ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday, 2 August 2025

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 25% வரி மிரட்டல் - குறுகிய காலத்து வலி

 டோனல்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது Make America Great Again என்ற கோஷத்தை முன் வைத்தார். அதாவது அமெரிக்காவைச் சிறந்த நாடாக்குவோம் என்றார். அதற்காக பல வேலைகளை அமெரிக்காவில் உருவாக்குவோம். கள்ளக்குடியேறிகளை விரட்டுவோம் என்று பல விஷயங்கள் சொன்னார். அதை எல்லாம் செய்யத் தொடங்கி பல ரௌடிக் கும்பல்களைப் பிடித்து தென்னமெரிக்காவில் சிறை வைத்தார். விசா இல்லாது வந்த பலரை அவரவர் நாடுகளுக்குத் திருப்பியனுப்பினார். அதன் பிறகு ஒவ்வொரு அமெரிக்கக் கம்பெனியாகப் பிடித்து அமெரிக்காவில் தொழிற்சாலை தொடங்கு, இங்கே வேலை கொடு என்று ஆரம்பித்தார். இங்கே தான் தொடங்கியது சிக்கல். பல கம்பெனிகள் சோலியைப் பாருமய்யா என்று சொல்லிவிட்டனர். அவர்களுக்கு அமெரிக்காவில் தொழிலைச் செய்வதில் முக்கியமான சிக்கல்கள் தேவையான ஆளில்லாமை, அதிகச் செலவு, கடும் தொழிலாளர் சட்டங்கள்.

பல அமெரிக்கர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வதற்குப் பதிலாக அரசு உதவிப்பணத்தில் காலம் தள்ளலாம் என்ற மனநிலையில் உள்ளனர். வெளியில் இருந்து ஆள் கொண்டு வருவதையும் ட்ரம்ப் தடுக்கிறார். 5 மில்லியன் டாலர் கட்டி H1B விசா வாங்கு என்கிறார் கம்பெனிகளிடம். அவ்வளவு பணம் கொடுத்து ஆள் கூட்டிக்கொண்டு வந்து வேலை செய்து எந்தக் காலத்தில் போட்ட பணத்தை எடுக்க முடியும்? ஒரு 50 பேர் குறிப்பிட்ட வேலையில் தேர்ந்த ஆட்கள் வேண்டும் என்றால் 50x5மில்லியன் (50 லட்சம்). தொழில் செய்யவா வேண்டாமா என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது. இவரது அதீத அதிரடியால் அமெரிக்காவில் விவசாயத் தொழில் தொடங்கி பல்வேரு வேலைகள் பாதிக்கப்படுகின்றன. அறுவடைக்கு கட்டுப்படியான கூலியில் ஆளில்லை, அமெரிக்கர்களுக்குக் கூலி கொடுத்து மாளவில்லை என்ற நிலை.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்த நாம் திருப்பியடித்த அடியில் கதறிக்கொண்டு ஓடிய அசீம் முனீர் ட்ரம்பிடம் அழுது புலம்ப, அவரது பிரதிநிதியாக துணை ஜனாதிபதி வான்ஸ் பேசினார். பாகிஸ்தான் அணு ஆயுத நாடு, அதனால் பெரியதாக ஏதோ திட்டமிடுகிறார்கள் என்று ஆரம்பித்தார் வான்ஸ். ஒரே வரியில் “அவர்கள் என்ன செய்தாலும் இனி பாரதம் பற்றி எண்ணிப் பார்க்கவும் நடுங்கும் அளவுக்கு பதிலடி தருவோம்” என்றி சொல்லிவிட்டார். பிறகு அடித்த அடியும் அந்த நாட்டுத் தளபதி பேசியதும் நாம் நிறுத்தியதும் , அங்கே ஆங்காங்கே பூமி நடுங்கியதும் வரலாறு. இதில் நானாக்கும் இரு நாடுகளுக்கும் சண்டை நிறுத்தம் செய்ய வைத்தேன்.  சண்டையை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடன் வியாபாரமே இருக்காது என்றேன், நிறுத்திவிட்டார்கள் என்று ட்ரம்ப் சொன்னார். நம் அமைச்சர்களோ “அதெல்லாம் ஒரு எள்ளுப் புண்ணாக்கும் இல்லை. பாகிஸ்தானுக்கு சண்டை நிறுத்தம் வேண்டுமானால் பாகிஸ்தான் பேசட்டும் என்றோம். பாகிஸ்தான் பேசியது, அடிப்பதை நிறுத்தினோம்” என்று உண்மையை உடைத்தனர்.


ட்ரம்ப் விடாமல் சண்டையைத் தானே நிறுத்தியதாகத் தன் பேச்சையே பேசிவந்தார். குடிகாரன் உள்றல் போல எண்ணி நம்மவர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பல கம்பெனிகள் சீனா பாரதம் உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தியை நிறுத்தவில்லை. சீனாவுக்கு மாற்றாக பாரதத்தில் உற்பத்திக்குப் பல கம்பெனிகள் அடியெடுத்தன. அமெரிக்காவுக்குப் அமெரிக்கக் கம்பெனிகளே தயங்கிய நிலையில் ஆசியக் கம்பெனிகள் எப்படிப் போவர்? இதை அறிந்து மாற்று என்று எவனாயிருந்தாலும் வெட்டுவேன் என்று கௌண்டமணி ஒரு சினிமாவில் காமெடி செய்வாரே அதுபோல ட்ரம்ப் உலகிலுள்ள அத்தனை நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுகு 5% முதல் 150% வரை வரி விதிப்பதாகச் சொன்னார். வியாபாரப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டினால் பார்க்கலாம், இல்லை என்றால் தான் விதித்ததே வரி என்று கடந்த மார்ச்சில் பேசினார். வியாபாரம் பேசியவர்களிடம் அமெரிக்கப் பொருட்களுக்கு 0% வரி என்றும் அமெரிக்கா என்ன கொடுத்தாலும் சொன்ன விலைக்கு வாங்கிக்கொள்வது அவசியம் என்றும், ஆனால் யாரிடம் என்ன பொருளை என்ன விலைக்கு என்ன வரிபோட்டு வாங்குவது என்று அமெரிக்கா முடிவு செய்யும் என்ற அடிப்படையில் பேரம் தொடங்கியது.


உலக நாடுகள் இது பைத்தியக்காரத்தனம் அலட்சியப்படுத்தினர். மிரட்டலில் பயந்த சில நாடுகள் பின்னர் பணிந்தனர். பேசிப் பேசி வரியை 10 முதல் 50க்குள் என்ற சதவிகிதத்தில் நிறுத்திக்கொண்டனர். பாரதம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான குழு கடந்த நவம்பர் 2024லிருந்தே நம் நாட்டு நலன்களை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்தது. எந்த மிரட்டலும் செல்லாது போனது. இதில் கடுப்பான அமெரிக்க வியாபாரத் துறைச் செயலர் “இந்த மனிதரிடம் பேசி மாளாது, வேறு ஆளை அனுப்புங்கள், சொல் பேச்சுக்கேட்கும் ஆளாக இருக்கட்டும்” என்றார். நம் பிரதமர் மோடியா இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வார்? இப்படிப்பட்ட நிலையில் ட்ரம்ப் “இந்தியா நட்பு நாடுதான். மோடி நண்பர் தான். ஆனால் அவர்கள் நம் நாட்டிலிருந்து பெரிய அளவில் பொருள் வாங்குவதில்லை. ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். நமக்கு ஏகப்பட்ட பொருட்களை விற்கிறார்கள். இது ஒரு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. அதனால் இந்தியா நம் வசதிக்கு வியாபாரம் செய்யவில்லை என்றால் வரி போடுவேன்” என்றார்.


பேச்சு வார்த்தை தொடரும் என்றிருந்த நிலையில் கடந்த ஜூலையில் “இந்தியா மீது ஆகஸ்டு 1 முதல் மீது 25% வரி விதிப்பேன். ரஷ்யாவுடன் அவர்கள் வியாபாரம் செய்வதால் அதற்கு 25% அபராதம் போடுவேன். ஆக மொத்தம் 50% வரிஅவர்கள் கட்டவேண்டும்” என்றார் ட்ரம்ப். திடீரென்று என்ன தோன்றியதோ தெரியவில்லை “ஆகஸ்டு 7 வரை வரி விதிப்பைத் தள்ளி வைக்கிறேன், அதற்குள் நமக்கு உடன்படும் வகையில் பேச்சுவார்த்தை முடியவேண்டும்” என்றார். நடக்கவில்லை. ஏப்ரல் 2 அன்று ஜனாதிபதி உத்தரவு எண் 14257 என்பதன் கீழ் இந்த 25% வரி விதிக்கப்பட்டது. அதற்கு பல விதிவிலக்குகள் அறிவித்தார்கள். அதன்பிறகு அதை மே மாதம் வரை நிறுத்தி வைத்தார். பிறகு ஜூன் இறுதி வரை, ஜூலை இறுதி என்று போய் இப்போடு ஆகஸ்டு 8 முதல் என்று வந்து நிற்கிறது. இப்படி இவர் ஆகஸ்டு 8 முதல் வரி போட்டால் என்னென்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.


பாதிப்பை எதிர்நோக்கும் துறைகள்:


1. மருந்துகள்:


கடந்த ஆண்டின் கணக்குப்படி 9 பில்லியன் டாலர் மதிப்பிலான (ஏறத்தாழ 750-800 கோடி ரூபாய்கள்) மருந்துகளை இந்தியக் கம்பெனிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. அதாவது மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவுக்குப் போகிறது. இந்த 25% வரி, அதனோடு 25% அபராதம் என்ற சவடால் கணக்கு வந்தால் 50% வரி உயரும். இந்த வரியை கம்பெனிகள் கட்டமாட்டார்கள். விலையில் ஏற்றுவார்கள். 50 ரூபாய் மருந்து 75 ரூபாய் ஆகும். இது அமெரிக்க வாடிக்கையாளர்களை பாதிக்கும். சரி வேறு நாடுகளில் வாங்கலாம் என்று அமெரிக்கா எண்ணினால் மருந்து தயாரிப்பில் உள்ள எந்த நாட்டிலும் 19%க்கு குறைந்த வரி இல்லை. ஆனாலும் ஏறத்தாழ 17% அளவுக்கு பாரதக் கம்பெனிகளின் வருமானம் குறையும் என்று HSBC கணக்குச் சொல்கிறது.


2. ஜவுளி:

பெரிய கம்பெனிகள் அமெரிக்காவில் கடை விரித்து விற்பனை செய்வது குறைவு. ஆனால் சின்னச் சின்ன நிறுவனங்கள் அமெரிக்க ஆர்டர்கள் பெற்று அவர்களின் பெயரிட்டுத் தயாரித்துத் தரும் உற்பத்தி வியாபாரம் பாதிப்படையும். 200 ரூபாய் சட்டை 50% வரி சேர்ந்தால் 300 ரூபாய் ஆகும். ஆகவே சின்னச் சின்ன நிறுவனங்களின் அமெரிக்க ஆர்டர்கள் வியட்நாமுக்கோ வேறு ஜவுளி உற்பத்தி செய்யும் நாடுகளுக்கோ போக வாய்ப்புள்ளது. ஆனாலும் 19% குறைந்தபட்ச வரியால் வியட்நாமில் வாங்கினாலும் விலை உயர்வை அமெரிக்கர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். நம் மக்கள் அமெரிக்கா இல்லாது வேறு இடங்களில் வியாபாரம் பேசவேண்டும்.


3. எண்ணை சுத்திகரிப்பு:


ரஷ்ய எண்ணை வாங்குவதால் அபராதம், வரி என்று ட்ரம்ப் சொல்கிறார். நாம் ரஷ்ய எண்ணை வாங்கி அமெரிக்காவுக்கு விற்கவில்லை. ரிலையன்ஸ் ரஷ்ய எண்ணை வாங்கி சுத்திகரித்து ஐரோப்பாவுக்கு விற்கிறது. ட்ரம்பின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிய வாய்ப்புக் குறைவு. நம் அரசு ரஷ்யாவில் இருந்து வாங்குவதை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. ரிலையன்ஸ் வியாபாரம் அடி வாங்கலாம். நம் நாட்டின் பிற அரசு எண்ணை நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வாங்கி உள்நாட்டில் விற்பதும், பழைய எண்ணை வாங்கிய பாக்கிகளைச் செலுத்துவதுமாக இருக்கின்றன. அரபு நாடுகளை ஒரு அளவுக்கு மேல் அமெரிக்காவால் அழுத்த முடியாது. அவர்கள் ட்ரம்பை குஷிப்படுத்தி வைத்துள்ளனர். இதற்கு மேல் பேசினால் ஆகாது. அமெரிக்கா வரிபோட்டு எண்ணையில் ஏதும் ஆகப்போவதில்லை.


4. வண்டி - வாகனப் பாகங்கள்:


ஜெனரல் மோட்டார், ஃபோர்டு உள்ளிட்ட கம்பெனிகள் நம் நாட்டில் இருந்து வண்டிகளுக்கான பாகங்கள் செய்து வாங்கிக் கொள்கின்றனர். சீனாவில் தயாரிக்கும் வண்டிகளுக்கு இன்று மிக முக்கிய சிறிய பாகங்கள் நம் நாட்டில் டிவிஎஸ், பாரத் ஃபோர்ஜ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட கம்பெனிகள் இதில் பாதிப்புக்கு ஆளாகும். டாடா நிறுவனம் எங்களுக்கு அமெரிக்காவுடன் நேரடியான வியாபாரம் அதிகமில்லை என்று சொல்லிவிட்டது. உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனிகள் ஐரோப்பா, கொரியா உள்ளிட்ட நாட்டுக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டு வேறு பகுதிகளில் விரிவாக்கம் செய்யலாம்.


5. பொறியியல் நிறுவனங்கள் - வேதிப் பொருள் நிறுவனங்கள்:


ஒயர், கேபிள், பாய்லர், ஹீட்டர், மின் உபகரணங்கள் என்று தயாரிக்கும் நிறுவனங்கள் 15-20 % அமெரிக்க வியாபாரத்தில் உள்ளன. மற்றபடி வேறு பல நாடுகளுக்கும் உள்நாட்டிலுமே வியாபாரம் செய்கின்றன. வேதிப் பொருள் தயாரிக்கும் கம்பெனிகளுமே மருந்துக் கம்பெனிகளோடும், பெயிண்ட், எண்ணை என்று வேறு பல தயாரிப்பு நிறுவனங்களோடும் வியாபாரத்தில் உள்ளன. இதில் அமெரிக்கா சம்பந்தப்பட்டவை லாப அளவு குறைய வாய்ப்புள்ளது.


6. சோலார் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்:


இவை பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களைச் சார்ந்திருந்தாலும் இப்போது உள்நாட்டிலும் அரபு நாடுகளிலும் வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளன. அதனால் தொடக்கத்தில் (இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும்) இந்த அமெரிக்க வரி/கிஸ்தியால் பாதிப்பிருந்தாலும் வேறு நாடுகளுடன் வியாபாரத்தைத் தொடங்கி இழப்பைச் சரி செய்யலாம்.


7. நகைகள் - வைரம் உள்ளிட்ட மணிக்கற்கள்:


இவை 9.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த நகை ஏற்றுமதியில் ஏறத்தாழ 30%. இந்த வரியால் விலை ஏறும். அதிக விலைக்கு அமெரிக்கர்கள் நகை/மணிக்கற்கள் வாங்க வருவது கடினம். ஆனால் இந்தத்துறை ஏற்கனவே வேறு சந்தை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காரணம் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை தொடங்கியிருக்கிறது. அது பெரிதானால் ஆடம்பரம் என்றறியப்படும் நகை, கற்கள் வாங்குவது அரிதாகும். எனவே வேறு சந்தைக்குப் போவதும், அமெரிக்கச் சந்தையின் இழப்பை ஈடுகட்ட முனைவதுமே இந்தத் துறையினர் செய்ய வேண்டியது.


8. விவசாயப் பொருட்கள்:


நம்மூரில் இருந்து அரிசி, மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள், கடுகு என்று பலதும் அமெரிக்காவுக்குப் போகின்றன. இந்த வரிவிதிப்பால் அவற்றின் விலை உயரும். அங்குள்ள இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என்றாலும் கடுகு, மஞ்சள் விலை ஏற்றத்தால் அமெரிக்கர்களின் உணவுப் பொருட்கள் விலையும் எகிறும். சிறு விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பாதிப்படைவர். ஆனால் உணவு என்பதால் விற்பனை இருப்பினும் அளவும், லாபமும் குறையும். இதன் பாதிப்பைச் சரிசெய்ய உள்நாட்டு வியாபாரத்தையும், வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியையும் நாடிப் பிடிக்க வேண்டும். குறுகிய கால பாதிப்பு இருக்கும்.


9. இரும்பு/எஃகு ஏற்றுமதி:


இது நிச்சயமாக பாதிப்புக்கு ஆளாகும் துறை. அமெரிக்கா வியட்நாம் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும். ஆனால் அங்கேயும் ட்ரம்பின் 20% வரி இருப்பதால் விலையேற்றம் இருக்கும். நம்மூரில் டாடா, ஜிண்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிக்கப்படும். அவற்றைச் சார்ந்து தொழில் செய்யும் சிறு நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.


சரி அமெரிக்கா என்ன தான் எதிர்பார்க்கிறது?


அமெரிக்காவில் இருந்து விவசாயப் பொருட்கள், பால் பொருட்கள் இறக்குமதிக்கு பாரதம் அனுமதிக்க வேண்டும்.

GM Food எனப்படும் விதையகற்றப்பட்டு மரபணு மாற்றப்பட்ட விவசாயப் பொருட்கள், விஷ உரங்கள் ஆகியவற்றை வாங்கவேண்டும்.

இறைச்சி உணவு கொடுக்கப்பட்டு வளரும் பசுவின் பால், பால் பொருட்களை பாரதம் இறக்குமதி செய்யவேண்டும்.


இதில் நாம் மறுப்பது விவசாயப் பொருள் இறக்குமதி. நம் நாட்டில் விளையும் பொருட்களை நம் தேவை போக ஏற்றுமதி செய்கிறோம். இதில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி என்றால் உள்நாட்டு உற்பத்தி படுத்துவிடும்.

மரபணு மாற்றப்பட்ட விதைகள், விஷ உரங்கள் என்று இறக்குமதி செய்து விளைவிப்பது உயிருக்கு ஆபத்தாக மற்றொரு போபால் விஷவாயு போன்ற ஆபத்தில் முடியும்.

இறைச்சி கொடுத்து வளர்க்கப்படும் மாடுகளின் பால், அதிலிருந்து வரும் தயிர் வெண்ணை இவை நோய்களை உண்டாக்குகிறது என்று அமெரிக்காவிலேயே ஏ1 பால் என்று மாறுகிறார்கள். நாம் எதற்காக அவர்கள் தவிர்க்கும் பாலையும் பால் பொருட்களையும் வாங்கிச் சாப்பிட வேண்டும்?


இது தவிர அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் வாங்கவேண்டும் என்று அடம்பிடிக்கிறார் ட்ரம்ப். F35 என்ற அமெரிக்க விமானம் திருவனந்தபுரத்தில் 38 நாட்கள் அசைய முடியாமல் நின்ற நிலை கண்டோம். இப்படி ஒரு நிலை வந்தால் ரிப்பேர் செய்ய அமெரிக்க கம்பெனி ஆட்கள் தான் வரவேண்டும். நாம் தொட்டால் 100 கோடி ரூபாய் விமானம் வாரண்டி போச்சு என்று ஓரமாய்ப் போடச் சொல்வார்கள். மொத்தமாக அவர்களை நம்பியே நம் நாட்டின் பாதுகாப்பினை ஒப்படைத்த நிலை இது. இதற்கு ரஷ்யாவிடம் Su-57 வாங்கி தொழில்நுட்பமும் பெற்றுக்கொண்டு நிம்மதியாக இருக்கலாம். ர்ஃபேல் வேறு இருக்கிறது. போதும் நமக்கு.


இது தவிர சில ரகசியப் பேச்சுகள் ட்ரம்பின் பாகிஸ்தான் ஆதரவுக்கு காரணம் கூறுகின்றன. ட்ரம்ப் தொடங்கிய WLF (World Liberty Financial) எனும் நிறுவனத்தில் பாகிஸ்தான் சிலபல கோடிகள் முதலீடு செய்துள்ளது என்று தகவல் உள்ளது. அந்த நிறுவனம் பிட் காயின் விற்கிறது. இதற்காகவே கிரிப்டோ கரன்சி மீதான சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார் என்றும் தகவல் உள்ளது. 15-மே-25 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையிலும் 25-மே-25 அன்று கார்டியன் பத்திரிகையிலும் இது தொடர்பான செய்திகள் வந்துள்ளன. இது தவிர 31-ஜூலை Financial Expressல் அசீம் முனீர் அடித்துவிட்ட தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி, தோண்டினால் தோரியம், எகிறி அடித்தால் எண்ணை என்ற வசனங்களை நம்பி ட்ரம்ப் பாகிஸ்தானில் பெரும் இயற்கை வளங்கள் இருப்பதாகப் பேசிவருகிறார். எண்ணை என்பது அவர்களே அரபு நாடுகளிடம் இருந்து வாங்குகிறார்கள்.  இந்தத் தங்கம் வெள்ளி, தோரியம் வாரியம் என்று நம்பித்தான் சீனா கோடிகளைக் கொட்டிவிட்டு இன்று தேள் கொட்டிய திருடன் போல இருக்கிறது. ட்ரம்பனார் ஏன் இந்தப் புதைகுழியில் விழுகிறார் என்று தெரியவில்லை.


இது தவிர அவரது பேச்சுகள் அனைத்துமே வம்பிழுத்து வாயைப்பிடுங்கி ஏதாவது பேச வைத்து அதை ஒரு ஒப்பந்தம் என்று சொல்லிவிடலாம் என்று பேசிப் பேசிப் பார்க்கிறார். அதனால் தான் பாகிஸ்தானிடம் எண்ணை வாங்குவார் மோடி, செத்த பொருளாதாரம் என்ற கூர்கெட்ட கூவல்கள் வருகின்றன. வியாபாரப் பேச்சுகளில் பழம் தின்று கொட்டை போட்ட மோடியார் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. சரி பியூஷ் கோயலாவது ஏதாவது சொல்வாரா என்று பார்த்தால் அவரும் ஆக்ஸ்ட் 25 நாள் குறித்துள்ளோம். அன்று பேச்சு வார்த்தை நடக்கும் என்று சொல்லிவிட்டார். இது போதாதென்று ஆக்ஸ்டு 15க்குள் அமெரிக்காவிடம் என்னென்ன பேசவேண்டும் என்று ஒவ்வொரு துறைச் செயலரும் விவரம் தர உத்தரவு போயிருக்கிறது. என்னென்ன பட்டியல் போட்டு எப்படிப் பேசுவார்களோ தெரியவில்லை. ஆனால் பணிவதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் நமது நிலை.


இந்த வரி/கிஸ்தி இவற்றின் அமெரிக்கா மீதான விளைவு 2026ல் தெரியத் தொடங்கும். விலைவாசி ஏற்றத்தை அமெரிக்கர் உணர்வார்கள் என்று பொருளாதார அறிஞர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு வரி, கிஸ்தி எல்லாம் குறைய வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்கனவே அறுவடைக்கு ஆளின்றி விவசாயப் பொருட்கள் அழிகின்றன என்று புகார் எழுந்துள்ளது. மேலும் முடிவெட்டுவது, துணி துவைப்பது, தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பணிகள் செய்யும் வெளிநாட்டவர் பலரும் வெளியேறுவதால் அதற்கு ஆளில்லை. மென்பொருள், மின்னணு என்று இந்தியர்களைக் குறிவைக்கிறார் ட்ரம்ப். அவர்களும் போனால் தொழிற்சாலை கட்டிவிட்டு வௌவால் தான் பறக்கவிட வேண்டியிருக்கும். ஓராண்டில் ட்ரம்ப் கொள்கைகளை மாற்றுவார். அதுவரை பொறுமைகாப்பது நலம். வந்தே மாதரம்.

No comments: