ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 28 April 2013

டி எம் கிருஷ்ணாவின் அபஸ்வரம்

டி எம் கிருஷ்ணா என்று ஒரு கர்நாடக சங்கீதப் பாடகர் இருக்கிறார். அவருக்கு திடீரென்று அரசியல் பேசும் ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது. காலைக் காப்பியோடு நாளிதழைப் படித்தபடி பேசிவிட்டுப் போவது எல்லா மாந்தரும் செய்வதே. அதில் யாதொரு ஆட்சேபமும் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் ஒரு அரசியல் தலைவர் பற்றியும் ஒரு அரசியல் வாரிசு பற்றியும் கர்நாடக இசை மேதை என்ற அடையாளத்துடன் பொதுவில் கருத்துக் கூறும் போது உண்மைகளை ஆராய்ந்து பார்த்துப் பேசவோ எழுதவோ வேண்டும்.


2013 ஏப்ரல் 22ஆம் நாள் வெளிவந்த ஹிந்து நாளிதழில் இவரது கட்டுரை ஒன்று வந்துள்ளது. ஹிந்துவின் தரத்திற்கேற்றபடி எழுதிக் கொடுத்திருக்கிறார். இசை தவிர பிற விஷயங்களில் இவரது தரம் இதுதானா என்பதை இந்த ஒரு கட்டுரையைக் கொண்டு மட்டும் எடை போடுவது நீதியாகாது. ”உண்மைகளைப் பற்றிக் கவலையில்லை. கருத்துப் பேசுகிறேன், அதை மட்டும் கேளுங்கள்” என்று ஒலிக்கிறது அந்தக் கட்டுரை.

மோடியைப் பற்றிப் பேசும் போது அவரது கைகள் இரத்தக் கறை படிந்தவை என்கிறார் கிருஷ்ணா. ஆனால் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு அவர் மீது குற்றம் கூற முகாந்திரமே இல்லை என்று கூறியிருக்கிறது. ஆனால் அது பற்றித் தமக்குக் கவலையில்லை என்றும் பலரும் அவரது கைகள் கறை படிந்தவை என்று சொல்லும் போது சற்றே தம் செயல்பாடுகள் சரியல்ல என்று மோடி ஒப்புக் கொள்ளவேண்டும் என்றும் கிருஷ்ணா கூறுகிறார்.



மோடி பொருளாதார வளர்ச்சியில் சாதனைகள் நிகழ்த்திக் காட்டிய போதும் 2002 கலவரக் குற்றச்சாட்டு வட்டத்தை விட்டு அவரை வெளியே வைத்துப் பார்ப்பது இயலாத காரியம் என்கிறார் கிருஷ்ணா. ஏன் என்று சொல்லவில்லை. இதே அடிப்படையில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, கஷ்மீர பண்டிட்களுக்கு எதிரான வன்முறையையும் கணக்கில் கொண்டு சம்பந்தப்பட்டவர்களைப் பார்க்கலாமா? ஹிந்துவின் தரம் அந்த வன்முறைகளைப் பற்றிப் பேசவிடாது.

ஒரு நூறு பேர் கிருஷ்ணாவின் கச்சேரியில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு பாடலிலும் குற்றம் இல்லாத போதும் ”இது சரியில்லையே! இன்னும் நன்றாகப் பாடியிருக்கலாமே” என்று சொன்னால் இத்தனை பேர் சொல்கிறார்களே என்று கிருஷ்ணா மன்னிப்புக் கேட்பாரா? அல்லது கேட்காத வரை அந்த தவறாகப் பாடிய குற்றச்சாட்டு வட்டத்திலேயே இருக்கவேண்டும் என்றால் ஒப்புக் கொளவாரா?

நான் வசதியாக வாழ்வதைவிட ஏழையாக மனிதாபிமானத்தோடு இருப்பதையே விரும்புவேன் என்கிறார் திரு கிருஷ்ணா அந்தக் கட்டுரையில். அப்படியென்றால் பலர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய இலங்கைக்கு ஏன் போய்ப் பாடினாராம்? மனிதாபிமானத்தோடு ராஜபக்ஷே தர்மம் மீறாது போர் புரிந்திருக்கவேண்டும் என்று சொல்லிப் போகாதிருந்திருக்கலாமே?

பெரும்பான்மை மக்களின் நடவடிக்கைகளே சிறுபான்மையினரின் சில போக்குகளைத் தீர்மானிக்கின்றன என்கிறார் திரு.கிருஷ்ணா. பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தில் ஹிந்துக்கள் திருமண ஊர்வலம் முதல் கோவில் சுவாமி திருவீதி உலா வரை நடத்த தங்களிடம் அனுமதி வாங்கவேண்டும் என்று இன்று மக்கள தொகை அதிகமான பிறகு இஸ்லாமியர் கூறுவது யாருடைய நடவடிக்கைகளின் அடிப்படையில் அமைந்த போக்கு என்று கிருஷ்ணா சொல்வாரா?

உலகத்திலுள்ள எல்லா முஸ்லிம்களும் கோடிக்கு வாக்களித்தாலும் இறந்து போன மக்களைப் பற்ரி மட்டுமே தாம் கவலைப்படுவதாகவும் அதனால் பொருளாதார வளர்ச்சி மனிதநேயத்தை மறக்கடிப்பது கூடாது என்றும் கூறும் கிருஷ்ணா அந்த அடிப்படையிலேயே மோடி கூடாது என்று கருதுவதாகச் சொல்கிறார். 1984 கலவரத்தில் இறந்த சீக்கியர்களுக்காக இதே நிலைப்பாட்டை கிருஷ்ணா எடுத்து காங்கிரசுக் கட்சியில் நேரு-காந்தி குடும்பமே வேண்டாம் என்பாரா?

கஷ்மீரத்தில் இருந்து விரட்டப்பட்டு சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கும் பண்டிட்களைப் பற்றியும் மனிதாபிமானமிக்க திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களின் கருத்து என்ன என்று அறிய அவா இருக்கிறது. அதை அவர் இதே போல வெளிப்படையாகத் தெரிவிப்பாரா?

இராகுல் காந்தி பற்றிப் பேசும் போது அவர் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார். தீர்வுகளைத் தருவதில்லை என்று சொல்கிறார் கிருஷ்ணா. இதனாலேயே மோடி முக்கியத்துவம் பெறுகிறார் என்றும் முகாரி பாடுகிறார் அவர். இராகுல் காந்தி அறிவுப் பூர்வமாகத் தீர்வுகளை முன்வைக்காததால் மோடி என்னால் முடியும் என்று முன்னேறுகிறார் என்று இராகுலைச் சாடுகிறார் இவர். இராகுல் காந்தியிடம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கேட்கிறீர்களே... அவர் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்? சாரீரம் இருந்தால்தானே ஐயா சபையில் சங்கீதம் பாடமுடியும்?

தில்லியில் ஒரு பெண் கொடூரமானமுறையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது இளைஞர் அலையெனத் திரண்டு போராடினர். அப்போது இராகுல்காந்தி பாலியல் பலாத்காரம் என்ற பிரச்சினை இருப்பதே தெரியாதது போல இருந்துவிட்டார். வாயே திறக்கவில்லை.

செயல்படுபவர் வேண்டாம் பேசுபவர் சரியில்லை யார்தான் சரி? அதெல்லாம் டி.எம் கிருஷ்ணாவுக்குத் தெரியாதாம், குஜராத்தில் மக்கள் எந்த அடிப்படையில் எப்படி வாக்களிக்கிறார்கள்? தெரியாது! யாருக்கு வக்களிகிகிறார்கள்? அவசியமில்லை! ஆனால் மோடி 2002 கலவரத்துக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும், ஏன் கேட்கவேண்டும். அவர் மீது குற்றம் என்று பலர் சொல்கிறார்கள்.


ஒரு அடிப்படையைக் கிருஷ்ணா புரிந்து கொள்ளவேண்டும். மோடி இன்னாருடைய மகன் என்று சொல்லி முதல்வர் பதவிக்கு வரவில்லை. அதே போல இன்னார் மகன் என்பதால் எத்தனை தோல்விகள் வந்தாலும் இவர் தான் அடுத்த பிரதமர் என்று சங்க பரிவார அமைப்புகள் அவரை முன்னிறுத்தவில்லை. சாதனைகள் திறமை இவற்றின் அடிப்படையில் வந்தவர் அவர்.

ஐயா! கிருஷ்ணா.. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயத்தில் பொதுவில் கருத்துக் கூறுங்கள். கச்சேரிக்குக் கூட்டம் வருகிறது கைதட்டுகிறார்கள் என்று அரசியல் அடிப்படை தெரியாமல் சமூக நடப்பு புரியாமல் குறிப்பிட்ட சில இயக்கங்களின் சார்புடைய புத்தகங்களை வாசித்துவிட்டோ அல்லது சம்பந்தப்பட்டவர்கள் சொல்லிக் கேட்டோ இதுவே இந்தியா.... இதனால் இதுவே என் கருத்து என்று உளறாதீர்கள்.

பேச்சைக் குறைத்துக் கொண்டு கவனத்தைப் பாட்டில் வையுங்கள். சங்கீதம் உங்களுக்கு நன்றாக வந்துவிட்ட விஷயம். அரசியல் பேசுவதானால் நிறையப் படித்துத் தெரிந்துகொண்டு தெளிவு கண்டு பிறகு பேசுங்கள்.

1 comment:

Anonymous said...

சரியாக சொன்னீர்கள் திரு அம்பி. ஹிந்து பத்திரிக்கையின் தரம் நாம் அறிந்தது தானே.
ரொம்ப பயத்தில் இருக்கிறார்கள் போலும் தற்போது. தேர்தல் பயம். யாராவது மோடியை திட்டி ஏதாச்சும் எழுதி தாங்களேன் ப்ளீஸ் என்று கேட்டு வாங்குகிறார்கள் .
விஷயம் தெரியாமல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். காபியுடன் ஹிந்துவையும் குடித்து விடுபவர்கள் மூளையையா உபயோகிக்கப் போகிறார்கள்?
சரவணன்