ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 2 July 2015

மணிபத்ரபுரி @ மாணா - பாரதத்தின் கடைசிக் கிராமம்

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பீற்றித் திரியும் அரசியலார், தமிழ் பிழைப்பாளர்கள் கெடுத்த தமிழகத்தில் வெளியூர்த் தமிழனே ஏமாற்றப்படும் அவலம் அடிக்கடி நடப்பது. அப்படி இருக்கையில் மொழி தெரியாத வேற்று மாநிலத்தவர், வேற்று நாட்டார் நிலை?

ஆனால், வடக்கே நிலை வேறு. பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கிறது அப்பகுதியின் பாரதத்தின் கடைசிக் கிராமமான மணிபத்ரபுரி என்கிற மாணா. நவீன வசதிகள் மிகச் சிலவே எட்டிப் பார்த்திருக்கும் அங்கே இந்த வந்தாரை வாழவைக்கும் மனப்பாங்கைக் கண்கூடாகக் கண்டோம்.


நாங்கள் மாணாவுக்குச் சென்றபோது மாலை மங்கும் நேரம். மழை பெய்தால் சிக்கிவிடுவோம், சீக்கிரம் சீக்கிரம் என்று நண்பர்கள் கௌதமன், ஹரன் மாமாஜி, உள்ளூர் நண்பர் கமல் உள்ளிட்டோர் விரைவுபடுத்திக் கொண்டே வந்த போதும் சரஸ்வதி, மானசரோவர் உள்ளிட்ட தீர்த்தங்களையும், பீமன் அனுமனைச் சந்தித்த தலத்தையும் பார்த்துவிட்டு, அருகிருந்த கோவில்களிலும் வழிபட்டபின், பாரதத்தின் கடைசித் தேநீர்க் கடையில் தேநீர் அருந்திவிட்டு, அந்தத் தேநீர்க்கடை உரிமையாளர் சந்திர சிங் பட்வாலுடன் சற்றே அளவளாவிவிட்டுக் கீழே இறங்கும் போது மழை பிடித்துக் கொண்டது. உறைபனி பெய்வது போன்ற தட்பம் (வெப்பமே இல்லை).

ஓடிவரவும் முடியவில்லை. மலைப் பாதை கடினமானது. சற்றே எட்டி நடை போட்டுக் கொண்டிருந்தபோது அங்கே கம்பளி ஆடைகள், கம்பளிக் குல்லாய்கள், கம்பளிக் கையுறைகள் செய்து விற்றுக் கொண்டிருந்த ஒரு மூதாட்டி சில குல்லாக்களைத் தந்து ”தலை நனையாமல் பாதுகாப்பாகப் போங்கள். மழையில் நனைந்துவிட்டால் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்புண்டு” என்று சொன்னார். பணம் கொடுத்த போது வாங்க மறுத்தார். (கம்பளி ஆடைகள் விற்பது மட்டுமே அவருக்கு வருமானம் தரும் தொழில்.) ”உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளத்தான் தருகிறேன். பணம் வேண்டாம்” என்றார். அவரிடம் பேசி(கெஞ்சி)ப் பணம் கொடுத்தபின் “பாரத் மாதா கி ஜெய்” என்று சொல்ல சில பற்களே இருந்த தன் வாயை முழுதாகத் திறந்து மகிழ்ந்து சிரித்தபடி “பாரத் மாதா கி ஜெய்” என்று உரக்கச் சொன்னார் அந்த மூதாட்டி.

தமிழகத்திலும் இப்படி உதவும் மனதுடன் பலர் உள்ளனர். அவர்கள் ஈவெரா பிராண்ட் தீராவிடத்தால் தீண்டப்படாதவர்கள்.

யோசித்துப் பார்க்கையில் இந்த நிலையில் மாணா போன்ற இடத்தில் வந்தாரை வாழவைப்பது பற்றி வாய்கிழியப் பேசும் தீராவிடர்கள் யாரேனும் இருந்திருந்தால் 50 ரூபாய் பொருளை 500 ரூபாய் சொல்லிவிட்டு உசுரு பெருசா காசு பெருசா என்று விண்ணாளம் வேறு பேசுவார்கள் என்ற உண்மையும் முகத்தில் அறைகிறது.
நிற்க.

மாணா என்று பொதுவாக அறியப்படும் மணிபத்ரபுரி பற்றி நான் கவனத்தில் கொண்ட சில தகவல்கள்.


மாணா கிராமம் தன்னிறைவு பெற்ற ஊராக இருக்கிறது. அங்கேயே கோதுமை, அரிசி, காய்கனிகள் பயிரிட்டுக் கொள்கிறார்கள். செம்மறி ஆடுகள் வளர்க்கிறார்கள், மாடுகள் வளர்க்கிறார்கள். அவர்களது தேவைக்கான பால் மற்றும் உணவுப் பொருட்கள் அங்கேயே கிடைத்துவிடுகிறது. செம்மறி ஆட்டிலிருந்து ரோமத்தை எடுத்துக் கம்பளி ஆடை தயாரித்து விற்கிறார்கள். மாடுகளைப் பேணிக் காக்கிறார்கள். குப்பைகளை அதற்குரிய இரும்புப் பெட்டியில் போட்டு மாலை வேளையில் எரித்து விடுகிறார்கள். முடிந்த வரை இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள். சூரிய ஒளி மின்சாரம் இப்போதுதான் அந்தக் கிராமத்தை எட்டிப் பார்க்கிறது. BSNL மொபைல் சிக்னல் மட்டும் அவ்வப்போது வந்து போகிறது. ஆனால் எல்லாக் கம்பெனிகளும் அங்கே டவர் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்!!


அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் பேசியபோது ”ஹிந்தி சீனி பாய் பாய் என்று சொல்லிக் கொண்டே எங்கள் உறவினர் பலரை நேரு காலத்தில் சீனர்கள் கொன்று போட்டார்கள். எங்களைப் பற்றிக் கவலைப்படாமல் முந்தைய அரசாங்கத்தினர் சீனாக்காரனுக்கு வால் பிடித்தார்கள். நாங்கள் எப்போது என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தாலும் பத்ரிவிஷால் பகவான் மீதான நம்பிக்கையில் தான் இங்கே வாழ்ந்து வந்தோம். சீனாக்காரனுக்கு மோடிதான் சரியான ஆள். அவனிடம் சிரித்துப் பேசியபடியே இருந்தாலும் இங்கே ராணுவத்தினருக்கு அவன் அத்துமீறினால் கடுமை காட்டச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டார். இனி சீனன் இங்கே வாலாட்ட மாட்டான். நாங்கள் இப்போது பாதுகாப்பாக உணர்கிறோம்”, என்றார்.


அவர் முந்தைய காங்கிரசு அரசுகளையும் சில அரசியல்வாதிகளையும் திட்டிய வார்த்தைகளை இங்கே எழுத முடியாது. சரியாகப் புரியாத சில கெட்ட வார்த்தைகளை வடக்கே சில ஆண்டுகள் வாழ்ந்த நண்பர் ஸ்ரீகாந்திடம் கேட்டு புரிந்து கொண்டு சற்றே அதிர்ந்தேன். எவ்வளவு பாதிப்புக்கு ஆளாகியிருந்தால் இப்படிக் கோபப்படுவார். அவர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லையாம். எங்களைப் பாதுகாப்பவர் எங்கள் தலைவர், அவ்வளவுதான் என்றார். ஆனாலும் பாரதம் என்ற தேசத்தின் மீதும் பத்ரிவிஷால் என்ற இறைவன் மீதும் நம்பிக்கை வைத்து இதுவே என் நாடு என்று வாழ்கிறார்கள் அந்த மக்கள்.

No comments: