ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 2 February 2013

உலகநாயகன் ? ஒரு சாமானியனின் பார்வை

பார்த்தசாரதி என்கிற கமலஹாசன். 58 வயது. தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு கலைஞன் (ர் போட்டால் பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா நினைவுக்கு வந்து தொலைக்கும்). நல்ல நடிகர். சினிமா தொழில்நுட்பம் குறித்து அவருடைய அறிவு சிறப்பானது. சமீப காலமாக ஹாலிவுட் என்றறியப்படும் அமெரிக்கத் திரையுலகின் சிறந்த படங்களைத் தழுவிப் படமெடுத்த்தார். அவர்களது மேக்கப், கேமரா உள்ளிட்ட பல தொழில்நுட்ப விவரங்களைக் கற்றறிந்தோ அல்லது ஆள்கொணார்ந்தோ இங்கே அறிமுகப்படுத்தியவர்,

சிறுவயது முதல் நடிக்கிறர். திரைத் துறையில் பலரது செல்லப்பிள்ளை. ஒரு திரைப்படம் எடுப்பதில் அ முதல் ஃ வரை உள்ள நெளிவு சுழிவுகள் தெரிந்தவர். திரைப்படத் தொழிலைக் காதலிப்பவர். (வேறு சில காதல்கள் வெவ்வேறு பலரிடமும் இருப்பதால் அது பற்றிப் பேசவில்லை)


கமலஹாசன் நடித்த சமீபத்திய படங்களில்  தொழில்நுட்பம் வியக்கப்படுகிறது. ஆனால் கதை என்று பார்த்தால் அவர் நடித்த பழைய படங்களுடன் ஒப்பிடுகையில் கவைக்குதவும் வகையில் இல்லை. எந்தப்படம் அப்படி இருக்கிறது என்று பார்த்தால் எதுவுமில்லை. ஆக தொழில்நுட்பம் தவிர வேறெதுவும் இவர் வித்தியாசம் காட்டவில்லை, துறையோடு ஒத்துப் போகிறார். அப்புறம் எதற்கு வித்தியாசமான கலைஞன் என்று பட்டம். கலைத்துறையின் தொழில்நுட்ப முனைவர்  என்பது பொருத்தமாக இருக்கும்.

மூன்றாம் பிறை போன்ற படங்களில் மிளிர்ந்த நடிப்பு தற்போதைய உன்னதத் தொழில்நுட்பத்தின் உதவியால் சிறந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். அதே கமலஹாசன் அதே நடிப்பு தான். சரி சில படங்களின் கதை சற்றே வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்தால் அவை பிற மொழிப் படங்களின் தழுவல். உதாரணத்துக்கு என் நினைவில் இருந்து சில:

நம்மவர் - To Sir with Love
சதி லீலாவதி - She Devil
அவ்வை சண்முகி - Mrs.Doubt fire
வசூல்ராஜா MBBS - Munnabhai MBBS


அமெரிக்காவின் திரைப்படத் துறையான ஹாலிவுட் உலக சினிமாவுக்கு எடுத்துக்காட்டு என்று ஒரு பிம்பம் காட்டப்படுகிறது. அவர்கள் வழங்கும் விருதான ஆஸ்கர் என்பது உலகளாவிய உயரிய விருது என்று போற்றப்படுகிறது. அமெரிக்கர்கள் தன் முனைப்பும் அதைத் திறம்பட விளம்பரப்படுத்தும் யுக்தியும் மிக்கவர்கள். அவர்களுக்கு வியாபாரம் இரத்தத்தில் ஊறியது. 

உதாரணம் சொல்லப்போனால் “உப்புக்கருவாடு ஊறவெச்ச சோறு” என்று வைரமுத்து எழுதிய திரைப்படப் பாடல் குறித்து இது போன்ற பாடல்கள் ஹாலிவுட் படங்களில் வருவதில்லையே என்ற கேள்வி வந்த போது (பதில் சொன்னது யார் என்று நினைவில்லை) அங்கே இப்படிச் சொன்னால் போதும் உடனே பழைய சோறு உப்புக்கருவாடு இரண்டையும் உண்ணும் நிலைக்குப் பதப்படுத்தி அழகாகப் பொட்டலம் கட்டி (packaging) Salt Fish and soaked rice! Food that makes your day good என்று விளம்பரப்படுத்தி விற்பார்கள். பழைய சோற்றுக்கும் கருவாட்டுக்கும் காப்புரிமை பெற்று அதை நம்மூரிலும் வந்து விற்பார்கள் என்று பதில் வந்தது. பணம் ஈட்டுவதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு.

அப்படிப்பட்ட அமெரிக்கத் திரை உலகம் திரும்பிப்பார்க்க வேண்டும் என்றால் அகிரா குரோசோவா போல தன்னிலை பிறழாது தன் முனைப்புடன் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். ஹாலிவுட் காரனைக் காப்பியடித்து நானும் ஹாலிவுட் தரத்துக்குப் படமெடுக்கிறேன் என்று கூவுவதும் அதற்கு சில குஞ்சுகள் விசிலடிப்பதும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. 

அகிரா குரோசோவா ஜப்பனிய சினிமா இயக்குநர். அவர் ஹாலிவுட்டைத் திரும்பிப்பார்க்க வைக்கிறேன் பார் என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லை. தன் போக்கில் படங்களை எடுத்தார். தொழில்நுட்பம் இன்றளவு வளராத காலத்திலும் உலகைத் தன் படங்களால் வசப்படுத்தினார். அவர் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும். தொழில்நுட்பம் கதை சொல்வதற்குப் பெரிும் உதவும். அதனால் அவர் விளம்பரத்தால் பெரிது போல வலம் வரும் ஹாலிவுட்டைத் திரும்பித் திரும்பிப் பார்க்கவைத்தார்.

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்கள் ராபர்ட் ல்ட்மேன், இங்கமார் பெர்க்மேன், ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா, ஸ்டீவன் ஸ்பீல்பர்க் உள்ளிட்ட பலரும் குரோசோவாவே தங்கள் முன்னோடி என்றும் அவரிடமிருந்து கற்று கொண்டது அதிகமென்றும் சொல்கிறார்கள். ஹாங்காங்கில் இருந்து வந்த சினிமா இயக்குநர் ஜான் வூ (Broken Arrow), சீனத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் ஜாங் யிமூ ஆகியோர் அகிரா குரோசோவாவைப் புகழ்கிறார்கள்.அகிரா குரோசோவா போன்ற ஒருவர் தன்னை உலக நாயகன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. தன் படங்கள் தோல்வியைச் சந்தித்த போதும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சிக்கல்களில் இருந்த போதும் ஜப்பானை விட்டுப் போவேன் என்று அவர் பிதற்றவில்லை. தன் துறையில் ஒரு கம்பீரமான ஆண்மகனாக நின்று போராடி நிலைத்தார். 

ஆனால் இங்கே நடப்பதென்ன? திரைப்படம் எடுக்க சொத்தை விற்று நஷ்டப்படுவது சினிமாத்துறையில் புதிதல்ல. பலர் சறுக்கியிருக்கிறார்கள். சிலர் மீண்டு வந்தாலும் பலர் இழந்ததை மீட்க முடியவில்லை. அவர்கள் நாட்டை விட்டுப் போவேன். ஊர்விட்டு ஊர் போவேன் என்று உதார் விடவில்லை. நம் முடிவு இது, இதன் விளைவுகளை நாம் தான் ஏற்க வேண்டுமென்ற முதிர்ச்சியுடன் செயல்படுகிறார்கள். அதிர்ச்சி கொண்டு சிறுபிள்ளைத்தனமாக உளறவில்லை.இதே கமலஹாசன் மன்மதன் அம்பு என்ற படம் நடித்த போது அதில் ஆண்டாள் குறித்து ஒரு கேவலமான வர்ணனையைக் கவிதை என்று எழுதி மெட்டுப் போட்டும் வைத்தார். அதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்த போது திமிராகப் பேசியவர் தான் இந்திர். என் சொந்தப் படமாக இருந்தால் யார் சொன்னாலும் ஒரு நொடி கூட வெட்டவோ மாற்றவோ மாட்டேன் என்றார்.காரணம் அப்போது கருணாநிதி முதல்வர். அவரிடம் ஹிந்து தெய்வத்தை இழிவுபடுத்தினேன் என்றால் தானும் ஒரு பாடல் எழுதித் தரும் வகையான ஹிந்து விரோதி. ஆனால் இப்போது ஓட்டு வங்கி அரசியலில் சுகம் கண்ட கட்சிகள் யாரும் இஸ்லாமிய அமைப்பினரை எதிர்க்கத் துணியவில்லை. உடனே அம்மஞ்சல்லி கையில் இல்லை எனும் நிலை, ஆகவே நாட்டை விட்டுப் போகிறேன் என்று உணர்ச்சிப் பூர்வமாக மிரட்டிப் பார்க்கிறார் கமலஹாசன்.


எதிர்பார்த்தது போலவே தமிழ்த் திரையுலகினர் அவர் பின் திரண்டனர். போகாதே போகாதே கமலஹாசா என்று கெஞ்சிக் கூத்தாடி இப்போது இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச ஒரு இஸ்லாமியர் உட்பட சில இயக்குநர்கள் நடிகர்கள் கூடியுள்ளனர். 


The Bear and the Dragon எனும் நாவலில் Tom Clancy இரு தரப்புக்கிடையேயான பேச்சுவார்த்தை பற்றி எழுதியிருப்பார். குறித்த விஷயத்துக்கே வராமல் காலை தொடங்கி மதியம் வரை பேசுவார்கள். வெளியே வந்து பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிக்கிறது என்று சொல்வார்கள். பிறகு மதிய உணவுக்குப் பிறகு பேசுவார்கள். சற்றே சண்டை வருவது போல இருக்கும் போது நிறுத்துவார்கள். வெளியே வந்து விவகாரம் முன்னேற்றம் காணும் என்று நம்புவதாகச் சொல்வார்கள். 


அது போலத்தான் விஸ்வரூபம் குறித்த பேச்சுவார்த்தையும் இழுத்துக் கொண்டே போகிறது. பத்திரிகைகளில் நம்பிக்கை தெரிவிக்கப்படுவதும் வழக்கமாகவே இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவதற்குள் படம் வந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கிறது.


ஆனால் இந்தப் பிரச்சினைகளின் போது  கமலஹாசன் நடந்து கொண்ட விதம் அவரது உலக நாயகன் இமேஜ் குறித்த சில கேள்விகளை எழுப்புகிறது. அகிரா குரோசோவா போன்ற ஒரிஜினல் கலை வித்தகர்களுக்கு இல்லாத ஒரு மரியாதை இவருக்குத் தரப்படுகிறது. ஆலையில்லாத ஊரென்று இலுப்பைப்பூ கொண்டாடப்படுகிறதா?

எளியார் கண்டு பொங்குவதும் எள்ளுவதும் வலியார் கண்டு அஞ்சி ஓடிவிடுகிறேன் என்று கதறுவதுமான இவர் துணிவின் தரம் இப்போது வெளிப்பட்டுவிட்டது. உலகநாயகன் என்றால் தன் திறத்தால் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவனாக இருக்கவேண்டும். ஒரு பகுதியில் உள்ள கலையைக் காப்பி அடித்துவிட்டு உலகத்தரத்துக்குக் காவியம் படைக்கிறேன் பார் என்பவருக்கு இவ்வளவு கூச்சல் ஏன் என்பது புரியவில்லை.


பாரத நாடு என் வசதிக்கு இல்லையெனில் அதை நாடாமல் வேறொரு நாடுதனை நாடுவேன் என்று இவர் கண்ணில் நீர்தேக்கி அளித்த பேட்டியின் பின்னணி விஸ்வரூபப் பிரச்சினையில் கவனிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. செய்தி இதோ:

கமலஹாசன் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். 7 வயதுப் பெண் குழந்தை இவருடன் நடிக்கப் போகிறதாம். அந்தக் குழந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். "சும்மா காமிராவைப் பார்த்தால் போதாது, நடிக்க வேண்டும். நான் 7 வயதில் நடிக்க ஆரம்பித்தேன். ஆகவே அந்தக் குழந்தையை நன்கு புரிந்து கொண்டு உடன் பணிபுரிவேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த ஊரில் வேலை கிடைத்திருக்கிறது போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகலாமே? ஏன் இப்படி என் தன்மைக்கு உகந்த
மதசார்பற்ற நாடாகத் தேடிப் போவேன் என்றெல்லாம் நாடகமாடவேண்டும்?

8 comments:

indrayavanam.blogspot.com said...

குற்றம் கண்டுபிடித்தே சிலர் பேர்வாங்குவார்கள். நீர் அந்த வகை போலும்....

Ram ganesh said...

Ram #4
January 31st, 2013 at 4:10 pm
மாநிலத்த விட்டு போயிடுவாரு…….நாட்ட விட்டு போயிடுவாறுண்னு ரொம்ப ஃபீல் பண்றாங்களே.….
எவ்வளவோ பேர் தங்கள் பிழைப்புக்காக இட மாற்றம் செய்து கொண்டு வாழ்கிறார்கள்.

ஒரு கூத்தாடி தமிழகதுத்ை விட்டு போய்விட்டால் நாடு ஒன்றும் ஆகி விடாது.

Arun Ambie said...

இந்திரயவனம்: குற்றம் கண்டுபிடித்துப் பேர்வாங்குவதாக இருந்தால் கமலஹாசனிடம் எவ்வளவோ இருக்கிறது. ரசிகன் என்ற கண்ணாடியைக் கழட்டிவைத்துப் பார்த்தால் என் ஆதங்கத்தில் உள்ள நியாயம் புரியும்.

Arun Ambie said...

ராம் கணேஷ்: பிழைப்புக்காகப் போகிறவர்கள் அதைச் சொல்லிவிட்டுப் போகிறார்கள். இவர் எதையும் நாடகமாக்கிப் பழக்கப்பட்ட ஒரு நடிகர். ஹாலிவுட்டில் நடிக்கப் போவதையும் நாடகமாக்கி பல நாட்கள் கழித்துத் தான் திரும்பிவந்தால் யாரும் மறந்துவிடமாட்டார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்கிறார் போலும்.

Ram ganesh said...

ஹாய் அருண்,
சமீபத்தில் சபரி மலை யாத்திரையின் போது நீர் காத்த ஐயனார் கோவில் சென்றிருந்தோம். ஆஹா.....என்ன ஒரு அழகான சூழலில் அமைந்த கோவில்.

vedicravi said...

NANUM ITHAI OTHUKKIREN EPPA NAMMA VETTU MAMA KALUM AMMIGALUM PASANGALUM AVARUKKU VAKKALATHU ELLA VANGARANGA VETKAM

Arun Ambie said...

@ ராம் கணேஷ்: நீர்காத்த ஐயனார் வரப்பிரசாதி. நீங்கள் அங்கு சென்று வந்தது குறித்து மகிழ்ச்சி.

Arun Ambie said...

@ vedic ravi: Well said :)