Let Schools not interfere in Education- Mark Twain. பள்ளிகள் கல்வியில் தலையிடாதிருக்கட்டும் என்று மார்க் ட்வெய்ன் சொன்னதைச் சற்றே மாற்றி கல்வியில் அரசியல் தலையிடாதிருக்கட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்க விழையலாம் என்ற நம்பிக்கை இப்போது துளிர்த்திருக்கிறது. சீர்கேட்டை சீர் என்று சீரற்ற முறையில் வாதிட்ட திமுகவின் தான்தோன்றித்தனம் வழக்கொழிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டே இந்தியாடுடே பத்திரிகை திமுக செயல்படுத்த விழையும் சமச்சீர் கல்வி தரத்தைத் தாழ்த்தும் வகையானது என்றும் அதன் தீமைகளையும் விளக்கி எழுதியது. ஆனாலும் "சென்ட்ரலும் நானே! ஸ்டேட்டும் நானே" என்று மமதையில் மிதந்துகொண்டே படிக்காதவனுக்கு இணையாக படிப்பவனையும் தரம் தாழ்த்துவதே சமத்துவம் என்று கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டது திமுக அரசு. பள்ளிக்கல்வியைக் கூட முழுதாய் முடிக்காத தனக்கு டாக்டர் பட்டம் வேண்டுமென்று மாணவர் காங்கிரஸ் தலைவர் உதயகுமாரைக் கொன்ற கருணாநிதியிடம் கல்வித் தரம் பற்றி வேறென்ன எதிர்பார்க்க முடியும்.
தான் எழுதிய கவிதைகளைக் களைந்துவிட்டு பாடங்களை நடத்தலாமே என்று திருவாய் மலர்ந்த கருணாநிதி ஒருவிஷயத்தை மறைக்கப்பார்க்கிறார். அடிப்படையே ஆட்டம் கண்ட திட்டம் அது. தப்பும் தவறுமாய்ப் பாடங்கள், பிழைகள் மண்டிய தகவல்கள், படித்தால் பயன் என்பது மருந்துக்குமில்லை என்ற அளவில் இருக்கும் இந்தப் பாடத்திட்டத்தால் எதிர்காலத் தலைமுறை சிந்திக்கும் திறனிழந்து மனிதக் குப்பைகளாய் நடமாடுவதே நடக்கும். அப்படி இருந்தால் தானே திமுக ஆட்சி தொடரமுடியும்?
பாரா அவர்களின் கட்டுரை பல்வேறு பாடங்களில் மொழியின் அடிப்படை இலக்கணங்கள் மீறப்பட்டு அர்த்தமற்ற வகையில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. 400 கோடி செலவில் செம்மொழிக்கு மாநாடு போட்ட முத்தமிழ் வித்தகரின் ஆட்சியில் செய்யப்படும் வேலைகளில் தமிழ் குற்றுயிருடன் தள்ளாடுவது வேதனைக்குரிய விஷயம். டாஸ்மாக் கடைகளை அகலத்திறந்து வைத்து செம்மொழி மாநாடு போட்டால் தமிழ் தள்ளாடாமல் என்ன செய்யும்?
இந்த அடிப்படை விஷயத்திலேயே தரத்தை தாழவிட்டு அதை நியாப்படுத்தும் சமச்சீர் கல்விக் குழு பாடங்களின் தரத்தையோ கல்வியின் தரத்தையோ உயர்த்தப் பாடுபட்டிருக்கும் என்று யாரும் கோவிலில் சூடன் ஏற்றியோ அல்லது பெரியார் சமாதியில் மலர் வளையம் வைத்தோ அல்லது முரசொலி மாறன் மீது ஆணையிட்டோ (கருணாநிதியின் மனசாட்சி) சத்தியம் செய்தாலும் நம்பமுடியாது. பாடத்திட்டக் குழுவில் அவருடைய அடிவருடிகள் பலர் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் துதிபாடி நன்றிக்கடன் செலுத்தவே தலைப்பட்டார்களே தவிர மாணவர்களின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படவில்லை. காரணம் அவர்களின் பிள்ளைகள் CBSE பள்ளிகளில் படித்து, வெளிநாட்டுக் கல்லூரிகளுக்குப் போய்விடுவர். காசுக்கு ஓட்டு விற்கும் கும்பலுக்கு என்ன கல்வித்தரம் வேண்டிக்கிடக்கிறது என்ற திமுகவின் அலட்சியமே இதற்குக் காரணம்.
பாடத்திட்டக் குழுவில் நியமிக்கப்பட்டதும், பற்கள் 32ஐஇயும் காட்டியபடி ஆளுயர மாலையுடன் கட்சித் தலைவரைப் பார்க்க கிளம்பிவிடுகிற அரசியற் குட்டையில் ஊறிய மட்டைகள் எத்தகைய கல்வி பற்றியும் சிந்திக்கத் தகுதியானவை தானா? ஒன்றுக்கும் லாயக்கற்ற தனக்கு இவ்வளவு பெருமை கொடுத்த தன் தலைவன் புகழ் ஓங்க எதுவும் செய்யலாம் என்பது தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் இந்த மூடர்கள். அப்படிப்பட்டவர்களே வேண்டுமென்பது தான் கருணாநிதியின் கருத்தும் கூட. தன்னைப் புகழும் கூட்டங்கள், விழாக்களுக்குச் சென்று புன்னகைத்தபடி புகழுரைகளைக் கேட்டு மகிழ்வது தவிர தமிழக முதல்வருக்கு வேறு பணியில்லை என்று கருதுமளவுக்கு பாராட்டுவிழா நாயகனாக அல்லவா அவர் இருந்தார்?
முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை சென்னை வேளச்சேரியில் நடத்தும் சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளியில் ஏன் சமச்சீர் தமிழ்க் கல்வி இல்லாமல் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் வழங்கப்படுகிறது? பள்ளிக்கு நல்ல தமிழில் கதிரொளி கல்விக்கூடம் என்று ஏன் பெயர் வைக்கவில்லை? இந்தி எதிர்ப்பில் வளர்ந்த இயக்கத்தின் குடும்பப்பள்ளியில் இந்தி பாடமாக வைக்கப்பட்டுள்ளது ஏன் ? ஏன் திமுகவினர் இவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் சோற்றாலடித்த பிண்டம் (2Gஆல் அடித்த பிண்டம் என்றும் சொல்லலாம்) போல் இருந்துவிட்டு அதிமுக அரசுக்கு எதிராக மட்டும் லாவணி பாடி வருகிறார்கள்? 2G கொள்ளையின் கதாநாயகி கனிமொழி இந்தி படித்ததையே எதிர்க்க முதுகெலும்பில்லாத அவர்களா இதைக் கேட்கப்போகிறார்கள்?
அடித்த 176000 கோடியில் ஒரு நயா பைசா கூடப் பெறாத தொண்டன் மட்டுமே "கலைஞர் நல்லவர்பா" என்கிறான். கொள்ளையில் பங்குபெற்ற துடிபாடிகள் தம் பங்கைக் காப்பாற்றிக் கொள்ள காட்டிக்கொடுக்கத் தயாராகிறார்கள். மக்கள் நிர்வாகத்தின் அடிப்படை கூடப் புரியாத தற்புகழ்ச்சிக்கு மயங்கித்திரியும் ஒரு தற்குறி பற்றிய கட்டுரைகளும் அது கக்கி வைத்த கவிதைகளும் பாடமாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் எந்தத் தமிழனும் சீர்கெட்டு விழுந்துவிடவில்லை.
திமுகவின் புரிதலின் படி சமச்சீர் கல்வி என்பது சமமாகச் சீர்கெடுக்கப்பட்ட கல்வி. தமிழக அரசு 10+2 புத்தகங்களைவிட சி.பி.எஸ்.இ 10+2 புத்தகங்களில் விசயம் தெளிவாகவும், நல்ல நடையிலும் விளக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. எல்லாவிதமான நுழைவுத் தேர்வுக்கும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தங்களின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்க்கப்படுகின்றன. அந்தத் தரத்துக்குத் தமிழக மாநிலக் கல்வியை உயர்த்துவது சமச்சீராகுமேயன்றி, இருப்பதையும் தாழ்த்திவிட்டு வடக்கு வாழ்கிறது தெற்குதேய்கிறது என்று வசனம் பேசுவது முட்டாள்தனம். தெற்கைத் தேயவிட்டது யார் என்று வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் கருணாநிதியின் பங்கு 90%.
சமச்சீர் கல்வியாளர்கள் பேசாமல் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தை தமிழில் மொழியாக்கம் செய்து (நடுநடுவில் மானே,தேனே, பொன்மானே எல்லாம் போட்டு) தமிழக அரசு பாடநூலாக வெளியிட்டாலே தமிழக மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப் பட்டுவிடும் என்றொரு வாதத்தை பின்னூட்டங்களில் கண்டேன். திமுக ஆட்சியில் செய்யப்படும் மொழியாக்கத்தில் நடுவில் போடும் மானே தேனே பொன் மானே கூட கலைஞரே, தலைவரே, முத்தமிழறிஞரே என்றே போட வேண்டியிருக்கும். ஆட்சி மாறினால் அதை மாற்ற ஒரிரு மாதங்கள் புத்தகமில்லாது பள்ளிக்கூடங்கள் செயல்பட வேண்டியிருக்கும்.
மேலும் நாம் கைக்கொண்டிருக்கும் இந்தக் கல்விமுறை சிந்தனையைச் சீரான வழியில் செலுத்தும் முறை அல்ல. தனக்கு அடிவருடியபடியே தன் பணிகளுக்கு உதவும் எழுதப்படிக்கத் தெரிந்த கூலிகளை உருவாக்கும் மெக்காலே என்ற ஆங்கிலேயன் வகுத்த திட்டம். இட்ட பணியைச் செய்துவிட்டு அதற்கே இறுமாந்து திரியும் ஒரு அடிவருடிக்கூட்டத்தை உருவாக்கும் இந்தக் கல்வி முறையை இன்னும் செம்மையாக்கி அடிமைக்கூட்டமாகத் தமிழரை அழுத்தி வைக்கும் சதியே கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி.
Affirmative Action என்ற கோட்பாட்டின் மூலம் கறுப்பின மக்களைக் கல்விகற்க வைத்து சம உரிமை படைத்த முடிமக்களாக ஆக்கிய அமெரிக்காவிலும் தரம் தாழ்த்தி சமச்சீர் கல்வி புகட்டி சம உரிமை நிலைநாட்டப்படவில்லை. வெள்ளையின மக்கள் படிக்கும் அதே பாடத்திட்டத்தை அதே சட்டதிட்டங்களுடனே படித்துத் தான் முன்னேறினர் கறுப்பின மக்கள். பிந்தங்கியவர்களை முன்னேற்றுவது சமச்சீர். முன்னேறியோரைத் தாழ்த்தி சமச்சீர் காண்பது என்ற முட்டாள் தனத்தைக் கருணாநிதி எந்தப் பாசறையில் பயின்றார் என்பது தெரியவில்லை.
ஒன்று மட்டும் உறுதி. எந்தப் பாசறையிலும் பயின்ற எந்தக் கொள்கையையும் கருணாநிதி பின்பற்றவில்லை என்பது வரலாறு. திராவிடக் கூத்தாடினாலும் திரவியத்தில் மட்டுமே கண்வைப்பது அவரது பழக்கம். ஆகவே சமச்சீர் என்ற பெயரில் அவர் கொண்டு வந்த இந்தச் சீர்கேடு ஒழிவது சாலச் சிறப்பு. அரசு தற்போது ஈடுபட்டுள்ள சீர்படுத்தும் முயற்சி நன்று.
1 comment:
Now you can check the standard of the books. Compare it with the CBSE as well and previous Matric books. especially compare Maths and science.
-Balaji S
Post a Comment