ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 10 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 3


இந்தியாவை குறித்து ஆராய்ச்சி செய்த பல வெளிநாட்டு அறிஞர்கள், குறிப்பாக அகஸ்த் வில்ஹம், ஆர்தர் மற்றும் ஹெர்ன் வில்ஹெம் ஆகியோர் அதன் வேத இலக்கியங்களையும், கோட்பாடுகளையும், தத்துவ ஆழத்தையும் கண்டு வியப்போடு பாராட்டினர்.. ஆனால் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்திய துனைக்கண்ட ஆராய்சியாளர்கள் என்ற பெயரிலும் சரித்திர ஆய்வாளர்கள் என்ற பெயரிலும் இந்தியாவுக்கு நுழைந்தது பெரும்பாலும் கிறிஸ்துவ மிஷநரி கும்பல்கள்தான். இவர்களின் முக்கிய பணியே தாங்கள் பிடித்து வைத்திருக்கும் அடிமை நாட்டின் மீது கிறிஸ்துவத்தை திணிப்பது தான்.

நம்முடைய நாகரீகம் மிகப்பழமையானது என்ற உண்மையை விட நம்மை பிரித்தால்தான் தங்கள் ஆளுமையை முழுதாக செலுத்த முடியும் என்கிற அவசியம் ஆங்கிலேயர்களுக்கு பெரிதாய் பட்டது. அதற்கு வழக்கம் போல் கிறிஸ்துவ மிஷநரிகள் தேவைப்பட்டார்கள்.

வெள்ளையர்களை நம்முடைய ஆழ்ந்த தத்துவங்களும், கோட்பாடுகளும் ஆச்சரியப்படுத்தினாலும் அவர்களுக்கு இயற்கையாவே ஒரு மனோபாவம் உண்டு. உலகில் உள்ள சிறந்த இலக்கியங்கள், தத்துவங்கள், மொழிகள் என்று எல்லாமே ஐரோப்பிய வேர்களில் இருந்துதான் தொடங்கி இருக்கும் எனும் ஒரு எண்னம் அல்லது அகங்காரம். சமஸ்கிருத‌த்தின் மிகச்சிறப்பான தொன்மையும், இலக்கிய வளர்ச்சியும், நுட்பமான சொல்லமைப்புகளும் அவர்களுக்கு வியப்பூட்டின. சமஸ்கிருதத்தில் உள்ள பல வேர் சொல்கள், பழமை வாய்ந்த ஐரோப்பிய மொழிகளில் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் தெரிவித்ததால், அவர்கள் சமஸ்கிருதம் என்பதே தங்கள் ஐரொப்பியாவில் இருந்து வந்தது என்கிற ஒரு ஆதாரமற்ற அனுமானத்தில் இறங்கினார்கள்.

ஆக சமஸ்கிருதம், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் எல்லாமே ஒரே மொழியிலிருந்து உண்டானவை என்று அனுமானித்து அதற்கு "ப்ரோட்டோ-இண்டோ-ஐரோப்பிய மொழி" என்று பெயர் வைத்தார்கள். இந்த ப்ரோட்டோ-இண்டோ-ஐரொப்பிய என்கிற கற்பனை மொழி ஒரே இடத்தில் பேசப்பட்டு, பின்னர் பல இடங்களுக்கு சென்று சமஸ்க்ருதம், கிரேக்கம், லத்தீன் என்று வேறுபட்டதாய் ஒரு அனுமானத்தையும் இறக்கி வைத்தனர். இதற்கெல்லாம் சிகரம் போல் அந்த இண்டோ-ஐரோப்பிய கற்பனை மொழி ஒருவேளை மத்திய ஆசியா அல்லது ஐரோப்பியாவிலிருந்து தொடங்கி இருக்க வேண்டும் என்று தங்கள் இனவெறிக்கு தாங்களே சாட்சியாய் இருந்து, அதை பரப்பச் செய்தனர்.


சமஸ்க்ருதம், கிரேக்கத்திற்கும் லத்தீனுக்கும் தாய் மொழி என்கிற உண்மையை ஒத்துக்கொண்டு, அது பாரத மண்ணில்தான் தொன்றியது என்கிற உண்மையை ஒத்துக் கொண்டால், உலகுக்கே ஞான‌ விளக்காய், தத்துவ ஆதாரமாய் இருந்தது பாரதம் என்பது பகிரங்கமாகி விடுமே. தாங்கள் ஆள்கின்ற ஒரு அடிமை நாடு தங்களுக்கு எப்படி ஞான விளக்காய் இருக்கும் ? மேலும் ஐரோப்பிய ஆளுமையை எப்படி பின்னர் நிலை நாட்ட முடியும் ? 

அடுத்து இன்றைய பாகிஸ்தானில் உள்ள பகுதியில் இருந்த‌ சிந்து பகுதிகளில் ஒரு பெரும் நாகரீகம் இருப்பது சில ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பார்வைக்கு வந்தது. உலகிலேயே தாங்கள்தான் நாகரீகமானவர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த வெள்ளையர்களை "சிந்து சமவெளி நாகரீகம்" வியக்க வைத்தது. வெள்ளையர்கள் தங்களுடைய ரோமாபுரிதான் உலகிலேயே முதல் முதலில் திட்டமிட்ட நகரங்களையும், கழிவு நீர் வடிகால் திட்டங்களையும் அமல் படுத்தியது என்று நினைத்திருந்தார்கள், ஆனால் ரோம் தோன்றுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே, அவற்றை கொண்டிருந்த சிந்து சமவெளி நாகரீகத்தை பார்த்து அவர்கள் வியப்படைந்தனர். தாங்கள் ஆண்டுக் கொண்டிருக்கும் அடிமைகளுக்கு இப்படிப்பட்ட ஒரு நாகரீக நகரம் எப்படி அந்த காலத்திலேயே அமைந்திருக்க முடியும் என்றும் அவர்களை யோசிக்க வைத்தது.

மேலும் கிறிஸ்துவ மதத்தில் ஊறியிருந்த அவர்களுக்கு தங்கள் மதத்தை விட பழமையான ஒரு கோட்பாடு இருந்தது பிடிக்கவில்லை. தங்கள் ஆப்ரகாமுக்கும், மோஸ்ஸுக்கும் முன்பு ஒரு நாகரீகம் சிறந்ததாய் விளங்கியதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

இது இப்படி இருக்க, சிந்து சமவெளிகளில் கண்டுப்பிடிக்கப் பட்ட சிதைந்து போன பல கட்டிடங்களையும், வீடுகளையும் வைத்து சில அறிஞர்கள் இது ஒரு வெளிநாட்டு படையெடுப்பாக இருந்திருக்குமோ என்று யோசித்தார்கள். "வீலர்" என்கிற ஒரு இந்திய துனைக்கண்டத்தை ஆராய்பவர், இது தான் அனுமானித்திருந்த அந்நிய படையெடுப்புக்கான‌ ஆதாரம் என்று இதை பிடித்துக் கொண்டார். இதற்கிடையே, சிந்து சமவெளி நாகரீகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சில உடல் குவியல்களை ஆயவாளர்கள் கண்டெடுத்தார்கள். ஒரு சில ஆய்வாளர்கள் இந்த மக்களின் மரணங்கள் எப்படி ஏற்பட்டன என புரியாமல், இது ஒரு படையெடுப்பினால் இருந்திருக்கலாம் என்று நினைத்தனர். 

எதை தின்னால் பித்தம் தெளியும் என்று யோசித்துக் கொண்டிருந்த வெள்ளையர்களுக்கும், கிறிஸ்துவ ஆய்வாளர்களுக்கும் இது "சர்க்கரை பொங்கலாய்" அமைந்தது. மத்திய ஆசியாவில் இருந்து புறப்பட்ட ஒரு நாடோடி கும்பல், இந்து சமவெளியில் இருந்த திராவிடர்களின் நாகரீகத்தை அழித்து விரட்டிவிட்டு, அங்கு தங்கள் ஆட்சியை ஆண்டார்கள் என்கிற கட்டுக்கதையை அவிழ்த்து விட்டார்கள். அடுத்து இந்த ஆக்கிரமிப்பு எப்போது நடந்தது என்று சொல்ல வேண்டுமே ? தொல்விய‌ல் ரீதியாக சிதிலமடைந்த காலம் மிக பழமையாக இருந்த போதும், அதை ஒப்பிடாமல் அவர்கள் சிதிலமடந்த காலத்தை அல்லது அவர்களின் கற்பனை படையெடுப்பை கி.மு.1500 என்று தீர்மானித்தார்கள்.

அது என்ன கி.மு. 1500 ? பரவலாய் பைபிளின் கூற்றுபடி, உலகம் தோன்றியது கி.மு. 4000. நோவா வெள்ளம் (பைபிளின் படி) வந்தது கி.மு. 2500 என்றும் நம்பியதால், ஆரிய படையெடுப்பு கி.மு. 1500 க்கு முன் நடந்திருக்காது என்று அந்த கிறிஸ்துவ ஆய்வாளர்கள் அனுமானித்தார்கள். 

அடுத்து இந்த ஆரிய படையெடுப்பு சித்தாந்தத்தை ரிக் வேதத்தில் இருந்த சில ஸ்லோகங்களையும் வைத்து இன்னும் பலப்படுத்தினார்கள்.

No comments: