ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday 23 December 2014

நம்பிக்கையும் சட்டமும் - இராம ஜென்ம பூமி

இராம ஜென்ம பூமி இராம ஜென்ம பூமியேதான் என்று பிரயாகை (அலாகாபாத்) உயர்நீதிமன்றம் 2010ல் அளித்த தீர்ப்புக்குப் பின் அது மசூதியே என்று வழக்காடிய ஹஷிம் அன்சாரி என்ற முதியவர் உள்ளிட்ட பல முஸ்லிம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இத்தீர்ப்பை விமர்சிப்பவர்கள் வைக்கும் முக்கியமான வாதம் இராமன் பிறந்த இடம் குறித்த முடிவை எடுத்த விதம் பற்றியதே. ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவிவரும் மக்களின் நம்பிக்கை கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 


சட்டத்தின்படி மட்டுமே பார்த்தால் அந்த இடம் இராம ஜென்ம பூமியா என்ற கேள்வியே வழக்கில் இல்லை. கும்மட்டம் நின்றிருந்த அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதே வழக்கு. அது இராமர் பிறந்த இடம் அதனால் அங்கே கோவில் மீண்டும் கட்டப்படவேண்டும் என்ற விஷயத்தில் விவாதத்துக்கே இடமில்லை. ஆனால் இடத்தின் உரிமை குறித்த தீர்ப்பில் தன் முடிவுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் நீதிமன்றம் சில கேள்விகளை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு பதிலும் அளித்துள்ளது.


நம்பிக்கை குறித்த எந்தப் பிரச்சினையிலும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மாறாத உண்மைகளும் மட்டுமே சட்டப்பூர்வமானதாகும் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்றங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பல விஷயங்களை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மாறாத உண்மைகளும் இல்லாமலேயே ஏற்றுக் கொண்டுள்ளன.

ஒருவர் சாட்சியாகவோ, குற்றம் சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றம் சாட்டுபவராகவோ நீதிமன்றக் கூண்டுக்கு அழைக்கப்பட்டதும் அவரிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி அவரது தந்தை பெயர். உலகில் அனைவருக்குமே அது தாயின் சொல்லால் மட்டுமே ஏற்கத்தக்க உண்மை என்பது புரியும். தந்தை பெயர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மாறாத உண்மைகளும் கொண்டு நிரூபிக்கப்பட்டதா என்று கேட்டால் வழக்கு மானநஷ்ட வழக்காக திசை திரும்பும் வாய்ப்பே அதிகம்! தந்தை பெயர் குறித்த சர்ச்சையே வழக்கு என்றில்லாத வரை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மாறாத உண்மைகளும் கொண்டு நிரூபிக்கப்படத் தேவையற்ற விஷயம் அது.

நம்பிக்கை என்பது ஒரு செய்தியின் மீதோ, நபரின் மீதோ, கொள்கையின் மீதோ, எண்ணம், யோசனை இவற்றின் மீதோ ஒரு மனிதன் கொண்டுள்ள மாறாப்பற்று. இவை சாட்சிகள், ஆதாரங்கள் இவற்றால் நிரூபிக்கப்படத் தேவையற்ற இறைநம்பிக்கை, நெறிகள் வழி ஒழுகுதல், ஒழுக்க விதிகளைக் கடைப்பிடித்தல், கடமை தவறாமை, கற்பு நெறி, நேர்மை, சொல் தவறாமை ஆகியன போன்ற வாழ்வியல் நம்பிக்கைகள். இவற்றுக்கு மனிதனின் நம்பிக்கையும் இவற்றைக் கடைப்பிடிப்போர் மீதான மரியாதையுமே சாட்சிகளும் ஆதாரங்களும் ஆகும். ஆகவே நம்பிக்கையின் அடிப்படையை அப்படியே ஏற்றுக் கொண்ட நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது மனித வாழ்வின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் அவலச் செயல்.

அரசு அளிக்கும் அடையாளச் சான்றுகளின் மீது அவ்வப்போது உண்மைதவறுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் வரும் போதிலும் அரசு அளித்த அடையாளச் சான்றுகள் அரசு முறைமைகள் மீதும் ஆட்சிக் கட்டமைப்பின் மீதுமான நம்பிக்கையையே பரைசாற்றுகின்றன. அரசு அளிக்கும் அடையாளச் சான்றுகளுக்கு எவரும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களைக் கேட்பதில்லை. இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்ட சான்று என்ற நம்பிக்கையில் அவை ஏற்கப்படுகின்றன. சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மறுக்கப்பட முடியாத சான்றுரைகளும் ஒவ்வொரு விஷயத்துக்கும் கேட்கப்படுமானால் கதிரவன் உதிப்பதை நாம் காணும் திசை கிழக்கு என்பதற்கும் அது நம் பார்வையிலிருந்து மறைவதைக் காணும் திசை மேற்கு என்பதற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். பூமி சுற்றிக் கொண்டே இருப்பதனால் கிழக்கும் மேற்கும் மாறாது என்பதற்கு சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மறுக்கப்பட முடியாத சான்றுரைகளும் தேவை என்று அலையவேண்டியது தான்.

இந்நிலையில் இசுலாமிய முதியவர் அன்சாரி இவ்வழக்கைத் தாம் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அங்கே இராமபிரானுக்கு ஆலயம் அமைவதையே தாம் விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் சுட்டிக் காட்டிய காரணங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல முஸ்லிம் அரசியல்வாதிகள் இதை வைத்துப் பெரும் பணம் சேர்த்ததாகவும் போராட்டக்குழுவில் இருந்த அசீம்கான் உத்திரப் பிரதேச வக்ஃப் வாரியத்தின் பொறுப்பில் அமைச்சராக இருந்தும் இவ்வழக்கில் வக்ஃப் வாரியம் எந்த அக்கறையும் காட்டவில்லை என்றும், அயோத்தியைச் சுற்றி இருக்கும் அத்தனை ஆலயங்களுக்கும் சென்று இவை இராமபிரான் ஆலயத்தோடு தொடர்புடையவை என்று பேசிவரும் அசிம்கான் இராமபிரான் ஆலயத்தை மட்டும் எதிர்ப்பது அரசியல் விளையாட்டு என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அசிம்கான் மேய்ச்சலுக்குச் சென்ற தன்வீட்டு எருமை மாடுகளைத் தேடிப்பிடித்து வர காவல்துறையினரை அனுப்பிய பெரிய மனிதர்.

வழமை போல ஊடகங்கள் அன்சாரி மிரட்டப்பட்டாரா? ஏன் கோவில் மட்டுமே வேண்டும் என்று சங்க பரிவாரம் சொல்கிறது? இது மதவெறி இல்லையா என்றெல்லாம் கேட்கின்றன. ஆனால் தவறியும் மசூதியே வேண்டும் என்று சொல்வது மதவாதம் என்று முனகக் கூட இல்லை ஊடகங்கள்.

சரி சட்டம் குறித்த சில விவரங்களைப் பார்ப்போம்.

சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது 1940ஆம் ஆண்டு ஆங்கிலேய ப்ரிவி கௌன்சிலால் தீர்பளிக்கப்பட்ட லாகூர் குருத்வாரா வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமாக விவாதிக்கப்படும்.

லாகூரில் அப்துல்லாகான் மசூதி என்ற ஒன்று ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் (பொது ஆண்டு 1653) அப்துல்லா கான் என்ற லாகூரின் காவல் தலைவரால் (கொத்வால்) கட்டுமானம் தொடங்கப்பட்டது. இந்த அப்துல்லா கான் ஷாஜகானின் மகன்

தாரா ஷுகோவின் சமையல்காரனாக இருந்தார். அவரது நல்ல சமையலைப் பாராட்டும் விதமாக லாகூரின் காவல் தலைவராக்கப்பட்டார். ஆனால் இந்த மசூதி பொது ஆண்டு 1722ல் ஃபலக் பெக் கான் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இதன் அருகே ஒரு மைதானம் இருந்தது. இஸ்லாமுக்கு மாற மறுத்தவர்களையும் எஞ்சிய முகலாயரை எதிர்த்தவர்களையும் தலையைச் சீவ அந்த இடம் தண்டனைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் 1762ல் தாரு சிங் என்ற சீக்கிய வீரர் அந்தப் பகுதியின் மொகலாய ஆளுநர் ஜக்காரியா கான் ஆணையின் பேரில் தலை சீவப்பட்டுக் கொல்லப்பட்டார். உடனடியாகக் களமிறங்கிய சீக்கியர்கள் அந்த மைதானத்தை தியாகி தாரு சிங் மைதானம் என்று அறிவித்தனர். படையுடன் வந்து மசூதியையும் மைதானத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. மைதானத்தின் ஒரு பகுதியில் ஒரு குருத்வாராவை எழுப்பிக் கொண்ட சீக்கியர்கள் மசூதி இருந்த கட்டிடத்தை தங்கள் மதகுருமார்கள் தங்குமிடமாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஆங்கிலேயர் இந்தப்பகுதியில் ஆட்சியைக் கைப்பற்றிய பின் முஸ்லிம்கள் ஆங்கிலேய ஆளுநரிடம் புகாரளித்தனர். 1850ல் நூர் முகமது என்பவர் தாம் தான் அந்த மசூதியின் முத்தவல்லி என்று சொல்லி வழக்குத் தொடர்ந்தார். 1853 முதல் 1883 வரை பல்வேறு வழக்குகளை அவர் தொடர்ந்தபோதும் ஆங்கிலேய நீதிமன்றம் அப்போதைய நிலையையே உறுதி செய்தது. 1935ல் சீக்கியர்கள் அந்த மசூதியை இடித்துவிட்டு குருத்வாராவை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்தனர். முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி மசூதியை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போதைய பஞ்சாப் பிரதேசத்தின் ஆங்கிலேய கவர்னர் சர்.ஹெர்பர்ட் எமர்சன் இரு தரப்பாரையும் அழைத்துச் சமாதானம் பேசினார். 1935 ஜூலை 7ஆம் நாள் இரவு அந்த மசூதியை சீக்கியர்கள் இடித்தனர். இதன் பிறகு தொடரப்பட்ட வழக்கில் லாகூர் நீதிமன்றம் இசுலாமியர்களுக்கு உரிமையில்லை என்றது. பம்பாய் உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. பிரிவி கௌன்சிலுக்குச் சென்றார்கள் இசுலாமியர். அங்கே அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகத்தெளிவானது.

வழக்குத் தொடுத்த நூர் முகமது தனது புகாரில் அந்த இடத்தைத் தங்களுக்கு மீட்டு அளிக்க வேண்டும் என்றோ, அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்றோ கூறவில்லை. அவ்விடம் மசூதியாக அறிவிக்கப்பட்டு அங்கே இசுலாமியர் தொழுகைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றே கோரியிருந்தார். Statute of Limitation விதிப்படி ஆக்கிரமிக்கப்பட்டு பல்லாண்டுகள் கடந்தபின் அந்தச் சொத்தில் பயன்பாட்டு உரிமை மட்டுமே கோரப்பட்ட வழக்கு அது. அதற்கும் இராமஜென்ம பூமி வழக்குக்கும் துளியும் சம்பந்தமில்லை.


இராமஜென்மபூமி வழக்கில் இராமபிரான் ஆலயத்தை இடித்துக் கட்டப்பட்டதே மீர் பாகி கட்டிய பாப்ரி மசூதி என்றழைக்கப்பட்ட கட்டிடம் என்பது முதல் இஸ்லாமிய ஆட்சியின் போதே பல்வேறு காலகட்டங்களில் கோவிலை மீட்கப்  போராட்டங்கள் நடைபெற்றதும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவிலை மீண்டும் கட்டவேண்டும் என்று தொடரப்பட்ட நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த கொடுமை என்பதால் அதைச் செய்ய இயலாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆக இவ்வழக்கில் கட்டிடத்தைக் கோவில் என்று அறிவித்து வழிபாட்டு உரிமை தாருங்கள் என்று யாரும் கேட்கவில்லை. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடம் இது. இங்கே உள்ள கோவில் மீண்டும் நிறுவப்படவேண்டும் என்பதே வழக்கின் சாரம். அங்கே கோவில் இருந்தது என்பதை ஐயம் திரிபற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபித்துள்ளனர்.

பிரயாகை நீதிமன்றத் தீர்ப்பிலேயே நீதியரசர் ஷர்மா நிலம் மொத்தம் ஹிந்துக்களைச் சேர்ந்தது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால் மற்ற இரு நீதிபதிகள் நிலத்தை மூன்றாகப் பிரித்து வழக்காடிய ஹிந்துக்களில் இருபிரிவினருக்கும் இசுலாமியர்களுக்கு ஒரு பிரிவும் என்று அளித்துள்ளனர். இங்கே தான் ஒரு கேள்வி எழுகிறது. உதாரணமாக, எங்கள் முப்பாட்டனாரின் வீட்டை ஒரு மூர்க்கன் நெறியற்ற முறையில் ஆக்கிரமித்துக் கொண்டு அந்த வீட்டை இடித்துவிட்டு அங்கே தனக்கென ஒரு வீடு கட்டிக் கொண்டான். ஆனால் அங்கே அவனோ அவன் சம்பந்தப்பட்ட யாருமே குடியிருக்கவில்லை. அது ஒரு பூத் பங்களாவாக என் முப்பாட்டனாரின் காலத்திலிருந்து நின்று வருகிறது. பல தலைமுறைகளாகப் போராடி வந்தனர் என் முன்னோர். என் காலத்தில் அந்த பாழடைந்த வீட்டை நாங்கள் இடித்துவிட்டோம். அதற்கு எங்களில் சிலர் மீது ஒரு வழக்கு நடக்கிறது. ஆனால் எங்கள் பாட்டனார் காலத்தில் நிலத்தின் உரிமைக்காகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் அது ஆக்கிரமிப்பு என்பதும், என் முப்பாட்டன் வீடு அங்கே இருந்தது என்பதும் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் நிரூபிக்கப்பட்ட போதும், என் முப்பாட்டனின் வழித்தோன்றல்களான எங்களுக்கு நிலத்தின் இரு பிரிவுகளும் ஆக்கிரமித்தவர் குடும்பத்துக்கு ஒரு பிரிவுமாக நிலத்தைப் பகிர்ந்தளித்தால் அது பாதிக்கப்பட்ட நாங்கள் மனம் குளிர்வதற்கான நீதி அல்லவே?

மேலும் நிலத்தில் பங்கு வேண்டும் என்று இந்த வழக்கில் யாரும் கேட்கவில்லை. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதே கேள்வி. நிலம் ஹிந்துக்களுக்குச் சொந்தம் என்று நிரூபணமான பிறகு ஏன் ஆக்கிரமித்தவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தரவேண்டும்? அங்கே வரவேண்டியது தேசத்தின் மாண்பின் காவலன், சக்ரவர்த்தித் திருமகன் இராமபிரானின் ஆலயமே. இதில் நாம் எக்காலமும் எத்தனை பிறவிகள் எடுப்பினும் உறுதியுடன் இருப்போம். தர்மத்தை நிலைநாட்டவே  பாடுபடுவோம்.



வந்தே மாதரம்! ஜெய் ஸ்ரீ ராம்.

No comments: