ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday, 19 May 2025

காங்கிரசும் துருக்கிய பாசமும் - காந்தி காலத்துத் தொடர்பு

 துருக்கி ஒரு காலத்தில் ஓட்டாமன் பேரரசு என்று அரசியல்ரீதியாக அறியப்பட்டாலும் உலக இஸ்லாமியர்களுக்கு மதத் தலைமை ஏற்று இஸ்லாமியர் என்பவர் துருக்கியர் என்று அழைக்கப்படக் காரணமாக இருந்தது. பாரதியார் கூட திசை தொழும் துருக்கர் என்றே பாடினார். 1914-18 முதலாம் உலகப் போரில் ஓட்டாமன் பேரரசு தோற்றது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வென்றன. ஓட்டாமன் பேரரசின் நிலப்பரப்பும் அதிகாரங்களும் மிகவும் குறைத்து வரையறுக்கப்பட்டு வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இரண்டாம் அப்துல் ஹமீதின் மதத் தலைமைக்கு எந்த ஆபத்தும் வராது என்று போரில் வென்ற ஐரோப்பியத் தலைவர்கள் வாக்களித்தனர். ஆனால் துருக்கியிலேயே தேசிய இயக்கம் இளைஞர்களால் தொடங்கப்பட்டது. அவர்கள் மன்னர், காலிஃப் என்பவற்றை ஏற்காமல் அரசியல் பாதை அமைக்க எண்ணினர்.


ஒரு கட்டத்தில் இவர்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்டு மன்னரை நீக்க விழைந்தனர். இது துருக்கிய விடுதலைப் போர் என்று அறியப்பட்டது. 1919லிருந்து 1923 வரை போர் நடந்தது. 1920ல் லண்டன் மாநாட்டில் காலிஃப் பற்றிப் பேச்சு வரவே அரபு நாடுகள் எதிர்த்தனர். இது தங்கள் தேசங்களை மீண்டும் துருக்கிக்கு அடிபணியச் செய்யும் என்றனர். ஆனால் துருக்கியிலோ முஸ்தபா கமால் ஆத துர்க் எனும் ராணுவத் தளபதி இந்த மன்னர் சரியில்லை நாட்டை உருப்படியாக வழிநடத்தவில்லை என்று களத்தில் இறங்கினார். உள்ளூரில் மக்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் பேச்சு வார்த்தை சரிவரவில்லை என்று ஆயுதப் போரில் இறங்கிய ஆத துர்க்கை சமாளிக்க முடியாமல் மன்னரின் படை பல இடங்களில் பின்வாங்கியது. 1922ல் சுல்தானிய அரசை ஒழித்து ஜனநாயக அரசு அமைப்போம் என்று பதவியேற்றார் ஆத துர்க். 1924ல் காலிஃபெல்லாம் இல்லை என்று மதத் தலைவர் பதவியை ஒழித்துவிட்டார். 

இதனிடையே மெக்காவின் நகரத் தலைவர் உசைன் பின் அலி என்பவர் தன்னைக் காலிஃப் என்று அறிவித்துக்கொண்டு அங்கிருந்த துருக்கியப் படைகளை விரட்டினார். அவர் மீது போர் தொடுத்து அவரை வென்று ஒரு அரசை நிறுவினார் இபன் சௌத் எனும் உள்ளூர் தலைவர். அந்த அரசு தான் இன்றைய சௌதி அரேபியா. பிற முஸ்லிம் நாடுகள் தனித்தனியாகப் பிரிந்து கொண்டன.

இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் காந்தியார் 1919ல் ஒரு போராட்டம் அறிவித்தார். அதாவது துருக்கிய அரசரை காலிஃப் என்ற மதத் தலைவராகத் தொடர விடவேண்டும் என்ற போராட்டம். அந்த நாட்டுமக்கள் என்ன கருதுகிறார்கள், உலகின் மற்ற இஸ்லாமியர் என்ன எண்ணவோட்டத்தில் இருக்கிறார்கள் என்ற திட்டமே தெரியாமல் தொடங்கப்பட்ட போராட்டம் இது. மௌலானா முகமதலி என்பவரும் அவரது சகோதரர் மௌலானா சௌகதலி என்பவரும் சேர்ந்து 1920ல் கிலாபத் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டார்கள். அதில் பிரிட்டன் இரண்டாம் அப்துல்ஹமீது அல்லது அவரது சகோதரர் ஐந்தாம் மகமதுவையோ காலிஃபாக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு நம் நாட்டு விடுதலையைப் பார்க்கலாம் என்று ஜின்னா உள்ளிட்ட பலரும் சொல்ல அதெல்லாம் இல்லை காலிஃப் அவர் தான் என்று அறிவிக்கும் வரை போராடுவோம் என்று காந்தியார் கிலாஃபத் இயக்கத்தை அறிவிக்க, துருக்கி சுல்தானுக்குக் கொடி பிடித்தது காங்கிரஸ். இந்து முஸ்லிம் ஒற்றுமை என்று பேசப்பட்டது. ஆத துர்க் துருக்கி தலைவரான பிறகு துருக்கிக்கு ஆதரவாக காங்கிரஸ் போராடியதாம், நன்றி. நீங்கள் விரைவில் சுயராஜ்ஜியம் பெற வாழ்த்துகள் என்று சொன்னார்.

ஜின்னாவே சொன்னாலும் கேட்காமல் துருக்கிக்கு ஆதரவு கொடுத்த காங்கிரசின் துருக்கி பாசம் அளப்பரியது. விடுதலைக்குப் பிறகு காங்கிரசின் நிலைப்பாடுகள் தெரிந்ததே. ஆனால் துருக்கியின் இந்தியப் பாசம் பாகிஸ்தான் பாசமானது. ஏன்? மதம். ஆத துர்க் உள்ளிட்டோர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுக்க நேரு அணி சேரா இயக்கம் என்று எங்கும் சேராமல் நின்றும் கம்யூனிச பாசத்தால் சோவியத் பக்கம் சாய்ந்துகொண்டும் இருந்த நிலை. பாகிஸ்தான் அமெரிக்க ஆதரவு நேட்டோ ஆதரவு என்று நின்றது. துருக்கி பாகிஸ்தானை அணைத்துக் கொண்டது. நம் நாட்டில் துருக்கியில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஆள்கொல்வது முதல் ஆள்பிடிப்பது வரை நடந்தது. ஆனாலும் காங்கிரஸ் அரசுகள் எஜமான் என்று கைகட்டி நின்றதன்றி வேறெதுவும் செய்ததில்லை.  2000ல் பைலேண்ட் எட்ஜவிட் என்பவர் பிரதராகி நம்முடன் நல்லுறவு பேணினார். அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் துருக்கிக்குச் சென்றுவந்து கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல வியாபாரங்களில் பெரிய அளவில் கைகோர்த்து நடைபோட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன் பின்னர் வந்த எர்துவான் ஆரம்பத்தில் நல்லுறவெல்லாம் பேணினார். ஆனால் 2006க்குப் பிறகு மாறினார். 2008ல் மொத்தமாகப் பாகிஸ்தானுடன் கைகோர்த்தார். பாகிஸ்தானிகள் 2008ல் நம் மீது 26/11 தாக்குதல் நடத்தியபோது கூட பாகிஸ்தானுக்கு ஆதரவு பேசினார். கஷ்மீர்தத்தைப் பாகிஸ்தானுக்குக் கொடுப்பதே நல்லது என்று பேசியவர். ஆனாலும் காங்கிரஸ் அரசு துருக்கியைக் கண்டித்து ஒரு சொல் பேசவில்லை. எவ்வளவு அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டேன் என்று மன்மோகன்சிங் பேசியது அவர்களுக்கு அதிக அனுகூலம் ஆனது.

மேலும் துருக்கியின் செலபை என்ற நிறுவனம் (எர்துவானின் குடும்ப நிறுவனம்) இதற்கு நம் நாட்டு விமான நிலைய செயல்பாடுகளை நிர்வகிக்க ஒப்பந்தம் போட்டது. ஆண்டுக்கு ₹1522 கோடி வருமானம் வரும் ஒப்பந்தம் இது. இது தவிர நம் நாட்டு விமான நிலையங்களில் மொத்த நிர்வாகம் பயணிகள் விவரம், தரவுகள் என்று பலவும் இவர்கள் கைக்குப் போகும். 2016க்கு பிறகு சில கட்டுப்பாடுகள் வந்தன.

2014ல் மோடி அவர்கள் பிரதமரான பிறகு ஏன் எங்கள் உள் விவகாரம் கஷ்மீரத்தில் மூக்கு நுழைகிறீர்கள் என்று பேசிப் பார்த்தார். சரிவரவில்லை என்றவுடன். எங்களுக்கும் மூக்கு இருக்கிறது, உங்களுக்கும் கிரேக்கம், சைப்ரஸ், ஆர்மீனியா என்று எல்லைப் பிரச்சனைகள் இருக்கிறது என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இவர்கள் எப்படி இப்படிப் பேசலாம் என்று கொதித்தார் எர்துவான். போய்யா பொம்மா என்று சொன்னார் மோடி. ஆனால் வியாபாரிகள் நாமெல்லாம் நல்ல நண்பர்கள் என்று பேசி வியாபாரம் செய்தனர்.

