ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 8 May 2013

கர்நாடக தேர்தல் முடிவுகள் - ஒரு சாமானியனின் பார்வை.

கர்நாடகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. காங்கிரசுக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பாஜக இரண்டாமிடத்துக்குக் கடுமையாகப் போராடுகிறது. ஏன் இந்த நிலை? குஜராத்தில் நடப்பது, மத்தியப் பிரதேசத்தில் நடப்பது தெற்கே நடப்பதில்லையே ஏன்? ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் இவ்வளவு பாதிப்பைத் தரும்போது ஆட்சி எந்த அளவுக்கு மக்களைப் பாதித்தது என்றும் பார்க்கவேண்டும்.

புள்ளிவிவரங்கள் வேறு கதைகள் பேசினாலும் பொதுவாக கர்நாடக மக்களின் மனநிலை என்பது பாஜகவுக்கு சாதகமாக இல்லை. குஜராத்தில் மோடி ஊழலற்ற ஆட்சியைத் தந்தார். மக்களின் தேவைகள் குறையின்றி நிறைவேற்றப்பட்டன. ஆனால் கர்நாடகத்தில் ஊழல் மலிந்துபோனது பாஜக ஆட்சியில். ரெட்டி சகோதரர்கள் ஊழலில் சிக்கிய போதும் கட்சியின் முக்கிய தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் பரிபூரண ஆசியுடன் வலம் வந்தனர். எடியூரப்பா ஊழல் மட்டுமே பெரிதாகப் பேசப்பட்டு ரெட்டி சகோதரகளின் ஊழல் கட்சியில் பெரிதாகப் பேசப்படவில்லை.


எடியூரப்பா ரெட்டி சகோதரர்களுக்கு வளைந்து கொடுக்க நிர்பந்திக்கப்பட்டார். கர்நாடகத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கும் அவர் கட்சிக்கு ஆற்றிய பணியும் ரெட்டி சகோதரர்கள் விஷயத்தில் அராஜகமாகப் புறந்தள்ளப்பட்டன. அடிப்படையில் மோடிக்கு குஜராத்தில் இருந்த சுதந்திரம் கர்நாடக பாஜகவில் எந்தத் தலைவருக்கும் இல்லை. தில்லியின் தலையீடுகள் அதிகமிருந்தன காங்கிரசைப் போல.

வித்தியாசமான கட்சி என்ற கோஷத்துடன் வளைய வந்த பாஜக கர்நாடகத்தில் காட்சி மாற்றங்கள் கூட ஏதும் செய்யவில்லை. ரெட்டி ஊழல், போட்டிக்கு எட்டி(எடியூரப்பா) ஊழல். ரெட்டி- எட்டி உட்பூசல். பதவிச்சண்டை அதுவும் குழாயடிச் சண்டையை விட மோசமாக நடந்த அவலம். ரேணுகாச்சாரியாவின் பெண்பித்து. சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ஆபாசப்படம் பார்த்த கேவலம். எடியூரப்பாவின் நட்புக்குரியவர் என்றறியப்பட்ட ஷோபா கரண்ட்லாஜேவுக்கு முக்கியத்துவம்.


இது போன்ற அவலங்கள் ஏதுமற்ற குஜராத்திலேயே குய்யோ முறையோ என்று குதிக்கும் ஊடங்களும், காங்கிரசும், மதசார்பற்ற மற்றவரும் இங்கே சும்மா இருப்பார்களா? கட்சியைப் பற்றிய மோசமான செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் தென் பாரதத்தில் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலும் மமதையிலும் இனி எல்லாம் நமதே என்று வெற்றி தலைக்கேறிக் கூத்தாடினர் கர்நாடக பாஜக தலைவர்கள்.

ஊழலில் சம்பாதிப்பது, ஒருவர் காலை மற்றவர் வாருவது, பாலியல் பிரச்சினைகள் என்று ஆட்சி தவிர மற்ற எல்லாம் நடந்தது. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தாலே எடியூரப்பா கர்நாடகத்தின் கண்ணியமிக்க காவலராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஒகேனகல்லில் எல்லைப் பிரச்சினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள நினைத்தார்.

ஹிந்துத்வா கொள்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை. சங்கமும் சங்கம் சார்ந்த அமைப்புகளும் ஆட்சியைக் கண்டு முகம் சுழித்து ஒதுங்கும்படியாகவே ஆட்சி இருந்தது. ரெட்டி ஊழல் ஏற்புடையது ஆனால் எட்டி ஊழல் கண்டிக்கத்தக்கது என்ற நிலைப்பாடு தில்லியில் இருந்ததும் ரெட்டி சகோதரர்களுக்குக் கட்சியின் முக்கியத் தலைவரின் ஆதரவு இருந்ததும் கண்டிக்கத்தக்கது. ரெட்டி சகோதரர்களை ஆதரிக்கும் தலைவர் காங்கிரசுக்கு மறைமுகமாக உதவுகிறாரோ என்றும் சிலர் ஐயம் கொண்டனர்.

சற்றே தட்டிக் கொடுத்து எடியூரப்பாவை இடையூறின்றித் தொடர வழிவகுத்து அவரைக் கட்டுக்குள் வைத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் கட்சி இறங்கியிருக்கலாம். கர்நாடகத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவு கொண்ட ஒரு தலைவரை தில்லியில் ஒருவருக்குப் பிடித்த சிலருக்குப் பிடிக்கவில்லை என்று மாற்றாந்தாய் மனதுடன் நடத்தியது பெருந்தவறு.

கர்நாடக பாஜகவின் செயல்பாடுகளைப் பார்க்கிற போது சங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக் கட்சி வெகுதூரம் விலகிச் சென்றது தெரிகிறது. எதிலும் கட்டுப்பாடின்மை, தொண்டு மனப்பானமை இல்லாத தலைவர்கள். பதவிக்காகச் சண்டையிடும் அவல நிலை, பெண் பித்து என்று சில அடிப்படையான குற்றங்கள் நடப்பது சங்க பரிவாரம் சார்ந்த கட்சியின் ஆட்சி என்பதையே நம்ப முடியாத நிலையில் வைத்தது.

இந்த ஊழல் மற்றும் அவல நிலையைக் காங்கிரசு நன்கு பயன்படுத்திக் கொண்டது. பாதயாத்திரை உள்ளிட்ட பிரச்சார உத்திகள் மூலம் மக்களைச் சந்தித்து தாங்கள் ஏதோ சத்திய சந்தர்கள் போலப் பேசினார்கள். பாஜக மத்திய அரசின் ஊழலால் வெல்லலாம் என்று நம்பிக் கோட்டை விட்டது. உருப்படியாகப் பிரச்சாரம் நடந்ததாகத் தெரியவில்லை. உட்பூசல், உள்குத்து, உள்ளடி என்று ஆட்சியை தங்களிடமிருந்து தாரை வார்க்க உழைத்தார்கள். அதைக் காங்கிரசு பயன்படுத்திக் கொண்டது. வென்றது.

பிற மாநில பாஜகவினர் கற்க வேண்டிய சில பாடங்கள்
:

  • மாநிலப் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் குரல் கொடுக்கவேண்டும்
  • மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடவேண்டும்
  • எல்லோரையும் அரவணைக்கிறேன் பேர்வழி என்று காவி கட்டிய காங்கிரசாக முயலவேண்டாம்.
  • ஊழல் என்றால் ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்று கறாரகச் சொல்லவேண்டும்.
  • காங்கிரசின் ஊழலை மக்களிடம் எடுத்துச் சொல்ல பிரச்சாரம் செய்யவேண்டும்.
  • தொலைக்காட்சி, பத்திரிகை, சமூக ஊடகங்கள் (ஃபேஸ் புக், ட்விட்டர்) ஆகியன பிரச்சாரத்திற்குத் துணை செய்யுமே தவிர பிரச்சாரமாகாது.
  • சங்கம் மற்றும் சங்கம் சார்ந்த அமைப்புகளை அரசியல் சரித்தன்மை என்ற பெயரில் தூரத்தில் நிறுத்தவேண்டாம்.
  • சங்கம் மற்றும் சங்கம் சார்ந்த அமைப்புகளை அரவணைக்காத வரை மக்களைச் சென்றடைவது கடினமே.
தேர்தல் முடிவு குறித்த புள்ளிவிவரங்கள் முழுமையாக வெளிவந்ததும் மேலும் கொஞ்சம் அலசலாம்...

No comments: