ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 18 April 2016

ஆநிரை பேணலும் அறவழி நிற்றலும்

பசு மாடு சிறு வயதிலிருந்து பழகிய ஜீவன். நடுவே சிலகாலம் டச் இல்லை. பள்ளிக்கூட நண்பர்களைப் போல. விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு இராஜபாளையம் செல்கையில் எங்கள் வீட்டுப் பசுவைக் கண்டு குசல விசாரிப்புகள் முடித்துத் தான் வீட்டுக்குள்ளேயே போவேன். அந்தப் பசு கன்று ஈன்ற போது அதைப் பார்ப்பது பார்வதி-பரமேஸ்வரனை நேரில் தரிசிப்பது போல என்று சொல்லக்கேட்டு ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை கொட்டிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டுக் கணக்கு வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சீம்பாலின் சுவை  குறித்து யாரோ சொல்லத் தொடங்க தரிசனக் கணக்கு மறந்துவிட்டது!



பிறகு பராமரிக்க இயலவில்லை என்று 70க்கு மேல் வயதான தாத்தாவும் 60ஐக் கடந்த பாட்டியும் பசுவை பால் வியாபாரம் செய்யும் யாருக்கோ கொடுத்துவிட்டார்கள். பசு அவரிடம் இருந்தவரை அதைப் பால் பண்ணையில் கண்டு குசலங்கள் பேசுவதுண்டு. அதன் பிறகு கொஞ்சம் படிப்பு, பணி என்று போய் கார்பொரேட் உலகில் நுழைந்த பிறகு பசு பற்றிய நினைவே இல்லை.

(24மணி நேரமும் ஆபீஸ் ஆபீஸ் என்று இருந்தால் வேறு என்னதான் நினைவிருக்கும் என்பார் என் தாயார். கார்பொரேட் கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாதவர். பொது ஆண்டு 2010ல் ஒரு முறை மூன்றாம் நாளாக வீட்டுக்குப் போகாமல் ஆபீஸே கதி என்று இருந்து வேலை செய்து அதன்பின் காய்ச்சல் கண்டு வீட்டில் படுத்துக் கொண்டேன். மறுநாள் செல்பேசியில் என் மேலாளர் எப்போ ஆபீஸ் வருவே என்று கேட்க அழைத்திருக்கிறார்.  போனை எடுத்த அம்மா என் மகனுக்கு எதாவது உடம்புக்கு பிரச்சினை என்று தெரிந்தால் உன்னைப் போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என்று கடுந்து சொல்ல மேனேஜர் 2 நாள் ஜுரம் கண்டு வீட்டில் படுத்தார். அப்போதும் விடாமல் ”அவன் இப்போ ஜுரத்தோட ஆபீஸ் போறானா? உன்ன மட்டும் கூப்டான்?” என்று கேட்ட வீரப்பெண்மணி)

சரி... பசுத்தாய் பற்றிய விவரத்துக்கு வருவோம். சென்னையில் அதுவும் 2011க்கு பிறகு பசு பாதுகாப்புக் குழுவினருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் சிலபல செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன். தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி மஹாசந்நிதானம் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சென்னைக்கு வந்திருந்த போது கோசாலை குறித்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதும் உண்டு.



ஆனால் வலியதான விதி விடவில்லை. மீண்டும் ஒரு 24x7 வகையறா பணியில் அமர்த்தப்பட்டேன். அலுவல் தவிர இன்னபிற நடவடிக்கைகள் பெரிதும் முடங்கின. (இப்போது மீண்டும் முந்தைய பத்தியின் முதல் வரியை மட்டும் வாசித்துக் கொள்ளுங்கள். மானே தேனே பொன்மானே எல்லாம் சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம்.)

வாழ்க்கைச் சக்கரம் இப்படியாகச் சுழல ஒரு சுபயோக சுபதினத்தில் ”இவனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தப் பண்ணணும்” (என்ன ஒரு கஞ்சத்தனம்!) என்று ஜோசியக்காரர் ஒருவரை அணுகியிருக்கிறார் என் தந்தை. ஆஞ்சனேய உபாசகரான அவர் பசுவுக்கு முடிந்ததைச் செய்யுங்கள். எல்லாம் சரியாகும் என்று சொல்லியிருக்கிறார். உடனே நம்மூர்ல கிருஷ்ணன் கோவில்ல கோசாலை இருக்கு என்று தொடங்கி இங்க நீயும் எதாவது கோசாலைக்குப் போய் பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடு என்றார். தந்தை சொல் மந்திரமாயிற்றே! சொன்னதைச் செய்தாக வேண்டுமே! அப்போதுதான் முகநூலில் சீமாச்சு அண்ணா என்றறியப்படும் ஸ்ரீநிவாசன் அவர்கள் மாம்பலம் கோசாலை பற்றி ஒரு பதிவிட்டிருந்தது நினைவுக்கு வந்தது.



அதைத் தேடிப்பிடித்துப் பகிர்ந்துவிட்டு அந்த பங்குனி 19ஆம் நாள் வெள்ளியன்று (ஏப்ரல் 1, 2016) மாலை அந்த கோசாலைக்குச் சென்றேன். மணி 6.20 என்றது கடிகாரம். வாசலில் ஒருவரிடம் இந்த கோபூஜை..... என்று ஆரம்பிக்க ஆறரையோட எல்லாம் முடிஞ்சிரும் என்றார். இல்லங்க 6.30க்கு ஆரம்பம்னு சொன்னாங்களே! என்றேன். ரிஜிஸ்டர் பண்ணாம பூஜைல ஒக்கார நீங்க என்ன சிஎம்மா பிஎம்மா? என்றார். அதெல்லாம் இனிமே அரசியல்ல புகுந்து அவ்வளவு சீக்கிரம் ஆகமுடியாது என்றேன். ஏற இறங்கப் பார்த்தவர் முறைத்துவிட்டுப் போய்விட்டார்.

வாசலில் அகத்திக்கீரை விற்றுக் கொண்டிருந்த பெண்மணியிடம் 3 கட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே போனேன். சில விநாடிகள் புது இடத்துக்குப் போனால் கடைப்பிடிக்க வேண்டிய நியதிப்படி பேந்தப் பேந்த விழித்துவிட்டு பிறகு சுற்றுமுற்றும் கவனித்தேன். யாரும் யாரிடமும் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை. வருகிறார்கள். பிள்ளையாரைக் கும்பிடுகிறார்கள். போய் பசுக்களுக்கு அகத்திக்கீரை, பழம் தருகிறார்கள். வணங்கிவிட்டு நகர்கிறார்கள். அதே நடைமுறையைப் பின்பற்றி அகத்திக்கீரை கொடுத்து வணங்கிவிட்டு வந்த போது சீமாச்சு அண்ணா பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்.

அவர் பிரார்த்தனை முடித்துக் கண் திறந்த போது எதிரில் நின்றது நான். ”ஏய்! எப்படா வந்தே! வா வா!” என்றபடி அலுவலகத்துக்கு அழைத்துப் போனார். ஒரு மஞ்சள் நிறச்சீட்டு எடுத்துக் கொடுத்து “பிரார்த்தனையை எழுது” என்றார். “அண்ணா! இந்த கோபூஜைக்கு ரிஜிஸ்டர் பண்ணணுமாமே!” என்றேன். “அம்பது ரூபா குடு” என்று வாங்கிக் கொண்டு போனவர் ஒரு அச்சிட்ட வெள்ளைச் சீட்டோடு வந்தார். கோபூஜைக்கான பணம் கட்டிய ரசீது. ”சங்கல்பம் செய்ய வரிசைல நில்லு” என்றார். மஞ்சள் சீட்டில் பிரார்த்தனைகளை எழுதி பிள்ளையார் முன் இருந்த குடத்தில் போட்டுவிட்டுத் திரும்பினேன்.

“வா! முரளி அண்ணாவைப் பார்த்துடலாம்” என்றார் சீமாச்சு அண்ணா. போனோம். வழமையான அறிமுகப்படலங்கள், கைகூப்பல்கள்,  வணக்கங்களுக்குப் பிறகு ”பையன் நம்ம பக்கம்ணா! ஸ்ட்ராங் காவி” என்று தொடங்கி என்னைப் பற்றிச் சொன்னார். ”Blog எழுதுவான், கவிதை எழுதுவான், ஃபேஸ்புக்குல ஆக்டிவ்” உள்ளிட்ட பல சங்கதிகள் வெளிவந்தன. என் மொழியறிவு குறித்து உயர்வாகவே சொன்னார். அவர் சொன்ன அளவுக்கு சம்ஸ்க்ருத அறிவில் உயர்ந்துவிடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

(மற்றபடிக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் வேண்டிய அளவு தெரிந்தே இருக்கிறது. தமிழறிவைப் பற்றிச் சொல்லவில்லையே என்று சிலர் கேட்கலாம். நேரமிருக்கும் போது தகவல் அனுப்புகிறேன், வாருங்கள். திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி, இறையனார் பேச்சுவார்த்தையை நாம் நடத்திப் பார்ப்போம்.)

முரளி அண்ணா அன்பாகப் பேசினார். நிறைய விவரங்கள் சொன்னார். கோசாலை மஹா பெரியவா ஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளால் இந்த இடத்தில் தொடங்க உத்தராவனது. இது தெய்வ சாந்நித்யம் மிக்க இடம் இங்கே கோசாலையை நடத்துங்கள் என்று அவர் அருளிச் சொன்னபடியே இன்னமும் கோசாலை நடக்கிறது. ஒவ்வொரு பசுவும், ஓவ்வொரு காளையும் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்படுகின்றன.



காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடத்தின் மாம்பலம் நிலையத்தில் இருந்து வேத விற்பன்னர் ஒருவர் வந்திருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோபூஜை நடத்தி வைக்கிறார். அத்துடன் கூட்டுப் பிரார்த்தனையும் நடக்கிறது. வருவோர் அனைவருக்கும் ஒரு மஞ்சள் நிறச்சீட்டு தருகிறார்கள். அதில் நம் பிரார்த்தனைகளை எழுதி அங்கே விநாயகருக்கு முன் இருக்கும் குடத்தில் போடவேண்டும்.

அதன் பின் ஐம்பது ரூபாய் கட்டி ரசீது பெற்றுக் கொண்டவர்கள் (இது கட்டாயமல்ல) கோபூஜைக்கான சங்கல்பம் செய்து கொள்ள வரிசையில் நிற்க வேண்டும். நான் சென்ற இரு வாரங்களுமே மிக நீண்ட வரிசை. பொறுமையாக ஒவ்வொருவரின் கோத்திரம், பெயர், அவரது உடனடிக் குடும்பத்தினர் பெயர்கள், (வேறு கோத்திரமாக இருந்தால் சேர்க்க இயலாது), அவர்களது வேண்டுதல் (பொதுவில் சொல்ல விருப்பமில்லை என்றால் ஒலிபெருக்கியை அணைத்துவிட்டுக் கேட்டு அந்த வேண்டுதலுக்கான சங்கல்பத்தைச் சொன்னபின் ஒலிபெருக்கியை உயிர்ப்பிக்கிறார்).
ஐம்பது ரூபாய் கட்டாமலும் அங்கே இருந்து கோபூஜையை தரிசிக்கலாம்.

இங்கே காதில் விழுந்த ஒரு சுவையான உரையாடலைப் பகிர எனக்கு விருப்பம்.

”என்னென்ன வேண்டி இங்கே பிரார்த்தனை செஞ்சா சரியா வரும்?” என்று முக்கால் பேண்டும் டீசர்டும் அணிந்த ஒரு இளைஞர் கேட்க, குரலில் சற்றே தொனித்த எகத்தாளத்தை கவனித்த ஒரு பெரியவர் (அவர் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல முன்னணியில் அமர்ந்ததை பிற்பாடு கவனித்தேன்) “நாசிக்ல நோட்டு அடிக்கிற ஆபீஸே என் கண்ட்ரோல்ல வரணும்னு கூட வேண்டிக்கலாம். ஆனா அத எப்போ தரணும்னு பகவான் முடிவு பண்றான்னு உனக்கோ எனக்கோ தெரியாது. வர வரைக்கும் பிரார்த்தனை பண்ணிண்டே இருக்கலாம். உனக்கென்ன வேணும்?” என்றார். ”அது வந்து, வேலை, பிரமோஷன் அதுக்கு வேண்டிக்கணும்”. “வேலையா, பிரமோஷனா?” “வேலை!” இத மொதல்லயே சொல்லிருக்கலாமே! கூட்டத்துல இத்தன பேர் வெய்ட் பண்ணும் போது வாதப் பிரதிவாதம் தேவையா உனக்கு?” 

ஒருவாறாக சங்கல்பம் முடித்து கோபூஜைக்குச் செல்லச் சொன்னார்கள். கோசாலையில் ஒரு டப்பாவில் கொஞ்சம் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, அக்ஷதை எல்லாம் போட்டுத் தருகிறார்கள். (ஆனால் 108 திருப்பெயர்கள் கொண்ட மஹாலக்ஷ்மி அஷ்டோத்திர பூஜைக்கு அந்தப் பூக்கள் போதாது. ஆகவே நாம் 10 ரூபாய்க்கு வாசலில் பூ விற்பவர்களிடம் வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் கோசாலையில் கொடுப்பதும் சேர்ந்து நிறைவாக இருக்கும்.)

 
இப்போது மாடுகளுக்கு அருகே போய் நின்று கொண்டோம். ஒரு பசுவுக்கு  அருகே அதிகபட்சம் 5 பேர். அருகருகே கன்றுகளும் இருந்தன. ஒலிபெருக்கியில் லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லச் சொல்ல அனைவரும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் பூ போட்டு அர்ச்சனை செய்தோம். பிளாஸ்டிக் கவர்களை ஆங்காங்கே போடக்கூடாது, கண்டிப்பாக வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் மட்டுமே போடவேண்டும் என்ற வேண்டுகோள் அவ்வப்போது விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே சமயம் யாரும் பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்ட எந்தக் குப்பையையும் பசுக்கள் இருக்குமிடத்தில் போடவில்லை.

அர்ச்சனை முடிந்த உடனே பூக்களையும், இலைகளையும் பணியாட்கள் சுத்தம் செய்து ஒரு ஓரமாகக் கொண்டு போய்விடுகிறார்கள். அதன் பிறகு சாம்பிராணிப் புகை போட்டனர். பிறகு பசுக்கள் அனைத்திற்கும் தீப ஆராதனை நடந்தது. எல்லாம் மஹாலக்ஷ்மி பெயராலேயே நடந்தது. பசுவில் மஹால்க்ஷ்மி வாசம் செய்கிறார் என்பது சநாதன தர்ம நம்பிக்கை. இந்தப் பூஜைகள் முடிந்ததும் அனைவரும் கோசாலையின் முதல் கொட்டகைக்கு முன் கூடி நின்றோம்.

 

முரளி அண்ணா மைக்குடன் வந்தார். நம் பாரம்பரியத்தின் பெருமை குறித்தும், ஆநிரை சார்ந்த நம் முன்னோரின் வாழ்க்கை முறை குறித்தும் விரிவாகப் பேசினார். பசுப் பாதுகாப்புக் குறித்து சுவாமி விவேகானந்தரும், காந்தியார் அவர்களும், அம்பேத்கர் அவர்களும், கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டி நமது பாரம்பரிய விவசாய முறைக்குத் திரும்பினால் மட்டுமே விவசாயம் செழித்து தேசம் வளமாகும் என்ற உண்மையை வலியுறுத்தினார்.
(கீழே படத்தில் வேட்டி சட்டையில் இடுப்பில் துண்டுடன் பக்திபூர்வமாக இருப்பவர் முரளி அண்ணா. அவருக்கு அருகே போலீஸ்காரர் போல கைக்ளைப் பின்னால் கட்டி விறைப்பாக நிற்பவர் சீமாச்சு அண்ணா.)

பின்னர் பிரார்த்தனை: தருமங்காத்தல், போர்ப்படை வீரர் நலன், ஏர்ப்படை உழவர் நலன், ஆநிரை சார்ந்த பயிர்த்தொழில், ஆநிரை புரத்தலும் ஆநிரை பாதுகாப்புச் சட்டமும், கோசாலை இன்றிருக்கும் நிலையில் என்றும் தொடர்தல் ஆகிய நன்மைகள் ஓங்கப் பிரார்த்திப்பதுடன், அவரவர் சீட்டுக்களில் எழுதிச் சமர்ப்பித்த வேண்டுதல்கள்  நிறைவேறவும் கூட்டுப் பிரார்த்தனை செய்யத் தயாரானோம்.


ஓம் எனும் வேத முதற்சொல்லை 18 முறைகள் முறையாக உச்சரித்து மேற்சொன்ன அனைத்தும் நிறைவேற இறையருள் இரங்குக என்று உளமாறப் பிரார்த்தித்தோம். பிறகு அனைவரும் சென்று பசுக்களையும், காளைகளையும், கன்றுகளையும் வலம் வந்து வணங்கினோம்.  பிறகு வரிசையில் வந்த அனைவருக்கும் உரிய முறையில் பிரசாதங்கள் வேதியரால் வழங்கப்பட்டன.

அதன் பிறகு முரளி அண்ணாவிடம் பேசுகையில் இந்த வாராந்திர கூட்டுப் பிரார்த்தனை இணையத்தில் நேரடியாக அலைபரப்பு (webcast) செய்யப்படுகிறது என்றார். www.mambalamgohsala.in என்ற தளத்தில் வருகிறது. நேரில் வர இயலாதவர்கள் இணையம் மூலம் பிரார்த்தனையில் பங்கேற்று ஓங்காரம் சொல்லி வேண்டிக் கொள்ளலாம். நேரலை மட்டுமே. பதிவான விடியோக்கள் இனிமேல் யூடியூபிலும், இணையத்திலும் பதிவேற்றப்படும் என்றார். அதற்கு ஒரிரு மாதங்கள் ஆகும் என்றும் சொன்னார்.

யார் செய்கிறார்கள் என்று பார்த்து அந்தத் தொழில்நுட்ப வல்லுநரிடம் போனால் அவர் நானறிந்தவர். சீமாச்சு அண்ணாவின் நிறுவனத்தில் பணிபுரிபவர். ஆக webcastக்குப் (இணையலைபரப்பு) பொறுப்பு சீமாச்சு அண்ணாதான். விரைவில் வந்துவிடும் என்றார். இப்போது யூடியூபில் விடியோ காணக்கிடைக்கிறது.

நான் ஒரு சில வாரங்களாக கோபூஜைக்கு நேரில் செல்கிறேன்.

முரளி அண்ணா இந்தப் பிரார்த்தனையில் பேசுவது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இருந்து மஹாபெரிவா வாக்கு மட்டுமே.  ஒரு வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதி குறித்து மஹாபெரியவா அருளிய வாக்கைச் சொன்னார். அன்று பிஜேபி தலைவர் H.ராஜா சில வாரங்களுக்குப் பிறகு கோபூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தார்!

“தேர்தல் ஸ்பெஷலா அண்ணா!” என்று சிரித்துக் கொண்டே கேட்ட போது பதறிவிட்டார். ”NO! இங்கே அரசியல் கிடையாதுப்பா. தர்மம், ஆன்மிகம் மட்டும் தான். இன்னிக்கி பேச எதுவும் அமையலை. சீட்டுப் போட்டு மஹா பெரியவா படத்தின் முன்னால நின்னேன். ஒரு சேப்டர் வந்தது. எடுத்துப் பிரித்தால் இந்த விஷயம். நான் எதுவும் இல்லை. எல்லாம் பெரியவா அருள்,” என்று கைகூப்பியபடியே சொன்னார். 

வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஓட்டுக் கேட்பது போலவே இருக்கும் என்பதால் ”சீக்கிரம் கைகயைக் கீழே போடுங்கண்ணா” என்று சொல்லிவிட்டு பிறகு கொஞ்ச நேரம் கோசாலை செயல்பாடுகள் குறித்து அவரிடம் கதைத்துவிட்டுக் கிளம்பினேன்.

கோபூஜையில் பங்கெடுப்பதால் வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் தீரும் என்பது சநாதன தர்ம நம்பிக்கை. மன்னர் திலீபன் உள்ளிட்ட பலரும் பசுவை வழிபட்டு பாவங்களில் இருந்து விடுதலை பெற்றனர் என்பது நம் வரலாறு. புராணங்கள் விரித்துரைக்க, இதிஹாசங்கள் சான்று நிற்கின்றன.

ஆகவே, அனைவரும் இந்த கோபூஜையிலும், கூட்டுப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும் சமுதாயத்துக்குப் பயன் தரவும் வேண்டும் என்று கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். வந்தே மாதரம்!

2 comments:

சசிகுமார் said...

அருமை...வாழ்த்துக்கள்... கோ-மாதாவான நாட்டுப்பசுக்கள் பல்கிப் பெருக இறைவன் அருள் புரிய வேண்டும்.. சட்டமும் சர்க்காரும் மாற வேண்டும்.. பசு மைய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்..

Unknown said...

பிரதமம். நல்ல கோர்வையாக கட்டுரை எழுதியுள்ளையா
ய்அம்பி ஐடி வேலை விட்டாலும் உனக்கு இணையதளம் வேலை மற்றும் ஆன்மிக தொடர் நன்றாகவே கை கொடுக்கும்