ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday, 23 October 2015

மறைக்கப்பட்ட உலகம் - வெங்கட் சாமிநாதன்

இந்தக் கட்டுரை திண்ணையில் வெளியானது. 

நிறுவனப் போராளிகள், சான்றளிக்கப்பட்ட எழுத்தாளர்கள், கட்சிகள், குழுக்கள் சார்ந்த எழுத்துத் தொண்டர்கள் உண்மையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதை எந்தப் பூச்சும் இன்றிச் சொல்லியிருக்கிறார் மறைந்த வெங்கட் சாமிநாதன் அவர்கள். உண்மை கசக்கும் என்பதை அவருக்கு இருந்த எதிர்ப்பின் வீச்சில் கண்டு கொள்ளலாம். அஞ்சலிக் கட்டுரைகளிலும் ஊடகங்கள் வஞ்சனை செய்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாகவும் தமிழில் வேறு மாதிரியாகவும் எழுதி அரசியல் சரித்தன்மையை உறுதி செய்யும் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தவர் வெங்கட் சாமிநாதன். அவருக்கு நம் உளமார்ந்த அஞ்சலிகள்.


ஊரோடு ஒத்து வாழத்தெரியாது எனக்கு. இந்தத் தமிழ் மண்ணோடு சற்றுப் பிடிப்பில்லாத, இதைச் சுரண்டி வாழும் ஒரு பாமரக் கோமாளி எனக்கு "ஸார்" ஆகிவிடமுடியாது, அவன் எனக்கு எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும்.ஸார் ஆனது மட்டுமல்ல. அவரது மெளனம் என்னென்னவோவெல்லாம் பேசுவதாக மாய்ந்து போகிறார், அந்த முன்னணி எழுத்தாளர். யார் பெரிய கோமாளி என்று தோன்றுகிறது? ஒரு அரசியல் தலைமை கை ஸ்பரிஸத்தில் கவிதை மின்ஸாரமாகப் பாய்கிறது என்று சொல்லி அத்தலைமை மனம் குளிரவைக்க முயற்சிக்கமாட்டேன். அதிகார மமதை பிடித்த பத்திரிகாசிரியருடன் 'அட்ஜஸ்ட்" பண்ணிக்கொள்வது அருவருப்பாக இருக்கிறது எனக்கு. இப்படி எத்தனையோ பலவீனங்கள் எனக்கு. . இந்த சங்காத்தமே வேண்டாம் என்று பத்து பதினைந்து வருடங்கள் தமிழில் எழுத்துத் தொடர்பு அறுத்து தில்லி ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்தேன். சும்மா இருந்தவனை, இந்தியா டு டே சந்திக்கு இழுத்துக் கேட்கவே, அப்போதைய தமிழ் எழுத்து பற்றி எழுதினேன். '"புதை குழியிலிருந்து மீட்டு எடுக்கப்பட்டதாக," ஒரு பேராசிரியர், சித்தாந்தவாதி என்னைப்பற்றி எழுதினது மட்டுமல்லாமல் என் எழுத்து மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று தீர்மானம் நிறைவேற்றி அதை செயல்படுத்தவும் செய்தார்கள், அ.மார்க்ஸ் தலைமையிலான, கல்வியாளர், இலக்கியவாதிகள் கூட்டங்கள் இரு இடங்களில். இவ்வாறான அவர்களது ·பாஸிஸ செயல்பாடுகளுக்குக் காரணம், நான் 'முற்போக்கு, திராவிட இயக்க இயக்கங்கள் தமிழ் நாட்டில் ·பாசிச குணங்கொண்டவை என்றும் அவற்றில் உண்மை இல்லாத காரணத்தால் அவர்களிடமிருந்து ஏதும் இலக்கியம் பிறக்கவில்லை' என்றும் சொல்லியிருந்தேன். என் கூற்றை அவர்கள் தம் எதிர்வினையால் நிரூபிக்கத்த'ன் செய்தார்கள். மலம் துடைத்துத் தன் எதிர்ப்பைக்காட்டும் பேராசிரியரை தமிழ் நாட்டுக்கு வந்தால் காணலாம். இத்தகைய வெள்ளத்தின் ஒட்டத்தில் நான் மிதந்து வாழமுடியுமோ? கரையேறி தில்லியிலேயே இருந்தேன்.

ஆனால் 'கதா' நிறுவனம், தமிழின் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்க என்னைக் கேட்டது. எனக்குக் கிடைத்த இரு பெயர்களில், இருவரும் எனக்கு புதியவர்கள், தமிழில் அதிகம் அன்று அறியப்படாதவர்கள் - சோ.தருமன் ஒருவர். 'நசுக்கம்" என்ற கதை. இரவில் இருட்டில் திருட்டுத்தனமாக பட்டாசு வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட சிறுவர் ஏதோ தேட மெழுவர்த்தி கொளுத்தப்போய் மருந்து வெடித்துச் சாகின்றனர். ஏதும் கோஷங்கள் இல்லை. அரசியல் சீற்றங்கள் இல்லை. சகஜமாக்கப்பட்ட இக்கோடூர நிலை ஆரவாரமற்ற சாதாரண நடையிலேயே சொல்லப்பட்டு நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஒரு கொடுமை ஆரவாரமற்று சகஜமாக்கப்பட்ட அன்றாட வாழ்க்கை நிலை வாழ்வுண்மை. அரசியல் கோஷமல்ல. இப்படித்தான் சோ தர்மனின் கதை உலகம் பின்னரும் விரிகிறது. அவர் ஒரு தலித், பஞ்சாலைத் தொழிலாளி என்பதெல்லாம் பின்னர்தான் தெரிய வருகிறது. 'நசுக்கம்" கதை மற்றெல்லா மொழி பரிசுக்கதைகளையும் பின் தள்ளி, Economic Times பத்திரிகையில் அகில இந்திய பதிப்பில் இடம் பெறுகிறது. தமிழில் சோ.தர்மன் எழுத்துலகம் அறிந்தவராகிறார். இதை அடுத்து நம் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமை கூறும் ஒரு சம்பவத்தையும் சொல்லவேண்டும். 'கதா' பரிசுக்கான கதையாக சாமிநாதன் 'நசுக்கம்' தேர்ந்தெடுத்துள்ளதை கதா சோ தர்மனுக்குச் சொல்ல, சோ தர்மன் அதை தன் கோவில்பட்டி (நாமக்கல் கோழிப் பண்ணை போல, கோவில் பட்டி எழுத்தாளர் பண்ணை) எழுத்தாள நண்பர்களிடம் சொல்லப் போய் ' சாமிநாதன் பார்ப்பன வெறியனாச்சே, அந்த ஆள் உங்க கதைய தேர்ந்திருக்க மாட்டானுங்க, வல்லிக்கண்ணனாத்தான் இருக்கணும், நல்லா விசாரியுங்க" என்று திரும்பத் திரும்ப மறுத்திருக்கிறார்கள்

தருமன் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். தலித். இவரை இந்த இரு வகையினரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் இவ்விரு கட்சியினரும் பிடித்து வைத்துள்ள அச்சுக்குள் அவர் அடங்கவில்லை. அவர் எழுதியது தான் அறிந்த வாழ்க்கையை. அவ்வாழ்க்கை கட்சியினரின் அச்சுக்குள் பொருந்த மறுத்தது. தூர்வை என்றொரு நாவல் தொடர்ந்தது. அது மினுத்தான் - மாடத்தி என்னும் தலித் தம்பதியினரைச் சுற்றி உருளக்குடி கிராமத்து மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையை, கடைசியில் உருளக்குடி கிராமம் வரண்டு, தீப்பெட்டி தொழிற்சாலைகளும் சாக்குக் கம்பெனிகளும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. நிலத்தில் உழைத்தவர்கள் இப்போது தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். மினுத்தான் - மாடத்தி தம்பதிகள் தலித் சித்தாந்திகள் தயாரித்து வைத்திருக்கும் மாதிரி சித்திரங்களாக இல்லை.

"மாடத்தியின் வீட்டுக்கு வரும் மருமக, எத்தன தலமொறென்னாலும் இருந்து திங்கலாம்" என்பது உருளக்குடி மக்கள் அறிந்தது. உருளக்குடி கிராமத்து வீடுகளின் 'குலுக்கை'களில் ரெண்டு மூணு வருஷமாய் தானியம் அள்ளாமல் மக்கிப் போய் புழுப்பிடிச்சு, நாற்றம் அடித்து மாவாகிப் போகிற அளவுக்கு செல்வம் பொழிந்த ஊர். மாடத்தி சாகக் கிடக்கிறாள். அப்போது சொத்தை தன் வளர்ப்புப் பிள்ளைக்கும் சக்களத்திக்குமாக பங்கு பிரித்துக் கொடுக்கச் சொல்கிறாள்: "சும்மக்காடு நாலு குறுக்கத்தையும், கருப்பசாமி கோயில் தோட்டத்திலே தே மொடங்கிய அரக் குறுக்கத்தையும் அந்த பய பேருக்கு மாத்திடு. வாக மரத்து புஞ்ச நாலு குறுக்கத்தையும் அவ (சீனியம்மா) பேருக்கு எழுதிடு" என்று தன் புருஷன் மினுத்தானுக்குச் சொல்கிறாள். தன் வீட்டுக்கு முன் நிற்கும் கருப்பியிடம் மாடத்தி சொல்கிறாள்: "ஏணம் கொஞ்சம் பெரிய ஏணமாக கொண்டாரப்படாது? கூடக் கொஞ்சம் சோறு குழம்பு கொண்டு போவியல்ல?" இதற்கு கருப்பி "இம்புடு போதும் தாயி, ஏராளம் தாயி, ஏராளம்."

இது ஒரு கால கட்டத்திய தலித் குடும்பத்தின் சித்திரம். எல்லா தலித்துகளும் இப்படி என்றில்லை. கருப்பிகளும் தான் இருந்தார்கள். ஆனால், தலித்துகள் வசதியான நில உடமைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி தலித்தை வைத்துக்கொண்டு மேல்சாதிக்காரர் கொடுமைகளை எதிர்த்து எப்படி போராடுவது என்பது தலித், முற்போக்கு சித்தாந்திகளின் நியாயமான வாதம். ஆனால் எனக்கென்னமோ "தூர்வை" மிக முக்கியமான படைப்பு எனத் தீர்மானம்.

"அமைப்பு சார்ந்த எழுத்துக்களின் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த அமைப்புகளுக்கு அப்பால் விர்ந்து பரந்த வாழ்க்கை யன்று இருக்கிறதாகவோ, அந்த வாழ்க்கை கட்சியின் கர்க்கஸ் வேலைகளுக்கு அப்பல் வசப்படாமல் அது பாட்டிற்கு தன் போக்கிற்கு இயங்கிக் கொண்டிருப்பதாகவோ இவர்கள் கருதுவதில்லை. அதில் அக்கரை கொள்வதும் இல்லை. இவர்கள் சார்ந்த கட்சியின் கட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்ட ஜீவனற்ற ஒரு சதைப் பிண்டமாகவோ, அல்லது உயிர்த்துடிப்பற்ற ஒரு களிமண் பொம்மையாகவோ தான் பெரும்பாலும் அமைந்து விடுகிறது."...."இவர்கள் இலக்கியங்களில் வரும் கதா பாத்திரங்கள் எவ்வித ஆசாபாசங்களும் அற்ற மரப்பாச்சிப் பொம்மைகளாய் வர்க்க பஜனைதாசர்களாய் இருந்து வருகிறார்கள்...."என்னுடைய எழுத்துக்களை ஒரு சிலர் தலித் எழுத்துக்களாகச் சித்தரிக்கிறார்கள். நான் பிறப்பால் மட்டுமே தலித். எழுத்தால் அல்ல. "இது வரை நமக்குக் காட்டப்பட்டுள்ள தலித் சித்திரங்கள் ஒரு பக்கச் சார்புடையதாக, அழுக்கு உடை நாற்றமுடையவனாக, எளிதில் சோரம் போகும் பெண்களாக, கை கட்டி நிற்பவர்களாக, கூலிக்காக மட்டுமே போராடுபவர்களாக் காட்டப்பட்டுள்ளனர். இவையெல்லாம் இடதுசாரி மார்க்சீய எழுத்தாளர்களின் கோணல் பார்வை. இதையே சில தலித் எழுத்தாளர்களும் செய்வத்து தான் வேடிக்கை. தலித்தின் பன்முக வளர்ச்சி, ஆன்மா இவைகள் பதிவு செய்யப்பட வேண்டும்."

என்றெல்லாம் சோ.தர்மன் தன் விளக்கம் தந்துள்ளார்.

இதில் தகராறு என்னவென்றால், சோ.தர்மன் உருவாக்கியுள்ள பாத்திரங்கள், பொய் என்றோ கற்பனை என்றோ யாரும் வாதிடவில்லை. குற்றம் சாட்டிவிடவில்லை. உண்மையாக இருந்தாலும் அவை மறைக்கப்படவேண்டும், பதிவாகக் கூடாது. தங்கள் சித்தாந்த மாதிரிகள் தான் சித்தரிக்கப்படவேண்டும் என்பது தான் அவர்கள் கொள்கை. ஆனால், முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நேர் எதிர்மாறாக, தலித் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் தமக்குத் தெரிந்த வாழ்க்கையையே, அநுபவங்களையே எழுதினார்கள். அவர்களை, ஜாதி, வறுமை என்னும் சமூக பொருளாதார கொடுமைகள் வதைத்தன. அவர்கள் வதைபடுவது அவர்களுக்குச் சற்று ஒரிரு படிகளே மேல் இருந்த பிற்படுத்தப்பட்டோர் என்று தமக்கு பட்டயம் வழங்கிக் கொள்வதில் வெற்றி கொண்ட நாடார், தேவர், நாயக்கர், வன்னியர் ஜாதியினர். சித்தாந்திகள் தம் சாட்டையைச் சொடுக்க ஆசைப்பட்ட பார்ப்பனர் எங்கோ தூரத்தில் தான் இருந்தனர். இதன் காரணமாகவே, சோ.தருமன், பூமணி, இமையம், போன்றோரை சித்தாந்திகள் அங்கீகரிக்க மறுத்தனர். தம்மை தலித் சித்தாந்த திருமூலராக வரித்துக்கொண்டு தலித் இலக்கிய விதிகள் சமைத்த பேராசிரியர் அ.மார்க்ஸின் தீர்ப்பைக் கேட்கலாம்:

"தீண்டாமை/சாதிகொடுமைகளின் ஆணிவேராக விளங்குவது பார்ப்பனீயமே என்பதை அம்பேத்கர் அவர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ள போதிலும், கிராமப்புறங்களில் நேர் அடியான அனுபவங்கள் என்பன இந்த ஆழமான உண்மையை அறிந்து கொள்ளப்போதுமானதாக இருப்பதில்லை. பிற்படுத்தப்பட்ட சாதியினரே அங்கே கொடுமைகளுக்கு உடனடிக் காரணமாக நிற்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக அணி திரள்வதே தலித்களின் உடனடி அரசியல் நடவடிக்கையாக மாறுகிறது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையோர் அகியோர் பார்ப்பனீயத்திற்கு எதிராக ஒன்றிணைவது என்கிற தலித் அரசியலின் தொலை நோக்கான பார்வைக்கு இந்த எதார்த்தம் இடையூறாக இருக்கிறது. நாடார்கள், நாயக்கர்கள், தேவர்கள், கோணார்கள்... போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தீண்டாமைக் கொடுமைகளை அபிமானியின் சிறு கதைகளின் வாயிலாக படிக்கும்போது இந்த எண்ணங்கள் நமக்கு மேலோங்குகின்றன." (நிறப்பிரிகை, 1994 பக்கம் -109)

சோ.தர்மனை நான் இப்போது தேர்ந்தெடுத்த காரணத்தைச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். அவரும் தனித்து விடப்பட்டவர். அதற்காக வருந்துபவரும் இல்லை. இழ்ப்புகள் உண்டுதான். இழப்புகளைப் பற்றி எண்ணாது, தன் அனுபவங்களுக்கு உண்மையாக அவர் எழுத்து இருந்து வருகிறது என்பது இன்றைய சூழலில் சிறப்பான் விஷயம்.

அந்த சோ தர்மனைத்தான் திரும்பவும் அவரது சமீபத்திய நாவல் 'கூகை'யிலும் காண்கிறோம். திரும்பவும் இது கோயில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு காலத்தில் நிலத்தில் கூலி வேலை செய்து வயிறு நிரப்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, காலவோட்டத்தில் தீப்பெட்டி பட்டாசுத் தொழிற்சாலைகளும், ஜின்னிங் ·பாக்டரிகளில் மறுபடியும் கூலி வேலைதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அன்று பண்ணை முதலாளிகளாக இருந்தவர்கள் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு குடி பெயர்கிறார்கள் அல்லது இங்கு பாக்டரி முதலாளி ஆகிறார்கள். அவதாரங்கள் தான் மாறுகின்றன. விதி மாறுவதில்லை. மாறாத விதி கொண்டவர்களுக்குத்தான் கூகை குறியீடாகியுள்ளது. கூகை சக்தி வாய்ந்த பறவை. ஆனால் பகலில் கண்தெரியாது அதற்கு. சின்னச் சின்ன பறவைகள் அதன் பலவீனம் தெரிந்து பகலில் அதைச் சுற்றி வந்து கொத்தி குதறும். கூகை பயந்து ஒடுங்கிக் கிடக்கும் செய்வதறியாது. இரவில்தான் அதன் ஆக்ரோஷம் வெடித்துச் சிதறும்.

பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய நன்றிக்கடனில் கூகை சீனிக் கிழவனுக்கு தெய்வமாகியது. கூகையைக் கும்பிடும் அவன் கேலிக்காளாகிறான். அவனையும் அவன் பள்ளக்குடி சகாக்களையும் சீனி தன் பணிவினால், சந்தர்ப்பம் அறிந்த அடக்கத்தினால் காப்பாற்றுகிறான், தேவர்களின் மேல் ஜாதி மிருகத்தன கொடுமையிலிருந்து. அவனும் தப்புவதில்லைதான். நாவலின் தொடக்கத்தில் இரண்டு பள்ளக்குடி வாலிபர்கள் கோவில்பட்டி புறநகர்ப்பகுதியில் உள்ள நாச்சியார் கிளப்பில் மற்றவர்க்குச் சமதையாக பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டு வரும் ரகசிய சாகஸச் செயலைக் கண்டு பிடித்து விட்ட காவக்கார முத்தையா பாண்டியனிடம் செமத்தியாக அடி வாங்குகிறர்கள் "நாறப்பயகளே ஒங்களுக்குக் கேக்குதோ கிளப்புக்கடச் சோறு, அதுவும் பெஞ்சுமேலே உக்காந்து தொரகளுக்கு ஒய்யாரத்துலே சோறு." ஜமீன'கட்டும், மற்ற பண்ணைக்காரர்களான நாயக்கர் தேவர் என்றில்லை, அவர்களின் எடுபிடிகளின் கொடுமைகளுக்கும் ஆளாகவேண்டியிருக்கிறது. துட்டி சொல்ல மைல் கணக்கில் நடந்து போகும் ஆளைக்கண்டு இரங்கி வண்டியில் ஏறச்சொன்னவர்கள், அவன் பள்ளன் என்று தெரிந்தது, அவனை உடனே வண்டியை விட்டு இறக்கி விளாசுகிறார்கள் "துட்டி சொல்ல வார பறத் தாயோளிக்கு ஒய்யாரம் கேக்கோலெ" பண்ணை ஆட்களுக்கும் போலீசுக்கும் தப்பி ஒடும் அப்புச்சுப்பன் (பள்ளன்) ஏரித்தண்ணீரில் மூழ்கி ஒளிந்தவன், கரையில் பேச்சுக்குரல் கேட்கவும் "சாமியோவ்" என்று கூவி தான் அம்மணமாக தண்ணீரில் இருப்பதால் வெளியே வர துணி கேட்கிறான். அவர்கள் தூக்கி எறிந்த துண்டைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன் தன் கதையைச் சொல்கிறான். தான் பகடை{சக்கிலியன்} என்று சொல்லிக்கொள்கிறான். அவர்கள் அவனுக்கு உடுக்க வேட்டியும் கொடுத்து சாப்பிட தேனீரும் தருகிறார்கள். பனை ஓலை வழியாக தேனீர் ஊற்றப்படுகிறது பகடைக்கு. அவர்களுக்கும் ஒரு பகடை சமம் இல்லை. ஆனாலும் அதை மீறிய மனிதாபிமானம் அவர்களிடம் துளிர்கத்தான் செய்கிறது. சித்திரக்குடியில் அப்புச்சுப்பன் எந்த தேவர் நாயக்கரிடமும் காணாத மனிதாபிமானம். முன்னர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதைத் தான் திரும்பச் சொல்லத் தோன்றுகிறது.

"மிருகத்தனம் ஜாதியின் குணமல்ல. மனிதனின் குணம். ஜாதி இல்லாமலும் மிருகத்தனம் தனக்கு வேறு வடிகால்களைத் தேடிக்கொள்ளும். ஜாதியை ஒழிக்கிறேன் என்ற கோஷ வடிகாலையும் அது தேடிக்கொள்ளும்., இத்தலைமுறையில் நடப்பது போல. மனிதாபிமானம் உள்ள மனிதிற்கு ஜாதி இருப்பதும் இல்லாமல் போவதும் ஒரு பொருட்டல்ல. மிருகத்தனத்திற்கும் ஜாதி இருப்பதும் இல்லாததும் ஒரு பொருட்டல்ல. எத்தடையையும் மீறி, மனிதாபிமானமும் சரி, மிருகத்தனமும் சரி தன் வடிகால்களைத் தேடிக் கொள்ளும்."

கால மாற்றத்தில் நிலம் படைத்தவர்கள் தம் நிலங்களை விற்றோ, குத்தகைக்குக் கொடுத்தோ கிராமத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். நடராஜய்யரும் தன் நிலங்களை, அதில் இதுகாறும் உழைத்துவந்த பள்ளக்குடிக் காரர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் பட்டணம் போய்விடுகிறார். அவர் வருட முடிவில் வந்து தன் பங்கை வாங்கிக் கொள்வார். சீனி, நடராஜய்யர் வீட்டிலிருந்து கொண்டே மேற்பார்வை செய்வான். அவர் பங்கு பிரித்துக் கொடுத்த அன்று அவர்கள் எல்லோரும் (பள்ளர்கள்) அய்யர் வீட்டின் தாழ்வாரத்தில் அவர் முன் குந்தியிருக்க முடிகிறது. அவர் வீட்டு தாழ்வாரத்தில் கோழி வளர்க்கமுடிகிறது. கிராமத்து மேல் ஜாதி மக்கள் பள்ளர்களை ஒதுக்கி வைத்தபோது, அந்த வீட்டில் ஒர் கடை திறந்து நடத்த முடிகிறது.; நடராஜ ஐயரின் மனைவி ராஜலட்சுமி அம்மாளின் படத்தை வைத்து தெய்வமாக பூஜிக்கிறார்கள், சீனியும் அவன் தோழர்களும். ஏதோ விசாரணைக்காக போலீஸ் அந்த வீட்டுக்குள் நுழையும்போது அவர்களைச் சீனி தடுத்து விடுகிறான்." செத்தாலும் இங்கன சாவன ஒழிய பூட்ஸ் காலோட வீட்டுக்குள்ள நுழைய விடமாட்டேன்" என்கிறான். "படியேறக் கால் கூசியது. பக்தனின் எல்லை படிவாசல் தானே! பூசாரிக்குத்தான் தெரியும் கர்ப்பக்கிரஹத்தின் சூட்சுமம். சீனிக் கிழவன் பூசாரியானான். நடராஜ ஐயரின் வீடு கோயில். ஈசன், தேவி என இரண்டு தெய்வங்கள். சீனிக் கிழவன் மெதுவாய் எட்டு வைத்து உள்ளே போனான்." இது நடராஜ ஐயரின் நிலத்தில் வேலைசெய்த பள்ளர்களுக்கும் நடராஜ ஐயர் தம்பதிகளுக்கும் இடையே இருந்த உறவைச் சோல்கிறது. அய்யர் தம் நிலத்தை அவரிடம் வேலை செய்த 80 பள்ளக் குடும்பங்களுக்கே பிரித்து விவசாயம் செய்து கொள்ளச் சொல்லிப் போனது, மற்ற நில உடமைகளுக்குப் பிடிக்கவில்லை. "முந்தியெல்லாம் கூப்ட்டா, கூப்ட்ட மாயந்த் தெரியாம நாய்க்கெணக்கா ஒடுன பயக, இப்பப் பாரு எதுக்கு, என்ன வெசயம், ..இதெல்லாம் மப்பு ஏறுனதுக்கு அடையாளம்ல். எல்லாத்துக்கும் காரணம் அந்த அய்யப்பய. அவன இங்கயே பூணுல அத்திருந்தா வயக்காட்டப் பூராத்தையும் வித்திட்டுப் போயிருப்பான். அய்யர்னு கொஞ்சம் மரியாத காட்டப் போயி, வேண்டாத வேலையெல்லாம் பாத்திட்டுப் போய்ட்டான். இப்ப இந்த பயக நம்மள மதிக்க மாட்டேங்கா"

இத்தகைய துவேஷம் காட்டாத மேல் ஜாதி பண்ணைகளே அங்கு இல்லை. இதுவே பின்னால் திருட்டு அறுவடைக்கும், குடிசைகள் எரிவதற்கும், கொலைகள் பலவுக்கும், காரணமாகிறது. பள்ளர்கள் எதிர்க்கவே கலவரம் மூள்கிறது. சித்திர குடியில் உள்ள ஜமீன், பண்ணைகளுக்கு மட்டுமல்ல. கூகையைப் பற்றி எழுத வந்த தலித் சித்தாந்தி ஒருவருக்குக் கூட இப்படி ஒரு நடராஜ ஐயர் தருமனிடமிருந்து வந்துள்ளது பிடிக்கவில்லை. ஜமீனுக்கும் நாயக்கர், தேவர்கள் பண்ணைகளுக்குப் பதிலாக நடராஜ ஐயரும் ஒரு கோரப்பற்கள் காட்டும் மிருகமாக படைத்திருந்தால் குதூகலப்பட்டிருப்பார். இவர்களில் மாதிரிக்கு ஒருவர் இவர் என, இவரது கருத்து: "நெருக்கடிகள் வருகிற போது பொது நலத்தின் பெயரால் சுய நலத்தை மறைத்துக் கொண்டு வினையாற்றி, அதன் வழி தங்களது முன்னேற்றம் அரசதிகாரத்தில் முதனிலைப் பங்கு என நகர்வதில் இந்திய பிராமணர்கள் கவமாக இருந்துள்ளனர் என்பது வரலாறு. அந்த வரலாற்றின் ஒரு கண்ணியாகவே இந்நாவலில் வரும் நடராசய்யர் படைக்கப்பட்டுள்ளார்." அப்படித்தானா? இப்படித்தான் திரித்தல்கள் வரலாற்றில் எழுதப்பட்டு வருகின்றன. பிராமணன் ஒருவன் ஈர மனதுடையவனாக மனிதாபிமானம் உள்ளவனாக சொல்லப்படக் கூடாது. பிராமணனே எல்லாவற்றிற்கும் ஆணி வேரானதால், கொடுமைக்காரன் எந்த இடைசாதிக்காரனாக இருந்தாலும், பிராமணனே கொடுங்கோலனாக முன் வைக்கப்படவேண்டும். இரக்க மனதுள்ளவராக பிராமணர்களில் ஒருவர் இருந்துவிட்டாலும் அது மறைக்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் தலித்துகளும் நிலம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பது மறைக்கப்படுவது போல.

எனக்கு இதெல்லாம் புதிய செய்திகள். தூர்வையில் பார்த்த மாடத்தி மினுத்தான், கூகையில் காணும் நடராச அய்யர், போன்றவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்களா, கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனாரும், ஐயர் ஆண்டையும் மூலப் பிரதிகளாக உருவாக்கப்பட்டு நம் அடிமன ஆழம் வரை வேர் கொண்டுள்ளனர். சோ.தர்மனிடமே என் சந்தேகங்களைக் கேட்டேன். 'அதெல்லாம் உண்மைதான் என்றும், 'எங்கள் ஊரில் இப்போது ஐயர் நிலங்கள் என்று தான் சொல்வார்கள்" இதையெல்லாம் மறைக்கிறார்கள். மதுரை வைத்திய நாத அய்யர் பற்றி எவன் இப்போது நினைத்துப் பார்க்கிறான்? அவர் ஜாதியினரிடமிருந்தே எவ்வளவு எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது, அப்படியும் அந்தக் காலத்திலேயே சாதித்தது எவ்வளவு பெரிசு? இவர்கள் மறைத்ததையெல்லாம், சொல்ல மறுப்பதையெல்லாம், இவர்கள் அழிக்க விரும்பும் உண்மைகளையெல்லாம் தான் நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்." என்று அவர் பதிலளித்தார், இரு வேறு சந்தர்ப்பங்களில், நேரிலும், தொலை பேசியிலும்.

அப்புச்சுப்பன் தலை மறைவாகப் போகிறான். பேச்சியின் வீட்டுக்கு முன் இருந்த மரத்தில் ஏறி மறைந்து கொள்கிறான். தேடி வந்த போலீஸ் மரத்தைச் சுற்றி வளைத்து டார்ச் அடித்துத் தேடுகிறார்கள். மரத்தில் இருந்த கூடை அவர்களைத் தாக்கி விரட்டுகிறது. அப்புச்சுப்பன் மரத்தின் மேல் இருக்கிறான் அவனை ஒன்றும் செய்யாத கூகை கீழே இருந்து வளைத்த போலீஸை மாத்திரம் தாக்கும் மாயம் என்ன என்று தர்மனிடம் கேட்டேன். இரவு நேரம். கூகைக்கு தன்னுடன் பழகிய ஆள் வேற்று ஆள் தெரியும் அதான் விஷயம் என்றார். இதே போல தூர்வை நாவலிலும் தெய்வயானைப் பாட்டியைச் சுற்றி, நாயின் குழைவுடன் நரி ஒன்று சுற்றி அலையும். பாட்டி வளர்த்த் நரி அது. கஞ்சிக்கு குழைந்து நிற்கும் நரிக்கும் பாட்டிக்கும் இடையிலான வக்கணைப் பேச்சுக்கள் மிக சுவாரஸ்யமாக் இருக்கும். இப்படி எத்தனையோ. நம் ஒவ்வொருவரின் அனுபவக் குறுகலை மனதில் கொண்டால் போது. அதை மீறி நடப்பவை மாயா ஜாலங்களாகத் தோன்றாது. வேண்டுமென்றே உண்மைகளை மறைக்க, அங்கீகரிக்க மறுக்கும் சித்தாந்திகள், கட்சியாளர்கள் சமாச்சாரமே வேறு.

கூகை நாவல் நடப்பு வாழ்க்கை என்னும் யதார்த்த தளத்தில் மட்டுமே தன் இருப்புக்கு எல்லை வகுத்துக் கொளள வில்லை. கூகை ஒரு குறியீடாகி விட்ட பிறகு, குறியீட்டுத் தளத்திலும், சில தருணங்களில் அமானுஷ்ய தளத்திலும் நாவல் ஊடாடுகிறது. தருமனின் மொழியும் கவிதையோவென ஆங்காங்கே பல இடங்களில், உரு மாறுகிறது. சில இடங்களில் அமானுஷ்யமாகவே இன்னமும் நமக்குத் தோன்றுகிறது. மற்ற எல்லா நிலங்களிலும் வெட்டுக்கிளிகளும் புழுக்களும் பயிர்களைப் பாழ் செய்ய அய்யர் நிலத்தில் மாத்திரம் பறவைகள் கொத்தி புழுக்களைத் தின்று பயிரைக் காக்கின்றன. சோ தருமனிடம் ஜாதி பார்த்து துவேஷம் பிறப்பதில்லை. ஜாதியில் பிறக்காத மிருகத் தனத்தைக் கண்டு சீற்றம் பொங்குகிறது.

தமிழ் சமூகத்தில், கோஷமாகிவிட்ட பல 'புரட்சி'க் கருத்துக்களைச் சத்தமிட தைரியம் தேவை இல்லை. இப்புரட்சியாளர்கள் வெள்ளத்தின் போக்கில் மிதப்பவர்கள். இதற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்குத் தான் தைரியம் வேண்டும். அதில் இழப்புக்களும், உதாசீனமும், நிறைய எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புகழ்வதான தோற்றத்தில் வரும் திருகல் விளக்கங்கள் தரும் அங்கீகாரமும் ஆபத்தானதும் பொயானதுமாகும். அதையும் தருமன் எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது.

நிலத்தில் கூலி விவசாயம் செய்தவர்கள் இன்று நிலம் வரள, தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்ய தம் குஞ்சு குளுவான்களுடன் ஏறிச்செல்ல விடியும் முன் பஸ்ஸ¤க்கு ஓடுகிறார்கள். காலம் மாறியுள்ளது. வதை படும் களம் இவர்களுக்கு மாறியுள்ளது,. கூகை மற்றவர்கள் சொல்லாத உலகை தைரியத்துடன் முன் வைக்கிறது.

வெங்கட் சாமிநாதன்

28.2.06

No comments: