ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday, 24 May 2013

மணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.


யார் போற்றப்பட வேண்டும்?

யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்?

தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்! 
பெருமையும் உரனும் ஆடூஉ மேன

அச்சமும் மடனும் நாணும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப

(தொல்காப்பியம்)

ஆடவரின் பெருமையையும், உரத்தன்மையையும், பெண்டிரின் அச்சம், மடம், நாணம் ஆகியவையும் புகழப்பட வேண்டும் என்பது தொல்காப்பியம் வகுத்த தமிழ் மரபு.அப்படிப் புகழப்பட வேண்டிய ஆடவர் யார்? 


மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் திரு அஸ்லாம் பாஷா கோரிக்கையை ஏற்று ஹைதர் அலிக்கும், கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் திரு. அ.சவுந்தரராசன் மற்றும் செல்வி.பால.பாரதியின் கோரிக்கையை ஏற்று திப்புசுல்தானுக்கும் திண்டுக்கல்லில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மே மாதம் 15 ஆம் நாள், தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிவித்தார்.

எதற்காக இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது?

முதல்வர் சொல்கிறார்!

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்த்தெழுந்து, தன்னுயிரையும் துச்சமென மதித்துப் போராடிய …....

இதில் கவனிக்கப் படவேண்டியது ”ஏகாதிபத்தியத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் எதிரான போராட்டம்”

அந்த போராட்டம் என்ன? அடிமைத்தனம் என்ன?

வரலாறு என்ன சொல்கிறது? முதலில் கிறிஸ்தவப் பாதிரியாரின் குறிப்பிலிருந்து தொடங்குவோம். கிறிஸ்தவ, முஸ்லீம்கள் சொன்னால் நமக்கு அது வேத வாக்கு ஆயிற்றே! அதுவும் வெள்ளைக்கார பாதிரியென்றால் கேட்கவே வேண்டம்! சூரியன் மேற்கே உதிக்கிறது என்றாலும் அது சரியே!. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற அக்மார்க் வெள்ளைக்கார ஐரோப்பிய பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco) தனது கிழக்கிந்தியப் பயணம் ( Voyage to East India) என்ற புத்தகத்தில் திப்புவின் கொடுமைகளை எப்படி விவரிக்கிறார்?

 ”முதலில் 30000 காட்டுமிராண்டிகள் கொண்ட ஒரு படை கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று குவித்தது. அதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்சு கமாண்டர் M. Lally தலைமையின் கீழ் ஒரு field gun unit வந்தது. திப்பு சுல்தான் ஒரு யானை மீது அமர்ந்து வந்தான், அவனைத் தொடர்ந்து மேலும் 30000 பேர்கள் கொண்ட ஒரு படை தொடர்ந்தது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் கோழிக்கோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டனர். முதலில் தாய்மார்கள் தூக்கிலிடப்பட்டார்கள், அவர்கள் கழுத்துகளில் குழந்தைகள் தொங்க விடப்பட்டனர். காட்டுமிராண்டியான திப்பு சுல்தான் நிர்வாணமான கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களையும் யானையின் கால்களில் கட்டி, அந்த யானைகளை நகரச் செய்யும் போது, ஆதரவற்ற அந்த அபலைகள், கடைசியில் சின்னாபின்னமானார்கள். கோயில்களும் சர்ச்சுகளும் எரிக்கப்பட்டன, அசுத்தப்படுத்தப் பட்டு, அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ மற்றும் ஹிந்துப் பெண்கள் முகம்மதியர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர், அதே போல அவர்களும் முகம்மதியப் பெண்டிரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டனர். எந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்தார்களோ, அவர்கள் அந்த இடத்தி லேயே தூக்கிலாடினார்கள். மேற்கூறிய சோக நிகழ்வுகள் பற்றிய சேதிகள் எல்லாம், திப்புவின் படையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், ஆலுவாவுக்கு(Aluva) அருகே இருக்கும் வரப்புழாவுக்கு வந்த போது, தெரிவித்தவை; இது தான் Carmichael Christian Missionனின் தலைமையிடம். நானே கூட படகுகள் மூலம் பல அபலைகள் தப்ப உதவினேன்.

(K.P. Padmanabha menonனின் cochin history பக்கம் 573)


பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco)  பயணக் குறிப்பு எழுதுபவர். அவர் அங்கி மாட்டினாரா?, பாவ மன்னிப்பு கொடுத்தாரா என்றெல்லாம் நம் பாவிகள் கேட்கக் கூடும். அதனால் மேலும் இரண்டு பாதிரிகளின் குறிப்பை பார்ப்போம். அப்படியாவது இந்தப் பாவிகள் நம்புவார்களா? அல்லது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகம் என்பதால் பாதிரிகளை திட்டுவார்களா? பாதிரிகளை திட்டினால் ரோமானிய கடாட்சம் கிடைக்காது என்று அஞ்சுவார்களா? அங்கியுடன் மதமாற்றம் செய்ய வந்த ஜெர்மென் மிஷனரி கண்டெஸ்ட் (Guntest) என்ன சொல்கிறார்:

“60000 பேர்கள் கொண்ட படையோடு திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து  அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது" 

இதையே மற்றொரு கிறிஸ்தவரான பார்க்ஹர்ஸ்ட் (CA Parkhurst ) உறுதி செய்கிறார்.

“கிட்டத்தட்ட மொத்த கோழிக்கோடும் தரை மட்டமாக்கப்பட்டது”

ஆமேன் சொன்ன பின் அப்பீல் உண்டா? கிறிஸ்தவர்களே சொல்லிவிட்டார்கள்! இன்னுமா சந்தேகம்? இருப்பினும் மதச்சார்பற்ற வரலாற்றாளர்களின் கருத்தையும் கொஞ்சம் படித்துப் பார்ப்போமே!


Gazetteer of Keralaவின் முன்னாள் ஆசிரியரும், பிரபலமான வரலாற்று ஆசிரியருமான திரு.ஸ்ரீதர மேனோன் (A. Sreedhara Menon) , திப்புவின் கேரளப் படையெடுப்பின் பெரு நாசம் பற்றி துல்லியமாக வர்ணித்திருக்கிறார். அவை என்ன ? படித்த பின் அவரையும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆக்கி விடாதீர்கள் தோழர்களே! பாவம் பொழச்சுப் போட்டும்!


Gazetteer of Keralaவின் முன்னாள் ஆசிரியரும், பிரபலமான வரலாற்று ஆசிரியருமான திரு.ஸ்ரீதர மேனோன் (A. Sreedhara Menon) , திப்புவின் கேரளப் படையெடுப்பின் பெரு நாசம் பற்றி துல்லியமாக வர்ணித்திருக்கிறார். அவை என்ன ? படித்த பின் அவரையும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆக்கி விடாதீர்கள் தோழர்களே! பாவம் பொழச்சுப் போட்டும்!
 

”ஹிந்துக்கள், குறிப்பாக இஸ்லாமிய கொடுமைகளை எதிர்த்த நாயர்களும், தளபதிகளும், திப்புவின் கோபத்திற்கு பிரதான இலக்கானார்கள். நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள், அவர்களின் பாரம்பரியமான சமுதாய சலுகைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், நாயர்களும், ஹிந்துக்களின் மேல்தட்டு மக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, அவர்களின் முன்னோர் இல்லங்களிலிருந்து விரட்டப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் திப்புவின் கொடுமைகளிலிருந்து தப்ப காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள், இது அவர்களின் பாதுகாப்பு உணர்வை முழுவதுமாக உலுக்கி விட்டது”.

இங்கிலீஷ்காரன் வரலாறும், கால்டுவெல்லும், மெக்காலேயையும் குரு முதல்வராகக் கொண்டு, இந்திய சிந்தனைகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் புறம் தள்ளும் சிந்தனைச் சிற்பிகளுக்கு,  மங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த ப்ரிட்டிஷ் ராணுவத்தின் கர்னல் புல்லர்டன் (fullarton) என்ற ஆங்கிலேயரின் அதிகாரபூர்வமான அறிக்கை:

ஜாமோரின் அரசனாலும், அவரது ஹிந்து படை வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்த பாலக்காடு கோட்டை முற்றுகையின் போது, 1783ம் ஆண்டு மிக கொடூரமான செயல்களை பிராமணர்கள் மீது கட்டவிழ்த்து விட்டான் திப்பு சுல்தான். திப்புவின் படை வீரர்கள் தினமும், அப்பாவி பிராமணர்களின் தலைகளை, ஜாமோரின் கோட்டையில் உள்ளவர்கள் பார்வையில் படுமாறு பிளந்தார்கள். அந்த கோரங்களை காணச் சகியாமலும், அப்பாவி பிராமணர்களின் படுகொலையை தடுக்கும் வண்ணமும் ஜாமோரின் பாலக்கோடு கோட்டையை கைவிட நேர்ந்தது” 

சொன்னால் நம்பமாட்டோம். ஆவணம் இருக்கிறதா என்று ஆணவமாகக் கேட்பார்கள் நம் உண்மை விரும்பி தோழர்களும், பகுத்தறிவுப் பெட்டகங்களும். பல்வேறு ராணுவ பிரிவுகளுக்கு திப்பு அனுப்பிய முதன்மை ஆணை, பாலக்கோடு கோட்டையை ஆங்கிலேயக் கம்பெனி 1790ல் கைப்பற்றிய போது ஆவணங்களில் கண்டெடுக்கப்பட்டது. இது malabar manualன் பக்கம் 510ல் அடிக்குறிப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.  

“இது அனைத்து ராணுவப் பிரிவுகளுக்கும் என்ன அறிவுறுத்தியது என்றால், மாவட்டத்தில் உள்ள அனைவரும் இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும், அவர்கள் மறைவிடங்களிலிருந்து அவர்களை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவரையும் இஸ்லாத்துக்கு மாற்ற, உண்மையோ, பொய்யோ, ஏய்ப்போ, பலப் பிரயோகமோ, எதை வேண்டுமானாலும் கையாள வேண்டும்”.

திப்புவுக்கு மணிமண்டபம் வைக்க ஒரு தகுதி உள்ளது என்று நம் திப்புவின் பிரஜைகள் வாதிட ஒரு காரணம் இருக்கிறது.  பார்ப்பானை கொன்றான் ! தீபாவளியை ஒழித்தான்! சமஸ்கிருத கல்விச் சாலையை அழித்தான்! இதைவிட வேறு என்ன வேண்டும் ? இத்தகவலை எனது நண்பரும், மூத்த ஆராய்ச்சியாளருமான திருமதி.ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் எனக்கு அனுப்பினார். அதை  இந்த இணைப்பில் காணலாம் (http://groups.yahoo.com/group/ramanuja/message/4857).


”அண்மைக்கால வரலாற்றில், யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை  ஆளப்பட்டு வந்தது. அவரது வம்ஸத்தவர் பல நீர் நிலைகளை ஏற்படுத்தினார்கள் - கல்யாணிகள் - அவைமிக திறன் மிக்கவையாகவும் அழகாகவும் இருந்தன. அங்கே ஒரு சிறிய அளவிலான பண்டித குழுவினர் தழைத்தார்கள். 19ம் நூற்றாண்டின் முற்பகுதில், திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது, அவர்களில் பெரும்பாலானோர், மாண்டயம் ஐயங்கார்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். சம்ஸ்க்ருத பாண்டித்யம்தான் அவர்களின் பலமாக இருந்தது. (இன்று வரை மேல்கோட்டையில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.) அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது, கல்யாணிகள் நாசமாகின, நீர் பற்றாக்குறை பீடித்தது, குன்றுகள் வறண்டன, சம்ஸ்க்ருதம் தனது இல்லங்களில் ஒன்றை இழந்தது.”
அப்பாடா! இதற்காகவாவது மணிமண்டபம் கட்ட வேண்டாமா? வீரமணி மண்டபத்தில் விருந்து வைப்பார்! கவலை வேண்டாம்!

மயக்கமற்ற நிலையில் ஒரு மனிதனாகப் பார்த்தால், இப்படி, ஆண், பெண், பச்சிளங்குழந்தைகள் என்று பாகுபாடில்லாமல் மக்களை சித்திரவதை செய்து கொன்று குவித்து, சொத்துக்களை சூறையாடி, வாள் முனையில் லட்சக்கணக்கானோரை மதமாற்றிய  திப்பு மற்றும் ஹைதர் அலியின் கொடுமைகளை ஏகாதிபத்திய அடிமைத்தள எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்ல முடியுமா? 

வரலாறு என்பது, ஆதிக்க வர்க்கம் அவர்களுக்கு சாதகமாக எழுதுவது என்று பாடம் சொல்லும் கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையில் உதித்த மணிமண்டபமாயிற்றே? அதனால் இதை பூஷ்வாக்களின் ஒப்பாரி என்று கூடச்சொல்வார்கள். அப்படியென்றால் முஸ்லீம்களின் வரலாற்றுக் குறிப்பு ஏதேனும் உள்ளதா? முஸ்லீம்கள் சொன்னால் இந்த நாட்டில் எதை வேண்டுமென்றாலும் நம்பலாமே! அவுரங்கசீபின் கொடுமைகளை சித்தரிக்கும் கண்காட்சி, முஸ்லீம்கள் அவுரங்கசீப் ’நல்லவன்’ - னு சொன்னதால் தானே மார்ச்சு 6, 2008 அன்று சென்னையில் நிறுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் முஸ்லீம்களின் குறிப்பை இந்த அறிவை தின்று உயிர் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

மைசூர் ராணுவத்தின் ஒரு இஸ்லாமிய அதிகாரி  இஸ்லாமிய கொடுமைகளை தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார், அதனை திப்புவின் 11வது மகனும் உயிர் தப்பிய ஒரே வாரிசுமான குலாம் முகம்மது சுருக்கமாக எழுதியுள்ளார். (இந்த இளவரசர் குலாம் முகம்மது, திப்பு சுல்தான் 1799ல் இறந்த  பின்னர் ப்ரிட்டிஷாரால் கொல்கொத்தாவுக்கு நாடுகடத்தப்பட்டார்) இதோ அந்தப் பொன் எழுத்துக்கள் உங்கள் பார்வைக்கு...

“4 காத தொலைவு வரை தெருக்களில் எதையும் காணவில்லை, ஹிந்துக்களின் சிதறிய உறுப்புகளையும், சிதைவடைந்த உடல்களையும் தவிர எதையும் பார்க்க முடியவில்லை. நாயர்களின் (ஹிந்துக்கள்) நாடு, பொதுவான கிலியால் பீடிக்கப்பட்டிருந்தது, அதனை ஹைதர் அலிகானின் படையெடுக்கும் குதிரைப்படையின் பின்னே வந்த மாப்பிள்ளைகளின் கொடூரம் மிகவும் அதிகப்படுத்தியது; அவர்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரையும் படுகொலை செய்தனர்; கொந்தளித்து வரும் இந்த மாப்பிள்ளைகளின் பெரும்படையின் நடத்தை காரணமாக எந்த எதிர்ப்பும் இல்லாதது மட்டுமல்லாமல், கிராமங்கள், கோட்டைகள், கோவில்கள், மக்களின் அனைத்து வசிப்பிடங்கள் என எல்லாமே ஆளரவமற்று இருந்தன. (பக்கம் 461)

திரும்பிய பக்கமெல்லாம் ஹைதர் அலி கானுக்கு எதிர்ப்பே காணப்படவில்லை; ஒவ்வொரு வசிப்பிடமும் கைவிடப்பட்டு, அதில் வசித்து வந்த பொது மக்கள் பாவம், காடுகளுக்கும், மலைகளுக்கும் தப்பிச் சென்றனர்; அங்கும் அவர்களின் துரதிர்ஷ்டம் துரத்தி வந்தது. பிராமண தூதுவர்களை ஹைதர் அலி கான் காடுகளுக்கு அனுப்பி வைத்து, தான் ஓடிப் போன ஹிந்துக்களை மன்னிப்பதாக வாக்களித்தான். ஆனால் கருணை, மன்னிப்பு என்ற வாக்குக்கு செவி சாய்த்து திரும்பி வந்த அந்த அபலைகளை, வட இந்தியாவின் இஸ்லாமிய கொடுங்கோலனைப் போலவே தூக்கிலிட்டான், அவர்களின் பெண்டிரும், குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டனர் (ப.468)


கேரளத்தை விட்டு அகலும் முன்பாக ஹைதர் அலி கான், நாயர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சமுதாய, அரசியல் உரிமைகளைப் பறிப்பதாக பிரகடனப்படுத்தினான், அவர்கள் ஆயுதங்களை தாங்க முடியாது. இந்த பிரகடனத்தினால், தன்மானம் உள்ள நாயர்களை தலை வணங்கச் செய்ய முடியவில்லை, ஏனென்றால், இத்தகைய அவமானங்களையும், சீர்கேட்டையும் விட மரணமே மேல் என்று நினைத்திருக்கலாம். அதனால் ஹைதர் அலி கான் வேறு ஒரு பிரகடனத்தை பிறப்பித்தான், அதன்படி, எந்த நாயர்கள் இஸ்லாத்தை தழுவ முன் வருகிறார்களோ, அவர்களுக்கு சமுதாய, அரசியல் உரிமைகள் மீட்கப்படுவதோடு, அவர்கள் ஆயுதங்களும் தாங்கலாம் என்று அறிவித்தான். பல பிரபுக்கள் இஸ்லாத்தை தழுவ வேண்டி இருந்தது; ஆனால் கணிசமான பெரும்பகுதியினர் (நாயர்கள், பிரபுக்கள், பிராம்மணர்கள்) இந்த கடைசி பிரகடனத்திற்கு தலைவணங்குவதைக் காட்டிலும், தெற்குப் பகுதியில் இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுவதையே மேல் என்று கருதினார்கள்”. (பக்கம் 469)

1782 முடிவு வாக்கில் திப்பு மைசூரின் சுல்தானான போது, வடக்கு மலபாரின் அனைத்து ராஜாக்களும், தளபதிகளும் புரட்சி செய்து, சுதந்திரப் பிரகடனம் செய்தார்கள். பிரிட்டிஷாரும் வல்லமை அதிகம் பெற்றவர்களாக இருந்தார்கள். மலபாரை விட்டு ஹைதர் அலி கான் சென்ற பிறகு, மைசூரின் ஆளுமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய சமஸ்தானங்களை மீண்டும் அடக்கி, மீட்டெடுப்பதே திப்புவின் முற்கால ராணுவ செயல்பாடாக இருந்தது. இதுவரை மிகவும் அமைதியான, நேர்மையான பிராமணர்களே, உயர் இடங்களுக்கு தூதுவர்களாக அனுப்பப்பட்டு வந்தார்கள். ஆனால் திப்புவின் ஆணைக்குட்பட்டு, “அவர்கள் பிடிக்கப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டு, இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்கள்” அதனால் அவர்கள் திப்புவுக்கு தூதுவர்களாக செயல்படுவதை ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வாக்களித்த பிரிட்டிஷாருடைய தூதுகளையும் ஏற்று மலபாருக்கு செல்ல மறுத்தார்கள். கோழிக்கோட்டிலிருந்து உறுதியாக தெரிய வந்த தகவல் என்னவென்றால், அங்கே 200 பிராமணர்கள் பிடிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, மாட்டிறைச்சி புகட்டப்பட்டார்கள், அவர்கள் பாரம்பரியத்துக்கு எதிரான விஷயங்களை செய்ய வைக்கப்பட்டார்கள்” (பக்கம் 507).


இப்படி எழுதிய திப்புவின் மகன், ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டவன். ஆங்கிலேயர்கள் அவனை இப்படி எழுதச் சொல்லியிருப்பார்கள். எழுதிய பேனாவின் மை தொழிலாளர்களின் இரத்தத்தால் உருவானது அதை மார்க்ஸ்தான் முதலில் கண்டுபிடித்தார் என்று கூட ஒரு வாதத்தை இந்த சுல்தான்களின் அடிவருடிகள் முன்வைக்கலாம். அதிர்ஷ்டவசமாக திப்புவின் திருக்கரங்களால் எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்துள்ளன. மலையாள பஞ்சாங்கப்படி சிங்கம் 1099ம் ஆண்டு, அதாவது ஆகஸ்ட் மாதம் 1923ம் ஆண்டு பாஷா போஷினி பத்திரிக்கையில் சர்தார் கே.எம்.பணிக்கர் (Sardar K.M Panicker) வெளியிட்ட சில ஆய்வுக் கட்டுரைகள் திப்புவை தோலுரித்துக் காட்டுகிறது. கேரள வரலாறு பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்வுக்காக அவர் அவற்றை லண்டனில் இருக்கும் The India Office Libraryயிலிருந்து கொணர்ந்தார் என்பதும் மேற்கோளில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகளை சுல்தான் - உத் - தவரிக் (Sultan-ut Tawarikh) மற்றும் தரிக் - இ – குடடாடி ( Tarikh-i-Khudadadi) என்ற இந்த காட்டுமிராண்டிகளின் சுய சரிதத்திலிருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.

“நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”

1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:

“12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”

1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:

“நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.

ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:

“242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.

1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai)  எழுதிய கடிதம்:

”நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப்புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”.

இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தப் புத்தகங்கள் கூட ஏகாதிபத்திய, அடக்குமுறையாளர்களின் நூலகத்திலிருந்தது எடுக்கப்பட்டது தானே! என்று நம் புரட்சியாளர்கள் வாதிடலாம்.இதை அன்றே திப்பு அறிந்திருந்தான். இந்த பிரச்சினை நாளை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில்  பொறிக்கப்பட்டுள்ளது.


"நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”

ஒரு இனம் எப்படி அழியவேண்டும் என்பதை ஈவு இரக்கமில்லாத கொடுமைக்காரன் எப்படி அனுபவித்து வருணிப்பான்! கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து விட்டு இதை படியுங்கள். இந்த வாசகம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், கோட்டையின் மிக முக்கியமான இடத்தில் 1780ல் நடைபெற்ற போரின் நினைவாக பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 1795 ல் கண்டெடுக்கப்பட்டது.

”ஓ சர்வவல்லமை பொருந்திய இறைவா! விசுவாசிகள் அல்லாதவர்களின் உடலை ஒழித்து விடு! அவர்கள் இனத்தை சின்னாபின்னமாக்கு! அவர்கள் கால்களை தடுமாறச் செய்! அவர்கள் சபைகளை தூக்கியெறி! அவர்கள் நாட்டை மாற்று, அவர்களை வேரடி மண்ணோடு நிர்மூலமாக்கு! அவர்களுக்கு பிரியமானவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்து! உயிர் வாழும் வழிகளை அழித்து விடு! அவர்கள் வாழ்நாளை குறைத்து விடு! மரணம் அவர்களை நிழலைப் போலத் தொடரட்டும்! அவர்கள் உடலை நோய் பீடிக்குமாறு செய்! அவர்கள் கண்பார்வையை மங்கச் செய்!, அவர்கள் முகத்தில் கரியை பூசு (அவமானத்தை உரித்தாக்கு)”
 
இந்த ஸ்ரீரங்கபட்டினக் கோட்டையில் சில  தங்கப் பதக்கங்கள் கண்டெடுக்கப்பட்டன; அதில் ஒரு பக்கத்தில் பாரசீக மொழியில், :”ஆசிகளை நல்குவது கடவுள் ”, என்றும், மறு பக்கத்தில் “வெற்றியும் படையெடுப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன”. என்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதமாற்றம் இதெல்லாம் அல்லாவின் ஆணைப்படி செய்தேன்! இஸ்லாத்தின் அடிப்படையே இந்த ஜிஹாத் என்ற கொலை வெறி என்பதை அரங்கேற்றிய திப்பு சுல்தானே ஒப்புக் கொண்டுவிட்டான் ஆனால் மைனாரிட்டிகளுக்கு ஷாம்பூ போடும் இடதுசாரிகள், இத்தாலி சாரிகள், கழகக் கண்மணிகள், மற்றும் அறிவைமட்டுமே தின்று உயிர் வாழும் அறிவுஜீவிகள் ஒத்துக்கொள்வார்களா?
இப்படி வெறியாட்டம் ஆடிய ரத்தக்காட்டேரிகள் ஆலயங்களை விட்டு வைத்திருப்பார்களா என்ன? ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

Mysore Gazetteer, சூறையாடும் திப்பு சுல்தானின் படை, தென்னிந்தியாவின் 8000த்திற்கும் மேற்பட்ட கோயில்களை அழித்ததாக கூறுகிறது. மலபார், கொச்சின் சமஸ்தானங்கள் தான் இந்த கொள்ளை மற்றும் நாச வேலையின் பெரும் பகுதியை ஏற்க வேண்டியிருந்தது என்று பதிவு செய்துள்ளது.

திரு கே.பி.பத்மநாப மேனோன் (K.P. Padmanabha memon) அவர்கள் எழுதிய History of Cochin, திரு ஏ.ஸ்ரீதர மேனோன் (A Sreedhara Menon) எழுதிய History of Keralaஆகிய நூல்கள், திப்புவால் தரைமட்டமாக்கப்பட்ட கோயில்களை பட்டியலிடுகின்றன.

மலையாள ஆண்டு, சிங்கம் 952, அதாவது ஆகஸ்ட் 1786ல், திப்புவின் படை பிரபலமான பெருமனம் கோயிலின் விக்ரகங்களை அழித்து, திரிசூர் மற்றும் கருவனூர் ஆறுகளுக்கு இடையே இருந்த அனைத்து கோயில்களையும் நாசம் செய்தது. ”இரிஞ்சாலக்குடா, திருவஞ்சிக்குளம் கோயில்களும் திப்புவின் படையினரால், அசுத்தம் செய்யப்பட்டு நாசம் செய்யப்பட்டன.”

அவர்கள் சூறையாடி நாசம் செய்த பிரபலமான கோயில்களில் சில: த்ரிப்ராங்கோட், த்ரிச்செம்பரம், திருநாவாய், திருவன்னூர், கோழிக்கோடு தளி ஹேமாம்பிகா கோயில், பாலக்கோட்டில் உள்ள சமண கோயில், மம்மியூர், பரம்படலி, வெங்கிதாங்கு, பெம்மாயநாடு, திருவஞ்சிக்குளம், தெருமனம், திருசூரின் வடக்கநாதன் கோயில், பேலூர் சிவன் கோயில், ஸ்ரீ வெலியானட்டுக்கவா, வரக்கல், புது, கோவிந்தபுரம், கேரளாதீச்வரா, த்ரிகண்டியூர், சுகபுரம், ஆல்வன்சேரி தம்ரக்கால், ஆரநாடின் வெங்கார கோவில்,  ராமநாதக்கரா, அழிஞ்சாலம் இந்தியன்னூர், மன்னூர் நாராயண கன்னியார், மாடை வடுகுந்த சிவன் கோயில்.


கோயில்களை இடிப்பதை ஒரு இறை பணியாகக் கொண்டிருந்தான் திப்பு என்பதை சர்தார் பணிக்கைகர் தனது புத்தகமான  Freedom Struggle ல் குறிப்பிடுகிறார்.

திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்.


இப்படிப்பட்ட வன்கொடுமையாளனை மத நல்லிணக்கவாதியாக சித்தரித்து திப்புவின் வாள் (sword of Tippu Sulthan)  என்ற தொலைக்காட்சித் தொடர் நம் நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, திப்பு எப்படி அனைத்து மதத்தவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தினான் என்று சில அறிவு ஜீவிகள் கட்டுரைகளும், தொலைக்காட்சிப் பெட்டியில் பேட்டிகளும் கொடுத்து முஸ்லீம்கள் அருள் வேண்டி மண்டியிட்டனர். உண்மையிலேயே இந்துக்கள் மீது திப்பு மதிப்பு வைத்திருந்தானா? இதோ முனைவர். எம். கங்காதரன் மாத்ருபூமி வார இதழில் ஜனவரி 14-20, 1990ல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

“திப்புவின் காலத்தில் மைசூரில் நிலவிய சமுதாய, சமய, அரசியல் நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, இது போன்றவற்றை தவிர்க்க முடியாது. ச்ருங்கேரி மடத்துக்கு கெட்ட ஆவிகளை விரட்ட நிதி உதவி கொடுக்கப்படுவது பற்றிய தகவலும், திப்பு சுல்தான் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவே ஹிந்து சமயத்தை திப்பு மதித்தான் என்பதற்கு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது.”

மேலும் திப்புவின் போலி மத சகிப்புத்தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் லூயிஸ் ரைஸ் (Lewis Rice)

ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டைக்குள்ளே 2 ஹிந்துக் கோயில்களின் பூஜைகள் நடைபெற்று வந்தன, மற்ற கோயில்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிர்வாக விஷயங்களிலும் கூட இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக பாரபட்சம் காட்டப்பட்டது, குறிப்பாக வரிவிதிப்பு கொள்கையில். இஸ்லாமியர்கள் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு பெற்றிருந்தார்கள். இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது என்கிறார் கோபால் ராவ். வேலை வாய்ப்பு விஷயத்தில், ஹிந்துக்கள் முடிந்த வரை விலக்கி வைக்கப்பட்டார்கள். திப்பு சுல்தானின் மொத்த 16 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், முக்கியமான பதவி வகித்த ஒரே ஹிந்து அதிகாரி பூர்ணைய்யா தான்.

இந்த திப்பு மற்றும் ஹைதர் அலியின் கொடுமைகளும், கோர தாண்டவங்களும் இன்றளவும் கூட கேரள மக்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுல்தான்களின் காலத்திலும் சரி, சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி, மதமாறிய முஸ்லீம்கள், எல்லைதாண்டிய இஸ்லாமிய விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர் என்ற செய்தியை நாடறிந்த சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. கே.மாதவன் நாயர் எப்படி பதிவு செய்கிறார்? இதோ அந்தப் பதிவு...

“கொடூரமான மாப்பிள்ளை லஹலா (1921ல் மலபாரில் நடந்த கிலாஃபத் கலவரத்தின்) தோற்றுவாயை, திப்பு சுல்தான் நிகழ்த்திய படயோட்டக்கலத்தின் பரவலான, கட்டாயமான மதமாற்றம் மற்றும் கொடுமைகளின் பின் விளைவுகளில் காண முடியும்.”

இந்திய வரலாறு! ஏன், உலக வரலாற்றிலேயே நாகரீகமான எந்த சமுதாயமும் வெட்கித் தலை குனியும் அளவுக்கு அரங்கேறிய மாப்பிளா கலகத்தின் தோற்றுவாய் என்று சுமார் 150 ஆண்டுகளுக்குப் பின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அளவுக்கு மேற்கோள் காட்டப்பட்ட கொடுமை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த கொலைகார, கொள்ளைக்கார, காட்டுமிராண்டிகளுக்கு முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் மண்ணிலும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் மண்ணிலும்.அறம் வளர்த்த ஒளவையும் வள்ளுவனும் வாழ்ந்த மண்ணில் மணிமண்டபமா?

சங்க இலக்கியமான புறநானூறு பெருங்குற்றங்களாக எவைகளை சுட்டிக் காட்டுகிறது?

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

பார்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வடுவாய் முழுங்கிற் கழுவாயு முளவென

நிலம்புடை பெயர்வ கொடுமை யோர்க்கும்

செய்தி கொன்றோர்க்குய்தி யில்லென

புறநானூறு (34 : 1-6)

நன்றி மறப்பது தான் பெரிய குற்றம் என்பதை சொல்ல, மகா பாதகங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.  காறாம் பசுவின் மடுவை அறுத்தல், வேத அந்தணரை கொலை செய்தல் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் கருவைச் சிதைத்தல் சங்கத் தமிழர்களால் மகா பாதகங்களாக கருதப்பட்டுள்ளது. இந்தப் பெரும் குற்றங்கள் அனைத்தையும் செய்த ஈனப் பிறவிகளுக்கு, தமிழ்தாய் சிலையும், வள்ளுவர் சிலையும் வைத்து, நான் தான் 'ஒரிஜினல்' தமிழன் என்று மார்தட்டும் தமிழர்கள் மணிமண்டபம் எழுப்பப் போகிறார்களாம்! முஸ்லீம் ஓட்டுக்காக இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவைதானா? தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?

No comments: