ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday, 12 February 2011

சம்ஸ்க்ருத படிப்பு - நன்றை இன்றே!!

ச்ருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் உபதேசத்தில் இருந்து எனக்குப் பல தெளிவுகள் குருவருளால் கிடைத்தன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் வேதாதி விஷயங்கள் விவாதத்துக்குரியன அல்ல என்று நண்பர் ஒருவர் சொன்னார். மறுத்தேன். அவர் வேத விற்பன்னர் என்பதால் தமக்குத் தெரிந்த சில ச்லோகங்களைச் சொல்லி தன் தரப்பை வலுப்படுத்தினார்.


அதற்கு தக்க பதில் தரவேண்டும். ஆனால் பொதுவாக அனைவரும் பேசும் பகவத்கீதை போன்ற நூல்களிலிருந்து இல்லாமல் வேறு ஏதாவது நூலில் இருந்து மேற்கோள் காட்டி பதில் தரவேண்டும் என்பது என் அவாவாக இருந்தது. குருவே சரணம் என்று வேண்டிக் கொண்டு வேலைக்குப் போய் விட்டேன். அந்த வார இறுதியில் என் மாமா வீட்டுக்குப் போன போது "மஹா சந்நிதானத்தோட உபதேசம்டே இது. குலரக்ஷை. உட்கார்ந்து படி." என்று என் மாமா ஒரு புத்தகம் தந்தார்.

புத்தகத்தைக் கையில் வாங்கியதும் சட்டென்று ஒரு பக்கத்தைப் பிரித்தேன். அதில் கிடைத்தது இந்த ஸ்லோகம்.

புராணமித்யேவ ந ஸாது ஸர்வம்
ந சாபி காவ்யம் நவமித்யவத்யம்|
ஸந்த: ப்ரீக்ஷ்யான் யதரத் பஜந்தே
மூட: ப்ரபத்ய யனேய புத்தி:||
(மாளவிகாக்னி மித்ரம் 1.2)

இதன் பொருள்:

"பழமை போற்றத்தக்கதுமல்ல. புதுமை தூற்றத்தக்கதுமல்ல. எந்த மாற்றத்தையும் அறிஞர்கள் ஆராய்ந்து ஏற்கிறார்கள். மூடர்கள் பிறர் நம்பிக்கையை ஏற்கிறார்கள்."

இதைச் சொல்லி நண்பரை மடக்க, அவர் "பெரிய ஆளய்யா நீர்! மாளவிகா அக்னி மித்ரம் எவ்வளவு பெரிய காவியம் தெரியுமா? முடிந்தால் சம்ஸ்க்ருததிலேயே படியும்" என்றார். நெடுநாட்களாக சம்ஸ்க்ருதம் கற்கவேண்டும் என்கிற ஆசைக்கு இந்த சம்பவம் நெய் வார்த்தது. பல இடங்களில் தேடினேன். நேரம் ஒத்துவரவில்லை என்பதாலேயே படிக்க இயலாது போனது.

நண்பர் சாரங்கன் (சாரங் என்ற பெயரில் இணையத்தில் உல்வுபவர்) வேளச்சேரியில் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில் சம்ஸ்க்ருத வகுப்பு நடக்கிறது என்று தகவல் தந்தார். நேற்று சனிக்கிழமை மதியம் 1 மணிக்குப் பேருந்தில் கிளம்பி பேபி நகரில் இறங்கிக் கொண்டேன். ஆசிரமத்துக்கு வழி கேட்ட போது சென்னை மக்கள் மாறவேயில்லை என்று புரிந்தது. ஆளாளுக்கு ஒரு வழி சொன்னார்கள். விட்டால் மைசூர் சாம்ராஜ் நகருக்கே அனுப்பிவிடுவார்கள் என்று பயந்து ஒரு ஆட்டோக்காரரிடம் (கடவுளை வேண்டிக் கொண்டு) வழி கேட்டேன்.


நல்ல மனிதர். சரியான வழி சொன்னார். அவர் வாழ்க! இருந்தாலும் போகும் வழியில் ஒரு தபால்காரரிடம் வழி சரிதான் என்று உறுதி செய்து கொண்டேன். 2.20க்குப் போய்ச் சேர்ந்தேன். வாசலில் IT Milan மூலம் கிடைத்த நெடுநாளைய நண்பர் ராஜாராம் இருந்தார். "வகுப்பு 2 மணிக்கே துவங்கிவிட்டோம். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்றார். "நான் 20 நிமிஷம் தாமதமாய் வந்திருக்கிறேன். நீங்கள் ஏன் வருத்தம் தெரிவிக்கிறீர்கள்?" என்றேன். நான் வேலை மாறியது, சம்ஸ்க்ருதம் படிக்க பல இடங்களில் அலைந்தது பற்றிப் பேசினோம். "என்னைக் கேட்கவேண்டியது தானே! நான் சொல்லி இருப்பேனே" என்றார். "இது போன்ற விஷயங்களுக்கு என்னைக் கேளுங்கள்" என்றார். "எனக்குத் தோன்றவில்லை ஐயா" என்று வருத்தம் தெரிவித்தேன். உள்ளே வகுப்பு ஆரம்பித்து வெகுநேரம் ஆகிவிட்டது, சீக்கிரம் போங்கள் என்றார்.

உள்ளே போனேன். அனுராதா என்று ஒரு பெண்மணி (பெயர் தேநீர் இடைவேளையில் தான் தெரிந்தது) சம்ஸ்க்ருதத்தில் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார். இளைஞர்கள் வரிசையில் இடமில்லை, வயதானவர்களோடு நாற்காலியில் தான் இடம் கிடைத்தது. மனதைத் தட்டிக் கொடுத்துத் தேற்றிக்க்கொண்டு உட்கார்ந்து கவனித்தேன். அவர் பல விஷயங்களை சம்ஸ்க்ருதத்திலேயே சொன்னார். சற்றே புரிந்தும் புரியாமலும் இருந்தது. 'சோ' பாணியில் சொன்னால் கலைஞர் கருணாநிதி கடிதம் எழுதியது போல.

ஒருவரை அழைத்து நிறுத்தி படிக்கிறார், எழுதுகிறார், சாப்பிடுகிறார், நிற்கிறார் என்று பல சொற்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். அவரும் நம்மைப் போல படிக்க வந்தவர் தான் போல, என்ன கொஞ்சம் அதிகமாகவே வயதாகிவிட்டது என்று அவரைப் பற்றி எண்ணியிருந்தேன். கடைசியில் தான் தெரிந்ந்தது அவரும் ஒரு வாத்தியாராம். (வாத்தியார்களிடம் சடவு இழுப்பது பள்ளிக் காலத்திலிருந்து பழகிவிட்டது. அனிச்சைச் செயல் ஆகிவிடுமோ என்று இப்போது பயப்படுகிறேன்!)

பல சொற்கள் கற்றுக் கொடுத்தார்கள். எண்கள் கற்றுத்தந்தார்கள். சிறு மற்றும் குறு வாக்கியங்கள் பேசக் கற்றுக் கொடுத்தார்கள். தமிழ் அல்லது ஆங்கிலம் மூலமாகக் கற்றுத் தரும்படி ஒரு சிலர் வேண்டுகோள் விடுத்தனர். ஃபிரெஞ்ச, ஜெர்மன் எல்லாம் அப்படியா கற்றுத்தருகிறார்கள் என்று அந்த மொழிகளில் புலமை மிகப்பெற்றவன் போலப் பேசினேன்.  இடையில் நண்பன் ஒருவன் கரதூரவாணியில் (அப்படின்னா செல்ஃபோன்.... சம்ஸ்க்ருதம் படிக்கிறம்ல!!) அழைத்து,"தல! மேட்டர் தெரியுமா? சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ!" என்றான். புரியவில்லை. அவனும் விடவில்லை. சத்தியமாகப் புரியவில்லை என்றதும் "அரியர் எழுதித் தேறி டிகிரி வாங்கிட்டம்ல" என்றான். வாழ்த்திவிட்டு வந்து அமர்ந்தேன்.

சிறு கதைகள், எண்கள் கொண்டு விளையாட்டு, சிறு நாடகம், என்று சம்ஸ்க்ருதத்திலேயே செய்தார்கள். இப்போது புரிதலில் கொஞ்சம் முன்னேற்றம். சட்டப் புத்தகம் போல overallஆகப் புரிந்தது, வார்த்தைக்கு வார்த்தை புரியவில்லை. ஆனால் வேர் விட்டிருந்த நம்பிக்கை கிளைத்து வளர்ந்திருந்தது. வகுப்பு முடிந்து விடை பெற்று வந்து நண்பர் சாரங்கனுக்கு நன்றி நவின்றேன்.


யாவருக்கும் பயன் தரும் இந்த வகுப்புகள் வேளச்சேரி பேபி நகரில் உள்ள ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில் நடக்கின்றன. மதியம் 2 மணியில் இருந்து மாலை 7 மணி வரை. சற்றே தூக்கத்தைத் துறந்துவிட்டு வந்தால் (அவ்வப்போது தூங்கினாலும்) ஒரு மொழியின் அடிப்படையைக் கற்கலாம். தொடர்புக்கு: திரு.ராஜாராமன். கரதூரவாணி (செல்பேசி) எண்: +919940155040

8 comments:

எல் கே said...

நண்பரே ஞாயிறு மட்டும் வகுப்புகள் உண்டா ?? சனிக்கிழமை எனக்கு அலுவலகம் உண்டா ?

Arun Ambie said...
This comment has been removed by the author.
ராம்ஜி_யாஹூ said...

pls remove radio gadeget, irritating ,
one cant reac aadhi sankara and listen en mela aasai thaan song

Arun Ambie said...

சனி-ஞாயிறு பயிற்சி வகுப்புகள் உண்டு. முதலில் 4 நாட்களுக்கு நடக்கும் 20 மணிநேரப் பயிற்சியில் மொழியைப் பரிச்சயப் படுத்துகிறார்கள். சம்ஸ்க்ருதத்துடன் ஏற்கனவே பரிச்சயம் இருப்போர்க்கும் இந்த அறிமுகப் பயிற்சி தேவை என்றே எண்ணுகிறேன். தெரிந்தாலும் தயக்கமின்றிப் பேசுவதற்கு இந்தப் பயிற்சி பயன் மிக்கது.

இதைத் தொடர்ந்து ஃபிப்ரவரி 27லிருந்து ஞாயிறு மட்டும் 2 மணி நேரங்கள் வகுப்பு நடத்துகிறார்கள். 6 மாதப் பயிற்சி. 300 ரூபாய் கட்டணம். சம்ச்க்ருத பாரதியிலிருந்து சான்றிதழ் தருகிறார்கள். நிற்க.

சனிக்கிழமை உங்களுக்கு அலுவலகம் உண்டா என்பது எனக்கு எப்படித் தெரியும்?

Arun Ambie said...

//ராம்ஜி_யாஹூ said...

pls remove radio gadeget, irritating ,
one cant reac aadhi sankara and listen en mela aasai thaan song//

Stop it, as you feel irritated, by clicking on the button buddy! I love the radio gadget, though!
BTW, thanks for your visit, support and comments.

எல் கே said...

//சனிக்கிழமை உங்களுக்கு அலுவலகம் உண்டா என்பது எனக்கு எப்படித் தெரியும்?//

ஹஹஹா அப்படி சொல்லவில்லை. ஞாயிறு மட்டும் வகுப்புகள் நடக்கும் இடம் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும். அவ்வளவே :) அப்படி இருந்தால் மூன்று மாணவர்கள் சேருவார்கள் :)

Arun Ambie said...

தட்டு பிழை அது என்று அறிவேன். சும்மா கலாய்த்தேன். ஞாயிறு வகுப்புகள் பிப்ரவரி 27லிருந்து துவங்குகின்றன.

Arun Ambie said...

chennaisamskritam@gmail.com
இந்த முகவரிக்கு எழுதினால் மேலதிக விவரம் கிடைக்கும்.