ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday, 24 November 2012

திடீரென்று மேடையேற்றி விட்டால் சமாளிப்பது எப்படி?

சென்ற சனிக்கிழமை 17/11/12 அன்று மாலை குரோம்பேட்டை வட்டாரம் குமரன் குன்றம் அருகில் உள்ள விவேகானந்தா பள்ளியில் தமிழ்நாடு வாசகர் வட்டம் கூட்டம் இருக்கிறது என்று திராவிட மாயை சுப்பு அவர்கள் தெரிவித்திருந்தார். கூட்டம் 6 மணிக்குத் தொடங்கும் என்று சொல்லியிருந்தார். போகிற வழியில் எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கிவிட்டு நடையைக் கட்டினேன்.


குமரன் குன்றம்

பள்ளிக்கு எதிரே இருந்த கட்டிடத்தில் ஏதோவொரு பாரதி விழா. சிறு குழப்பம். இருந்தாலும் பள்ளிக் காவலாளியிடம் சுப்புஜி எங்கே பேசுகிறார் என்றேன். உள்ளே கை காட்டினார். பதிலா அல்லது அங்கே கேள் என்கிறாரா என்று தெரியாமலேயே உள்ளே போனேன். அங்கே ஒருவரிடம் “ஐயா இந்த வாசகர் வட்டம்....” என்றதும் ’அங்கே’ என்று வழிகாட்டினார். மணி 6.05 ஆகியிருந்தது. தாமதத்துக்குச் சொல்ல காரணம் யோசித்தபடியே போனேன்.

அங்கே தேநீர் அருந்தியபின் கூட்டம் தொடங்கும் என்று சொல்லிவிட்டார்கள். சமோசாவும் தேநீரும் சாப்பிடும் போது சுப்பு அவர்களோடு கதைத்தேன். அவர் ஒரு பெரிய காவல்துறை அதிகாரியைப் பேட்டி எடுத்த கதை சொன்னார். அந்த அதிகாரி உடல் எடையைக் கட்டுக்குள் பேண அரிசி சாதம் உண்பது அபூர்வமாம். இருப்பது கொஞ்சநாள் நல்லா சாப்பிடுவோமே என்ற என் கொள்கைக்கு காவல்துறையில் சிலர் ஒத்துவராமாட்டார்கள் என்று புரிந்தது.
கூட்டம் தொடங்கியது. இறைவணக்கம். அறிமுகம் எல்லாம் முடிந்து ஒவ்வொருவராகப் பேசினார்கள். நம் ஹிந்து தர்மம் மட்டுமே taken for granted ஆகியிருப்பதும் நம்மை வசைபாடுவோர், நம்மை நகையாடுவோர் என்று ஒரு கூட்டம் இருப்பது பற்றியும் பலர் வருத்தப்பட்டார்கள். பலர் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

திருப்பதி கோவிலில் கீதை, பைபிள், குரான் ஆகியவற்றில் உள்ள வாசகங்களை அச்சிட்டு தரிசன வரிசையில் காத்திருப்போருக்கு வழங்கவேண்டும், அப்போது நேரத்தை நல்ல விஷயங்கள் படித்துக் கழிக்க முடியும் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே நடந்த முயற்சி பற்றியும் அது முறியடிக்கப்பட்ட விதம் குறித்தும் சுப்பு அவர்கள் விளக்கினார். இந்த செக்யூலர்வாதிகள் இப்படித்தான் எப்போதுமேவா இல்லை எப்போதுமே இப்படித்தானா தெரியவில்லை?

பிரபலமான டிவியில் இருந்து தற்போது விலகி வந்த ஒரு அன்பர் மக்களின் சிந்தனையை எப்படி மீடியா திசை திருப்ப முடியும் என்று விளக்கினார். ஒரு பக்கம் சார்ந்த செய்திகளையே நம்பும்படியாகக் கொடுத்து சற்றே  cat on the wall ஆக இருப்போரை தம் பக்கம் குதிக்கச் செய்யும் வித்தை அது. ஹிட்லர் பின்பற்றியது இந்தக் கொள்கை. திராவிடம் தழைத்தோங்க உதவியதும் இதே கொள்கை.

திடீரென்று அருண்பிரபு பேசுவார் என்றார் சுப்பு அவர்கள்.  நானா?  ஆமாம் வா என்றார். ஜாலியாக உட்கார்ந்து பெரியவர்கள் பேசுவதைக் கேட்டுவிட்டு வந்து பதிவு போடலாம் என்று போனால் நான் பேசவா? மேடையில் நின்று பார்த்ததும் எதிரில் இருப்போர் எல்லாம் பல விஷயங்களைப் பல கோணங்களில் அலசியவர்கள் என்று உறைத்தது. நா எழத் தயங்கியது.

என்னடா இது பாண்டிய நாட்டானுக்குப் பல்லவ நாட்டில் வந்த சோதனை? ”முருகா! சவாலைச் சமாளிக்க்க நீதான் உதவ வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு யாரும் இதுவரை தொடாத விஷயம் எது என்று யோசித்தேன். கணத்தில் ஃப்ளாஷ் அடித்தது. வெளியுறவுக் கொள்கை. (நேரு மாமா முதல் நட்வர் சிங் வரை வாழ்க.) பேசத் தரப்பட்டது 2 நிமிடங்கள். 

வணக்கம் வந்தனம் எல்லாம் போட்டு ஒரு 20 விநாடிகள் போனது. நான் சொல்லவருவது என்னவென்றால் என்று துவக்கி மீதி 100 நொடிகளில் வெளியுறவுக் கொள்கை நேரு காலத்தில் இருந்து சோனியா காலம் வரை நாட்டு நலனை அடகு வைப்பதாகவே உள்ளது. உருப்படியாகச் சிந்திக்கும் வெளியுறவுக் கொள்கை விற்பன்னர்கள் நாட்டில் அதிகமில்லை. அதை முதலில் சரி செய்யவேண்டும். வெளியுறவு மிக முக்கியமான விஷயம் அதை நம் மக்கள் சரியான விதத்தில் அணுகுவதில்லை என்று சொன்னேன்.

2 நிமிடங்கள் முடிந்தது. விடை பெற்று வந்துவிட்டேன். இருக்கையில் வந்து அமர்ந்ததும் பல விஷயங்கள் மனதில் ஓடின. இதையெல்லாம் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. சொதப்பிட்டோமோ என்று யோசித்து எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். மேடையில் நின்று யோசித்துக் கொண்டிருக்க  முடியாது. யோசிக்காமல் பேச இது திமுக மேடையும் கிடையாது. திடீரென்று அழைத்தாலும் ப்ரமாதமாய்ப் பேச கூட்டம் திடீர் நகரிலா நடந்தது? சரி விடு.. (முகத்தைத் துடைத்துக் கொள்)


பத்திரிகையாளர் விஜயன் மிகச் சரியான நரம்பைப் பிடித்து மீட்டினார். வளர்ந்து கெட்டுப்போனவர்களைத் திருத்தித் திரும்ப அழைத்துவருவதைவிட வருமுன் காப்பது போல குழந்தைகளிடம் நம் தர்மத்தின் மேன்மை, பெருமைகள் குறித்துப் பேசி அவர்களை நல்வழியில் நடத்தலாம் என்று கூறினார். பசுமரத்தாணியை நாமும் அடிப்போம்.

பிறகு விஜயபாரதம் ஆசிரியர் வீரபாகு அவர்கள் பேசினார். தெளிவாக பலவிஷயங்கள் விளக்கினார். இந்துக்கள் மனம் புண்பட்டால் ஏன் போராடவில்லை என்று நீதிபதி கேட்டதைக் கூறினார். இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவோர் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து தப்பும் விதம் அதைத் தடுக்கப் போராடும் உணர்வு வேண்டும் என்று பேசினார்.

கூட்டம் முடிந்தது. விஜயபாரதம் சந்தா கட்ட வேண்டும் என்றேன். வீரபாகு அவர்கள் விவரம் சொன்னார். இன்னும் கட்டவில்லை. விரைவில் கட்ட எண்ணம். சற்றே அறிமுகம் ஆனோரிடம் சிறிதே பேசிவிட்டு வீடு நோக்கி நடையைக் கட்டினேன். வரும் போதும் முருகனுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு வந்தேன். கவிஞர் வாலி எழுதிய கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் என்ற முருகன் பாடல் நினைவில் மோதியது. கூவாமல் நினைத்ததற்கே கைகொடுத்தவனாயிற்றே.

No comments: