முன்னாள் பிரதமர் அண்ணல் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களுக்கும் பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களுக்கும் இவ்வாண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலின் பீஷ்ம பிதாமகர் என்று போற்றப்படும் அடல்ஜி குறித்து நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அவர் நம் காலத்தில் நம்மிடையே வாழ்ந்தார் என்ற பெருமை நமக்குக் கிட்டியிருக்கிறது.
போருக்குத் தயாரான பெருவீரனின் அறைகூவல்
தோற்றவன் வெறுப்பில் தேம்பும் விசும்பலல்ல
அரண்டவன் உளறிடும் அரற்றலென எண்ணாதீர்
பாரதியன் வரைந்திட்ட வெற்றிக்கவி கேளீரோ
என்று தன் துவண்ட தம் தொண்டர் படை எழுச்சி கொள்ளக் கவிபாடிய காவியத் தலைவன் நம் அடல்ஜி.
அடல்ஜி போன்ற பெரியோருக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்து மறைந்த மூத்தோர் பலரில் முதன்மையானவர் மஹாமனா என்று போற்றப்பட்ட பண்டிதர் மதன் மோகன் மாளவியா அவர்கள். இவர் ஹிந்து ராஷ்டிரம் என்பதை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளில் ஒருவராவார். இவரது பூர்வீகம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மால்வா. இவர்களது மூதாதைகள் உத்திரப் பிரதேசத்தில் பிரயாகை நகருக்குக் குடிபெயர்ந்ததை அடுத்து அங்கே மால்வாக்காரர்கள் என்ற பொருளில் மாலவ்யர் என்று அழைக்கப்பட்டனர். நாளடைவில் அவர்களது குடும்பப் பெயரான வியாஸ் என்பது மறைந்து மாளவியா என்ற பெயர் நிலைத்தது. இவர்கள் பரம்பரையாக பாகவத புராணத்தைப் பொது மக்களுக்குச் சொல்வதிலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு விரிவுரை செய்வதிலும் ஈடுபட்டுவந்தனர்.
மதன் மோகன் ஐந்து வயதில் தர்ம ஞானோபதேச பாடசாலையில் தன் கல்வியைத் தொடங்கினார். அங்கே அடிப்படைக் கல்வி முடித்ததும் வித்யா வர்த்தினி சபை நடத்திய கல்விக் கூடத்தில் பயின்றார். பின்னர் அலாஹாபாத் ஜில்லா பள்ளிக்கூடத்திலும் முயிர் மத்தியக் கல்லூரியிலும் படித்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். எம்.ஏ படிக்க இவர் விரும்பிய போதும் குடும்ப நிதி நிலை காரணமாக அலாஹாபாத் மாவட்டப் பள்ளியில் ஆசிரியப் பணி ஏற்றார்.
1886ல் இரண்டாவது இந்திய தேசிய காங்கிரசு மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அதில் மதன் மோகன் மாளவியா கலந்துகொண்டார். அங்கே இவர் ஆற்றிய உரை மாநாட்டுத் தலைவர் தாதாபாய் நௌரோஜியை மிகவும் கவர்ந்தது. அங்கே வந்திருந்த கலங்கர் பகுதி ஜமீந்தார் இவருக்கு ஹிந்துஸ்தான் பத்திரிகையின் ஆசிரியப் பணியை அளித்தார். 1887ல் கல்வியாண்டு முடிந்ததும் பார்த்துவந்த கல்விப் பணியைத் துறந்து பத்திரிகைப் பணியை ஏற்றார். இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிய பின் அலாஹாபாத்தில் சட்டம் படிக்கச் சென்றார். அங்கே தி இந்தியன் யூனியன் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியராகப் பகுதி நேரப்பணி செய்தபடியே படித்தார். அலாஹாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1909ல் காங்கிரசு மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். 1911ல் தனது சட்டத் தொழிலை நிறுத்திவிட்டு சந்நியாச வாழ்வு போன்ற ஒரு வாழ்வை மேற்கொண்டார். அதுவரை சம்பாதித்த சொத்துக்களை தம் பிள்ளைகளுக்கு அளித்துவிட்டு சமூகத் தொண்டில் ஈடுபட்டார். பொருள் ஈட்டுவதிலோ, வழக்கறிஞர் தொழிலிலோ ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டார். ஆனால் தன் சத்தியத்தை சௌரி சௌரா போராட்டத்தில் 177 பேரை பிரிட்டிஷ் அரசு கைது செய்த போது மீறினார். நீதிமன்றத்தில் வாதாடி 177ல் 156 பேரை விடுவித்தார்.
1912 முதல் 1926 வரை மத்திய மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். 1916ல் லக்னௌ உடன்படிக்கையில் முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதி அளிக்கப்பட்டதை தேச ஒற்றுமைக்கு எதிரான செயல் என்று எதிர்த்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றிய மாளாவியா கிலாபத் இயக்கத்தில் காங்கிரசு பங்கெடுப்பதை எதிர்த்தார். காந்தியாரின் ஆற்றுப்படுத்தும் அரசியலைச் (politics of appeasement) சாடினார். முதல் வட்ட மேஜை மாநாட்டில் பாரதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். வகுப்புவாரி இடஒதுக்கீட்டை எதிர்த்து காங்கிரசு தேசிய இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கி 1934 மத்திய மாகாணத் தேர்தலில் 12 இடங்களில் வெற்றி கண்டார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் குழுமத்தின் தலைவராக 1924 முதல் 1946 வரை இருந்தார். இந்த நாளிதழ் நிறுத்தப்படுவதில் இருந்து காப்பாற்ற 50000 ரூபாய் வசூலித்துக் கொடுத்தார்.
இவர் ஹரிஜனங்களின் கோவில் நுழைவுக்காகப் போராடினார். மஹாராஷ்டிரத்தில் உள்ள பஞ்சவடியில் ராமர் கோவிலுக்குள் ஹரிஜனங்கள் நுழைய இருந்த தடையை எதிர்த்து ஹரிஜனங்கள் 200 பேரைச் சேர்த்துக் கொண்டு போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். இவரது இத்தகைய போராட்டங்களுக்காக இவரை பிராமண சாதியில் இருந்து ஒதுக்கிவைக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிய பலரும் பின்னர் எதிர்ப்பைக் கைவிட்டனர்.
சத்தியமேவ ஜெயதே என்ற கோஷத்தை மாளாவியாதான் பிரபலப்படுத்தினார். தேசியத்தோடு தெய்விகம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தவர் மாளவியா. ஹரித்வாரில் கங்கைக்கு ஆரத்தி காட்டும் வழக்கத்தில் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தேச விடுதலைக்குப் பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்தார். இன்றும் அங்கே ஆரத்தி காட்டும் போது தேசத்துக்காகக்ப் பிரார்த்தனை நடக்கிறது. அங்கே கங்கை ஆற்றின் நடுவே ஒரு சிறு தீவுப் பகுதி மாள்வியா த்வீபம் என்று இவர் பெயரால் வழங்கப்படுகிறது.
1904ல் நாலந்தா, தக்ஷசீலம் போன்ற பண்டைய பல்கலைக்கழகங்களை ஒத்த ஒரு பெரிய கல்விச்சாலை நிறுவ வேண்டும் என்ற தம் எண்ணத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார். இதற்கு உறுதுணையாக அன்னி பெசண்ட் அம்மையார் நின்றார். இது குறித்து பல இடங்களில் பேசியும் பலரிடம் நன்கொடை பெற்றும் 1911ல் ஹிந்து பல்கலைக்கழக குழு ஒன்றை அமைத்து தம் கனவுப் பல்கலைக்கழகம் அமைக்க உழைத்தார் மாளாவியா. ஜமீந்தார்கள், நிலச்சுவாந்தார்கள், தொழிலதிபர்கள், அரசர்கள் என்று பலரிடம் பல்கலைக்கழகம் அமைக்க பொன்னும் பொருளும் நன்கொடை பெற்றார். 1915ல் காசி ஹிந்து விஸ்வவித்யாலய சட்டம் மத்திய மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டு பிரிட்டிஷ் அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
1916ல் ஹைதராபாத் நிஜாமைச் சந்தித்து காசி நகரத்தில் ஒரு ஹிந்துப் பல்கலைக்கழகம் அமைக்கவிருப்பதைச் சொல்லி நன்கொடை கேட்டார். இஸ்லாமிய மன்னன் என்னிடம் வந்து ஹிந்து பல்கலைக்கழகம் அமைக்க உதவி கேட்கிறாயே? உன்னைச் சிரச்சேதம் செய்வேன்! என்று நிஜாம் கோபப்பட்டார். மாளவியா அமைதியாக தன் பல்கலைக்கழகம் குறித்த திட்டத்தை எடுத்துச் சொல்லி ”ஒரு நல்ல கல்வித்திட்டத்துக்கு உதவிய பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!” என்று கூறினார்.
கோபம் தணியாத நிஜாம் ”வெளியே போ இல்லையென்றால் கைது செய்யப்படுவாய்!” என்று எச்சரித்தார். அஞ்சாத மாளவியா உங்களுக்கு வரலாற்றில் நீங்காத நற்பெயர் வேண்டுமெனில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்க உதவுங்கள் என்று மீண்டும் கேட்டார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற நிஜாம் தன் கால் செருப்பைக் கழற்றி மாளவியா மீது எறிந்துவிட்டார். மத்திய மாகாண கவுன்சில் உறுப்பினரை இப்படி அவமதித்ததைக் கொண்டு பிரிட்டிஷ் அரசு என்ன செய்யுமோ என்று நிஜாமின் அவையினர் பதறினர். பதறாத மாளவியா செருப்பை எடுத்துக் கொண்டு ”இதையே உங்கள் நன்கொடையாகக் கொள்கிறேன் நிஜாம் அவர்களே!” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
நேராகச் சந்தைக்குச் சென்றார் மாளாவியா. அங்கே நிஜாமின் செருப்பைக் காட்டி அதை ஏலத்தில் விடப் போவதாக அறிவித்தார். அரசரின் செருப்பு என்பதால் ஒரு ரூபாயில் ஏலம் தொடங்கியது. (அந்தக் காலத்தில் அது சாமானியனுக்குப் பெரிய தொகை) அரண்மனை ஒற்றர்கள் மூலம் தகவல் அறிந்த நிஜாம் தம் செருப்பை யாரேனும் குறைந்த விலைக்கு ஏலம் எடுப்பது தமக்கு அவமானம் என்று கருதி அரண்மனை ஒற்றர்கள் மூலம் பெருந்தொகை கொடுத்து தம் செருப்பையே வாங்கிக் கொண்டார். தன் லட்சியத்திற்காக நிதானமிழக்காது செயல்பட்டு அவமானங்களை வெகுமானமாக மாற்றிக் காட்டியவர் பண்டிதர் மதன் மோகன் மாளவியா அவர்கள்.
அப்பழுக்கற்ற ஹிந்து தேசியவாதியான மாளாவியாவைச் சேர்வதன் மூலம் பாரத ரத்னா விருது பெருமை பெறுகிறது.
வந்தே மாதரம்.
1 comment:
I saw your blog today. It's nice.
The spirited message on changing
the blogname is good. Keep writing.
Post a Comment