ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 29 July 2012

டெசோ - அரசியலில் பிழைத்திருக்க திமுகவின் ஆயுதம்!

(நிஜமாகவே) சமீப காலமாக டெசோ வருகிறது. விழுப்புரத்தில் இருக்கிறது. விக்கிரவாண்டி தாண்டிவிட்டது, செங்கல்பட்டு வந்துவிட்டது. ஆகஸ்டு 12ல் சென்னை வந்து சேரும் என்று பலவிதமான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அது போலவே ஈழம் காண்பதே லட்சியம் என்று முழங்கி, ஈழம் லட்சியம் தான் ஆனால் இப்போது லட்சியம் செய்யவேண்டியது ஈழத்தமிழர் நல்வாழ்வு மட்டுமே என்று இறங்கி, தனி ஈழம் கோரித் தீர்மானம் என்று தீர்மானித்து, சிதம்பர ரகசியத்தால் தனி ஈழத்தீர்மானத்தைத் தீர்மானமாகத் தீர்த்துக் கட்டி தனி ஈழம் லட்சியம் வாழ்வாதாரம் நிச்சயம் என்று நைச்சியம் பேசி ழப் போர் நிறுத்த உண்ணாவிரதப் புகழ்  மு. கருணாநிதி குட்டிக்கரணங்கள் பல அடித்து வருகிறார்.


பெரியவர் நிறையப் பணம் சேர்த்துவிட்டார். பேசாமல் பெண்சிங்கம், பொன்னர் சங்கர் வரிசையில் ஓடாத படங்களுக்கு உட்கார்ந்து வசனம் எழுதலாம். அடித்த காசுக்கு அடுத்த நூற்றாண்டு வரை படமெடுத்தாலும் பணத்துக்குப் பஞ்சமிருக்காது. அரசியலில் நகைச்சுவை சற்றே குறைந்து போகும். அவ்வளவே.சரி விஷயத்துக்கு வருவோம்.

டெசோ -   கருணாநிதி கைகளில் சிக்கிய ஆட்சி போல சின்னாபின்னப்பட்டு நிற்கிறதே!  என்னதான் அது? பார்ப்போம்.

தமிழீழ ஆதரவு இயக்கம் (Tamil Eelam Supporters' Organisation) TESO.  இது 1983ல் திமுக தலைவர் கருணாநிதி, தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் பழ. நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோரால் துவக்கப்பட்டது. தனி ஈழம் பெற்றுத்தருவதே குறிக்கோள் என்ற முழக்க்த்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1984 மே திங்கள் 4ஆம் நாள் பெரும் மாநாடு ஒன்றை நடத்தியது. அடல் பிஹாரி வாஜ்பாயி, என்.டி ராமராவ், சுப்பிரமணியன் சுவாமி ஆகிய பெருந்தலைவர்கள் கலந்து கொண்டு துன்பப்படும் தமிழரின் துயர்துடைக்க தம்மாலானதைச் செய்வதாக வாக்களித்தனர். வழக்கம் போல் கருணாநிதி ஈழம் தன் மூச்சு, பேச்சு என்று சொல்லாடினார்.

நன்றி: http://tamilmakkalkural.blogspot.in
ஆனால் டெசோவின் சுருதி மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. 1984 பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் அமெரிக்காவில் படுத்துக்கொண்டே வென்றதும் சோற்றாலடித்த பிண்டங்களுக்கு ஈழம் ஒரு கேடா என்று வெறுத்துப் போனாரா கருணாநிதி என்று தெரியவில்லை. ஆனால் நம்பத்தகுந்த காரணங்களில் ஒன்று விடுதலைப் புலிகள். புலிகள் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளத் தமக்குப் போட்டியாக வருவார்கள் என்று அவர்கள் சந்தேகித்த ஈழத் தமிழர் நலனுக்குப் பாடுபட்ட பல தலைவர்களைக் கொல்லத் துவங்கினர்.  அந்தக் களையெடுப்பில் புலிகள் வேகமெடுத்திருந்த காலம் அது. 


 TELO என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ. சபாரத்தினம் கொல்லப்பட்டுச் சில காலத்திலேயே டெசோ செயல்படாது என்று அறிவித்தார் கருணாநிதி. சபாரத்தினம் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர். கருணாநிதியின் தத்துப் பிள்ளை என்று செல்லமாக அறியப்பட்டவர். திராவிடர் கழக வீரமணியும் "ஆமாம்! டெசோ செயல்படாது!!"  என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். மூவர் சேர்ந்து துவக்கியதை ஒருவர் மட்டும் எப்படி நிறுத்தலாம் என்று நெடுமாறன் போராடிப்பார்த்தார்.  முடியவில்லை. 


சரி...  25 ஆண்டுகளுக்குப் பிறகு டெசோ மீண்டும் செயல்படும் என்று கருணாநிதி அறிவித்ததற்கும், "ஆமாம்! டெசோ மீண்டும் செயல்படும்!!" என்று வீரமணி ஒத்து ஊதியதற்கும் என்ன காரணங்கள்? வீரமணி ஒத்து ஊதியது வழக்கமான நிலைப்பாடு. அதிமுக இல்லாவிட்டால் வெறும் திமுக; வெறும் திமுக இல்லாவிட்டால் அதிமுக என்ற பகுத்தறிவு நிலைப்பாடு அது. அதிமுக இல்லை என்றானதனால் வெறும் திமுகவுக்கு அவர் இதுவரை சொம்படிக்கிறார்.


ஆனால் கருணாநிதி ஏன் எல்லாம் கிடக்க கிழவி சமைந்தாளாம் என்ற கதையாக டெசோவைச் சாம்பலில் இருந்து உயிர்ப்பிக்க விழைகிறார்? சில காரணங்கள் இதோ.

 • 2011 சட்டபேரவைத் தேர்தலில் திமுக வின் வரலாறு காணாத தோல்வி
 • கட்சிக்கு (குடும்பத்துக்கு என்றும் கொள்ளலாம்) கணிசமான நிதி தந்தவர்கள் கைது.
 • நில அபகரிப்பு செய்தோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதும் முன்னாள் அமைச்சர்கள் கைதாவதும்.
 • சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கட்சியின் கேவலமான தோல்வி.
 • 2G ஊழல் வழக்கிலிருந்து சர்க்காரியா கமிஷன் விசாரணை போல சுலபமாக வெளிவர இயலாமை.
 • கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்த வழிமுறை குறித்த விசாரணைகளின் போக்கு. கனிமொழியின் சிறைவாசம்.
 • காங்கிரசு திமுகவுக்கு ஆதரவாக ஊழல் விசாரணைகளை திசை திருப்பாதிருப்பது.
ஈழத் தமிழர்கள் கருணாநிதியை ஒரு பொருட்டாக மதிக்காதிருப்பது (நம்புவதா? இவரையா? ஹெ! ஹெஹ்ஹே!! ஹெஹ்ஹெஹ்ஹெஹ்ஹே!!!) அவரைப் பொறுத்தவரை ஒரு பெரும் அரசியல் பலவீனம்.  தமிழகத் தமிழர்களோ எப்போதோ இவரை கை கழுவிவிட்டனர். இவர் பேச்சு காமெடியாக மட்டுமே பார்க்கப்பட ஆரம்பித்து வருடங்களாகிவிட்டது. அரசியலில் பிழைத்துக்கிடக்க ஏதாவது செய்யவேண்டுமே. அவருக்கு நன்றாக வருவதை அவர் செய்ய விழைக்கிறார். நாடகம் போடுவது!


டெசோ தற்போது ஒரு முழுச்சுற்றை முடித்திருக்கிறது. மூவரால் துவக்கப்பட்டு அவர்களில் ஒருவரால் முடிக்கப்பட்டு மற்றொருவரால் எதிர்க்கப்பட்டது. தற்போது முடித்தவரால் உயிர்ப்பிக்கப்பட்டு, முடிவை ஆதரித்தவர்  மறுதோற்றத்தை ஆதரிக்க முடிவை எதிர்த்தவர் மறுதோற்றத்தையும் தன்னிச்சை என்றே எதிர்க்கிறார். நெடுமாறன் சற்றே கௌரவம் பார்க்கும் ஆசாமியாக இருக்கிறார். தன்னிச்சையாக எப்படி முடிவெடுக்கலாம் என்றேல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் கருணாநிதியோடு எப்படி அரசியல் நடத்தமுடியும். வீரமணி எப்படிப் பகுத்தறிவோடு சிந்தித்து சுயமரியாதையுடன் கருணாநிதி என்ன செய்தாலும் ஆதரிக்கிறார்! அது போல இருப்பதல்லவா மானமிகு மக்களுக்கு அழகு!!

தம் 89ஆவது பிறந்த தின மாநாட்டில் டெசோ மீண்டும் செயல்படும் என்று அவர் அறிவித்ததும் தனி ஈழம் குறித்துச் சிலர் கனவு கண்டால் அதற்குக் கருணாநிதி எப்படிப் பொறுப்பாவார்?அவர் அறிவித்ததும் மத்திய அரசு கூட்டணி குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துவிட்டது. ஈழம் பற்றிப் பேசுவதும் தீர்மானம் போடுவதும் குற்றம் என்று சிவகங்கை சீனாத்தானா வீடுதேடி வந்து மிரட்டிவிட்டார்.  மீறி வெறும் பேப்பரைக் காட்டித் தீர்மானம் போட்டுவிட்டோம் என்று சொல்லிவிட்டு வழக்கு என்று வந்தால் வெறும் பேப்பர் தான் என்று கோர்டில் சொல்லித் தப்புவது முடியாது. அரசியல் சட்ட நகல் எரிப்பே இன்னும் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. 


கருணாநிதி இப்போது தான் இப்படி என்றில்லை. ஈழவிஷயத்தில் எப்போதுமே இப்படித்தான். 
 தனி ஈழம் அடைவோம் என்று முதல் டெசோ மாநாட்டில் பேசினார். 
 • பிறகு டெசோவே இல்லை என்றார். 
 • சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதே தமிழர்க்கு நல்லது என்றார்.  
 • பிறகு தனிநாடு தேவையில்லை சுயாட்சிப் பகுதியாக ஈழம் இருந்தால் போதும் என்றார்.
 • பிறகு சுயாட்சியில் சிலபல கேள்விகளை எழுப்பி கொழும்பில் கூட்டாட்சி ஈழத்தில் சுயாட்சி என்பது போலப் பேசினார். 
 • இப்பொது டெசோ மாநாட்டில் தனி ஈழம் வேண்டித் தீர்மானம் போடுவோம் என்றார்.
 • சிவகங்கையார் வீட்டுக்கு வந்து போன பிறகு தனி ஈழம் லட்சியம் ஆனால் நலவாழ்வு நிச்சயம் என்று மாற்றினார்.
 • டெசோ என்பது தனி ஈழ ஆதரவு அமைப்பு தானே என்றால் "அது அப்படித்தான். ஆனால் இப்போது ஈழத்தமிழர் வாழ்வுரிமை வேண்டி மட்டுமே தீர்மானம் போடுவோம்" என்கிறார்.
 • அப்போ ஈழம்? அது லட்சியக் கனவு. அம்புட்டுத்தேன்..
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பெயர் குறித்து சில நாட்களுக்கு முன் இவர் செய்த குழப்படிக்கூத்து போலவே கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று சொன்னதைக் கொண்டு ஈழத்தை இப்படியா குழப்புவது? அநியாயம்....


ஆகஸ்டு 12, 2012ல் டெசோ மாநாடாம். அதற்குள் இன்னும் என்னென்ன குட்டிக்கரணங்கள் அடிப்பாரோ? பகுத்தறிவும் சுயமரியாதையும் தன்மானமும் குழைத்துக் குழைத்து எவ்வளவு குழப்புவாரோ? இவர் மனைவி மக்கள் இவர் பேச்சுக்குக் கட்டுப்படாமல் கும்பிடும் கடவுளுக்கே வெளிச்சம்!

2 comments:

Anonymous said...

kalaingnar vaangi tharamudiyathunna? veru yaru vaangi tharuva? avarai sollalaame? kila thadumaaranaa? saikova? illa aayaava? eelaththukkaaga irandu murai thanathu aatchiyave ilanthavar thalaivar. pongadaa neengalum unga nadunilaiyum. ungalaala avara thitta thaanda mudiyum. sooriyaa paarthu naai kuraippathu pola...

Arun Ambie said...

அதெப்படி இரண்டு முறை ஈழத்துக்காக ஆட்சியை இழந்தார் என்று கைகூசாமல் பொய்யை எழுதுகிறீர்கள். முதல் முறை அவசரநிலைக் காலத்தில் இந்திராகாந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார். அதற்கும் ஈழப் பிரச்சினைக்கும் திமுகவுக்கும் நல்லாட்சிக்கும் உள்ள சம்பந்தம் தான்.

இரண்டாவது முறை சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு 1991ல் ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கும் ஈழத்துக்கும் உள்ள ஒரே சம்பந்தம் பத்மநாபா கொலை.

அது சரி.... 450 கோடி செலவு செய்து டாஸ்மாக்கை ஆறாக ஓடவிட்டு செம்மொழி மாநாடு போட்ட கலாகார்ஜியின் தொண்டர்.. உமக்குத் தமிழில் தட்டெழுதத் தெரியாதா?
ஈழத்துப் போரை நிறுத்த 8 மணி முதல் 11 மணி வரை பொது இடத்தில் படுத்துத் தூங்கி அதற்கு உண்ணாவிரதம் என்று பெயர் வைத்தால் இவர் தலைவராகிவிடுவாரா? இவர் போர் நின்றுவிட்டது என்று அறிவித்ததை நம்பி லடசக்கணக்கானோர் பதுங்கியிருந்த இடங்களில் இருந்து வெளிப்பட்டு மாண்டார்களே! அதற்கென்ன பதில் வைத்திருக்கிறாய் மு.க.வின் மூடத் தொண்டனே!