சமீபத்தில் ராஜபாளையம் சென்றிருந்தேன். 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை திடீரென்று எங்கள் வீட்டு வேலைக்காரி மதியம் 12 மணிக்கு வந்து "அம்மா, ரேசன் கடையில் டிவிக்கு டோக்கன் தாராகளாம்" என்றார். என் தந்தை கிளம்பிப் போனார். 15 நிமிடங்களில் திரும்பி வந்தார்.
"என்னப்பா! டிவி டோக்கன் வாங்கியாச்சா?"
"அடப்போடா! ஒரு மாசம் முன்னாடி பதிஞ்சாத் தான் இப்ப டோக்கனாம். நமக்கு இனிமேத்தான் பதியணும்."
"மார்ச்ல எலக்ஷன் தேதி சொல்லிடுவான். அதுக்குள்ள எல்லா ஓசி ஐட்டமும் வரணும். இல்லேன்னா எலக்ஷன் முடிஞ்சுதான் பாக்கணும்."
"இப்படி ஒரு கொக்கி இருக்கும் போது கலைஞர் சும்மா இருப்பாரா. அரசாங்க எந்திரம் கனஜோரா மனோவேகத்துல வேலை செய்யும் பாரு!"
"எப்போ பதியணுமாம்?"
"அதுக்கு ஒரு நாள் பாத்து சொல்லுவானாம். அந்தக் கவுன்சிலர் நம்ம பய. காங்கிரஸ் அழகர் பேரன். ஆனா DMKல இருக்கான். நீங்க எதுக்கு அலஞ்சுக்கிட்டு. வீட்டுக்கு போங்க! குடுக்கும் போது சொல்றேன்னுட்டான்."
அன்று மாலை கவுன்சிலர் எங்கள் வீட்டருகே இருக்கும் கோவிலுக்கு வந்தார். தனக்கும் தன் குடும்பத்துக்கும் எல்லாம் சிறக்க அர்ச்சனை செய்து கொண்டார். வெளியே வந்தவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தார்.
"ஏ அம்பி! எப்ப வந்தே!"
"காலைல வந்தேன். சௌக்கியமா இருக்கீங்களா?"
"நல்ல சௌக்கியந்தான். ஆப்பரேசன் எப்ப?"
"மத்யானமே முடிஞ்சு போச்சு! சாயங்காலம் அம்மா வீட்டுக்கு வந்தாச்சு"
"இதென்னப்பா! ஒரு ரெண்டு நா அங்கனயே வெச்சு பாத்தா என்ன?"
"டாக்டர் போலாம்னு சொல்லிட்டாருண்ணே!"
வந்து அம்மாவைப் பார்த்து நலம் விசாரித்தார். "பத்திரமா பாத்துகிடுங்க" என்று சொன்னார். அவர் மனைவி எங்கள் வீட்டு வேலைக்காரிக்கு உத்தரவு போட்டார் "இங்கீருடீ! புஸ்பாம்மா பாத்துகிரும், புள்ளாண்டன் பாத்துகிரும்னு, அங்கன இங்கன சுத்திகிட்ருக்காத! ஒரு லோட்டா கூட அவுக கழுவக்கூடாது. நீ தேன் செய்யணும். புரியுதா?"
"ஏண்ணே! டிவி குடுக்கறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுதே?"
"குடுக்கறம்லய்யா! அதென்ன பேச்சு அடிபடுது, புடிபடுது? ஒங்களுக்கு அடுத்த மாசம் வந்துரும்!"
"கேபிள், DTH இதெல்லாம்?"
"அம்பி! வேணாம், விட்ரு. குடுக்கறத வாங்கிக்கய்யா! ஏன் நோண்டிகிட்டு!"
"அதுக்கில்லண்ணே! பாதி டிவி பத்து நாளக்கி மேல தெரியமாட்டேங்குதாமே?"
"தேர்தல் வரைக்கும் தெரிஞ்சா போறாதோ?" (இது என் தந்தையார்)
"சாமி! நான் கிளம்பறேன். அம்மாவ பாத்துகிடுங்க! அம்பி வாரேன்!"
"இவுக பேச்செல்லாம் மேடையோட சரி!"
"நீங்க சொன்னா சரித்தாண்ணி!"
24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை. மைக் செட் கட்டிய ஆட்டோக்கள் ஊரை வலம் வந்தன. Noise Pollution வானம் தாண்டிப் பால்வெளியில் கொடி நாட்டியிருக்கும். அன்று மாலை 5 மணிக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வந்து அனைவருக்கும் டிவி தருகிறார் என்று கூவிக்கூவிக் கூப்பிட்டார்கள்.
மாலை 4 மணிக்கே எங்கள் வீட்டு வேலைக்காரி வந்து வாசல் தெளித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, 7 மணிக்கு வந்து பாத்திரம் தேய்க்கிறேன் என்று சொல்லிவிட்டு 4.20க்கு விழா நடக்குமிடம் (முனிசிபல் பள்ளிக்கூடம்) நோக்கி ஓடினார்.
அமைச்சர் வருகிறார், வருகிறார் என்று 7 மணி வரை அறிவித்த படி இருந்தனர். 7.25 மணிக்கு அமைச்சர் விருந்தினர் விடுதிக்கு வந்துவிட்டார் என்றனர். விழா துவங்கியது. ஜெயலைதா முதல் அத்வானி வரை, தா.பாண்டியன் முதல் ப்ரகாஷ் கராத் வரை அனைவரின் சாதியையும் ஒருவர் மாற்றி ஓருவர் மேடையில் அலசினர். 8.20க்கு அமைச்சர் வந்தார்.
கலைஞர், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்று கட்சி முக்கியஸ்தர்களின் புகழ் பாடினார்.
டிவியில் சாலமன் பாப்பையா, லியோனி ஆகியோர் பேசி தமிழை வளர்க்க அரும்பாடு படுவதை மிகவும் பாராட்டினார். 8.50க்கு டிவி வழங்கத் துவங்கினார். 5 பேருக்கு மட்டுமே கொடுத்தார். மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு முன் கட்சிப்பணிகள் அழைத்ததால் விடை பெற்றார்.
அடுத்த மேடைக்கு (மசூதித் தெருவில்) வந்தார். கலைஞர், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்று கட்சி முக்கியஸ்தர்களின் புகழ் பாடினார். சிறுபான்மையினர் நலம் நாடுவதைக் குறித்துக் குறித்துப் பேசினார். 9.20க்கு ஆரம்பித்து 5 பேருக்கு டிவி கொடுத்தார். மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு முன் முக்கிய அலுவல் இருப்பதால் விடை பெற்றார்.
வேலைக்காரி இரவு 9.15 மணிக்கு வந்து காலையில் பாத்திரம் தேய்ப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார். அவருக்கு ஐந்திலே ஒருவராகி, ஐந்திலே ஒன்று பெறும் பாக்கியம் கிட்டவில்லை, பாவம்! அவர் எந்தக் கட்சியிலும் இல்லாத பொதுஜனத்தில் ஒருவர்.
திடீரென்று இரு மேடைகளிலும் ஒரு அறிவிப்பு. இதற்கு மேல் யாருக்கும் டிவி கிடையாது. மறுநாள் காலை அவரவர் ரேஷன் கடைகளில் 9 மணிக்கு வந்து பெற்றுக்கொள்ளவும் என்று அறிவித்தனர்.காதில் விழுந்த சில பேச்சுக்கள்.
"இம்புட்டு நேரம் ஒக்காந்திருந்தவன்லாம் கிறுக்கனாய்யா?"
"வச்சுக்க! கலைஞர் காப்பீட்டுல வைத்தியம் பாத்துக்க!
"நாளயாச்சும் தருவாகளா?"
"போயிப் பாப்போம்!"
"டிவி 10 நாள்ல போயிருதாம்ல?"
"பொட்டி இருக்கும்ல. காகறி வாங்கி வச்சுக்க அதுல!"
"ஒரே நாள்ல நாறிறாது?"
"மூக்கப் பொத்திக்கிட்டு போடா லேய். அடுத்த தேருதல் செயிச்சாவுல்ல பிரிட்ஜு குட்ப்பாக! அதுக்குத்தான இம்புட்டும்!"
"ஆமாண்ணாச்சி! அந்தம்மா வந்துட்டா இத்தெல்லாம் குடுக்காதுல்ல!"
"லேய்! இதுலயே எம்புட்ட உங்காளுக களவாண்டீயன்னு கணக்கு பாத்தா தெரியும் போடா! 150 ரேசன் கார்டுக்கு 5 டிவி வந்துருக்கு. பாக்கிய என்னக்கித் தருவாகளோ?"
விசாரித்ததில் கிடைத்த புள்ளிவிவரம்.
இராஜபாளையம் நகரத்தின் மக்கள் தொகை சற்றொப்ப 200000. ரேஷன் கார்டுகள் சற்றொப்ப 50000. ஆனால் வந்த டிவிக்கள் 37000 மட்டுமே. அரசாங்கச் சலுகை சரக்கு தீரும் வரை மட்டும் தானா என்பது விவாதத்துக்குரிய விஷயம். கணக்குப்படி மீதமிருக்கும் 13000 ரேஷன் கார்டுகளுக்கு நாமம் என்று சொன்னால் அது தவறு. பகுத்தறிவாளர் போடுவதால் அதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நண்பரே ஒரு சம்பவத்தை எப்படி விபரிப்பது என்பதை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது! அருமையாக விபரித்து எழுதியுள்ளீர்கள்!
இன்னொரு விஷயம் சொல்கிறேன் கோபித்துக் கொள்ளாதீர்கள்! நான் இனிமேல் உங்களுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்! இன்டிலியில் உங்களுடைய அத்தனை பதிவுகளுக்கும் நான் ஓட்டுப் போட்டுள்ளேன்! ஆனால் நீங்கள்தான் பதிலுக்கு ஓட்டே போடமாட்டேன் என்கிறீர்கள்! எதையுமே பகிர்ந்து கொள்வதால் மட்டுமே உறவுகள் வளரும்!
பாராட்டுக்கு நன்றி நண்பரே! மிகவும் மகிழ்ச்சி தருகிறது உங்கள் பாராட்டுச் சொற்கள். நிற்க.
தேர்தல் பிசியில் ஓட்டுப் போட விட்டுப் போச்சு. அதற்காக இப்படி 49ஓ முடிவு வேண்டாம். தயவுசெய்து மறு பரிசீலனை செய்யவும். (வாந்தி பேதி மாத்திரைக்கு ஏன் இப்படி அழகான பெண் படம் போடுகிறீர்கள்?)
நன்றி நண்பா! தொடரட்டும் எமது நட்பு! நன்றி!!
Post a Comment