபு நாடுகள் என்று ஒன்றை மற்றொன்று அழிக்க நினைக்கும் இரு சக்திகளைச் சமநிலையில் வைத்துத் தன் நலத்தைப் பேணிக் கொண்டது அமெரிக்கா.
ஆனால் ட்ரம்ப் வந்ததில் இருந்து அதீத வெளிப்படைத்தன்மை தலைவிரித்தாடுகிறது. நிர்வாகத்தில் அத்தனை பேரும் ஊடு கட்டுகிறார்கள், கை வீசுகிறார்கள். ஆனால் கண்ணாடியைத் தொலைத்த சாளேஸ்வரக்காரன் கதையாக எவர் மீதும் கை படுவதில்லை. ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையென்றால் ஸ்வீடனுக்கு 200% வரி என்று சொல்லாதது தான் பாக்கி. சிரிப்பை அடக்குவது சிரமமாக உள்ளது.
அரபு நாடுகளுக்குப் போய் விமானம் உள்பட பல பரிசுகளை அள்ளிக்கொண்டு வந்தார் ட்ரம்ப், மரியாதை தவிர. காசாவைக் காலி செய்து அங்கே ரிசார்டுகள் கட்டி சுற்றுலாவுக்கு விட வேண்டும் என்று சொல்கிறார் ட்ரம்ப். இஸ்ரேல் கிடைத்தது காரணம் என்று அடி நொறுக்குகிறது. ஆனால் மற்ற அரபு நாடுகளுடன் அமெரிக்கா அரபியா பாய் பாய் என்கிறார். ஹமாஸ் சரண்டைந்து வேலை செய்து பிழைக்க வேண்டும் என்கிறார் ட்ரம்ப். நடக்கிற காரியமா?
இந்நிலையில் கத்தாரில் ஹமாஸ்காரன் இருக்கிறான் என்று இஸ்ரேல் ஓங்கி அடிக்க ட்ரம்ப் கிடந்து விளக்கம் கொடுக்கிறார். ஹமாஸை ஆதரிச்சா எவனாயிருந்தாலும் வெட்டுவேன் என்கிறார் நேதன்யாகு. அதற்கும் ட்ரம்ப் போய் “வெட்டாம நான் பாத்துக்கறேன் பாயி, என்னய நம்புங்க” என்று கெஞ்சுகிறார்.
இதன் பிறகே 54 மர்ம நாடுகள் ஒன்று கூடி இஸ்ரேலுக்கு “ப்ளடி ரேஸ்கல்! குண்டா போடுற குண்டு? எங்கூர் ஏரோப்ளேன் பொருட்காட்சில ஆயுதம் விக்கதுக்கு கொட்டகை தரமாட்டோம் பாத்துக்க!” என்று கடும் பொருளாதார நெருக்கடி தரக்கூடிய மிரட்டலை விட்டன. இஸ்ரேலா பயப்படும்?
அந்தக் கூட்டத்தில் பிறந்ததுதான் நேட்டோ போல ஒரு அரபிய ஒப்பந்தம் என்ற சிந்தனை. அரபு நாடுகளில் போருக்குப் போகும் பழக்கம் பெட்ரோல்-டீசல் கண்டுபிடிப்போடு வழக்கொழிந்து போனது. அதன் தொடர்ச்சியாக டாலரில் மட்டுமே வியாபாரம் என்று ஒப்புக்கொண்ட பிறகு உலகெங்கும் அரண்மனைகள், அழகிகள், கப்பல்கள், ஆடம்பரம், சொகுசு, அதோடு தங்கள் மதம், கடவுள் என்று மாறிவிட்டனர்.
கொஞ்சம் சாதாரணப்பட்டவர்கள் கூட அந்த ஊரில் வியாபாரம் செய்ய உள்ளூர்க் கூட்டாளிகள் வேண்டும் என்ற சட்டத்தால் பணம் கொழித்தவர்களாயினர். சொகுசு பழகிவிட்ட நிலையில் துப்பாக்கி, சண்டை என்பதெல்லாம் அவர்கள் உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை.
இதனால் 1970களின் தொடக்கத்திலேயே ஜியா உல் ஹக் தலைமையில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு டிவிஷன் சௌதி அரேபியா போய் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டது. எச்செலவும் போக மில்லியனர் என்று ஜியா ஆடியதால் பாக் ராணுவத்தில் சௌதி போஸ்டிங் என்பது ஆபீசர்கள் முதல் சிப்பாய்கள் வரை போட்டி மிகுந்ததானது. 1990 வளைகுடாப் போருக்குப் பிறகு அமெரிக்க ராணுவம் நிரந்தரமாக சௌதியில் முப்படைகளின் பல பிரிவுகளை நிறுத்தி வைக்க, தேவையற்ற செலவு எனப் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பினர் சௌதிக்காரர்கள். ஆனாலும் மக்கா மதீனா பாதுகாப்புக்கு மர்மர்கள் மட்டுமே அனுமதி என்பதால் பாகிஸ்தானின் ஒரு சிறு படைப்பிரிவு மட்டும் போனது.
இன்றைய நிலையில் அரபு நாடுகளில் பணமுண்டு, போர்புரிய ஆளில்லை. பாகிஸ்தானிடம் எந்த வேலைக்கும் ஆளுண்டு ஆனால் பணமில்லை. ஆகவே சௌதி அரேபியா பழைய அடிமை ஒப்பந்தத்ததைப் புதுப்பித்து எங்களுக்காக களமிறங்க ஆள் இருக்கிறது என்று அறிவித்துவிட்டது. ஷாபாஸ் ஷெரீஃப் குடும்பம் இன்னும் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும். ராணுவ அதிகாரிகள் முதல் சிப்பாய்கள் வரை வசதியாவார்கள்.
ஆனால் பாகிஸ்தானிகளை நம்ப முடியாது. தாடி வைத்த, உருது/பஷ்துன் மட்டுமே அறிந்த 15-50 வயது மக்கள் பலரை அல்காயிதா ஆள் என்று பிடித்து அமெரிக்காவிடம் கொடுத்து முஷரஃபும் கயானியும் காசு பார்த்தது போல திடகாத்திரமான உள்ளூர் ஆட்களைப் பிடித்துத் துப்பாக்கி பிடிக்கக் கற்றுக்கொடுத்து யூனிஃபார்ம் மாட்டி அனுப்பி காசு வாங்குவார்கள்.
துப்பாக்கிகள் சுடலாம். டாங்கிகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் எல்லாவற்றிலும் அமெரிக்கர்கள் செக் வைத்துள்ளனர். அவர்களை மீறி அவற்றை இயக்குவது குதிரைக் கொம்பு. தொழில்நுட்பத்தை பாரதத்துக்கே தரமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் எத்தனை காசு கொடுத்து எவ்வளவு அமெரிக்க ஆயுதங்கள் வாங்கி என்ன பயன்?
சரி… ஈரானோ ஹூத்திகளோ சௌதியைத் தாக்கினால் பாகிஸ்தான் ஈரானிடம் சண்டைக்குப் போகுமா? ஏற்கனவே ஹமாஸ் தலைவர்களை டெஹரானில் போட்டுத்தள்ள உள்குத்துக் குத்தி இஸ்ரேலிடம் போட்டுக்கொடுத்தார் என்று முனீர் மீது சந்தேகம் உள்ளது. இவர்களை நம்புவது எப்படி என்று யோசிக்கமாட்டார்களா?
இன்னும் வங்கதேசம் பாக்கி. அவர்களும் அரபு நாடுகளுக்கு யூனிஃபாரம் மாட்டிவிட்டு ஆளனுப்ப ஒப்புக்கொண்டால் நம்மூரில் கோழிக்கு ஊசி போடுவது முதல் கட்டிடங்களில் கல்லடுக்குவது வரை பல வேலைகள் தேங்கும். கள்ளகுடியேற்றம் குறையுமா என்பது கேள்வியே.
நிற்க!
நம்மூர் இத்துப்போன இடதுசார் பத்திரிகையாளர்கள் “இனி பாகிஸ்தானை அடித்தால் சௌதி அரேபியா சண்டைக்கு வரும். மோடி எப்படி சர்ஜிகல் ஸ்ட்ரைக் எல்லாம் அடிப்பார்?” என்று எகத்தாளம் பேசுகின்றனர். அட மூடர்கூட்டமே! நாம் பாகிஸ்தானை அடித்ததே கிடையாது. பயங்கரவாத முகாம்களைத் தான் அடித்து அழிப்போம். அந்த முகாம்களை எவன் பாகிஸ்தானில் வைக்கச் சொன்னான்? பாகிஸ்தான் நம்மை அடிக்கக் கை ஓங்கினால் ஓங்கிய கையை ஒடித்து அனுப்புவோம். அதுதான் நம் வரலாறு.
மொத்தத்தில் பாகிஸ்தான் அரசியல்/ராணவத் தலைவர்களுக்குக் காசு கொட்டும். சௌதிக்காரர்கள் கெத்தாக வலம் வருவார்கள். மற்ற அரபு தேசத்தவர்களும் இதுபோல ராணுவங்களை வாங்கி நிறுத்த வாய்ப்புகள் அதிகம். இஸ்ரேல் இதையெல்லாம் தாண்டி நின்று ஆடும். அதுதான் அவர்கள் வரலாறு.
No comments:
Post a Comment