ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 7 May 2014

பிரிவினைவாதியும் தமிழ்விரோதியுமான கால்டுவெல்லுக்கு தமிழக அரசே 200ம் ஆண்டு நிறைவு விழா எடுப்பது தமிழருக்கு அவமானம்

ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ்ப் பணியைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது 200வது ஆண்டு நிறைவு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. அறிவியல், மொழியியல், வரலாறு, பண்பாடு என அனைத்து மட்டத்திலும் மிகத் தவறு என்று நிரூபிக்கப்பட்ட மோசடியான, ஆரிய-திராவிட இனவாதத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல்.



கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழகம் வந்து தமிழ் படித்து, தமிழைத் திரித்து சூழ்ச்சி செய்து தமிழர்களைப் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்தவரே இந்த ராபர்ட் கால்டுவெல். தமிழர் வரலாறு என்ற போர்வையில் சாதிச் சண்டைகளை ஊக்குவிக்கும் விதமாக இவர் எழுதிய பல கருத்துகள் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு இன்றும் தீராத பிரச்னைகளாக நம் முன் தலைவிரித்தாடுகிறது. கமுதி வழக்கில் நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் என்று வெள்ளையர்கள் தீர்ப்பளித்ததற்கு இவரின் சமூக வரலாற்று ஆய்வே காரணமானது. இதன் விளைவாக தென்தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் நாடார்கள் பெருமளவில் மதம் மாற்றப்பட்டார்கள்.

கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் தமிழைச் செம்மொழி என்று உணர்த்தியவர் கால்டுவெல் என்று அவர் அறிவித்தார். கால்டுவெல் தமிழை உயர்தனிச் செம்மொழியாக எங்கும் குறிப்பிடவில்லை. கால்டுவெல் செந்தமிழ், கொடும் தமிழ் என்று தமிழை இரண்டாகப் பிரித்துக் காட்டிய தொல்காப்பியத்தின் மரபை மட்டுமே சுட்டிக் காட்டினார். உலக வரிசையில் உயர்தனிச் செம்மொழியான ஐந்து மொழிகளுடன் கால்டுவெல் தமிழை அங்கீகரித்துச் சொல்லவில்லை. கால்டுவெல் எழுதிய ஒப்பிலணக்கன நூலில் ஹல்ல கன்னடா என்று, கொடும் கன்னடம், செம்மையான கன்னடம் என்ற கன்னட மரபையும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கன்னட மொழிக்கு முகவரி கொடுத்தவர் கால்டுவெல் என்று எந்த கன்னடக்காரர்களும் போற்றுவதில்லை.

தமிழர்களை மதமாற்றுவதற்கு அந்நிய கிறிஸ்துவ மதத்திற்கு சில அடையாளங்கள், பிம்பங்கள் தேவைப்பட்டது. அதற்காக மோசடியாக உருவாக்கப்பட்டவரே ராபர்ட் கால்டுவெல். தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்க்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்த கால்டுவெல்லுக்கு விழா எடுப்பது தமிழருக்கும் தமிழினத்துக்குமே அவமானம். ஆகவே ஓட்டு அரசியலை ஒதுக்கிவைத்து, தமிழ்த் துரோகிகளுக்கு அங்கீகாரம் தரும் ஈனச் செயல்களை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிடுமாறு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கேட்டுக் கொள்கிறது.

- பால. கௌதமன்.
இயக்குனர்
வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்

No comments: