ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 7 February 2015

சமூகத்தினொரு பாகன்

இன்றைய தினங்களில் ஒரு வரைமுறை இல்லாமல் அமீபாவின் உருவம் போல வரையறுக்கப்படுவது தனிமனித உரிமை எனும் கோட்பாடு. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துத் தன் நலனை என்பதை மட்டுமே யோசித்துப் பேசப்படுவதாகவே தனிமனித உரிமை, தனிநபர் சுதந்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் கோட்பாடு உள்ளது. மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பதில் சமுதாய என்ற சொல்லைப் பலர் வசதியாக மறந்துவிட்டு தனிமனித உரிமை பேசுவது வேடிக்கை.


சிலர் புரியாது செய்கிறார்கள், சிலர் ஒரு உள்நோக்கத்தோடு செய்கிறார்கள், சிலர் இப்படிச் சிந்திக்கப் பயிற்றுவிக்கப்பட்டதால் மாற்றுச் சிந்தனை வழியறியாது இதைச் செய்தபடி தற்குறியாகத் திரிகிறார்கள். இத்தனை நாட்களாக இல்லாத எதிர்ப்பு ஏன் இப்போது என்ற கேள்வி நியாயமானதே. இத்தனை நாட்களாக இருந்த எதிர்ப்பு வெளியே தெரியவரவில்லை. காரணம், ஊடகங்களில் நிரம்பி வழியும் சில உள்நோக்கர்கள், அவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட பலர், மற்றும் சில ஒத்து வாழ்வோர். இவர்களைத் தாண்டி இவர்களுக்கு எதிரான கருத்துக்கள் இவர்கள் நிரம்பியிருக்கும் ஊடகங்களில் வரும் என்று எதிர்பார்ப்பது இந்தி படிக்காமல் இருந்தால் தமிழ் வளரும் என்று நம்புவதைவிட முட்டாள்தனம்.பெருமாள் முருகனுக்கு ஆதரவாக படைப்புச் சுதந்திரம் என்ற வாதம் வந்தது. படைப்பாளிக்குப் படைப்புக்கும் அதை மிளிரவைக்கும் புனைவுக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் மாதொரு பாகன் புத்தகத்தின் முன்னுரையில் அது ஒரு ஆய்வு நூல் என்று பெருமாள் முருகன் சொல்லியிருக்கிறார். கள ஆய்வுகள் செய்து திருச்செங்கோடு பகுதியின் பழக்க வழக்கங்களை நாவல் வடிவில் தொகுத்துத் தருகிறேன் என்று பேசித்தான் காசு வாங்கியிருக்கிறார்.


கள ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தின் சில கருத்துக்கள் ஏற்கத் தக்கவையல்ல என்று சொல்லிச் சிலர் எதிர்த்த போது கள ஆய்வு செய்த குறிப்புகள் உள்ளன என்று துணிந்து சொன்னார் பெருமாள் முருகன். ஆய்வுக்குறிப்புகளைக் காட்டுங்கள் பார்க்கவேண்டும் என்று இவர் புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதிய அந்தப் பகுதி மக்கள் கேட்ட போது எந்தக் குறிப்புகளையும் தரவில்லை. ஊர் மொத்தமாகக் கூடி போராட்டத்தில் இறங்கிய போது அரசு அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அளித்த வாக்குமூலத்தில் ”ஆய்வு என்று எதுவும் செய்யவில்லை. புத்தகம் மொத்தமும் புனைவு” என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார் பெருமாள் முருகன்.

ஆகவே இங்கே பிரச்சினை எழுத்தளானின் படைப்புச் சுதந்திரமோ, புனைவுரிமையோ அல்ல. அடிப்படையில் பொய் சொல்லியிருப்பதே குற்றம். ஆய்வு செய்து எழுதுவதாகச் சொல்லிக் காசு பெற்ற பின் ஆய்வே செய்யாமல் கற்பனையில் கதை எழுதியது பித்தலாட்டம். அந்தக் கற்பனையில் ஒரு பகுதி மக்களை ஒழுக்ககேடானவர்களாகச் சித்தரித்து எழுதியது வக்கிரம். இப்படி எழுதுவதே படைப்புச் சுதந்திரம் என்றால் அந்தச் சுதந்திரம் யாராலும் பயன்படுத்தப்படலாம். யாரும் அதனால் சிறுமைப்படுத்தப்படலாம்.


எழுத்தாளன் என்பவன் சமுதாயத்தைச் சிறுமைப்படுத்துவதற்காக எழுதுபவன், மக்களின் சிந்தனையைச் சிற்றின்பத்தைச் சுற்றியே வைத்திருக்கச் செய்பவன் என்ற கருணாநிதித்தனம் வேரறுக்கப்படவேண்டும். வாழ முடியாதவர்கள் என்ற கருணாநிதியின் கதை ஒரு எழுத்தாளன் எப்படி எழுதக்கூடாது என்பதற்குச் சிறந்த உதாரணம். திராவிடப் பொன்னாடு என்ற கனவை அரசியல் மேடைகளில் விற்ற பலரும் இலக்கியம் என்று எழுதிவைத்தது இப்படிப்பட்ட இழிவுகளைத்தான்.

மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பதுபோல் ஒளி உலகைக் காணவந்த தமிழ்நாட்டுச் சீர்திருத்தவாதிகள் இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதி ஆயிரக்கணக்கில் விற்பனை செய்து இளைஞர்களை கெடுத்தார்கள். நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின் அழிவுக்காலம் இதுபோன்ற படைப்புகளில் இருந்துதான் தொடங்கியது என்கிறார் கவியரசு கண்ணதாசன். கருணாநிதியின் படைப்புகள் முழுவதையும் படித்து முடித்தபோது தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். அந்தப் பயத்தை அதிகப்படுத்துகின்றன மாதொரு பாகன் போன்ற படைப்புகளும், எழுத்தாளர்கள் கையாளும் கபடுகளும்.


அடிப்படையில் சுய ஒழுக்கம் இல்லாதவன் சமுதாயத்தைச் சீர்திருத்த என்ன செய்ய இயலும்? குறிப்பிட்ட ஊர் பற்றிய ஆய்வு செய்கிறேன் என்று சொல்லிக் காசு பெற்று அந்த ஊர் பக்கம் வெயிலுக்குக் கூட ஒதுங்காமல் யாரையும் பாராமல் எதுவும் கேளாமல் கிழவிகள் சொன்னார்கள், கிழவர்கள் ஒப்பினார்கள் என்று சொல்வதும், ஆய்வுக் குறிப்புகளைக் காட்டச் சொன்னால் எழுதியது ஆய்வே அல்ல கற்பனை என்று குட்டிக்கரணம் அடிப்பதும் ஒழுக்கம் என்பதற்கு நேரெதிர். இவர் கல்லூரி ஆசிரியராம். ஒழுக்கத்தின் நிழல் கூடப் படியாத இந்தப் பித்தலாட்டக்காரர் எப்படி நம் நாட்டின் எதிர்காலச் சந்ததியை உருப்படியாக்க உறுதுணையாய் இருக்க முடியும்?

இப்படிப்பட்ட ஒரு மனிதன் இனி பேனா பிடிக்கமாட்டேன் என்று சொன்னால் சமுதாயம் உருப்பட ஒளிக்கீற்று ஒன்று தோன்றியது என்று மகிழ வேண்டும். எழுத்தாளன் பேனாவைக் கீழே வைப்பது படைப்பாளிக்கு அநீதி என்று பொங்கக்கூடாது. கூட்டத்தோடு கூச்சலிடும் பொதுப்புத்தி கொண்டவர்களே தமிழகத்தில் எழுத்தாளர்கள் என்றால் இவர்கள் அனைவரின் படைப்புகளையும் தனித்தனியே வாசிக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் போல எல்லாம் ஒரே கூளத்தில் கிடைத்த சிந்தனைக் குப்பைகளாகவே இருக்கும் எனும் நிலையில் பொழுது போகவே வழியில்லை என்றால் ஒருவரது படைப்பை மட்டும் வாசித்துவிட்டுப் போகலாம்.

அருளுக்கும் மருளுக்கும் வேறுபாடு அறியாதவர்கள் என்றால் இடதுசாரிகள் என்று அவர்களைக் கடந்து போய்விடலாம். அறிந்தும் சொல்ல அஞ்சுவோர் எழுத்தாளர்கள என்ற மரியாதைக்கு உரியவர்கள் அல்லர். அறிந்தும் சுயலாபத்துக்காக சமுதாயத்தைக் கெடுப்போருக்குத் துணைபோகிறவர்கள் கையெழுத்துப் போடக்கூடப் பேனா பிடிக்கக்கூடாது என்று தடைவிதிக்க வேண்டும்.


பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வருவோரில் பலர் மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இவரது நாவலின் தரம் குறித்து எழுதிய இரு எழுத்தாளர்களின் கதியே சான்று. ஒருவர் எழுதியதை அழித்துவிட்டார். இன்னொருவர் கொலை மிரட்டலுக்கு ஆளானார். இதனால் அறியப்படுவதென்ன? இந்தப் பித்தலாட்டப் பேனாக்காரனின் பின்னே ஒரு சக்தி மிக்க அமைப்போ குழுவோ இருக்கிறது.

இவர்களில் பலர் தாந்தோன்றித்தனமாக எழுதுவதும் அதுவே இலக்கியம், வரலாறு, இன்னபிற வகையறா என்று மூர்க்கத்தனமாகக் கூவுவதும் அதைத் தம் பின்புலத்தின் பலத்தால் நிலைநிறுத்துவதுமான வழக்கத்தைக் கொண்டவர்கள். ஊடக வலுவால் உலகெங்கும் இவர்களும், இவர்களைச் சார்ந்தும், அண்டியும் பிழைப்போரும் புகழ் பெறுவதும் நிகழ்ந்து வந்தது.


சமூக ஊடகங்கள் வலுப்பெற்ற இந்தக் காலகட்டத்தில் எதிர்ப்புகளை இவர்களது வழமையான பாணியில் அடக்க இயலவில்லை. எழுத்தோ கருத்தோ பொதுவில் வருவதற்கு இவர்களது அங்கீகாரமோ ஆதரவோ தேவையில்லை என்ற நிலை இன்று. இவர்களைச் சாராதவர்களை மிரட்டிப் பணியவைக்கவும் இவர்களால் இயலாது.

சரி, பெருமாள் முருகன் இப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் சமுதாயம் முழுவதையும் ஒழுக்கக்கேடானவர்கள் என்ற பிம்பத்தில் ஏன் அடைக்கிறார்? இவருக்கு ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா? உற்று நோக்கினால் ஆமாம் என்பதே பதிலாகத் தெரிகிறது. பெருமாள் முருகன் தன் நாவலில் இழிவுபடுத்திய குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவரே தான். ஆனால் இவரது தந்தை குடிப்பழக்கத்தால் சொந்தபந்தங்களிடம் இருந்து அந்நியப்பட்டார். இவரது குடும்பம் சமுதாயத்தை விட்டு விலகியே இருந்திருக்கிறது. இந்நிலையில் இவர் இடதுசாரிகளால் ஈர்க்கப்பட்டு அவர்களுடனேயே வளர்ந்திருக்கிறார். தான் அந்நியப்பட்ட சமூகத்தின் மீதான ஒரு அடிப்படைக் காழ்ப்புணர்ச்சி இவரை இப்படி எழுதத் தூண்டியிருக்க வாய்ப்புள்ளது.


பெருமாள் முருகனுக்குப் பின் இருப்போரின் வெற்றுக்கூச்சலுக்கு அஞ்சாதவர்களுக்குச் சமூக வலைத்தளங்கள் ஒரு வரப்பிரசாதம். உண்மைகளும், இவர்களது புனைசுருட்டுகளுக்கு எதிர்வினைகளும் இன்று சமூக வலைத்தளங்களால் மக்களைச் சென்றடைகின்றன. அது இந்தக் கூட்டத்துக்கு வலிக்கிறது. ஆகவே கூச்சல் அதிகரிக்கிறது. இந்தக் கூச்சல் கண்டு அஞ்சாது நிற்கும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தங்கள் தரப்பை சமூக ஊடகங்கள் மூலமாகவே எடுத்துரைத்து வருகிறார்கள். ஏன்?

முதன்மை ஊடங்கள் என்று அரியப்படும் ஊடகங்கள் முற்றிலுமாக இடது சார்ந்தே நிற்கின்றன. அவற்றில் நியாயம் என்பதை எள்ளளவும் எதிர்பார்க்க முடியாது. தேசிய அளவில் இந்தப் பிரச்சினை ஏதோ ஒரு எழுத்தாளனை சில அரசியல் சக்திகள் மிரட்டுவது போலப் பேசப்பட்டு அதுவே நிலை நாட்டப்பட்டும் வருகிறது. இந்த ஊடகங்கள் கோவிலும் இந்துமத நம்பிக்கையும் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் வசதியாக இதற்கு இந்துத்வ சாயம் பூசி விவகாரத்தைத் திசை திருப்பக் கடுமையாக முயன்றன. ஆனால் இது குறிப்பிட்ட சில இயக்கங்கள் முன்னெடுக்கும் போரட்டம் அல்ல, பொதுமக்கள் மனம் நொந்து கொதித்தெழுந்ததன் விளைவு என்ற உண்மை நிலை நிறுத்தப்பட்டது சமூக ஊடகங்களின் வாயிலாகவே.


இன்றும் சில ஆங்கிலப் பத்திரிக்கைகளில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பல கருத்துக்கள் வருகின்றன. அவர் குற்றமே செய்யாதவர் என்பது போலவும் பொறுமையும், சகிப்புத்தன்மையும் அற்ற ஒரு சமூகம் அவரைச் சித்திரவதை செய்வது போலவும் எழுதிவருகிறார்கள். இவர் செய்தது சட்டப்படி ஒப்பந்த மீறல், பொருளாதாரக் குற்றம். இதை உலகறிய எடுத்துச் சொல்ல வேண்டும். சமூக ஊடகங்களில் இன்னும் வலுவாக ஆங்கிலத்திலும், இயன்றால் வேறு பல மொழிகளிலும் இவர்களது பித்தலாட்டங்கள் தோலுரித்துக் காட்டப்படவேண்டும். அப்போதே தமிழகம் தாண்டிய வாசகர்களுக்கும் தமிழ் இலக்கிய உலகின் தற்கால (அவல)நிலை புரியும்.

படங்கள் உதவி: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம், கூகிள் படங்கள்.

1 comment:

Anonymous said...

the anti brahmin movements in 60 and 70s are now being manifested as anti-hindu movements. As the non brahmin communites failed to protest the anti brahmin movemetns in those days, now the entire hindu community is paying a heavy price.