ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 11 May 2013

காங்கிரசுக்கு 121ஐ அன்பளித்த 371(J)வும் பாஜகவும்

கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவைப் பொறுத்தவரை சற்றே எதிர்பார்த்த வகையில் வந்துள்ளன. விவரமறிந்த சங்க வட்டாரத்தினர் 30 முதல் 40 தேறினால் பார்க்கலாம் என்றே சொல்லி வந்தனர். ஆனால் தொங்கு சட்டமன்றம் போல யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலை வரும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் புள்ளி விவரங்களைக் கூர்ந்து நோக்கினால் எடியூரப்பா பிரித்த ஒட்டுக்களின் எண்ணிக்கையே வீழ்ச்சிக்கு வழிகோலியது என்பது புலனாகும். 


ஆனால் எட்டியூரப்பா பிரிந்தாலும் கட்சிக்கு பாதிப்பில்லாத வகையில் தனி மனிதார் யாரையும் சாராது கட்சி இருக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. சார்ந்திருந்த தனி மனிதன் குஜராத்தில் மோடி இருப்பதற்கு மாறாக சார்ந்திருக்கத் தக்கவராக இல்லை.

பாஜக தோல்விக்கான காரணங்களைச் சற்றே விரிவாகப் பார்க்கலாம். காங்கிரசின் வெற்றிக்கும் தேவகவுடா குடும்பத்திற்கு (மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு என்று புரிந்து கொள்ளவேண்டும்) கிடைத்த மறுவாழ்வுக்கும் அவையேதான் காரணங்கள்.

ஏட்டியூரப்பா ஆட்சி முறை:

2008ல் பாரதீய ஜனதா கட்சி குமாரசாமி கவுடாவின் அடாவடிகள் மீதான வெறுப்பிலும் அதனால் கிடைத்த அனுதாபத்தின் மீதும் சவாரி செய்து தேர்தலைச் சந்தித்தது. எட்டியூரப்பா துணை முதல்வராக இருந்த போது ஆற்றிய பணிகள் சற்றே கை கொடுத்தன. ஆனால் பேசிக் கொண்ட படி ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்காமல் குமாரசாமி ஆடிய அழுகுணி ஆட்டமும், எட்டியூரப்பா மீதான கட்சியினரின் நம்பிக்கையும் கை கொடுக்க பாஜக தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது.

வந்தவுடன் ஆட்சிப்பணிகள் வேகம் பிடிக்கும் எஸ்.எம்.க்ருஷ்ணா கோடைவிட்ட கிராமப்புற வளர்ச்சியை எட்டிப் பிடிப்பார் எட்டியூரப்பா என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, பாஜகவின் கோஷ்டி மோதல், உள்குத்துக்கள், டில்லியின் பேர் சொல்லி நடந்த அடாவடிகளைச் சமாளிக்க முடியாமல் திணறினார் எடியூரப்பா.



அவர் தீட்டிய திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தால் கர்நாடகத்தின் கோமகனாகக் கோலோச்சியிருக்கலாம். ஆனால் செயல்பாடுகளில் கோட்டைவிட்டார் எட்டியூரப்பா. தன் மகன்களை வளர்த்துவிட முனைந்து செயல்பட்டார். ரெட்டி சகோதரகளின் ஊழல் போலவே தன் ஊழலுக்கும் தில்லியின் பாராமுகம் கிடைக்கும் என்று எண்ணிவிட்டார் போலும். பாவம் எட்டி! தில்லித் தலைமைக்கு எட்டிக்காயாகிவிட்டார். ஆண்டாண்டு காலமாய் உழைத்த தொண்டன் என்றாலும் வசதிக்காரனுக்குக் கிட்டும் மரியாதை தனிதான் என்ற கசப்பான உண்மை நிரூபிக்கப்பட்டது.

ஊழலுக்காக எட்டியூரப்பாவை எட்டிச் செல்ல உத்தரவிட்டது தில்லித் தலைமை. பதவிக்கு அலைந்தோர் பலரும் இதுதான் தருணமென்று எதிர்ப்பை வலுப்படுத்தினர். எட்டியூரப்பா கட்சியிலிருந்தே விலகினார். ஆனால் நீதிமன்றத்தில் எட்டியூரப்பா மீதான் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்றும் அவை பேர் கெடுக்கச் செய்யப்பட்ட பித்தலாட்டங்கள் என்றும் தீர்ப்பானது. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அரசியல் சாசனப்பதவியில் இருக்கும் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு. சந்தேகம் கிளப்புவது சுலபம். வலுவான ஆதாரங்கள் தாருங்கள் என்றது நீதிமன்றம். இன்னமும் கொடுக்கிறார்கள் ஆதாரத்தை. (http://www.dnaindia.com/bangalore/report_big-relief-for-yeddyurappa-as-hc-quashes-fir-in-mining-case_1659579)

எட்டியூரப்பா கோட்டை விட்டது தன்னை வலுப்படுத்திக் கொள்வதில். குமாரசாமி கவுடாவிடம் துணை முதலவராக இருந்த போது செய்ல்பட்ட விதத்தைத் தொடர்ந்திருந்தால் போதும் கர்நாடகத்தில் சற்றே வலுப்பெற்றிருக்கலாம். கிரமப்புற வளர்ச்சியைச் சீராக்கி, தொழில்துறையில் 2010 முதலீட்டாளர் கூட்டத்தில் கிடைத்த 5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தால் எட்டியூரப்பாவைக் கண்டால் எதிர்ப்பாளரகள் எட்டநின்று பொருமுவதைத் தவிர வேறேதும் செய்திருக்க முடியாது. தென்னாட்டின் மோடியாக இவர் மலர்ந்திருக்கலாம். இவர் மீது கைவைக்கத் தில்லியும் சற்றே தயங்கியிருக்கும். ஊரோடும் ஊழலோடும் ஒத்துவாழ்கிறேன் என்று ஆட்சியைக் கோட்டைவிட்டார் எட்டியூரப்பா.


தமிழகத்தோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்து அருணாசலப்பிரதேசத்தில் சீனாக்காரன் புகுந்தது போல ’ஒகேனகல் மனகே’ என்று கெட்ட அரசியல் நடத்திவந்த இவர், திடீரென்று பெங்களூரில் திருவள்ளுவர் சிலை நிறுவியும் சென்னையில் சர்வக்ஞர் சிலை வைத்தும் அரசியல் ஸ்டண்ட்களில் கருணாநிதிக்குத் துணை போனார். உருப்படியாக ஒரு பிரச்சினையும் தீரவில்லை. ஆக கிடைத்த வாய்ப்புகளைக் கோட்டை விட்டார் எட்டியூரப்பா.

பின்னோர் பிலாக்கணம்:

எட்டியூரப்பாவுக்குப் பின் வந்த சதானந்த கவுடா சீதாராம் கேசரிக்கு தேவகவுடா போல கவுடா என்றார் கவுந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் எட்டியூரப்பாவால் வைக்கப்பட்ட பொம்மை. ஆனால் பொம்மைக்கும் கர்நாடக அரசியலுக்கும் உள்ள ராசிப்படி விரைவில் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.

சதானந்த கவுடா யார்?

ஜனசங்கத்துக் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர். தென் கர்நாடகத்தின் பாஜக இளைஞர் அணித் தலைவராகத் துவங்கி கட்சியின் தேசிய செயலாளராக உயர்ந்தவர். வழக்கறிஞர். சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினராக பல்வேறு நிலைக்குழுக்களில் செயலாற்றியவர்.


இவர் காலத்துச் சாதனைகள் என்ன?

2008ல் இவர் தலைமையில் கட்சி தேர்தலை வென்றது. ஆட்சிக்கு வந்தது. மாநிலத்தில் செல்வாக்கு மிக்க தலைவர். எம்.பி ஆக இருந்தவரை தன் சொல்லுக்கு ஆடுவார் என்று இழுத்துக் கொண்டு வந்து முதல்வராக்கினார் எட்டியூரப்பா. இவர் கட்சியின் சீர்கெட்ட பெயரைச் சீராக்க பல நடவடிக்கைகளை எடுத்தார். அரசு அலுவலகங்களில் தாமதமின்றி பணிகள் முடிய பணிகளுக்கான கால அட்டவணை முறையை அறிமுகப்படுத்தினார். சில காலம் தொடர்ந்திருந்தால் நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால் எட்டியூரப்பாவுடன் ஏற்பட்ட சில வேறுபாடுகளால் கவிழ்த்தப்பட்டார்.

ஜெகதீஷ் ஷெட்டர்.

இவர் 2008லிருந்து 2009 வரை சபாநாயகராகக் காலம் தள்ளியவர். மந்திரி பதவி இல்லாமல் எப்படி என்று பிடிவாதம் செய்து 2009ல் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி மந்திரி ஆனார். பாரம்பரியம் என்னவோ பெரிசுதான். இவரது கல்லூரிக்காலத்தில் அகிலபாரத வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளில் செயலாற்றியவர். ஜனசங்கக் காலத்தில் இருந்து கட்சிப்பணி ஆற்றியவர். வழக்கறிஞர். வட கர்நாடகத்தில் செல்வாக்குப் பெற்றவர்.


தென்மேற்கு ரயில்வே தலைமையகம் ஹூப்ளியில் அமைந்தது உள்ளிட்ட பல சாதனைகள் இவரது. ஆனால் மந்திரியாக இருந்த போது என்ன செய்தார் என்றால் சொல்லிக் கொள்ளும்படியாக பெரிய சாதனைகள் இல்லை. முதல்வராகி என்ன செய்தார் என்று கேட்டால் முன்னாள் முதல்வராக வலம் வரலாம் என்ற நிலை மட்டுமே.

371(J) செய்த மாயம்:

அரசியல் சாசனப் பிரிவு 371(J) என்பது நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு. ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் உள்ள சில பகுதிகள் ஐதராபாத் நிஜாமின் ஆட்சியில் இருந்தவை. ஐதராபாத்-கர்நாடகா என்று அறியப்படும் பகுதிகள். ரெய்ச்சூர், குல்பர்கா, பிடார், கொப்பல், பெல்லாரி உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளுக்கு பின் தங்கிய பகுதிகள் என்று சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஏக மனதாக என்றால் எல்லாக் கட்சிகளும் ஆதரித்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஏதோ காங்கிரசு செய்தது போல ஒரு படம் காட்டப்பட்டது, பாஜக இது குறித்து வாயே திறக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே இதைச் செய்தார் என்று சொல்லியே காங்கிரசு 50 தொகுதிகளில் வென்றது.

இந்தச் சட்டத்தை ஜெகதீஷ் ஷெட்டர் எதிர்க்கிறார் என்று கிளப்பினார்கள். அதைக் கிடப்பில் போடப் பார்க்கிறார் என்றார்கள். ஆனால் ஏன் எதிர்த்தார் என்றோ; கிடப்பில் போடவில்லை என்றோ பாஜக வாய்திறக்கவில்லை. பிரச்சாரம் என்று என்ன தான் செய்தார்கள் என்ற கேள்வி வருகிறது. மோடியைக் காட்டி ஓட்டு வாங்கலாம் என்ற நம்பிக்கை 40ல் பாதி தொகுதிகளில் பலித்தது. ஆனால் கர்நாடகத்தில் ஒரு சக்தி மிக்க மாநிலத்தலைவர் இல்லாமல் காங்கிரசு போலவே தில்லியின் சொல்லுக்கு எள்ளென்றால் எண்ணெய் கொண்டுவரும் ஆட்களே இருப்பது ஒரு குறையே.

எட்டியூரப்பா நான் கர்நாடக ஜனதா பக்ஷாவை வளர்த்தெடுப்பேன். நானில்லை என்றால் பாஜக இல்லை என்று பேசுகிறார். ஆனால் அவரை நம்பி வந்து தேர்தலில் போட்டியிட்ட 15 பேரும் தோற்றார்கள். இவ்வளவுக்கும் செல்வாக்குமிக்க எட்டியூரப்பா அந்தப் 15 தொகுதிகளில் அதிகமான நாட்கள் பிரச்சாரம் செய்தார். மேலும் அவர் பிரித்தது தனது லிங்காயத் சாதி ஓட்டுக்களை மட்டுமே. பொதுவான ஓட்டுக்களை அவர் பெறவில்லை. அவர் தன் கட்சியை வளர்த்ததை விட பாஜகவின் வீழ்ச்சிக்குச் செய்ததே அதிகமாக இருக்கிறது.

வாக்கு சதவிகிதம் என்று பார்த்தால் 2008 தேர்தலுடன் ஓப்பிடுகையில் பாஜக இழந்தது 13.9% வாக்குகள். காங்கிரசு அதிகம் பெற்றது 1.8% வாக்குகள். ஆனால் எட்டியூரப்பா கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே பிரிந்த ஓட்டுக்கள் அதிகம். அதில் மஞ்சக்குளித்து 121 இடங்களை காங்கிரசும், 40 இடங்களை தேவகவுடா கட்சியும் பெற்றனர். ஆக பாஜக இரண்டு பட்டது காங்கிரசுக்கும் தேவகவுடா கட்சிக்கும் கொண்டாட்டமாகிவிட்டது. இனியாவது பாஜக தலைமை விழித்துக் கொள்ளவேண்டும்.

No comments: