ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 16 August 2012

அண்ணா இருந்த உண்ணாவிரதம்

அண்ணா என்ற சொல் பொதுவில் மூத்த சகோதரரைக் குறிக்கும். பகுத்தறிவு(??!!) கும்பலைப் பொறுத்தவரை அது கண்ணீர்த்துளிக் கூட்டம் என்று ராமசாமி நாயக்கரால் சுட்டப்பட்ட குழுவுக்குத் தலைமை ஏற்று திமுக கண்ட முன்னாள் முதல்வர் C.N. அண்ணாத்துரை அவர்களைக் குறிக்கும். சற்றே சமீபகாலமாக அந்தச் சொல் ராலேகாவ்ன் சித்தி என்ற மராட்டிய கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அண்ணா ஹசாரே அவர்களைக் குறிக்கிறது.


பாரத மணித்திரு நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அண்ணா ஹசாரே அவர்கள் காட்டிய ஆரம்பகட்ட முனைப்பு அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.  உண்ணாவிரதப் போராட்டம், ஊர்வலம், அரசுடன் பேச்சு, லோக்பால் சட்ட முன்வரைவு என்று அமர்க்களப்படுத்தினார் அண்ணா ஹசாரே. அவருடன் முன்னாள் இந்திய வருவாய்ப் பணிப்பிரிவு அதிகாரி அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் இந்திய காவல் பணிப்பிரிவு அதிகாரி கிரண்பேடி, அரசியல் சட்ட வல்லுநர் சாந்தி பூஷண், மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே உள்ளிட்ட பெருமக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

அண்ணா உண்ணாதிருந்தார். கூட்டத்தின் முன் மைக் பிடித்து மைய அரசை நோக்கிச் சவால் விட்டார். ஊழலை ஒழிப்போம் என்று முழங்கினார். கைதானார், சிறை சென்றார். வெளியே வந்தார். போராட்டம் முடிந்தது. அரசுக்கு கால அவகாசம் தருவோம். ஜன்லோக்பால் நிறைவேற வேண்டும், இல்லையேல்!! எச்சரிக்கை மிகவும் கடுமையாக இருந்தது. தன்மானம்  போனபின்னும் பதவியில் குந்தியிருக்கும் காங்கிரசு அரசுக்கு எச்சரிக்கை ஒரு பொருட்டா? அரசுத் தலைமையின் விரல் கூட அசையவில்லை. அண்ணா வென்றார் என்று கூத்திடுவோமடா என்று அனைவரும் மகிழ்வதாக ஊடகங்கள் அறிவித்தன.

அண்ணா மீண்டும் வந்தார். உண்ணாதிருந்தார். கூட்டத்தின் முன் மைக் பிடித்து மைய அரசை நோக்கிச் சவால் விட்டார். ஊழலை ஒழிப்போம் என்று முழங்கினார்.லோக்பால் குறித்து அரசுடன் அவர்தம் குழு பேசியது. போராட்டம் முடிந்தது. அரசுக்கு கால அவகாசம் தருவோம். ஜன்லோக்பால் நிறைவேற வேண்டும், இல்லையேல்!! எச்சரிக்கை மிகவும் கடுமையாக இருந்தது.  துரும்பு, விரல்.... அடக் காந்தியாரே! மைய அரசு கண்சிமிட்டக் கூட இல்லை. பாராளுமன்றத்தில் லோக்பால் நாடகம் திட்டமிட்டபடி நடந்து மசோதா நிறைவேறவில்லை.

ஆனாலும் அண்ணா வென்றார் என்று கூத்திடுவோமடா என்று அனைவரும் மகிழ்வதாக ஊடகங்கள் அறிவித்தன. அண்ணா குழுவினரும் அவ்வாறே உறுதி கூறினர். நடப்பது சரியில்லை என்று சொல்வோர் ஊழலுக்கு ஆதரவாளர் என்று ஊடகங்களால் தீர்ப்பெழுதப்பட்டு ஒதுக்கப்பட்டனர். கொடுமை கொடுமை என்று அண்ணா கூட்டத்துக்குப் போனால் அங்கே ஊடகக் கொடுமை ஜிங்கு ஜிங்கென்று தலை விரித்து ஆடியது.

இவ்வாறாக அவ்வப்போது உண்ணாவிரதம் அமர்வதும் மக்களின் ஊழல் ஒழிப்பு உள்ளக்கிடக்கைக்கு உரமிடுவது போல் பேசுவதும் திடீரென்று உண்ணாவிரதம் முடிந்தது என்று அறிவித்து எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு ராலேகாவ்ன் சித்தியைப் பார்க்கப் போவதும் அண்ணாவின் வாடிக்கை ஆனது.  இப்போது புதுக்கட்சி கண்டு தேர்தலில் போட்டியிடுவோம் என்கிறார். காங்கிரசு எதிர்ப்பு ஓட்டுக்களைப் பிரிக்கும் வேலை இது என்பதே அரசியலை அறிந்தோர் கருத்து.

திடீரென்று ஊழலை ஒழிக்கிறாயா இல்லையா என்பார். இதோ பார் உண்ணாவிரதம் என்பார்.இரண்டொரு நாட்களில் கடும் எச்சரிக்கை விடுத்துவிட்டு மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு ஊரைப்பார்க்கக் கிளம்பிவிடுவார். திடீரென்று நரேந்திர மோடியைப் பாராட்டுவார். சிறிது நேரத்தில் செக்யூலர்வாத தோஷத்திற்குப் பரிகாரமாக  மோடியைத் திட்டுவார். காங்கிரசு அரசு செய்யும் ஊழல்கள் பாரீர் என்று சோனியா காந்தியிடமே போய் மனுக் கொடுப்பார்.

காந்தியார் செய்த அதே விதமான செயல்கள் இவை. தனக்குத் தேவைப்படும் போது பொதுமக்கள் வந்து தனக்கு ஜே போடவேண்டும். தான் போகச் சொன்னதும் போய்விட வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவம். பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளை எதிர்த்து பிரிட்டிஷ் வைஸ்ராயிடமே மனுக் கொடுத்துக் கெஞ்சிய மூடத்தனம். அரசைப் பாராட்டுகிறாரா திட்டுகிறாரா என்றே தெரியாது. ஒருநாள் பாராட்டி ஒரு நாள் திட்டி என்று நாளொரு பேச்சும், பொழுதொரு வழக்குமாக காந்தியம் மணக்க இருக்கின்றன இந்த முதியவரின் செயல்பாடுகள்.

 காந்தியாரைச் சுற்றிலும் நேரு, படேல், ராஜாஜி என்று ஒரு கூட்டம். அவர்களில் படேலும் ராஜாஜியும் சொல்வதைக் காந்தியார் கேட்கமாட்டார். நேருவை வளர்த்துவிட்டார். அதே போல இங்கே கிரண்பேடி, ஹெக்டே என்று நிர்வாக அனுபவமும் சட்ட அறிவும் மிக்கவர் சொல்வதைவிட அரசுப் பணியை படிக்கப் போகிறேன் என்ற போர்வையில் பாதியில் விட்டுவிட்டு இன்னும் அரசிடம் வழக்காடிக் கொண்டிருக்கும் கேஜ்ரிவால் செல்வாக்குப் பெற்றிருக்கிறார். 

ஊழல் ஒழிவது குதிரைக் கொம்புதானா? இதுவும் கானல் நீரா? என்று வெறுத்துப் போகும் வேளையில் எந்தச் சந்தடியும் இன்றி கடமையே கண்ணாக ஒரு அதிகாரி தன் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேடித் தேடி ஊழல்வாதிகளின் கண்ணில்  விரல் விட்டு ஆட்டுகிறார். 

ஊடகங்களில் விளம்பரம் இல்லை. மேடை போட்டு முழங்குவதில்லை. ஆபீஸ் மீட்டிங்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேசுகிறார். தன் குழுவினருடன் ஆலோசனை செய்கிறார். அரசுடன் அவ்வப்போது பேசுகிறார். பாராளுமன்ற நிலைக்குழுக்களிடமும் பேசுகிறார்.

உண்ணாவிரதம் என்று மைதானத்தில் படுக்கை தலையணை போட்டுப் படுத்துக் கொள்வதில்லை.  வேளாவேளைக்குச் சாப்பிடுகிறார். அவ்வப்போது காபியோ டீயோ அருந்துகிறார். ஆனால் ஊழல்வாதிகள் இவரைக் கண்டு நடுங்குகிறார்கள். இவரை தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றுவதும் நடக்காது, திகாருக்கு அனுப்புவதும் முடியாது. ஏனெனில் அரசியல் சாசனச் சட்டம் அப்படி. யார் அவர்?


வினோத் ராய்

பாரதத்தின் தலைமைத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தான் அந்த மனிதர். 2008ல் இவர் பொறுப்பேற்றதில் துவங்கி  ஊழலுக்கு எதிராகவும் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது CAG அலுவலகம். 2010ல் 176000 கோடிரூபாய் 2G ஊழல், 2011ல் தில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்,  கார்கில் போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் பெயரைச் சொல்லி நடந்த ஆதர்ஷ் கட்டிட ஊழல் ஆகியன இஅவர் வெளிக் கொணர்ந்த ஊழல்களில் முக்கியமானவை.

மேலும் வரவிருப்பவை: தில்லி விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் நடந்த கையாடல்கள், நிலக்கரிச் சுரங்க உரிமம் வழங்குவதில் ஊழல் ஆகியன முக்கியமானவை. இவர் துறை நடத்தும் தணிக்கைகளின் காரணாமாக அதிகாரிகள் பலர் முடிவெடுக்க அஞ்சுவதாக ஒரு புரளி கிளப்பப்பட்டது. வேலைக்கு ஆகாதவர்கள் செய்யும் வீண்வாதம் என்று அதை வினோத் ராய் புறந்தள்ளுகிறார்.If you want an efficient all-India service, I advise you to allow the services 
to open their mouth freely. - Sardar Vallabhbhai Patel
(Constituent Assembly Debate On 10 October, 1949)
சர்தார் படேலின் இந்தச் சொற்களுக்கு மதிப்புக் கூட்டும் வகையில் பணி செய்கிறார் வினோத் ராய். 2G ஊழல் குறித்த பூர்வாங்க கணக்குகள் பார்க்கையில் இவ்வளவு பெரிய தொகை இழப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றே சொல்கிறார் இவர். ஆனால் தம் துறையின் கணக்கு சரியே என்றும் அது குறித்த அனைத்துத் தகவல்களும் விசாரணைக்குத் தரப்படும் என்றும் துணிவுடன் சொல்கிறார்.

வினோத் ராய் 2014ல் ஓய்வு பெறுகிறார். அரசை இவ்வளவு தூரம் ஆட்டி வைத்த இவரது செயல் அடுத்த CAGஆக அரசின் தலையாட்டி பொம்மை ஒருவர் நியமிக்கப்பட வழிவகுக்குமா என்றால் அதை மறுக்கிறார். ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளும், தகவல் அறியும் உரிமைச் சட்டமும் அத்தகைய பொம்மைச் செயல்பாடுகளை ஊக்குவிக்காது என்று தாம் நம்புவதாகச் சொல்கிறார்.

அண்ணா ஹசாரே (ஒருக்கால்) தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் திரு.வினோத் ராயை அருகே சேர்க்க மாட்டார் என்றே தோன்றுகிறது. உண்ணாவிரதம், பந்தல், போக்குவரத்து இவற்றுக்கான செலவுக் கணக்குப் பார்த்து அதில் கேள்விகள் கேட்டால் அண்ணா பாவம் அதற்கொரு உண்ணாவிரதமா இருப்பார்?
(படங்கள் உபயம்: கூகிளானந்தஜி மகராஜ்)

No comments: