ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 31 January 2013

தீவிரவாத நிறப்பிரிகை

இது தமிழ்தாமரை இதழில் வெளிவந்த என் கட்டுரை.


நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சில தினங்களுக்கு முன் நடந்த காங்கிரசு சிந்தனைக் கூட்டத்தில் பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தொண்டர்களிடையே தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று உளறினார். அந்த உளறல் குறித்த கருத்துக்கள், வேதனைகள், கவலைகளை கருத்தில் கொள்ளுமுகமாக சங்க பரிவார அமைப்புகள் போராட்டம், கண்டனம் என்று ஆரம்பித்தார்கள்.


எதிர்பாராத திருப்பமாக பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் உத் தாவா எனும் ஜிஹாதி தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் ஷிண்டே அவர்களைப் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டான். அதில் "ஷிண்டே சொல்வது முற்றிலும் சரி. 5 ஆண்டுகளாக இந்தியா ஜமாத் உத் தாவா அமைப்பை மும்பை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்க முயன்று முடியாமல் திணறுகிறது. எமக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே பாகிஸ்தான் முனைந்து இந்தியாவைத் தீவிரவாத நாடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறான்.

ஷிண்டே தலித் என்பதால் எதிர்க்கிறார்கள் என்று கருணாநிதித்தனமாகப் பேசியிருக்கிறார் திக்விஜய்சிங். இந்தப் பேச்சு அரசியலாக்கப்படுகிறது என்று ஊடக நாட்டாமைகள் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். அரசியலாக்கம் எங்கு துவங்கி எங்கு முடிகிறது என்று பார்க்கலாம்.
அரசியலாக்கம்:
  • மாண்புமிகு அமைச்சர் ஷிண்டே தீவிரவாதம் குறித்த தன் குற்றச் சாட்டை தமது கட்சிக் கூட்டத்தில் வைத்துச் சொன்னது அரசியலாக்கச் செயல்.
  • தீவிரவாதம் குறித்த கருத்துக்களை கட்சிக் கூட்டத்தில் வாயோ மாங்காயோ புளித்தால் போதும் என்ற நோக்கில் ஆதாரம் குறித்த சிறு கவலையுமின்றிப் பேசியது அரசியலாக்கம்.
  • இது குறித்த ஹஃபீஸ் சயீதின் பாராட்டை மறுக்காமல்/ஒதுக்காமல் இருப்பது சிறுபான்மை ஓட்டுவங்கி குறித்த மட்டமான அரசியலாக்கச் சிந்தனை.
  • இதில் தலித் அமைச்சரை எதிர்க்கிறீர்களே என்று சாதி பேசுவது மேலும் சாதி ரீதியான பிரித்தாளும் அரசியலாக்கச் செயல்பாடு.
  • சர்வதேசத் தீவிரவாதியின் பாராட்டை ஒரு அமைச்சர் பெறுவதும் அவனை மரியாதையுடன் அமைச்சர் சார்ந்த கட்சியினர் விளிப்பதும் தேசநலனுக்கு எதிரான அரசியலாக்கம்.
  • காவித் தீவிரவாதம் என்று குற்றம் சாட்டினால் சங்கபரிவார அமைப்புகள் எதிர்க்கும். அப்போது 2002 குஜ்ராத் கலவரம், அயோத்தி ராமர் கோவில் போன்ற பிரச்சினைகளை மீண்டும் கிளறி மோடியின் வளர்ச்சி சார்ந்த சாதனைகளை பின்தள்ளி சிறுபான்மையினர் ஓட்டை அள்ளி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற குயுக்திச் சிந்தனை தரம் தாழ்ந்த அரசியலாக்கச் செயல்பாடு.

அமீனா புகுந்த அமைச்சகம்
:
ஆமையோ அமீனாவோ புகுந்த வீடு உருப்படாது என்று சொல்வார்கள். நமது மாண்புமிகு அமைச்சர் ஷிண்டே சோலாபூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமீனாவாக தம் வாழ்வைத் துவக்கியவர். அதனால் தானோ என்னவோ இவர் மின்துறை அமைச்சராக இருந்த போது வட இந்தியா முழுவதும் இருளில் மூழ்கியது. ஆனால் ஷிண்டே வழக்கம் போல பொறுப்பற்ற முறையில் "எல்லா நாடுகளிலும் தான் மின் தடை இருக்கிறது. நம் நாட்டில் மட்டுமா இருக்கிறது?" என்று கேட்டுவிட்டுப் போனார்.

2007ல் பிரதமருக்கு பூஷன் எனெர்ஜி லிமிடட் என்ற நிறுவனத்துக்கு ஆதரவாக சிபாரிசு செய்தவர், அந்த நிறுவனம் வஞ்சிக்கப்படுகிறது. ஆகவே அதற்கு நீதி வழங்க பிரதமர் தனது தனி அதிகாரத்தைப் பயனபடுத்த வேண்டும் என்று எழுதினார்.

2000 மெகாவாட் மின் உற்பத்திக்கு உரிமம் தர இவர் செய்த சிபாரிசுக்குப் பின்னால் என்னென்ன திரைமறைவு கைம்மாறுகள் உள்ளனவோ தெரியவில்லை.

2012ல் 186000 கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் வெளிவந்ததும் இவரிடம் சிபாரிசு குறித்துக் கேட்ட போது "ஆமாம். பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். அப்புறம் அந்த நிறுவனம் குறித்து விசாரித்துப் பார்த்து உரிமத்தை ரத்து செய்துவிட்டோம். அதுல என்ன பிரச்சினை?" என்று பதில் தந்தார். (http://indiatoday.intoday.in/story/coalgate-upa-sushilkumar-shinde-bel/1/217590.html)

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் மின்துறையில் இருந்து உள்துறைக்கு மாற்றப்பட்டார். காரணம் மின்துறையில் இவருக்கு சிக்கல்கள் அதிகமாகிவிட்டன. சிதம்பரம் நிதி அமைச்சராக வேண்டும் என்று பல கோணங்கள். ஆக பொறுப்பான பதவியில் பொறுப்பற்ற ஆட்களை அமர்த்தும் காங்கிரசுக் கலாசாரம் இதிலும் தொடர்கிறது. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று பாடு படுவோரிடம் பொறுப்பை எதிர்பார்ப்பது வீண்.
இந்த மாய்மாலங்களில் மயங்கிவிடாமல் பாஜக மற்றும் சங்க பரிவார அமைப்புகள் தம்மை ஒரு தேசத்தின் ஒருங்கிணைந்த (பொருளாதார, ராணுவ கலாச்சார) வளர்ச்சிக்காகப் பாடுபடும் சக்தி என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து அதில் நிலைத்து நின்று வெல்ல வேண்டும்.

வந்தே மாதரம். தாய்த் திருநாடு தனைப் பெற்ற தாயென்று கும்பிடுவோம்.

No comments: