ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 6 February 2011

பாராளுமன்றத்தின் எதிரே தீக்குளிப்பு

மேஜர்.சந்தீப் உன்னிகிருஷ்ணனின் சித்தப்பா தீக்குளித்து இறந்துவிட்டார். இது பெரும்பாலான ஊடகங்கள் உரக்கச் சொல்லாத செய்தி. ஏனென்றால் இதைவிடச் 'சூடான' செய்திகள் அவர்களுக்கு இருந்தன. 3 இடியட்ஸில் விஜய், மலேசியாவில் சினிமா கலைஞர்களின் அட்டகாசம், திரைப்படக் குழுவினர் பேட்டி, பாட்டுக் கச்சேரிகள் மற்றும் இன்னபிற களியாட்டங்களுக்கு மத்தியில் இதற்கு நேரமும் பார்வையாளர்களும் இல்லை. தகவலுக்காக: மேஜர்.சந்தீப் உன்னிகிருஷ்ணன் மும்பை 26/11 தாகுதலில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்ட கமாண்டோ!

மும்பை தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் வெறுத்துப் போகுமளவு அவர்களை நோகடித்திருக்கிறது காங்கிரஸ் அரசு. கர்கரேவைக் கொன்றது கசாப் கும்பல் அல்ல வேறு யார் என்ற கேள்வியை எழுப்பி கர்கரேயின் மனைவியை நோகடித்தார் திக்விஜய் சிங். பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்களா என்று அவர் கேட்டபின் சால்ஜாப்புகளை அள்ளிவிட்டார்.

சில நாட்களாகவே கசாப்பை தூக்கில் போடுங்கள் என்று மும்பை நகரமே முழங்குகிறது. ஆனால் அரசோ முன்னிருப்போரை முந்தாமல் வரிசை கட்டி வரவேண்டும் என்று சொல்லி அதுவரை அவனை 'பாதுகாப்பாக' வைத்துள்ளது. அதுவரை என்பது எதுவரை என்று time limit தெரியவில்லை. இப்போது மும்பை தாக்குதலைப் பாகிஸ்தான் செய்யவில்லையோ எனத் தோன்றும் அளவுக்கு திக்விஜய் சிங் பேசுகிறார். டேவிட் ஹெட்லியிலிருந்து பலரும் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் தந்த  செயல் இவருக்கு மட்டும் வேறு மாதிரி தெரிகிறது.



இராணுவ வீரர்களின் பெயரைச் சொல்லி கொள்ளையடித்த ஆதர்ஷ் ஊழலில் பல தகிடுதத்தங்கள் இன்னும் வெளிவரவில்லை. சில முக்கியமான ஆவணங்கள் விசாரணை அறிவித்தபின் காணாமல் போயின. இராணுவத் தலைவர் வருத்தத்துடன் எங்களது நற்பெயர் களங்கப்பட்டுவிட்டது என்று தலைகுனிந்து கொண்ட அவலமும் நடந்தது. இதிலெல்லாம் பாதிக்கப்பட்ட இராணுவக் குடும்பத்தினர் பலர். மேஜ்ர். சந்தீப் விஷயத்தில் ஆரம்பம் முதலே அவமானங்களையும் சிறுமைப்படுத்தல்களையும் சந்தித்து வந்தனர் அவரது குடுமப்த்தினர்.


கேரள சட்டமன்றத் தேர்தலில் பலமுறை தோற்ற பின் 'பாதுகாப்பான தொகுதியில்' கவனமாக நின்று வென்று முதல்வரான மார்க்சீய சிங்கம் வி.எஸ்.அச்சுதானந்தன் சந்தீப் இறந்த இரு தினங்களுக்குள் அவரது வீட்டுக்குப் போய் மகனை இழந்த துக்கத்திலிருந்த சந்தீப்பின் தந்தை தனக்கு மரியாதை தரவில்லை என்று கொதித்து "சந்தீப் மட்டும் இல்லையென்றால் தெருநாய் கூட இந்த வீட்டு வாசலுக்கு வராது" என்று சந்தீப் இல்லை என்றான பிறகு சொல்லி கேவலத்தின் உருவமானார்.

இதிலெல்லாம் மனமுடைந்த மேஜர்.சந்தீப்பின் சித்தப்பா மோகனன் சில மாதங்களாகவே விரக்தியாக இருந்தார். பாராளுமன்றத்தின் எதிரே நேற்று தீக்குளித்தார். பாராளுமன்றத்தின் அருகே காவலுக்கிருந்த போலீசார் மெத்தனமாக இருந்தனர் என்பதும் அவர்கள் சற்றே முனைந்திருந்தால் மோகனனைக் காப்பாற்றி இருக்க முடியும் என்பதும் நேரில் பார்த்தோர் கூறும் கருத்து.


இறப்பதற்கு முன் மேஜர்.சந்தீப்பின் சித்தப்பா டாக்டர்களிடம்  கூறுகையில்,"மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இவர்களின் மீதும், இவர்கள் குடும்பத்தினர் மீதும் அரசு அக்கறை காட்டவில்லை. இது என்னை மிகவும் பாதித்தது. மேலும், சந்தீப்பின் மறைவும் என்னை மிகவும் பாதித்தது. இதனால் தான் தீக்குளித்தேன் " என்றார்.

வாயில் வருவதெல்லாம் வார்த்தை; பின்னால் வருவதெல்லாம் பொருக்கு என்று ஊர்நாட்டில் சொல்வர்கள். அப்படி வாய் கிழியும் திக்விஜய் சிங், அச்சுதானந்தன் போன்றோரின் அரசியல் லாபப் பேச்சுதான் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் உள்ளிட்ட இராணுவக் குடும்பத்தினர் நிம்மதி இழக்கவும் தற்கொலை செய்யவும் காரணமாகிறது. பாதாளச் சாக்கடைத்திட்டம் என்றால் இப்படிப் பேசுவதல்ல என்று யாராவது அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்யலாம்.

மீனவன் செத்தாலும், கலெக்டர் செத்தாலும், ராணுவ வீரர்களின் உறவினர்கள் செத்தாலும் கவலைப்பட யாருமில்லை, நம் போன்ற பொதுமக்களைத் தவிர. மனசாட்சியுள்ள ஒரே எந்திரம் ஓட்டுப் போடும் எந்திரம் தானே! மன்மோகன் சிங்... இந்தியாவின் பிரதமர் என்று சொன்னால் பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண் கிடைக்கும். வேறு பயனில்லை அவரால்.

பாஜக ஒன்று செய்யலாம். இரண்டு குழுக்க்ளாக பிரித்துக்கொண்டு JPC போன்ற அரசியல் பிரச்சினைகளை ஒரு குழுவும், இதுபோன்ற ஜீவாதாரப் பிரச்சினைகளை ஒரு குழுவும் எடுத்துக் கொண்டு அதிக கவனம் செலுத்தலாம். ஓரளவு நல்ல பெயர் கிடைக்கும், அடுத்த தேர்தலில் அதிகமாக ஓட்டுகள் கிடைலாம்.

மீனவன் செத்தால் என்ன? போர்வீரன் மாண்டால் என்ன? பெட்டிகள் எத்தனை வந்தன என்று பார்த்து அவற்றைப் பிள்ளைகள் அடித்துக்கொள்ளாமல் அடித்துக்கொண்டு போக வழி செய்வதே நெஞ்சுக்கு நீதி என்று ஆட்சிப்பணி செய்வோரும், ஆங்கிலேயன் விட்டுவைத்த மிச்சத்தை வழித்து நக்க வழிதேடும் நீரோ சிந்தி வைத்த எச்சங்களும் இங்கே கோலோச்சும் வரை சூரியன் மணிக்கொரு முறை உதித்தாலும் நாட்டுக்கு விடியாது.


யாரையும் தொந்தரவு செய்யாமால் உழைக்கும் மக்களையும் நாட்டுக்காக உயிருக்குத் துணிந்து நிற்கும் போர் வீரர்களையும் மதிக்காத சமுதாயம் உருப்பட்டதாக உலகத்தில் இதுவரை வரலாறு இல்லை. இது போன்றோரின் மரணத்தில் அரசியல் செய்து வாய்க்கரிசி வாங்கியதில் கூட ஊழல் நடத்தும் நம் ஆட்சியாளர்கள் என்ன கதிக்கு ஆளாவார்களோ தெரியவில்லை. 


நிற்க. சென்னையில் இப்போதே ஓட்டுக்கு 5000 ரூபாய் என்று offer தருகிறார்களாம். சினிமா பார்த்துக் கெட்டுப்போன நம் மக்கள் "டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும், நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்" என்று குத்தாட்டம் ஆடிக் கொண்டே போய் ஓட்டுக் குத்தினாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். This too will pass off! நம்பிக்கை தானே வாழ்க்கை!!

1 comment:

Arun Ambie said...

அருள்! பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பின்னூட்டமாக எழுதி உங்கள் ப்ளாகைப் பிரபலப்படுத்த எண்ணுகிறீர்கள் போலும்! எனக்கும் பின்னூட்ட எண்ணிக்கை கிடைக்கிறது. வாழ்க.