2019ல் 370ஐ நாம் நீக்கியவுடன் துருக்கி கொதித்தது. ஐநா சபையில் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஆதரவாக அரற்றியது. சிரியாவில் நீ ஏன் ராணுவ நடவடிக்கை எடுக்கிறாய் என்று நாம் கேட்க பிரச்சனை வரும் என்று வாய் மூடியது துருக்கி. நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நம் நடவடிக்கையைக் கண்டித்தது துருக்கி. சோலியைப் பாரு என்றோம் நாம்.

ஆனால் காங்கிரஸ் கட்சி நவம்பர் 2019ல்  வெளிநாட்டுக் காங்கிரஸ் அமைப்பின் சார்பில் துருக்கியில் அலுவலகம் திறந்தது.  துருக்கி ஆபீசுக்கு  முகமது யூசுப் கான் என்பவர் தலைவர் என்று அறிவித்தது. அவர் துருக்கி - பாரத உறவுகளைப் பேண நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றது. இவரால் தான் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும் இந்த ஆபீஸ் திறந்த பிறகு உள்ளூரில் பல பல்கலைக்கழகங்களுடன் துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம் போட்டன. மாணவர் பரிமாற்றம், பாடத்திட்ட பரிமாற்றம் என்று பல விஷயங்களில் ஒப்பநதங்கள் வந்தன. குறிப்பாக JNU, ஜாமியா மிலியா இஸ்லாமியா, Lovely Professional University என்று அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் துருக்கியுடன் ஒப்பந்தங்கள் போட்டன. துருக்கிக்கு வருமானம். அசர்பைஜான் நாட்டுடனும் சில விமானங்கள் சம்பந்தப்பட்ட படிப்புக்காக ஒப்பந்தங்கள் உள்ளன. அங்கே காங்கிரசுக்கு என்ன உறவு என்று விசாரிக்க வேண்டும்.

ஆனால் 2025ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிலை மாறி துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்தததில் நம் மக்கள் பலரும் துருக்கி சுற்றுலாவை ரத்து செய்தனர். வியாபாரிகள் துருக்கியைப் புறக்கணித்தனர். துருக்கிய சுற்றுலாத்துறை ஒரேடியாக நஷ்டப்படுவோம் என்று இந்திய மக்களை பூப்போல சுற்றிக்காட்டி பொன் போலப் பாதுகாப்போம் வாருங்கள் என்று அறிக்கை விட்டது. பூவாவது பொன்னாவது போய்யா என்றனர் நம் மக்கள். வியாபாரிகளும் அதே நிலை எடுக்கின்றனர். நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றாக துருக்கிய, அசர்பைஜான் பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து என்று அறிவிக்கின்றன.

ஆனால் இந்த துருக்கியைப் புறக்கணிப்பது பற்றிக் கருத்துக் கேட்ட போது காங்கிரஸின் ஜெயராம் ரமேஷும் பவர் கேடாவும் மச்சான் நீ பேசேன் மச்சான் நீ பேசேன் என்று மைக்கை ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றித் தள்ளிவிட்டுக் கடைசியில் கேடா மைக் பிடித்து “அதாகப்பட்டது நாங்கள் யோசித்துச் செல்லுவோம்” என்றார். கண்டிக்கக் கூட மாட்டீர்களா துருக்கியை என்று பாஜக கேட்டதற்கு “அரசாங்கம் தான் அயல் நாட்டு உறவைப் பேணவேண்டும் எதிர்க்கட்சி என்னத்துக்கு கண்டிக்கவோ பாராட்டவோ வேண்டும்?” என்றார்கள். அப்போ எதிர்க்கட்சிக்கு எதற்கு அயல்நாட்டில் ஆபீஸ்? அதுவும் கடைந்தெடுத்த பாகிஸ்தான் ஆதரவு நாடான துருக்கியில்? பதில் சொல்ல மறுக்கிறது காங்கிரஸ். கடைந்தெடுத்த பாரத விரோதமே உன் பெயர் தான் காங்கிரஸா? பதில் வரும் வரை விடாது கேள்வி கேட்போம். வந்தே மாதரம்.

No comments: