ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 8 February 2013

டோண்டு ஐயாவுடனான என் நேரங்கள்.

டோண்டு ராகவன் அவர்களின் மறைவு ஏற்படுத்திய சோகத்தில் இருந்து நான் முழுதும் மீளவில்லை. 6/2/13 அன்று சேதி கேட்டபின் அலுவலகத்தில் விட்டத்தை விழித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மீட்டிங் என்றதும் வழக்கத்தை விட இரட்டிப்பாக 6 கருங்குளம்பியங்களை (Black Coffee) 2 மணி நேரத்தில் அருந்தினேன்.

அவ்வளவாக எதிலும் ஒட்டுதலின்றி இருந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். என் தாயாரிடம் ஃபோனில் விஷயத்தைச் சொன்னதும்,  ”அந்த நங்கநல்லூர்க்காரரா?” என்றார். ஆமாம். “நல்ல மனுஷன். உனக்குக் கூட பொறுமையா புத்திமதி எல்லாம் சொல்வாரே!” என்றார். ”அவருக்குக் கேன்சர்னு சொன்னே! சரியாப் போச்சு நன்னாருக்கார் அப்படின்னியே... என்னடா இது கொடுமை”, என்றார் என் தந்தையார். . கடந்த இரு தினங்களாக அவர் பற்றி ஏதாவது பேசுவார்கள் என் பெற்றோர்.

2011 ஜனவரி மாதம் பொங்கல் முடிந்த பின் என் தாயாருக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக நான் பொங்கலுக்கு ஊருக்குப் போகும் போது செல்பேசியில் அழைத்தார். பேருந்துப் பயணத்தில் சரியாகக் கேட்கவில்லை.

”ஆபீஸ்ல வேலை இப்போதான் முடிஞ்சுதா?”


“இல்லை நான் ஊருக்குப் போறேன், அம்மாவுக்குக் கண் ஆபரேஷன்”

“என்ன விஷயம்?”

“காடராக்ட்”

”ஹ... அதுவா... இப்போ அதுவும் காய்ச்சல் தலைவலி மாதிரி ஆகிப்போச்சு. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. லேசர் தானே?”

”ஆமாம். லேசர் தான். இருந்தாலும் ஒரு சின்ன நடுக்கம் இருக்கு”

டாக்டர் யாரு?

”எங்க ஊருல சக்தி கண்மருத்துவமனை. மதுரை அரவிந்த் ஆஸ்பத்திரில இருந்து பிரிஞ்சு வந்த டாக்டர் நடத்தறார்.”

Doesn't matter. எங்க இருந்து வந்தா என்ன? நல்லபடியா பாக்கறாரா?

Track record நன்றாக இருக்கிறது.

அதுதான் வேணும். சர்ஜரி பெருசா ஒண்ணும் இல்லப்பா... பயப்படாதே. 10 நிமிஷம் தான், முடிஞ்சுடும். எல்லாம் சரியாப் போகும். டாக்டர் சொன்ன படி கேக்கணும். அது ரொம்ப முக்கியம்.

என் தாயார் டாக்டர் கொஞ்சம் குழைவாக வடித்த சாதம் சாப்பிடுங்கள் என்று சொன்னால் சாதத்தைக் கரைத்துக் குடித்துவிட்டுப் போவார். ”ஏம்மா! டாக்டர் குழைவா வடிச்சு சாப்பிடலாம்னு சொன்னாரே?” என்றால், ”அதென்ன கட்டுப்பாடில்லாத நாக்கு? கரைச்சுக் குடிச்சா ஜீரணம் கஷ்டமில்லாம ஆகும். உனக்கென்ன பெரிசா தெரியும்னு வந்து அட்வைஸ் பண்றே?” என்று கேட்பவர் என்றேன்.

சிரித்துவிட்டார். பிறகு எனக்குச் சொன்ன அறிவுரைகள் Top class.

  • நர்ஸ் வைக்காதே. நம்ம பாத்துக்கற மாதிரி வராது. 10 நாள் லீவு போட்டுட்டு போ. இல்ல லேப்டாப் வெச்சு ஊர்ல இருந்து வேலை செய்ய முடியுமானா செய்.
  • அம்மாவுக்கு நீ தினமும் பேப்பர் படித்துக் காட்டு.
  • கதை, கட்டுரை எல்லாம் உனக்கு பிடிக்கும் பிடிக்காதுன்னு பாக்காதே. அம்மாவுக்கு எது பிடிக்குமோ அதைப் படித்துக் காட்டு.
  • ஆன்மீகப் புத்தகம் பிடிக்கும்னா அதுவும் படித்துக் காட்டு.
  • அம்மா ஏதாவது செஞ்சு நீ இரிட்டேட் ஆனா காட்டிக்காதே. சின்னகுழந்தைல நீ என்னென்னெ செஞ்சிருப்பே? அதுக்கெல்லாம் இரிட்டேட் அயிருப்பாரா உன் தாயார்?
  • அப்புறம் இந்த negativeஆ பேசற ஆட்கள் யாரு வந்தாலும் கவலையே படாம வாசலோட கட் பண்ணி அனுப்பு. அந்தமாதிரி ஆட்கள் தேவையே இல்லை.
  • கொஞ்சம் வெளில நடமாடலாம்னு டாக்டர் சொன்னதுக்கு அப்புறம் அம்மாவை வாக்கிங் கூட்டிக்கொண்டு போ.
  • அம்மாவுக்கு உன் கையால ஒரு காப்பியாவது போட்டுக் கொடு. சந்தோஷப்படுவாள்.
  • எது நடந்தாலும் மிகம் சுளிக்காதே.
இன்னும் நிறையச் சொன்னார்.

ஊரில் இருந்து அவரிடம் ஒரு முறை பேசினேன். துக்ளக் ஆண்டுவிழா பற்றிச் சொன்னார். ஈழப்பிரச்சினையில் விடுதலைப் புலிகள் ஒழிந்த பின்னும் சோ இலங்கை அரசை ஆதரிப்பது தவறு என்றேன். சற்றுமுன் போட்ட பதிவு பாருங்கள் என்றேன் தொலைபேசியில் பேசிக் கொண்டே இந்தப் பதிவைப் படித்தவர் என் கருத்து தவறு என்று 15 நிமிடங்கள் வாதிட்டார். இறுதியில் I don't agree with you என்றார். Me too, in this issue! என்றேன்.

அப்புறம் என்ன விசேஷங்கள் ஊர்ல என்றார். ராஜபாளையம் பற்றிப் பேசி முடித்தோம். ஆனால் ஃபோனை வைக்கும் முன் “இந்த ஈழம் விஷயத்தில நெறைய பாதுகாப்பு விஷயங்கள் கவனிக்க வேண்டியிருக்கு. உணர்ச்சிவசப்பட்டுப் பேசாம அந்தக் கோணத்தில் பார். சோ சொல்வதும் சரி, நான் வாதம் பண்றதும் சரின்னு புரியும். அப்புறம் பேசறேன்" என்று வைத்துவிட்டார். Typical Dondu style to have the final say.

அதன் பிறகு வழக்கம் போல இஸ்ரேல், சோ என்று அவ்வப்போது பேசிக் கொள்வோம்

க்ளையன்ட் என்ற வார்த்தை கணினித் துறையில் பணியாற்றுவோரிடம் ஒரு சிறு நடுக்கத்தையாவது ஏற்படுத்தும். ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று மேற்கத்திய நாடுகளில் இருந்து வருபவர்கள் எது சொன்னாலும், “Yeah Sure. We can do it. No problem." என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் நம்மவர்களிடமிருந்து பதிலாக வராது. செய்ய முடியாதே என்று காரணம் சொன்னால். தப்பானால் ஆகட்டும். அவனே அப்புறம் மாத்தச் சொல்வான் மாத்துவோம் என்பார்கள். Client is always right என்பார்கள்.

டோண்டு ஐயாவோடு இந்த வழக்கம் குறித்துப் பேசிய போது ”வரானே க்ளையண்டு... என்ன படிச்சிருக்கான்னு கேட்கறதுண்டா?” என்றார்.

இல்லையே...

முதல்ல அதைக்கேளு என்றார். அப்போது அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஃபிரெஞ்ச் பேசும் க்ளையண்ட் வருகிறார்கள் என்று இவரை துபாஷியாக அழைத்திருக்கிறார்கள். அங்கே வந்த க்ளையண்ட்கள் சில பொறியியல் விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல் பேச டோண்டு ஐயா ஏதோ விவரிக்க ஆரம்பித்துள்ளார். "You are an interpreter. Not a qualified person to speak on a crtitical engineering issue" என்று அவர்கள் சொல்ல, ஐயா மன்னன் படத்தில் ரஜினி இங்கிலீஷ் பேசுவது போலப் படபடவென்று தன் கல்வித்தகுதி அனுபவம் உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லிவிட்டு அவர்களின் கல்வித்தகுதியைக் கேட்டாராம். பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு மெக்கானிகல் இன்ஜினியரிங் ஓராண்டுப் படிப்புப் படித்தவர் ஒருவர். மற்றவர் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் ஓராண்டுப் பயிற்சி பெற்றவர்.

 “நீ என்னடா பெரிய இவன். போடா ஜாட்டான்னுட்டேன்”.  ”நம்ம தகுதிய நாமளே வெள்ளைக்காரன் முன்னாடி தாழ்த்திக்கறோம். அடிமை புத்தி இன்னும் போகலை. அவன் சும்மா ஒரு வருஷம் படிச்சுட்டு வந்தான்னா பெரிய இவனா?  வெள்ளைக்காரன் அப்படின்ன ஒடனே கால்ல விழுந்துடணுமா? நாம படிச்ச படிப்பை நாமளே மதிக்க வேண்டாமா” என்றார்.

இதன் பிறகு என் அலுவலகத்தில் பணி சம்பந்தமாக அதீதக் குடைச்சல் கொடுத்த ஒரு மேற்கத்திய மங்கையை,” Can you please let me do the work in my style? I assure the result will be better that what we get now." என்று பேசி அவரது Micro management பழக்கத்தை என் வரையில் நிறுத்தினேன். இது போலப் பல விஷயங்களில் எனக்கு வழிகாட்டியிருக்கிறார்.

அப்புறம் பதிவுலகில் குறிப்பிடும் படியாக ஸ்ரீரங்கம் ப்ராமணாள் கபே விவகாரம். அதற்கு நான் என் வலைப்பூவில் செய்த மாற்றங்கள் குறித்து ஒரு பதிவர் சாதியத் தாக்குதல் தொடுக்க எனக்கு முன் அங்கு போய் என்னை defend செய்திருந்தார். எனக்கும் அதைச் சொன்னார்.

ஈவெரா குறித்து ஒருவரிடம் நான் கோபப்பட்டுப் பேச “கோபம் வரலாம். ஆனால் அதை எழுத்தில் வெளிப்படுத்தும் போது ஜாக்கிரதையா இருக்கணும். கோபத்துல கூட யோசிச்சு வார்த்தைகளை தெளிவா கொண்டு வரணும்”. என்று நெறிப்படுத்தினார். அப்போது அவர் புற்று நோயை வென்றிருந்தார்.அதன் பிறகு ’சமீபத்தில்’ குஜராத்தில் மோடி வென்றதைக் கொண்டாடினோம். நான்  அலுவலக வழக்க தோஷத்தில் அந்த வெற்றியைப் பற்றி புள்ளிவிவர அலசல் ஒன்று செய்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. மோடியின் வெற்றி குறித்த தன் பதிவில் என் பதிவின் சுட்டியைக் கொடுத்து எல்லோரும் படிக்கவேண்டியது என்று சொல்லியிருந்தார். மறுநாள் நண்பர் ராம்குமார் ஃபோன் செய்து டோண்டுஜி ப்ளாக் பாத்தீங்களா என்றார். அலர்ட் இருக்கிறது. புதிதாக இன்று அவர் ஏதும் எழுதவில்லை என்றேன். இல்லை போய்ப் பாருங்க. உங்க ப்ளாகுக்கு லிங்க் கொடுத்திருக்கார்” என்றார்.

அங்கே போனால் டோண்டு ஐயாவின் favourite listல் என் வலைப்பூ!! ஆச்சரியப்பட்டுப் போனேன். அதற்கு நன்றி நவின்றேன். நன்றாக இருக்கிறது வைத்திருக்கிறேன் என்றார். பிறகு மிகக் குறைவாகவே பேசினோம்.  பணிப்பளு, பயணங்கள் என்று நட்புவட்டத்தில் அதிகம் ஈடுபடாமல் இருப்பது சற்றே உதைக்கிறது.

அவரிடம் சற்று அதிகம் பேசியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.

படம் Courtesy: துளசிதளம்

3 comments:

துளசி கோபால் said...

பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள்.

மரணச்சேதி தெரிஞ்சதும் மனம் அப்படியே ஸ்தம்பித்து போனது:(

Kumar said...

I am really sorry. I have been following sri. doundu's blogs for years and i could not able to diagest. I was a serious reader of his review on Enge Brahmanan. My heart felt condolence. Let the soul rest in peace.

Om namashivaya.

Kumar

enRenRum-anbudan.BALA said...

மிகவும் ஆத்மார்த்தமான நினைவு கூரல், அஞ்சலி !
அன்புடன்
பாலா