ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 26 December 2014

மகாத்மா(?) காந்தியார்

மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியார் சிறந்த தலைவரில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் தனக்கு உண்மையாக இருக்க முயன்றவர். பௌத்தம் சார்ந்த அஹிம்சை வழியைப் பின்பற்றி அதைப் பிறர் மீதும் சுமத்தினார்.
 
அதனால் அதர்மம் கண்டு பொங்கிடும் அறச்சீற்றம் மக்களிடையே மங்கியது. குறிப்பாக க்ஷாத்திரம் எனும் க்ஷத்ரிய குணம் தேயக் காரணமானார் காந்தியார். எதுவானாலும் காந்தி சொல்லே இறுதி என்ற தனிமனிதப் போற்றுதலுக்கு இது இட்டுச் சென்றது. காந்தியாரோ தலைமை என்பது அனைவரையும் அரவணைத்தல் மட்டுமே என்று புரிந்து வைத்திருந்ததால் அவரது பல முடிவுகள் பொது நன்மைக்குப் பங்கமாக அமைந்தன. நன்மை தீமைகளைச் சீர்தூக்கி நோக்காமல் அனைவரும் ஏற்பதே நல்லது என்ற மடத்தனம் அங்கே மேலோங்கி நின்றது. Consensus building என்பது நல்லதை அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைத்து ஏற்கச் செய்வது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாத பல ‘அரவணைப்பு முடிவுகளின்’ விளைவுகள் தேசத்தை இன்னும் பீடித்துள்ளன.

ஆனால் அவரால் லாபம் பெற்ற ஒரு கூட்டம் அவர் மீது எந்தக் குற்றமும் வராது அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் எழுப்பி அவரை மகாத்மா ஆக்கியது. அடித்தால் பட்டுக்கொள், உதைத்தால் வாங்கிக்கொள், கொன்றால் செத்துப் போ போன்ற கொள்கைகள் தனி மனிதனுக்கு ஆன்மிக சாதனைகளில் அடிமேலடி வைத்துப் போகப் பாதையாகலாம். ஆனால் ஆளும் தலைமைக்கு அது உகந்ததல்ல, அந்நிலையில் இத்தகைய அஹிம்சை ஆட்சிக்கோ தலைமைக்கோ உகந்ததல்ல என்ற உண்மையை காந்தியாரும் புரிந்து கொள்ளவில்லை. பிறர் சொன்னதையும் இவ்விஷயத்தில் அவர் கேட்கவில்லை. இவரது இத்தகைய பிடிவாதத்தால் தேசம் இழந்தது ஏராளம்.

 
இவை எல்லாம் நாதுரம் விநாயக் கோட்சேவின் கோபத்துக்குக் காரணமாகின. அவர் கோபத்தின் உச்சத்தில் திட்டமிட்டுக் காந்தியைக் கொன்றார். கோபமிகுதியில் கொலை செய்துவிட்டு வருந்தவில்லை. கோபத்தில் அமைதி கொண்டு யோசித்துத் திட்டமிடும் புத்திவல்லமை தேசத்தின் ஆட்சிப் பொறுப்புகளை - குறிப்பாக ராணுவம், காவல் சார்ந்த பொறுப்புகளை - ஏற்போருக்கு மிக அவசியம்.

காந்தியார் நல்ல தனிமனிதர், ஆனால் தலைமையில் சறுக்கினார். காந்தியார் முற்றிலும் கெட்டவரல்ல. அவரைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் அவரே சிக்கிக் கொண்டார் என்று கருதும்படியாக அவரது பல நடவடிக்கைகள் அமைந்தன. அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போடப்பட்டு மஹானாக காந்தியார் மிகைப்படுத்தப்பட்டார். காந்தியார் தேசத்தந்தை என்பதற்கு எந்த வரலாற்றுச் சான்றுமில்லை என்ற சமீபத்திய மைய அரசின் ஒப்புதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் உடைந்து நொறுங்கும் பிம்பத்தை எழுப்பியே காந்தியாரை உச்சியில் ஏற்றி வைத்திருப்பதற்குச் சான்று.

 கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலம் இருட்டடிக்கப்பட்டு அவர் கொலை வெறி பிடித்துத் துப்பாக்கியோடு தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்த மனம் பிறழ்ந்தவர் என்பது போலச் சித்தரிக்கப்பட்டது அநியாயம். இந்த இருட்டடிப்பு மூலம் காந்தியார் குறித்த தெய்வீகப் பிம்பம் மேலும் உயர்த்தி அமைக்கப்பட்டது. இப்போது கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலம் புத்தகமாக வெளிவருவது மறுபக்கத்தைப் புரிந்து தெளிவதற்கு உதவும்.

கோட்சேவுக்குக் கோவில், சிலை என்று அவருக்கு ஒளிவட்டம் போட்டு காந்தியாருக்குச் செய்த அதே முட்டாள்தனங்களைச் செய்ய ஒரு கூட்டம் விழைகிறது. இது உணர்ச்சிக் கூவல். ஆகவே கால விரயம்.

என் வரையில் காந்தியார் மகாத்மாவுமல்ல கோட்சே மகாபாவியுமல்ல. இருவரது நிலைப்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து நம் நிலைப்பாட்டை தேசத்துக்கு நலம் பயக்கும் வகையில் அமைத்துக் கொண்டு பயணிப்பதே புத்திசாலித்தனம்.

No comments: