ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 3 January 2013

மின் பற்றாக்குறை: யாரும் யோக்கியரில்லை!

கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் சொன்னார்..."தொட்டால் ஷாக்கடிக்கும் மின்சாரம்... தொடாமலே ஷாக்கடிக்கும் சம்சாரம்" என்று. இன்று கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினாலும் ஷாக்கடிக்காத வகையில் இருக்கிறது மின்சாரத்தின்  நிலை. இருந்தால் தானே.... எங்கள் ஊரில் 10 மணி நேரம் மின்சாரமின்றிப் போகிறது. இன்வெர்டர் வாங்கி வைக்கலாமே என்றால் அது சார்ஜ் ஆக மின்சாரம் மரத்திலா காய்க்கிறது என்றார் என் தந்தை. குறைந்தது 4 மணி நேரம் சார்ஜ் ஆகவேண்டும். பல ஊர்களில் 4 மணி நேரம் மின்சாரம் தொடர்ச்சியாக இருப்பது கிடையாது.

கூடங்குளம் வந்தால் தீரும், மழை பெய்தால் தீரும், அம்மா ஆட்சிக்கு வந்தால் தீரும், பிஜேபி மத்தியில் ஜெயித்தால் தீரும்.... என்று பலரும் பலவிதங்களில் மின்வெட்டு பற்றிச் சொல்லிக்கொண்டிருக்க தீர்ந்தது என்னவோ நிலக்கரி தான். அனல் மிசாரம் தயாரிக்க மிக முக்கியமான மூலப் பொருள். கடந்த ஜூன் மாதமே பலர் எச்சரித்தார்கள் மத்திய அரசை. வழக்கம் போல வாளாவிருந்த மாண்புமிகு பிரதமர் மௌனமோகனச் சிங்கர் இன்னும் இரு வாரங்கள்தான் அப்புறம் காலி என்ற நிலை வந்ததும் பெரிய மனதுடன்  அதிக விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று கரி இறக்குமதிக்கு அவசர உத்தரவு போட்டார்.

கையிருப்பு இருக்கும் போதே பேரம் பேசி வாங்கினால் சரியான விலைக்கு வாங்கலாம். அவசரத் தேவை எனும் போது சொன்ன விலை கொடுத்து வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம். இந்தத் தாமதம் யாரால் ஏற்பட்டது. யார் பலன் பெற ஏற்பட்டது என்று சற்றே உற்று நோக்குங்கால், வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் பாரத நாட்டு நெய்யே இத்தாலிக்காரி கையே என்று இன்னும் எத்தனை கோடிகள் யாராருக்குப் போனதோ எனும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது.


அரசியலும் அது சார்ந்த ஊழலும் எங்கும் போய்விடாது. பிறகு விவாதிப்போம். இப்போது நம் பங்குக்கு நாம் மின் பற்றாக்குறைக்கு என்ன பங்களிப்புச் செய்கிறோம் என்று பார்ப்போம்.

குறைந்த மின் பயன்பாட்டுக்கு இணைப்புப் பெற்றுக் கொண்டு அதிக மின்சாரம் பயன்படுத்துவது. அதாவது, 400 வாட் பயன் படுத்த வகைசெய்யும் இணைப்பு பெற்றுள்ள ஒருவர் வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, மின் விளக்குகள், மின் விசிரிகள் என்று பயன்படுத்தி தம் இணைப்பின் தகுதிக்கு மீறிப் ப்யன்பாட்டைக் கொடுக்கிறோம். 400 வாட் இணைப்புகள் இத்தனை என்று கணக்கு வைத்த மின்வாரியம் பலநூறு வாட்கள் எரிக்கக் கண்டும் ஏதும் செய்ய இயலாது கையறு நிலையில் உள்ளது. காரணங்களை பின்னால் பார்ப்போம்.

இன்னும் பலர் நேர்மையாக இணைப்புப் பெற்று மாட்டிய மீட்டரை ஓடவிடாது செய்து வீட்டில் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் இன்னபிற மின்னணுப் பொருட்கள் சகலமும் இயங்கினாலும் மாதம் 10 யூனிட் கணக்குக் காட்டுவர். பல வணிக நிறுவனங்களும் இதைச் செய்வதுண்டு. இது போன்ற வீடு, வணிக நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் மின் வாரிய அதிகாரிகள் பக்திமான் போலத் தோற்றமளிக்கும் ஒருவரை உடன் அழைத்துச் செல்வர்.


நெற்றி நிறைய விபூதி, குங்குமத்துடன் வளைய வரும் அவரே இது போன்ற மீட்டர்களைக் கழட்டிச் சோதிப்பார். காரணம், மீட்டரில் சந்தனம் குங்குமம் வைத்து சாமி படம் ஓட்டிய பிறகே அதில் 'வேலை' செய்வர் பலர். மின்வாரிய அதிகாரிகள் சோதனைக்கு வந்தால் "சாமிகும்பிட்டு வெச்சுருக்கு சார்! என்னருந்தாலும் தெய்வக்குத்தமாயிரும்ல" என்று பக்தியோடு பலர் மிரட்டுவதும் உண்டு.

ஒருவிளக்குத் திட்டம் என்று ஒருதிட்டம் வந்தது. ஸ்டாலினுக்கு முன்னால் இருப்பவர் கொண்டு வந்தார். அதன்படி குடிசை வீடுகளுக்கு ஒரு 40 வாட்ஸ் பல்பு கொடுக்கப்படும். அந்த பல்பு எரிய ஆகும் மின்சாரக் கட்டணம் இலவசம். ஆனால் ஒரு விளக்கு எரிக்க வந்த இணைப்பில் ’கலைஞர் டிவி’, ஜெயலலிதா மிக்ஸி என்று ஓடும். இன்னும் சிலர் குறைந்த விலையில் ஃப்ரிட்ஜ் முதற்கொண்டு வாங்கி பயன் படுத்துவர்.


மேலும் பலர் ஏசி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் முதல் அனைத்து மின்சாதனங்களும் பயன்படுத்துவார்கள். இதற்கு 3 ஃபேஸ் எனப்படும் இணைப்பு வேண்டும். ஆனால் சிங்கிள் ஃபேஸ் வைத்து இவை அனைத்தையும் பயன்படுத்துவது சரியல்ல.

காசு கட்டுவதும் 3 ஃபேஸும் தான் பிரச்சினையா என்றால் அவை மட்டுமில்லை. மின்வாரியம் திட்டமிடலில் கோட்டைவிடுவதற்கு இதுவும் காரணம். ஊரில் ஒவ்வொரு பகுதி வாரியாக எத்தனை மின்சார இணைப்புகள் அவை என்னென்ன வகை,  எவ்வளவு பயன்பாடு என்று கணக்கெடுப்பார்கள். அதில் உள்ளது உள்ளபடி சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்று இணைப்புக்கு ஏற்ற மின் பயன்பாட்டை மட்டுமே காட்டி அறிக்கை கொடுத்துவிடுவது வழக்கம்.


இணைப்பின் பயன்பாட்டு எல்லை மீறி அதிக மின்சாரம் செலவாவது குறித்துச் சொன்னால் நடவடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுத்தால் சில இடங்களில் மேலிடம் பேசும், சில இடங்களில் வரவு நிற்கும். ஆகவே இதில்  அதிகாரிகள் யாரும் உண்மை பேசுவதில்லை. 40வாட்ஸ் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் இணைப்பு 40 வாட்ஸ் அளவுதான். அதில் டிவி, ஃப்ரிட்ஜ், மிக்ஸி, க்ரைண்டர் என்று பயன்படுத்தினால் சிக்கல் தான்.

அதிகாரிகள் காசு அல்லது நமக்கேன் வம்பு என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர்வதில்லை. ஆகவே திட்டத்துக்கும் நடைமுறைக்கும் நிறைய இடைவெளி. இதற்கு மேலே கட்சி மாநாடுகள் என்று மின்சாரத்தை கொக்கி போட்டுத் திருடும் வழக்கம் வேறு. கேட்டால் மிரட்டல். புகார் செய்தால் அடி. நடவடிக்கை எடுத்தால் சிக்கல்.ஆக, மின் பற்றாக்குறை என்பது அரசு எந்திரத்தின் முழுத்தவறு அல்ல. மக்களும் பொறுப்பாளிகளே. ஆனால் தலை சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்கும் என்ற வாதம் நியாயமே. குஜராத்தில் அதுவே நடந்தது, இலவசமாக மின்சாரம் தருவோம் என்று சொன்னவர்கள் புறந்தள்ளப்பட்டு சீரான மின்சாரம் 24 மணி நேரமும் தருவேன். ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு எரியக்கூட இலவச மின்சாரம் கிடையாது என்று சொல்லி அதை நடத்தியும் காட்டியிருக்கிறார் நரேந்திர மோடி.


ஆகவே, இலவசங்கள் நம் தலைக்கே கொள்ளி கொண்டு வரும் என்பதை நாம் புரிந்து கொண்டு, நாமும் நேர்மையாக இருப்பதோடு நில்லாமல் கயவர்களைக் கருவறுக்காத வரை நாம் துன்பத்தில் உழல வேண்டியது தான்.

No comments: