ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 14 July 2012

மெய்வருத்தக் கூலியும் செயலின் முழுப்பலனும்

ஸ்ருங்கேரி மஹா ஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சென்னை வந்த அன்று அருளிய அனுக்ரஹ பாஷணத்தில் ஒரு கருத்தைச் சொன்னார். "குருவருளும் திருவருளும் இன்றி எவ்வளவு திறமை கொண்டு என்ன செய்தாலும் உரிய பலன் கிட்டாது" என்றார். அதற்கு எல்லாம் குருவருளும் இறையருளும் தான். நான் எதுவும் செய்யவில்லை என்று கர்வப்படக்கூடாது என்று விளக்கம் சொல்லிக் கொண்டேன். சற்றே யோசித்த போது ஒரு கேள்வி எழுந்தது.

தெய்வத்தானா காதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்பது வள்ளுவர் வாக்கு. அதை வைத்துக் கொண்டு வள்ளுவரே சொல்லிவிட்டார் பாருங்கள் என்று நாத்திகத்தை ஊருக்கு மட்டும் உபதேசிக்கும் பகுத்தறிவுச் சிங்கம் கீழ்க்கண்டவாறு முழங்கியது.

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
பக்தியைப் பொதுவில் மட்டும் இகழும் கூட்டம் கொண்ட பித்தைப் பாருங்கள்! வெளிவேஷ நாத்திகரின் விளக்கம் வழக்கம் போல விளக்கம் கெட்டத்தனமாக இருக்கிறது. கண்ணதாசன் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டால் இந்தப் பதர்கள் பதில் சொல்லவா போகின்றன?

இது போன்றதையெல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் குருநாதர் சொன்ன கருத்தைப் புரிந்து கொள்ள முயன்றால் சிந்தை சற்றே முட்டி நிற்கிறது. குருநாதரது அனுக்ரஹ பாஷணத்தை மீண்டும் கேட்டேன். அவர் சொன்ன அந்த வரிகள் "குருவருளும் திருவருளும் இன்றி எவ்வளவு திறமை கொண்டு என்ன செய்தாலும் உரிய பலன் கிட்டாது".  


அல்லும் பகலும் உழைத்து ஒருவர் செய்த வேலைக்கு உரிய நற்பெயர் அவருக்குக் கிடைக்காது போய், உரிய ஊதியத்திலும் குறைவாகவே கிட்டியது என்றால் அது உழைப்புக்கேற்ற முழுப் பலன் இல்லை. ஐடி துறையில் கணக்கு வழக்குகளைக் கையாள்வோரும், மேலாண்மை செய்வோரும் இதை நன்றாகவே உணர்வர். மனம்  கிட்டாத இத்தகைய விஷயங்களை எண்ணி ஏங்கி குறைப்பட்டுக் கொண்டே கடைசிவரை வெறுப்பில் திரியும். வருந்தி வருந்தி வெறுப்புற்று நிம்மதி இழந்து தவிக்கும். இப்படிப்பட்ட மனதால் நமக்கும் சார்ந்தவர்க்கும் சுற்றத்துக்கும் நிம்மதி பறிபோகும்.

இத்தகைய சூழலில் நமக்குச் நம் செயல்களின் முழுப்பலன் நமக்கு எப்படிக் கிட்டும்?  இவனின்றி இப்பணி சரியாக நடவாது என்ற நிலை இருந்தால் அது சாத்தியம். அதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும். கவனமாக, ஈடுபாட்டுடன் செய்யும் எப்பணியும் சிறக்கவே செய்யும். அதை எப்படிச் செய்வது? நாம் செய்யும் முயற்சி திருவினை என்ற எண்ணம் மனதில் தோன்ற வேண்டும். கடவுளுக்கு ஒப்புவித்துச் செய்தால் மனம் திரியாது செய்யலாம்.

மனமொப்பிச் செய்த செயல் மனதுக்கு மகிழ்ச்சி தரும், திருப்தி தரும். செயலுக்கான முழுப்பலனை அடைந்தேன் என்று மனம் ஒப்புக் கொள்ள வேண்டும். மனம் ஒப்புக் கொண்டால்தான் அந்தத் திருப்தி கிட்டும்.  மனம் திருப்திப் பட்டால் வேறென்ன குறை? அந்தத் திருப்தியை அடைவதற்கு செய்யும் செயல் திருவினை என்ற எண்ணம் வரவேண்டும்.

முயற்சி திருவினையாக்கும் என்றொரு முதுமொழி உண்டே. ஆக முயற்சி திருவினை ஆகவேண்டும். திரு என்றும் அறியப்படும் இறைவன் புரியும் வினையேதும் சோடை போவதில்லை. அவனருளால் ஆகும் எல்லா வினைகளும் வெற்றியாகும். முயற்சி திருவினையாக ஆனால் மட்டும் தான் அதன் முழுப்பலன் நமக்குக் கிடைக்கும்.  முயற்சியைத் திருவினையாக்க குரு வழிகாட்டி அருளவேண்டும். மனித வினையாக மட்டுமே இருப்பது முழுப்பயன் தரவல்லது அல்ல.


எந்தச் சூழலிலும் சலிப்பின்றி வெறுப்பின்றி மனத்தை வைத்தால் செய்யும் செயலுக்கான முழுப்பலன் கிட்டிய திருப்தி ஏற்படும்.  இது போன்ற தெளிவுகள் வர குருவருள் நிச்சயம் அவசியம்.  திருவினையாக்கவும் திருப்திப்படவும் குரு அருள்புரிய வேண்டும். ஆக, குருவருளும் திருவருளும் கொண்டு செய்யும் செயல்கள் மட்டுமே மனதுக்குத் திருப்தி தரும். திருப்தியால் நிம்மதி கிட்டும். நிம்மதியான வாழ்வுக்காகத் தானே பணி, பெயர், பணம் இவற்றை எல்லாம் எதிர்பார்க்கிறோம்!


குருவருள் இருந்தால் திருவருள் தகைந்து செயல் சிறந்து மனம் நிறைந்து மகிழ்ச்சி பொங்கும்.  நேர்மறைச் சக்தி பொங்கும். நேர்மறை எண்ணங்கள் பெருகும். நேர் நேர் தேமா என்பது போல வாழ்க்கை தேனும் மாங்கனிம் போல இனிக்கும்.
குருவடிகளே சரணம்!

No comments: