சரி சில உண்மைகளைப் பார்ப்போம்:
- அணு உலைகள் அமைக்கப்படும் இடம் 1.6 கி.மீ சுற்றளவுக்கு மக்கள் குடியிருப்பில்லாத இடமாக இருக்கவேண்டுமென்ற என்ற முக்கியமான கோட்பாடு மீறப்பட்டு 1 கி.மீ சுற்றளவில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் இருக்கிறது கூடங்குளம் அணு உலை.
- அணு உலை தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை உள்வாங்கி, உபயோகித்து அதை மிக அதிகக் கொதிநிலையில் கடலில் விடுவதால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பதோடல்லாமல் கடல் வளம் சீர்கெடும். பாசி கூட இருக்காது.
- 7 நாடுகளில் உள்ள 136 அணு உலைகளைச் சமீபித்த குடியிருப்புகளில் ஆய்வு செய்து அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி கண்ணுக்குப் புலனாகாத அணுக்கதிர் வீச்சு எனும் நஞ்சு புற்றுநோய், பிறவி ஊனம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தரும்.
- அணுசக்திச் செயல்பாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நச்சுத்தன்மை குன்றாதிருக்கும் அணுக்குப்பைகளைத் தரும். இக்குப்பைகளை பூமிக்குப் பிரச்சினையில்லாமல் அகற்ற விஞ்ஞானம் இன்னும் முயன்றுவருகிறது. முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கை இவ்விஷயத்தில் இன்னும் நம்பிக்கை தரவில்லை.
- செர்னோபில்லுக்கு விபத்து நடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னும் நாய் கூடப் போவதில்லை. ஆனால், அணுக்கழிவு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் மட்டும் போய் வருகிறார்கள். அவர்களும் அணுக்கதிர் வீச்சால் வரும் சீக்குக்ளைத் தாங்கிக் கொண்டுதான் வாழ்கிறார்கள்.
- கடல் கொண்ட ஃபுகுஷிமா அணுவிபத்து இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. முடிவடைந்த பாடில்லை.
இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி, ஃபுகுஷிமா அணு விபத்தை வெகுநாட்களுக்கு வேதி விபத்து என்றே சொல்லிக் கொண்டிருந்தார். நம் நாட்டு அணு விஞ்ஞானிகளை முட்டாள்கள், வேதி விபத்துக்கும் அணு விபத்துக்கும் வேறுபாடு தெரியாத வீணர்கள் என்று மட்டம் தட்டிவந்த அதே பானர்ஜி தரும் பாதுகாப்பு உறுதிகளைத் தான் கூடங்குளம் குழுவினர் டில்லிக்குப் போய்க் கேட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.
கூடங்குளத்தார்கள் சமாதானமாகும் வரை அணு உலையில் வேலை நடக்காது என்று சொன்ன மாண்புமிகு பிரதமர் மனமோகனச் சிங்கர் அந்த வாக்குறுதியையும் கறுப்புப் பண மீட்பு, ஊழல் ஒழிப்பு வாக்குறுதிகள் போலவே காற்றில் பறக்க விட்டு விட்டு தென்னாப்பிரிக்காவுக்கு மாநாட்டில் பேசப் போய் விட்டார்.
இதில் மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் கூறுவது எதற்கு என்று புரியவில்லை. ஜெயலலிதா கோபப்படுவதில் நியாயமிருக்கிறது. பிரச்சினை மத்திய அரசின் அணுசக்தித் துறை சார்ந்தது. அந்தத் துறைத்தலைவருக்கு அணுசக்தியின் அடிப்படையே தெரியாது. அணுக்கதிர் வீச்சால் கடும் வியாதி ஏதும் வந்தால் அது சாதாரண கால்ரா தான், தடுப்பூசி போடுங்கள் சரியாகிவிடும் என்று பேசக் கூடியவர் தான் ஸ்ரீகுமார் பானர்ஜி. அவர் சொல்வதை நம்பிப் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்றால் என்ன நியாயம்?
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதி நவீனமானவை என்று பலர் விவரங்களை அடுக்குகிறார்கள். வலைப்பதிவுகள் முதல் செய்திக்கட்டுரைகள் வரை வலம் வருகின்றன. ஆனால், அவற்றின் நம்பகத்தன்மை என்ற கேள்வி வரும் போது நம்பிக்கையான மனிதர் ஒருவர் சொல்வது சிறப்பு.
நம் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஒரு 10 நாட்கள் அவகாசம் தாருங்கள் இது குறித்துச் சொல்கிறேன் என்கிறார். அவரது துறைசார் நிபுணத்துவம் ஏவுகணை மற்றும் யுத்த தளவாடங்கள் எனினும் அவர் அணுசக்தியின் அடிப்படை புரிந்த விஞ்ஞானி. "கூடங்கொளத்துல யாராச்சும் தீக்குளிச்சா அந்தம்மாக்கு பிரச்சினை ஜாஸ்தியாகுமே" என்ற மட்டமான அரசியல் கணக்குகளோ, விண்டோஸ் மீடியா ப்ளேயரில் தட்டச்சு செய்து தீவிரவாதிகளை இந்தியா முழுவதும் பிடிப்பதாகப் படுகேவலப் படம் காட்டும் ஆசாமியோ அல்ல அவர். ஆகவே அவர் கருத்துக்குக் காத்திருக்கலாம், செவிமடுக்கலாம், ஒப்புக் கொள்ளலாம்.
மேலும் இப்போராட்டத்தில் அரசியல் புகுந்து விளையாடுவதாகவும் கிறிஸ்தவ மத உணர்வுகள் மூலம் வட்டார மக்கள் தூண்டப்பட்டுத் திரட்டப்படுவதாகவும் உளவுத்துரைகள் தெரிவிக்கிறார்கள். மத்திய அரசு கிறிஸ்தவ மதத்தின் அகில இந்தியத் தலைமையின் மூலமாக சமாதானத்துக்கு முயன்றும் உள்ளூர்ச் சாமியார்கள் போராட்டத்தைத் தொடர்வதிலே குறியாக இருப்பதாகவும் தகவல்கள் உறுதி கூறுகின்றன. ஏன் சமாதானத்தைத் தவிர்க்கிறார்கள் என்பது புரியவில்லை. அரசியல் பின்னணிகள், காய் நகர்த்தல்கள் இருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.
மக்கள் நலன் தவிர வேறு நோக்குடன் இதில் மூக்கை நுழைக்கும் யாருடைய மூக்கும் தயவு பாராது உடைக்கப்பட வேண்டும். சிக்கல்களுக்குச் சரியான தீர்வும், வாழ்வாதாரத்துக்கு வளமான முடிவும் வரும் விதத்தில் ஜெயலலிதா இதைக் கையாள வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போல அரசியல் செய்வோரை அரசியல் காய் நகர்த்தல்கள் மூலமாகவே முடக்கி மக்கள் நலன் பேண வேண்டும்.
கருணாநிதி: இப்போது கூட மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சியின் தலைவர் என்ற நிலையில் அவர் டில்லி சென்று பேசி இதில் சுமுகத்தீர்வு கிட்ட முயற்சி செய்யலாம். ஆனால் மகன், மகள், பேரன்களின் பதவிகளுக்கான பேச்சுவார்த்தைகள், மகளின் ஜாமீன் குறித்த பேரங்கள் என்பன தவிர்த்து வேறெதற்கும் "சொல்லவும் கூடாது, தப்பித்தவறிச் சொல்லித் தொலைத்தாலும் புரியவே கூடாது" என்ற அடிப்படையில் ஒரு கடிதம் எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அவர். Old habits die hard. ஆகவே கருணாநிதி சும்மா இருந்தாலே பிரச்சினையில் பாதி தீர்ந்துவிடும். மீதியை சுலபமாகத் தீர்க்கலாம்.
வலையில் வாசித்தவையும், தொலை(பேசி)யில் கேட்டவையும் கொண்டு எழுதப்பட்டது இப்பதிவு. எனக்குத் தகவல் தந்த நல்லோர்க்கு நன்றிகள்.
4 comments:
Blooger is FREE, and office internet is free...
Write anything.. what's going to affect you...
ஏம்பா பெயரிலி!!(அனானிக்கு சுத்தத் தமிழ்) பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்.. உனக்கு முடிஞ்சா நீயும் எழுது... என்னத்துக்குன்னு பொலம்புற.. ப்ளாக்கர் இலவசம், ஆபீசுல இண்டர்நெட் இலவசம்னு? நாடு போற போக்குல அரசாங்கமே கூட்டாஞ்சோறு பொங்கி ரேசன் கார்டுக்கு இம்புட்டு சோறு இம்புட்டு கொழம்புன்னு போடப் போவுது... இலவசத்துக்குப் போயி அலுத்துக்குறியேபா!!
அருண் அம்பி! நல்ல ஆய்வு.. ஆனால் ஒரு சிறு சறுக்கல். ஜெயலலிதா பற்றி பம்மிப் பதுங்கிக் கருத்துச் சொல்கிறீர்கள். ஆனால் கருணாநிதி பற்றி எழுதும் போது மட்டும் ஒரு ஆத்திரம் வந்து கலந்து முழுதும் படர்ந்துவிடுகிறதே... ஏன்? Old Habits die hard?
தமிழ்நேசன்! வருகைக்கு நன்றி. கருணாநிதி பற்றிப் பேசும் போது மட்டும் எனக்கு ஆத்திரம் வருகிறது என்கிறீர்கள். அது நியாயம் என்பேன். இந்திய அரசியலில் கோலோச்சிய ராஜதந்திரி காமராஜரோடு போராடி எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த ஒரு இயக்கத்தைத் தன் சொந்த நலனுக்காக இன்று குடும்பச் சொத்தாக மாற்றி வைத்திருக்கும் கருணாநிதி மீது கோபம் வராமல் என்ன வரும்? திமுகவில் கொள்கைக்காக இருந்தவர்களை ஓரங்கட்டிவிட்டு வசூல் ராஜாக்களை வளர்த்துவிட்ட இவர் என்ன போறுதலுக்குரியவரா? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இவர் மீது மரியாதை என்பது எனக்கு எள்ளளவும் இல்லை. அடிமுதல் முடிவரை ஊழல்தான் கருணாநிதியின் ரத்த ஓட்டம். ஆனால் ஜெயலலிதா 1991-96ல் பல தவறுகள் செய்திருப்பினும் 2001-06ல் நல்ல ஆட்சிதான் தந்தார். இப்போதும் குறைகாண ஏதுமில்லை. பம்மிப் பதுங்கி என்பதெல்லாம் கிடையாது. எனக்கு அவர் மீது மரியாதை உண்டு ஆகவே சற்றே வேகம் குறைத்துச் சொல்வேன் அவ்வளவே!
Post a Comment