ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 20 March 2011

கல்லிடைக்குறிச்சியில் சிவாலயம்!

நெல்லை மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி என்றாலே உடனே நினைவுக்கு வருவது ஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீலக்ஷ்மீபதி என்று போற்றப்படும் ஸ்ரீவராஹப் பெருமாள் கோவில், தாமிரபருணி நதி ஆகியன தான். ஸாஸ்தா ப்ரீதி விமரிசையாகக் கொண்டாடுவர்.

தென்னாடுடைய சிவன் அவ்வூரில் சிதம்பரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டிருந்தாலும் அவரைக் கொண்டாடுவது ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்து வந்துள்ளது. மைத்துனன் புகழ் பெற்று விளங்குவதை ரசித்தபடி தம் வழமையான low profileல் அங்கே குடியிருக்கும் சிவபெருமான் இப்போது தன் இல்லத்தைப் புதுப்பித்தருள திருவுளம் கொண்டதன் விளைவாக சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்வுள்ளது.

கன்னடியன் கால் என்றறியப்படும் வாய்க்காலின் கரையில் தண்ணென்று குளிர்ச்சியுடன் அமைதியே உருவாக இருக்கும் எம்பெருமான் சிவகாமி அம்மையுடன் மனவமைதியுடன் கூடிய சீர்மிக்க வாழ்வு இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறார். ஆலயத்தின் நுழைவாயிலுக்கருகிலே அரச மரத்தடியில் நாகருடன் விநாயகர் அருள் பாலிக்கிறார். வாய்க்காங்கரை விநாயகர் என்று பொதுவாக அழைப்பர். அவரை வணங்கிவிட்டு ஆலயத்தினுள் நுழைந்தாலே மகிழ்வு பழக்கும் ஒரு அமைதி மனதில் குடிகொள்ளும்.

நந்திகேஸ்வரரை வணங்கி ஈசனை வழிபட அனுமதி பெற்று பிரஹாரத்தின் உள்ளே போனால் எம்பெருமானை தரிசிக்கலாம். உள்ளே நுழையும் போதே வலது புறம் நாட்டியக் கலையின் நாயகன் நடராஜர் இருக்கிறார். அவரை அடுத்து மிகச்சிறிய சந்நிதிகளாக காசி விஸ்வநாதர்-விசாலாக்ஷி சந்நிதிகள் இருக்கின்றன. காசியில் இருந்து மண் எடுத்து வந்து இங்கே சந்நிதி செய்த்தாக ஐதீகம்.

கோவிலின் நாயகன் சிதம்பரேசர் லிங்கஸ்வரூபமாய் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சிவகாமியம்மை தெற்கு நோக்கி நின்றபடி அருள் பாலிக்கிறார். பெரிய கீர்த்தியுள்ள சிறிய மூர்த்தி. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே ஒரு பெரிய கண்ணாடி இருக்கிறது. அலங்காரப் ப்ரியரின் தங்கைக்கு அது முக்கியமல்லவா!!

அங்கிருந்து வெளியே ப்ரதக்ஷிண்மாக ப்ரஹாரத்தில் நடந்து வந்தால் தெற்கு நோக்கிய தக்ஷிணாமூர்த்தி. அந்த சந்நிதியைத் தாண்டி வந்தால் கன்னி மூலையில் கணபதி இருக்கிறார். பிள்ளையாரை வணங்கிவிட்டு வடக்கு நோக்கி வந்தால் வாயு மூலையில் சுப்ரமண்யர் வள்ளி தெய்வானை சந்நிதி இருக்கிறது. கந்தனை வணங்கி வழிபட்டு கிழக்கு நோக்கி வந்தால் சற்றுத் தொலைவில் சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. அவரிடம் வருகையைப் பதிவு செய்துவிட்டு வெளிப்ரஹாரம் வரவேண்டும்.

வெளிப்ரஹாரத்தில் நந்தவனம் இருக்கிறது. நந்ந்தியாவட்டை, வில்வம் அரளி உள்ளிட்ட பல்வேறு பூச்செடிகளும் மா, தென்னை உள்ளிட்ட பல மரங்கள் உண்டு. சில காலம் முன்னே கோவில் சுவர் சிதிலமானதில் மரங்கள் செடிகள் பராமரிப்பில் சற்றே பின்னடைவு ஏற்பட்டது. திருவாதிரை உற்சவம் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தன்று கோரத உலா நடைபெறும்.

கும்பாபிஷேகத்திற்கு நாள் வருகிற ஜூன் 19ஆம் நாள் (19/06/2011) என்று ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் ஆசிகளுடன் குறித்துள்ளனர். கோவில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. தேதி குறித்து விட்ட நிலையில் நிதிவரவு சற்றே மந்தமாக இருப்பதால் குறித்த நாளுக்குள் கும்பாபிஷேகத்தை முடிக்க வேண்டுமே என்ற கவலை குடமுழுக்குச் சேவைக்குழுவுக்கும் ஊர் மக்களுக்கும் இருக்கிறது.

குருவருளுடன் குறித்த தேதி என்பதால் அந்நாளில் குடமுழுக்கு நடைபெறும் என்ற நம்பிக்கை நங்கூரமிட்டு இருந்தாலும் இறைப்பணியில் நமது பங்கை பங்கமின்றி ஆற்றவேண்டும். வாசியின்றி நம்மை வாழ்விக்கும் பெருமானுக்குக் கோவில் கட்டக் காசுதருவது அவர் கொடுத்ததில் ஒரு பகுதியை அவருக்கே அளிக்கும் செயல்.

வருமானத்தில் ஒரு பகுதி கோவிலுக்கு என்று முன் காலங்களில் நம் முன்னோர் செய்து கொண்டிருந்த செயல் தான் இது. நடுவே சற்றே சறுக்கி விட்டோம். மீண்டும் முயன்று நல்லவற்றுக்குள் மீண்டு வருவோம். அல்லவை தேய அடியெடுத்து வைப்போம். நிதி மிகுந்தவர் செலவினங்கள் ஏற்பீர், நிதி குறைந்தவர் இயன்றதைத் தாரீர், பணம் இல்லாதோர் உழைப்பினை நல்குவீர், அதுவும் இயலாதோர் ஞானசம்பந்தரின் திருவீழிமிழலைப் பதிகத்தைப் பாடுவீர்.

நன்கொடை நிதியை அனுப்ப:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SB A/c #:138401000018925.
குடமுழுக்குக் குழுவினர்:
ஸ்ரீ வீரமணிஐயர் - தலைவர் (04634-250175)
ஸ்ரீ P.கிருஷ்ணன் - செயலர் (9443852290)
ஸ்ரீ G.இராமகிருஷ்ணன் - பொருளாளர் (9442251205)

நிற்க:
கல்லிடைக்குறிச்சி என்றதும் லக்ஷ்மீபதி, தாமிரபருணி இதெல்லாம் நினைவுக்கு வருகிறது என்கிறாயே... அப்பளம் உன் நினைவுக்கே வரவில்லையா என்று கொதிப்போர் ஒரு லோட்டா தாமிரபருணி தண்ணீர்  அருந்திவிட்டு மேற்கொண்டு படிக்கவும்.

"ஊர்ல இப்போல்லாம் அப்பளாமா இடரா? இவா அப்பளாம் போடற லச்ஷணத்துக்கு பெரண்டைய வயத்துலதான் வெச்சு கட்டிக்கணும்" என்று என் தாயார் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்கிறார். தாய் சொல்லைத் தட்டாத தனயன் என்று பெயரெடுக்கும் பெருமுயற்சியில் இருப்பதால் அப்பளம் பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன்.

நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... கல்லிடையில் கோவில் கொண்ட சிதம்பரேசன் தாள் வாழ்க. சிவோஹம்.... சிவோஹம்.

2 comments:

s. haranvigneshwaraan said...

ORU KALATHIL UNNUDAYA MAMA, VISWANATHAN, MANGAI KALLAL ADITHA NANDAVANAM, CHIDAMBARESWARAR KOVIL NANDAVANAM. MUTHAYA PILLAI NINAIVUKKU VARUKIRATHU. MAMA THATHA.

Arun Ambie said...

மாமா மாங்காய் கல்லால் அடித்துவிட்டு வந்து பாட்டியிடம் அடி வாங்கிய முழுக்கதையையும் என் அம்மா மீண்டும் ஒரு முறை இன்று சிரித்துச் சிரித்து நினைவு கூர்ந்துவிட்டார்.

நிற்க. "ஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீலக்ஷ்மீபதி" என்று திருத்திவிட்டேன்.