ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday 22 February 2011

வேலையற்றோர் தொழில் தொடங்க அரசு பணம்!!

இன்று காலை மின்னஞ்சலைத் திறந்ததும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தேர்தலுக்காக இப்படியெல்லாம் ஆரம்பித்து விட்டார்களா என்று எண்ணிவிட்டேன். 176000 கோடியை இப்படி பிரித்துக் கொடுத்து ஓட்டு வாங்குகிறார்களோ? மாட்டார்களே என்றும் தோன்றியது.
விற்ற கற்றையில் குற்றமில்லை என்று
இற்றைப் பட்டுத் தெளிவது எக்காலம்?

என்று பத்ரிகிரியார் பதிவு பதிவாய்ச் சர்ச்சைச் சதகம் பாடிப் புத்தகம் பல விற்றாலும் 2Gல் அரசுக்கு  நட்டமில்லை என்பது நாக்பூர் வரை போய்க் கைதட்டிவிட்டு வந்து "இளைஞன் பட வசனகர்த்தா யாரோ கருணாநிதியாமே! புதுமுகமா?" என்று கேட்பது போலத்தான் இருக்கிறது.

வந்த மின்னஞ்சலைப் படித்துப் பார்த்தால் விவரம் சிரிக்க வைத்தது. இதுவே அந்த விவரம்.

இந்தியாவில் வேலை தேடுவோரில் சிலரைத் தேர்ந்தெடுத்து சொந்தத் தொழில் தொடங்க 85 லட்சம் தர இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். அந்த அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராம். நீங்கள் வேலைவாய்ப்பு வலைத்தளங்களில் பதிவு செய்து வைத்திருந்ததன் அடிப்படையில் தேர்வு செய்து இந்தப் பணம் வழங்கப் படுகிறதாம். இந்தத் திட்டம் இந்திய வேலை அமைச்சகத்தின் (INDIA MINISTRY OF WORK) மூலம் நடத்தப்படுகிறதாம்.

இந்திய அரசிடமிருந்து ரூபாய் எண்பத்தைந்து இலட்சத்துக்கு கையொப்பமிட்ட காசோலை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுமாம். இந்தப் பணம் கொண்டு நீங்கள் தொழில் நிறுவனமோ அல்லது தொழிற்சாலையோ தொடங்கலாமாம். இந்தப் பணத்தை நீங்கள் பொறுப்பாக பயன்படுத்தி வேலையற்ற பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமாம்.

நீங்கள் இந்திய ரிசர்வ் வங்கியை மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டு
 1. பயனாளரின் மின்னஞ்சல் முகவரி
 2. பயனாளரின் வீட்டு முழு விலாசம்.
 3. பயனாளரின் தொலைபேசி எண்.
 4. பயனாளரின் வங்கிக் கணக்கு விவரங்கள்
 5. பயனாளரின் வயது.
 6. பயனாளரின் சமீபத்திய கடவுச் சீட்டு/PAN எண்.
இவற்றுடன் INDIAGOVT32468846 இந்த எண்ணையும் கொடுத்து தொடர்பு கொள்வது நீங்கள் தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டுமாம். ரிசர்வ் வங்கியைத் தொடர்பு கொண்டு அஜய் பாட்டியா என்ற பட்டுவாடாப் பிரிவு தலைமைப் பொது மேலாளரை அணுக வேண்டுமாம். அவரது மின்னஞ்சல் முகவரி rbi.compensation@hotmail.com என்பதாம்.

மேற்கூறிய விவரங்களுடன் மேற்கூறிய மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பினால் ரூபாய் 85 லட்சம் உங்களுக்கு வந்து சேருமாம். நீங்கள் வேலையற்றோருக்கு வேலையளித்து அரசாங்கம் உங்கள் மேல் கொண்ட நம்பிக்கையை மெய்ப்பிக்க வேண்டுமாம்.

சற்றே உட்கார்ந்து படித்து, practicalஆக யோசித்தால் தெளிவாவது:
 • இந்த மின்னஞ்சலில் இருக்கும் ஆங்கில மொழி நடை மைய, மாநில அரசு எந்திரங்களின் மொழி நடை அல்ல. 
 • அரசு இப்படி ஒரு வழியில் வேலை வாய்ப்பை உருவாக்குவதாக எந்த அறிவிப்பும் இதுவரை எங்கும் செய்யவில்லை.
 • அப்படியே அரசு செய்தாலும் திட்டம் சம்பந்தப்பட்ட பணம் இப்படி மின்னஞ்சல் மூலம் பட்டுவாடா ஆகாது. போக வேண்டிய வழிகளில் போக வேண்டிய இடங்களுக்குப் போய் விடும்!
 • அரசிடம் உபரி பணம் இருந்தால் முதலில் சுருட்டிவிட்டு எஞ்சியது கொண்டு ரோடு போடுவது, தண்ணீர் வசதி முதலிய அடிப்படை விஷயங்களைச் செய்வார்கள். பிரித்துப் பட்டுவாரா செய்ய மாட்டார்கள்.
 • ரிசர்வ் வங்கியின் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும் rbi.org என்று தான் முடியும். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வங்கியின் பெயரில் hotmailல் மின்னஞ்சல் வைத்துக் கொள்ளமாட்டார்கள்/முடியாது.
 • India Ministry of Work என்று ஒரு இலாகாவே இந்திய மைய அரசில் இல்லை.
ஆகவே இந்த மின்னஞ்சல் நாமெல்லாம் முட்டாள்கள் என்று இன்னும் நம்பி அனுப்பும் ஒரு மோசக்காரனின் சதி. தேர்தலுக்குத் தேர்தல் மாநிலத்தில் ஏதாவது ஒரு கழகத்தையும் மையத்தில் காங்கிரசையும் தேர்ந்தெடுப்பதால் நம்மையெல்லாம் இப்படி வடிகட்டிய முட்டாள்கள் என்றா எண்ணுவது? தென்னாடுடைய சிவனே! சொக்கா!! நீர் தான் காப்பாற்ற வேண்டுமய்யா!!!

9 comments:

ராம்ஜி_யாஹூ said...

Pls read writer Payon's letter to the Nigeria Billionaire investor's mail

Arun Ambie said...

I've read that. This is my experience. I've also received an email from someone claiming to be wife of Ramalinga Raju's brother, offering 10% in a potential transaction involving some hundreds of crores!!!

அருள் said...

டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html

Arun Ambie said...
This comment has been removed by the author.
Arun Ambie said...

பதிவின் கருப்பொருளுக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு பின்னூட்டம். அருளின் வழமையான செயல். எண்ணிக்கைக்கு ஆகிறது. அப்படியே ஓட்டும் போடுங்கள் அருள்!!

hayyram said...

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 மெயில்கள் நம்மை கோடீஸ்வரனாக்க வருகின்றன. பரிசு வேண்டுமென்றால் இமெயிலில் விபரங்கள் அனுப்ப வேண்டுமாம்! அவற்றில் இது ஒரு வகை போலிருக்கிறது! மக்கள்விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது!

Arun Ambie said...

இது தவிர மொபைலில் வேறு குறுந்தகவல்கள் வருகின்றன. உங்களது ராசியான மொபைல். பரிசு விழுந்திருக்கிறது கூப்பிடு தருகிறோம் என்று. ஒருவர் பதின்மூன்று லட்சம் ஏமாந்த கதை டிவியில் வந்ததே!!

kavirimainthan said...

நண்பர் அருண் பிரபு,

பயனுள்ள விஷயங்களை
எழுதுகிறீர்கள்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

மொபைல் தொல்லைகள்
இவை மட்டுமா ?

அழகிய பெண்களின் சகவாசம் வேண்டுமா ?
நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்
வேண்டுமா ?
என்றெல்லாம் கேட்டு கூட
மொபைலில் எஸ் எம் எஸ்
வருகிறது.

ஒரு முறை காவல் துறைக்கு
தகவல் கூட கொடுத்தேன்.

ஒரு பயனும் இல்லை.

நடவடிக்கை எடுக்கிறார்களாம் !
காத்திருப்போம்.

-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்

Arun Ambie said...

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி காவிரிமைந்தன் அவர்களே. நம் காவல் துறை சினிமா பார்த்து கேட்டுப் போன மக்களைக் கொண்டது. எல்லாம் போன பிறகு வந்து அறிவிரை சொல்வது தவிர வேறெதுவும் செய்யமாட்டார்கள். நைஜீரிய கும்பலிடம் பதின்மஊன்று லட்சம் இழந்தவருக்கு இன்னமும் அறிவுரை தவிர வேறெதுவும் தரவில்லை அவர்கள்.