ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 30 May 2013

அறிவுரை நம்பிகள்

ஒருவன் தான் கற்றது கைமண்ணளவே என்று உணரும் போது அறிவாளியாகிறான். ஆனால் தான் கற்றாது அதிகம் என்று என்று ஒருவன் உணரத் துவங்கும் போது முட்டாளாகிறான். முட்டாள்களிடம் கூட விவாதம் செய்து சில விஷயங்களைப் புரிய வைக்கலாம். ஆனால் அறிவாளி என்று தன் தலைக்குப் பின் தானே ஒளிவட்டம் வரைந்து கொண்டு திரியும் பேர்வழிகளிடம் விவாதிப்பது முடியாது. ஏனென்றால் இவர்கள் விவாதம் செய்யமாட்டார்கள். எது பேசினாலும் அதில் தனக்குத் தெரிந்த விஷயத்தை நுழைத்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள். பேசத் துவங்கிய விஷயத்துக்கும், இவர்கள் சொல்வதற்கும் சம்பந்தமில்லை என்று சுட்டிக்காட்டினால் ’நல்லது சொல்கிறேன் கேட்டுக் கொள்’ என்று உயரத்தில் அமர்ந்து உபதேசிக்கும் நிலையைத் தமக்குத் தாமே வழங்கிக் கொள்வார்கள்.


சமீபத்தில் ரயிலில் பயணம் செய்த போது Outlook படித்துக் கொண்டிருந்தேன். ஊழல் மலிந்துவிட்டது குறித்து உடன் பயணித்த அலுவலக நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்,
இது என்ன பத்திரிக்கை? என்றொரு குரல் கேட்டது. சொன்னேன்.

“பிஜேபி காரன் அம்புட்டு பேரும் யோக்கியனா?”

“ஐயா யாருன்னு தெரியலியே?”

“எனக்கு விளம்பரம் பிடிக்காது. கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

”அறிமுகமே இல்லை விளம்பரத்துக்கு எங்க போறாரு” என்றார் நண்பர்.

” நான் வழிப்போக்கன்னு வெச்சுகிருங்க. இப்ப சொல்லுங்க.” என்றார் அசரீரி.

“வெச்சுக்காடியும் நீங்களும் நானும் ரயில்ல வழிப்போக்கன் தானுங்க” என்றேன்.

”இந்த எடக்கு மடக்கெல்லாம் வேண்டாம். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?”

“இல்லைங்க” என்றேன்.

”என்ன இல்லை?”

“நீங்க கேட்ட கேள்விக்கு இல்லைங்கிறது பதில்” என்றேன்.

”அப்புறம் காங்கிரஸ் ஊழல்னு ஏன் பேசுறீங்க?”

”அப்ப அது ஊழல் இல்லீங்களா?”

“அதுவும் ஊழல்தான். ஆனா அதை ஊழல்னு ஒரு யோக்கியன் தான் பேசணும்” என்றார்.

”ஏன் அப்படி?”

“ஏசுநாதர் சொல்லிருக்காருங்க. நீ யோகியன்னா அடுத்தவன தப்பு சொல்லு, அப்படின்னு”.

“அதே ஏசுநாதரு ஒரு கன்னத்துல அறைஞ்சா மறுகன்னத்த காட்டுன்னு சொல்லிருக்காரே?

நண்பர் சிரிப்பை அடக்க முடியாமல் கெக்கெக்கே.....

“அதுக்கு?” என்றார் அசரீரியார்.

“அதே மாதிரிதான் ஒரு விஷயத்துல ஊழல் செஞ்சா இன்னோண்ணுலயும் செஞ்சுக்கங்கய்யானு விட்டுடணுமா?” என்றேன்.

” நீங்கள்ளாம் வெளங்க மாட்டீங்க. ஒங்களுக்கு நல்லது சொன்னா புரியாது. நல்லவனா இருக்கணும்ங்கிற எண்ணமே இல்லை. உங்களுக்கு புத்தி சொல்ல வந்ததுக்கு என் புத்திய செருப்பால அடிச்சுக்கணும். இந்தக் காலப் பசங்களுக்கு யோக்கியமா இருக்கிறதுன்னா என்னன்னே தெரியலை.” என்று அடுக்கிக் கொண்டே அருகில் இருந்த வயதானவரிடம் ஆரம்பித்தார். விட்டது சனி என்று நானும் நண்பரும் நிம்மதியானோம்.


வேறொரு விவகாரம். நான் மயிலாப்பூரில் இருந்த சமயம். வார விடுமுறை நாட்களில் கபாலி கோவிலுக்குப் போய் அம்மன் சந்நிதியில் லலிதா த்ரிசதி சொல்லிவிட்டு வருவேன். அப்போது ஒரு நாத்திகப் பிரச்சார போஸ்டர் கண்ணில் பட்டது. படித்துவிட்டு நகர்ந்தேன். ஒரு பெரியவர் நெற்றி நிறைய விபூதி குங்குமத்துடன் இருந்தார். பேசினார்.

'நாத்திகர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?  என்றார்.

“தெரியும்” என்றேன்.

”இந்த போஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”என்றார்.

“தேவையற்ற சீண்டல்”

“சீண்டினாலும் கோபப்படட்க் கூடாது. உண்மையான ஆன்மீகவாதி கோபப்பட மாட்டான் தெரியுமா?”

“சூரனை சம்ஹாரம் செய்ய முருகன் கோபப்பட்டானே. முருகன் ஆன்மீகவாதி இல்லையோ?”


”ஆத்திகனில் கெட்டவனும் இருக்கிறான். நாத்திகனில் நல்லவனும் இருக்கிறான். ராஜாஜி எவ்வளவு பெரிய ஆத்திகர்! ஆனால் பெரியாருக்கு நண்பர் தெரியுமா?” என்றார்.

’இந்த ஹிந்துமத நம்பிக்கையை மட்டும் தாக்கிப் பேசிட்டு முஸ்லிமாக மாறு என்று அம்பேத்கரிடம் சொன்னாரே ராமசாமி நாயுடு என்று ஒரு ஈரோட்டுக்காரர் அவரைத் தானே பெரியார் என்று சொல்கிறீர்கள்’, என்றேன்.

”Fanatic மாதிரி பேசுகிறீர்கள்!”என்றார்.

'Can you please define fanaticism?'

'Sorry. I didn't mean you're fanatic. ஆனால் யாரையும் புண்படுத்தக் கூடாது. அது தான்”என்றார்.

’கோவில் அருகில் வந்து இப்படி போஸ்டர் ஓட்டுவது மட்டும் என்ன? புண்படுத்தாமல் புண்ணுக்கு மருந்து போடும் செயலா? என்றேன்.

”உங்களுக்கு நல்லது கெட்டது புரியவில்லை. கோவிலுக்கு வருகிறீர்கள் ஆனால் ஆன்மீகம் என்பது புரியவில்லை. அதற்கு நாளாகும்.” என்றார்

“ நீங்கள் சொல்வது போல மழுங்கலாக வாழ்வது அல்ல ஆன்மீகம். முடிந்தால் பகவத் கீதையைப் படித்துப்பாருங்கள்” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.

இதை விடக் கொடுமை. என் உறவினர் ஒருவருடன் நடந்த உரையாடல்: பேச்சு அரசியல் தலைவர்கள் பக்கம் வந்தது.

’மொரார்ஜியின் மகள் பள்ளியிறுதித் தேர்வில் தோற்றதாக அறிவித்துவிட்டார்கள். Clerical error. அவள் நன்றாகப் படிப்பவள். பள்ளியில் முதல் மதிப்பெண் பெறுபவள். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் அவளை மறு திருத்தத்துக்கு விண்ணப்பிக்கச் சொன்னார்கள். ஆனால் மொரார்ஜி கையெழுத்துப் போட மறுத்துவிட்டார். காரணம், அவர் அப்போது பம்பாய் மாகாண முதல்வர். பதவியைப் பயன்படுத்தி மகளைப் பாஸாக்கிவிட்டார் என்று யாரும் சொல்லிவிடுவார்கள். அந்தப் பெயர் வரக்கூடாது என்று மகளை 6 மாதம் கழித்து அக்டோபரில் பரீட்சை எழுதச் சொன்னார்.

’தன் மீது களாங்கம் வரக்கூடாது என்று எப்படி யோசித்து முடிவெடுத்தார் பார்த்தாயா?’ என்றார்.

‘மகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாளே?’ என் கேள்வி.

‘அவள் முட்டாள்! தகப்பனின் நிலைமை புரியாது செத்துப் போனாள். ஆனால் மொரார்ஜி கலங்கவில்லை. என் கொள்கை இது. அவள் சாவுபற்றிக் கவலைப்படவில்லை. என்னை யார் தூற்றினாலும் கவலையில்லை என்று சொன்னார். கொள்கைப் பிடிப்பு என்றால் அது” என்றார்.

‘ஆக, யார் செத்தாலும் பரவாயில்லை, தன் பெயர் கெடக்கூடாது என்பது உயர்ந்த விஷயமா? If you're true to yourself, you cannot be false to any man. யார் தூற்றினாலும் கவலையில்லை என்று இருக்கும் பெரியவர் உண்மை தன் மனசாட்சிக்குத் தெரியும் என்ற வகையில் கையெழுத்துப் போட்டிருக்கலாமே?’

’அவரது கொள்கைப் பிடிப்பு உனக்குப் புரியவில்லை.’

‘தன் பெயர் கெடக்கூடாது என்று கல்வித் துறை செய்த தவறைக் கண்டு கொள்ளாது விட்டது குற்றம். என்ன தவறு என்று ஆராய்ந்து மகள் மீது தவறில்லை என்றால் அவள் தேறினாள் என்று அறிவிப்பதில் என்ன நியாயக் குறைவு ஏற்படும்? Morarji Desai may be a good administrator. But he was an utter failure as a father.’

‘உனக்கு நல்ல விஷயங்களைப் புரியவைக்கும் அளவுக்கு எனக்குச் சக்தியில்லை. நான் தேசத் தலைவர்களின் வரலாற்றைத் தேடிப் படித்துவருகிறேன். உனக்கு நல்லது சொல்லலாம் என்று நினைத்தேன். நீ தொட்டதற்கெல்லாம் குதர்க்கம் பேசுகிறாய்.’

குதர்க்கம் எனப்படுவதி யாதெனில் யாதொன்றும்
ஏரண மறுத்துச் சொலல்.

என்று மனதில் எழுந்ததை அப்படியே நிறுத்திக் கொண்டேன்.


அடுத்த விஷயம் பேசினார் அவர்:

’சரப்ஜித்சிங் விவகாரமும் இப்படித்தான். நம் நாட்டில் கசாப்பைத் தூக்கில் போட்டோமே. அதே மாதிரி அவன் நம்மாளைத் தூக்கில் போடுகிறான். நாம் மன்னித்தால் தானே அவன் மன்னிப்பான்!’ என்றார். ’கசாப் செய்தது போல சரப்ஜித் ஏதும் செய்யவில்லையே?’ என்றதற்கு “சரப்ஜித்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் நீதிமன்றத்தை விமர்சிப்பது தவறு” என்றார். Constitutional framework  என்பதே கேள்விக்குறியாக, கேலிக்கூத்தாக இருக்கும் ஒரு நாட்டின் நீதித்துறை என்ன வகையான நியாயம் சொல்லிச் சாதித்துவிடும் என்று கேட்டேன், அவர் படித்த பத்திரிகைக் கட்டுரையை நானும் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று புத்திமதி சொன்னார்.


இவரோடு விவாதிப்பதில் அம்மஞ்சல்லிக்குப் பயன் கிடையாது என்று புரிந்தது. ஏனென்றால் இவர் விவாதிக்கவில்லை. கேள்விகளை எதிர்கொண்டு தர்க்கரீதியில் பதில் தருவதில்லை. கேள்வி கேட்டால் ’எதிர்த்துப் பேசாதே! சொல்வதைக் கேள்!!’ என்று கோபப்படுகிறார். தான் படித்ததே சரியானது. பிறரும் அதையே படித்து உய்யவேண்டும் என்பது என்ன கொள்கையோ புரியவில்லை.

இத்தகைய அனுபவம் எனக்கு முதல் முறை அல்ல. இந்த சந்தர்பங்களில் கேள்விகள் கேட்டது என் தவறு. இவர்கள் “நான் சொல்ல வருவது என்னவென்றால்” என்ற ரீதியில் பேசத் துவங்கிய போதே நகர்ந்திருக்க வேண்டும்.

இணையத்திலும் இது போன்ற பலர் உலா வருகிறார்கள். கேள்விக்குப் பதில் இல்லை என்றால் ”ஆதாரங்களை அள்ளி வீசுவேன், அசிங்கப்படுவாய்” என்று மிரட்டுவார்கள். அசராமல் ஆதாரம் எங்கே என்று கேட்டால் கேட்டவனின் சாதி என்ன என்று பார்த்து அதை விமர்சிப்பார்கள். பதிலுக்கு அவர்களை சாதிப் பேர் கொண்டு அழைத்தால் ‘நான் சாதிக்கு அப்பாற்பட்ட உத்தமன்’ என்று தமக்குத் தாமே பட்டம் வழங்கிக் கொள்வார்கள்.

எனக்கு டோண்டு ஐயாவின் Certainty of the ignorant பற்றிப்பேசும் இந்தப் பதிவு நினைவுக்கு வந்தது. அடிப்படை விவர ஆய்வே இல்லாத அறிவுரைகளையும் சம்பந்தமில்லாத கருத்துக்களையும் ஆழச் சென்று ஆராய்ந்து தெளிந்தவர்கள்  போல அள்ளி  வழங்குவோர் வரிசையில் முதலிடம் பிடிக்கக் கச்சைகட்டிக் கொண்டு முந்திச் செல்லும் மனிதர்கள் இவர்கள்.

இவர்களிடம் விவாதம் செய்யாதிருப்பது மன அமைதிக்குச் சிறந்த வழி.

2 comments:

Packirisamy N said...

I believe some never grow and matured, they only get older. There is no point wasting time with these kinds of people. If you argue with an idiot, after certain time it will be difficult for others to differentiate between you two. In Morarjee’s case he should have considered his daughter as a common public. In my view he failed as an administrator, a father and as a human as well.

Thanks.

Packirisamy N

Arun Ambie said...

Thank you Packirisamy for the comments.