ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 19 September 2011

தில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடிப்பு

தில்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பலர் மாண்டு போயினர். தேசத் தலைநகரத்தின் பாதுகாப்பு பல்லிளிக்கிறது. தீவிரவாதிகள் வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள். அரசு இயந்திரம் சத்தம் கேட்டு விழித்து சுற்று முற்றும் பார்த்து சுதாரித்து காயமடைந்தோரை அசுபத்திரியில் சேர்த்து மாண்டோரின் பிணங்களை அப்புறப்படுத்தி வந்து "என்னப்பா, ஆச்சு?" என்று விசாரிக்க ஆரம்பிக்கையில் குண்டு வைத்தவன் கராச்சி தாண்டிப் போயிருப்பான் அடுத்த கட்ட ஆயத்தப் பயிற்சிக்கு.


ஹூஜி (HUJI) என்கிற அமைப்பு குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஆறுதலான விஷயம் அவர்கள் வன்முறைக்காவது பொறுப்பேற்றார்கள் என்பதே. உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் மந்திரி சீனாத்தானா பொறுப்பற்ற முறையில் உளவுத்தகவல்களை பல நாட்கள் முன்னரே தில்லி போலீசுடன் பகிர்ந்து கொண்டு விட்டோம், பிறகென்ன ஆச்சோ தெரியவில்லை என்று கூறியுள்ளார். இது அரசுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார், ஏதோ இதுவரை களங்கமே படாத அப்பழுக்கற்ற அரசு இது என்பது போல.

விசாராணை திக்குத் தெரியாமல் போகிறது என்கிற குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனாத்தானா, நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளன ஆனால் அவை உறுதியான தகவல்களாக இல்லை என்கிறார். வரும்.... ஆனா வராது என்பதைப் போல விசாரணையில் துப்பு கிடைத்திருக்கிறது, ஆனால் போதுமான அளவுக்கு அந்தத் துப்பு இல்லை என்கிறார் அமைச்சர். துப்பு போதுமான அளவுக்கு இல்லையா அல்லது போதுமான அளவுக்குத் துப்பில்லையா என்பது விடை தெரிந்த கேள்விதான். மாண்டவர் குடும்பமும் காயமடைந்தோரும் நன்றாகக் காறித் துப்பினால் தான் போதுமான துப்பு கிடைக்கும் போலிருக்கிறது.

வழக்கம் போல வந்தவன் இப்படி இருக்கக்கூடும் என்று படம் வரைந்து பாகங்களைக் குறித்து வெளியிட்டிருக்கிறார்கள். உள்நாட்டிலேயே வளர்ந்த தீவிரவாதக் கும்பலாக இருக்கலாம் என்று சீனாத்தானா கோடி காட்டியிருக்கிறார். இது தகவலா விசாரணை செல்லவேண்டிய திசை குறித்து தேசிய விசாரணை ஆணையத்திற்கு இடப்பட்ட மறைமுக ஆணையா என்பது சிதம்பர ரகசியம். "இனியும் பாகிஸ்தானைக் குற்றம் சாட்ட முடியாது. இது இந்தியாவிலேயே வளர்ந்த தீவிரவாத கும்பலின் வேலையாகவும் இருக்கலாம்" என்கிறார் உள்துறை மந்திரி.

அமெரிக்கா இந்திய முஜாகிதீன் பாகிஸ்தானில் வளர்ந்த தீவிரவாத இயக்கம் என்று அறிவித்துள்ளது. ஆனால் சீனாத்தானா அப்படி ஒன்றும் ஆதாரமில்லை என்கிறார். பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருக்கிறது ஆனாலும் உள்நாட்டுத் தீவிரவாதம் என்கிற கோணத்திலும் பார்க்கவேண்டும் என்கிறார். உளவுக்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமாம். பம்பாயில் குண்டு வெடித்து இத்தனை மாதங்களாய் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் அமைச்சரே? காவல் என்பது கடினமான வேலை. தீவிரவாதிகள் நாம் கோட்டைவிடும் இடங்களில் புகுந்துவிடுகிறார்கள் என்கிறார் சிந்தனைச் சிற்பி என்று தமாகாவைச் சேர்ந்த காங்கிரசுக்காரர்கள் மட்டும் புகழும் சிதம்பரனார்.

அருமையான கண்டுபிடிப்பு. இதுவரை நடந்த தீவிரவாதச் சம்பவங்களில் எங்கெங்கே கோட்டை விட்டுள்ளோம் என்பதைக் கண்டு அங்கங்கே ஓட்டைகளை அடைத்துப் பாதுகாப்புக் கோட்டையை பலப்படுத்த வேண்டியது தானே உள்துறை அமைச்சரின் பணி? சிவராஜ் பாட்டீல் கோட்டை விட்டு விட்டார் என்று தானே பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்த(?!) இவரை உள்நாட்டுப் பாதுகாப்பைத் தூக்கி நிறுத்துங்கள் (வெட்கக்கேடு) என்று உள்துறைக்கு அமைச்சராக்கினார் சோனியா காந்தி?

போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் பிணம் இறந்திருந்தது என்று எழுதுவது போல இருக்கிறது இவரது வாதங்கள். காவல் காப்பது கடினம் என்றால் கடினமான வேலைக்கு கடினமாக உழைக்கும் ஆட்களைப் போட்டு உடனிருந்து உற்சாகப்படுத்துவதே இவர் பணி. When policing gets tough, the tough should get into policing. கடினமான வேலை அங்கங்கே கோட்டை விடத்தான் செய்வோம் என்று பேசுவது பேதைமை கூடக் கிடையாது. வடிகட்டிய முட்டாள் தனம். பொறுப்பற்ற அலட்சியம். யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்கிற கர்வம்.

பதினோராண்டுகளாய்த் தூங்கிக் கொண்டிருந்த கருணை மனுவைத் தூசி தட்டி நிராகரிக்கச் சொல்லி பேரறிவாளான், சாந்தன், முருகன் ஆகிய மூவரைத் தூக்கில் போட உடனடியாக நடவடிக்கை என்று ஜெயலலிதா அரசுக்கு நெருக்கடி கொடுக்க மட்டும் அரசு எந்திரத்தை அசுரவேகத்தில் வேலை செய்ய வைக்க முடியும் என்றால், தேசப் பாதுகாப்பை பலப்படுத்தும் விஷயத்தில் மட்டும் "விரிசல்களில் புகுந்துவிடுகிறார்கள் தீவிரவாதிகள். என்னத்தச் செய்ய?" என்று அங்கலாய்க்க மட்டும் தான் முடியுமா?

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டுமென்றால் யாருக்கும் அடிவருடாத இந்திய மனசாட்சியுடன் கூடிய, வேண்டிய அளவில் வேண்டிய நேரத்தில் கடுமையும் கருணையும் காட்டத் தெரிந்த ஒரு இந்தியர் பிரதமராக வேண்டும். காங்கிரசில் அப்படி யாருமில்லை. பிஜேபியில் அருண் ஜேட்லி கோபப்படாமல் நன்றாகப் பேசுகிறார், சுஷ்மா ஸ்வராஜ் நன்றாகக் கோபப்படுகிறார்.ஆனால், நரேந்திர மோடி தவிர யாரும் பொறுப்புக்குத் தேறுவதாகத் தெரியவில்லை. மூன்றாவது அணியில் ஜெயலலிதா தேறுவார். அவர் பிஜேபியுடன் கூட்டணி கண்டால் உள்துறைக்குப் பொறுப்பேற்கப் பொறுத்தமானவர்.

எது எப்படியாயினும் கண்ணீரால் காத்த பயிர் இப்படிக் குதறப்படுகிறதே என்று கண்ணீர் விடுவதை விடுத்து பயிரை யார் மேய்ந்தாலும் பல்லை உடைப்போம் என்று சபதமேற்போம். மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே பொறுப்பிலுள்ளோர் பொறுப்புடன் இருப்பர்.

No comments: