ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 13 May 2017

வாழ்க்கை வாழ்வதறகே!

+2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபித்துவிட்டது. இங்கே தொண்ணூறு தொட்டவன் அங்கே திணறி நிற்கிறான். நீட் பற்றி நிறையப்பேர் நிறையச் சொல்லிவிட்டார்கள். ஆகவே அது பற்றி நான் ஏதும் பேசப் போவதில்லை.

கல்வித்திட்டம், பாடங்கள் கற்றுத்தரப்படும் விதம் இவற்றில் குறைகள் எண்ணிலடங்காது இருந்தாலும் இங்கே அடுத்த கட்ட நகர்வுக்கு குறைந்த பட்சத் தேர்ச்சி ஒரு அச்சாரம் என்பதை மனதில் கொள்ளுங்கள். தேர்ச்சி தேவை. முதல் முயற்சியில் வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் மேலும் சற்றே முயன்று பெற்றுவிடலாம். கம்பசூத்திரம் இல்லை நம் பாடத்திட்டம்.



ரேங்க் இல்லை என்றாலும் மார்க் என்ற எண் கொண்டு உங்களைப் பந்தயக் குதிரையாக நடத்தும் மனோபாவத்தை இந்தச் சமுதாயத்தில் உள்ளவர்கள் விடமாட்டார்கள். நீ எப்படியாவது 95 மார்க் எடுத்தே ஆகவேண்டும் என்று யார் பேசினாலும் அவர்கள் எந்த வகையிலும் நம் முன்னேற்றத்துக்கு உதவ லாயக்கற்றவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.  இவர்களைப் புறந்தள்ளுவதே முன்செல்லும் வழி. இவர்களிடம் பேசினால் கூட தன்னம்பிக்கை முழுதும் போய்விடவே வாய்ப்பு அதிகம்.

(10ஆவதிலும, +2விலும், பட்டப்படிப்புகளிலும் 95,98 என்று மதிப்பெண் பெற்றவர்கள் 70% பெற்று average என்று ஏளனப் பார்வை பார்க்கப்பட்ட என்னுடன் ஒரே கம்பெனியில் ஒரே பணியைச் செய்கிறார்கள். ஊதியமும் வித்தியாசம் ஏதுமில்லை.)

உங்கள் மீது அக்கறை கொண்ட, கல்வி பற்றிய விவரங்கள் புரிந்தவர்களிடம் பேசுங்கள். எதிர்காலம் ஐடி துறை என்று யாராவது சொன்னால் நான் என் பெற்றோர் திட்டினாலும் பரவாயில்லை என்று செருப்பைக் கழற்றுவேன். உங்கள் வசதிப்படி இந்த மாதிரி செம்மறி ஆடுகளைக் கையாளுங்கள். ஐடி சகாப்தம் முடிந்து போய் மாமாங்கம் நெருங்குகிறது. ஜாக்கிரதை!

We don't have employable engineers among the huge population of engineering graduates  என்று IIT Deanகள் உள்ளிட்ட பல கல்வியாளர்களும், தொழில்துறைத் தலைவர்களும் முகத்தில் அறைவது கிட்டத்தட்ட 2010ல் இருந்து நடக்கிறது.  ஆனாலும் நம் கல்வித்துறை மாற்றங்கள் இப்போது தான் பிள்ளையார் சுழிக்குப் பேனா திறந்த நிலையில் உள்ளன.

நிற்க!

பொறியியல் ஆர்வம் இருப்போருக்கு Civil engineeringஐ முதல் தேர்வாக இருக்கட்டும். Mechanical engineeringல் தொய்வின்றிப் பணிகள் கிட்டும் என்று விவரம் அறிந்தோர் சொல்கிறார்கள். Electronics, communication அல்லது IT என்றால் networking, cyber security போன்ற துறைகளில் அப்பழுக்கற்ற நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரே மாதத்தில் உன்னை SAP, JAVA இன்னபிற மென்பொருள் நுட்பங்களில் நிபுணன் ஆக்குவேன் என்ற வாக்குறுதிகளைத் தரும் நோட்டீசுகள் கடும் தண்ணீர்ப் பஞ்ச காலங்களில் துடைத்துக் கொள்ள உதவும்.

B.Sc Mathematics என்னைப் பொறுத்தவரை என்றும் அழிவற்றது. M.Sc இன்னும் நல்லது. கணிதத்தில் நிபுணர்கள் எங்கும் வரவேற்கப்படுவார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற B.Sc பட்டங்கள் நீங்கள் வளரத்துக் கொள்ளும் திறமைக்கேற்ப எதிர்கால வளர்ச்சிக்கு முதல்படி.

B.Com உள்ளிட்ட கலைக்கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் மொழி, பொருளாதார, வரலாற்றுப் பட்டப்படிப்புகளும் இதே விதம்தான். நீங்கள் வளரத்துக் கொள்ளும் திறமைக்கேற்ப எதிர்கால வளர்ச்சிக்கு இந்த Bachelor's degreeக்கள் முதல்படி.

எதுவானாலும் மாறிவரும் சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளவும், நம்மை update செய்து கொள்ளவும் தயாராக இருப்பதே நல்வாழ்வுக்கு வழி. "அந்தக்கலத்து SSLC... எனக்கென்ன கொறை வந்துச்சு?" என்ற கேள்வி முடக்கத்தின் தொடக்கம். அவர்களுக்குப் புரிய வைப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். நாம் நகர்வது முக்கியம். நின்று பேசினால் சிலர் நம்மைத் தேக்கிவிடும் அபாயமும் உண்டு.

நிற்க!

சமூக சேவை என்று ஒரு குழு கிளம்புவார்கள். நல்லது. ஆனால் எச்சரிக்கை அவசியம். நிஜமாகவே தொண்டு செய்யும் அமைப்புகளில் சேர்த்து கொள்ளலாம்.  விடுமுறை நாட்களில் மட்டும் போய்வரலாம். சமூக சேவையை முழு நேரம் செய்தால் நம் எதிர்காலம் அதிலேயே போய்விடும். படித்து, வேலைக்குப் போய்த் தன்னையும், சார்ந்த உறவுகளையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருப்பவர்களுக்கு சமூக சேவை முழுநேர வேலையாவது வேலைக்காகாது.

உங்கள் பாட்டனார் கோடிகளில் சொத்து வைத்திருந்தாலும் பாகப் பிரிவினைகள் போக உங்கள் தகப்பனாருக்கே சில, பல லட்சங்கள்தான் தேறியிருக்கும். ஆகவே இந்தப் பழம்பெருமை பீற்றும் பழக்கமிருந்தால் விட்டுவடுங்கள். அந்தப் பழக்கத்தை விடாதவர்களையும் விட்டுவிடுங்கள். பழம்பெருமை முன்னேற்றத்துக்கு முதல் எதிரி.

மொழி மிக முக்கியம். தொழில்நுட்பம் நன்றாகத் தெரிந்திருத்தும் தெரிந்ததை மற்றவர்க்குப் புரியும்படி சொல்லத் தெரியாமல் அதனால் வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர். எந்த மொழி படித்தாலும் தெளிவாகப் படித்துக் கொள்வது மிக முக்கியம். தடையின்றி உரையாடத் தேவையான தேர்ச்சி பெறுவது கட்டாயம்.


சில மொழிகளில் குட்மாரனிங், குட்ஈவினிங், ஹலோ உள்ளிட்ட மிக அடிப்படை வாக்கியங்கள் தெரிந்து கொண்டு எனக்கு இத்தனை மொழிகள் தெரியும் நான் கற்றுத் தருகிறேன் என்று கிளம்புபவர்களை விட்டு விலகுவது முன்னேற விழைவோர்க்கு மிக அவசியம். ஆயிரம் பாடல்களுக்கு அடி தெரிந்து கொள்வதை விட ஒரு செய்யுளைப் படித்துப் புரிந்துகொள்வது உத்தமமான செயல்.

எது படித்தாலும் ஆழ்ந்து படியுங்கள், துறைசார்ந்த அறிவை எவ்வளவு வளர்த்துக் கொள்ள முடியுமோ வளர்த்துக் கொள்ளுங்கள். கவனம் சிதறாமல் கூர்மையான சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மூன்றையும் பெற தியானம் உதவும். தியானத்தின் எளிமைப்படுத்தப்பட்ட முறை இறை வழிபாடு. கடவுளின் முன் கைகூப்பி இரண்டு நிமிடங்கள் வேறு சிந்தனை இன்றி நிற்பது மன ஒருமைப்பாட்டின் முதல்படி. படிப்படியாக அதை வளர்த்துக் கொண்டால் தியானம் சுலபம். இப்படி கவனம் சிதறாமை கைவந்தால் வாழ்க்கை வசந்தமன்றி வேறில்லை.


அறிவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டவே முருகப் பெருமான் கையில் வேல் வைத்துள்ளார் என்பர் கற்றறிந்தோர் சிலர். அறிவு என்பது கூர்ந்தும், அகன்றும், ஆழ்ந்தும் இருக்க வேண்டும்.

வேலோடு வெல்க! நலம் பெருகி வாழ்க!! வந்தே மாதரம்!!!

No comments: