ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 13 December 2014

வந்தே குரு பரம்பராம்‬

நண்பர் விவேக ஜோதி அவர்கள் எழுதியது. முன்னுரை எனது.

ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.

அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை விதந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டக சுலோகமும் அதன் அர்த்தமும் இனி பார்க்கலாம்.


விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)
கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 
என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.
பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!
தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!
பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!
ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் 
நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!
ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!
குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!
குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!
விகிதா ந மயா விசதைககலா
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!
============================================================



ஆதிசங்கரர் அருள் பெற்று காலநாத கிரி என்கிற தோடகர் பாடிய தோடகாஷ்டகம் என்னும் அற்புதமான சுலோகத்தை மறைந்த கர்நாடக இசை மேதை திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி தனது இனிய குரலில் பாடி இருக்கிறார்.

No comments: