ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 7 May 2016

தமிழக சட்டசபைத் தேர்தல் 2016 - ஒரு பார்வை

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஓட்டத்தில் விலை பேசப்பட்ட, சரியான அடிப்படை இல்லாத பல்வேறு கருத்துக் கணிப்புகள் மக்களைக் குழப்பியிருப்பது உண்மை.

15 சீட் தேறினால் பெரிய விஷயம் என்றிருந்த திமுக ஒரு 30 - 35 சீட் தேற இது உதவும். அசுர பல மெஜாரிட்டி என்றிருந்த அதிமுக சிலபல சீட்கள் குறையவும் இது உதவலாம். இலவசம் பொங்கி வழிந்தோடும் தேர்தல் அறிக்கை தொங்கு சட்டசபை என்ற திரிசங்கு சொர்க்கத்தைத் தடுக்க உதவ வாய்ப்புண்டு.

எதிர்க்கட்சிகள் எதுவுமே ஆளுங்கட்சிக்கு எதிராக உருப்படியான ஒரு பிரச்சினையைக் கிளப்பி ஆட்சியின் மீதான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே anti incumbencyஐ முக்கியமாக எதிர்கொள்ளும் அதிமுகவின் பலம்.




ஊழல் குறித்து மட்டுமல்ல, திமுக எது பேசினாலும் 176000 கோடில இம்புட்டூண்டு கிள்ளிக் கொடுத்தால் நானே இன்னமும் பேசுவேனே என்ற மனநிலையில் இருந்து மக்கள் மாறவில்லை.

விஜயகாந்த் வடிவேலு சினிமாவில் பேசுவதைவிடவும் காமெடியாகப் பேசுகிறார். சிரிப்பு மூட்டவே அவரைப் பேச வைக்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது.

வைகோ பேசுவதைக் கலிங்கப்பட்டிக்கார மக்களே நம்புவதில்லை. ஸ்டெர்லைட் பிரச்சினையில் வேதாந்தா குழுமத்திடம் துண்டு போட்டு மூடி என்னனென்ன விரல்கள் பிடிக்கப்பட்டன என்ற கேள்வியே மிஞ்சுகிறது. மதுவுக்கு எதிராகப் பொங்கி சிகரெட் விற்கிறார் என்ற இளிவரல் வேறு.

கம்யூனிஸ்டுகளில் கூட்டணிக்கு ஆதரவாக யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. ஆனால் தா.பாண்டியன் மூச்சுப் பிடித்து அதிமுகவுக்கே பிரச்சாரம் செய்கிறார். இந்த நிலையில் கடன் வாங்கிவிட்டுக் கட்டமாட்டேன், திருப்பிக் கேட்ட வங்கியை எதிர்த்துப் போராட்டம் நடத்துவேன் என்று வாக்குமூலங்கள் வேறு.

பாஜக:

இந்தத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் வலுவாகக் காலூன்றும். அது பொது மக்களின் பார்வை மாற்றத்தினால். அதற்குக் காரணம் திராவிடவாதத்தின் பொய்கள் கட்டிய கச்சைகள் கழன்று போய் மறைவிடம் தேடி ஓடுவதால். எங்கும் பொய் எதிலும் பித்தலாட்டம் என்று திரிந்து கொண்டிருந்த திராவிடம் தன்னை ஊடக பலத்தால் நிலை நிறுத்திக் கொண்டிருந்தது. சமூக ஊடகங்கள் வந்த பிறகு இந்தப் பிரச்சாரப் பொய்கள் உடனுக்குடன் தோலுரிக்கப்படுவதால் வாயில் வருவதே வார்த்தை, வாய்கூசாத புளுகே வரலாறு என்று பேசித்திரிந்த திராவிடம் திகைத்து நிற்கிறது.

இந்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக கடந்த இரண்டாண்டுகளில் தன்னை ஓரளவுக்கு நிலைநிறுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் என்னதான் சமூக வலைத்தளங்களில் பெரிய ஆளாக்கும் என்று மார்தட்டிக் கொண்டாலும் பாஜக அரசாங்கத்தில் இருந்தும் தன் கூட்டணிக்கார டிவி சேனலைக் கூட தன் வசப்படுத்த முடியவில்லை என்பது கேவலம் தான்.தனக்கென ஒரு பத்திரிக்கை ஒரு டிவி சேனல் இல்லாதவரை பாஜக பொதுமக்களைப் பெரிய அளவில் கவர்வது கடினமே.

அதுவும் தவிர கட்சி நடத்தத் தெரிந்த தலைமை பாஜகவுக்கு அவசரத் தேவை. டிவிக்களில் முகம் காட்டிக் கொண்டிருந்துவிட்டுத் தேர்தல் நேரத்தில் மட்டும் தெருவில் இறங்கிக் கும்பிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே பாஜகவின் மாநிலத் தலைவர்கள் இருப்பது வளர்ச்சிக்கே வழிவகுக்காது. வெற்றி எல்லாம் வந்தால் பாரதமாதா ஜாதக விசேஷம்.


ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வராத நிலையில் தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும். தேர்தலுக்குள் தீர்ப்பு ஜெ.க்கு பாதகமாக வந்தால் தடுமாற்றமே. சாதகமாக வந்தால் அதிமுகவினர் வெறியாட்டதோடு வேலை செய்வார்கள். ஓட்டுக்களின் ஊஞ்சலாட்டம் அதிமுக பக்கம் அதிகமிருக்கும்.

தேர்தலுக்குப் பிறகு குமாரசாமி கணக்கில் தீர்ப்பு வந்தால் 2021 வரை கடந்த ஐந்தாண்டுகால நிலவரமே தொடரும். குமாரசாமி கணக்கு அல்லாத தீர்ப்பென்றால் தீச்சட்டி, மண்சோறு, அலகு குத்தல், காவடி எடுத்தல், பாத யாத்திரை என்று பணிகள் தொடரும். அரசுப் பணி என்பது நாஞ்சில் சம்பத் சொன்னது போலக் காத்திருக்கும்.

அடுத்த ஐந்தாண்டுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள நாமும் தேர்தல் முடிவுகள் வரட்டும் என்று காத்திருப்போம்.

No comments: