ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday 10 December 2013

காங்கிரஸ் கட்சிகள்

புதுச்சேரியிலிருந்து வெளிவந்த 28.11.1908 தேதியிட்ட இந்தியா இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கட்டுரை

ஒரு மனிதன் தன் மனிதில்இரண்டு விதமான மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றி, இது நியாயமா அது நியாயமா என்று நிச்சயிப்படாமலிருக்கும்போது, தான் செய்யவேண்டுவது யாதெனில், பின்னிட்டு அனுபவத்தினாலேனும், அல்லது தக்க பெரியோரின் போதனையினாலேனும் தனக்கு உண்மை தெரியுமளவும் இரண்டு பக்ஷங்களிலே ஒன்றின்மீதும் சார்வு கொள்ளாமல் தன் மனதைச் சமநிலையிலே வைத்திருக்க வேண்டும்.



அதுபோலவே, ஒரு ஸமாஜத்தைச் சேர்ந்து, அதன் க்ஷேமத்திலே சிரத்தை கொண்டவர்களா யிருப்பவருள்ளே, இரண்டு கட்சிகளுண்டாகும் போது (அவர்கள் உண்மையிலேயே அந்த ஸமாஜம் நாசமடையக் கூடாதென்ற எண்ணமுடையவர்களானால்) ஏதேனும் ஓர் முடிவான சமாதானம் ஏற்படும் வரை தமது அபிப்பிராய பேதங்களை அதிகமாகப் பாராட்டாமல், சமநிலையை விரும்பி நடக்க வேண்டும்.


காங்கிரஸ் சபையிலே ஒரு கட்சியார் விரும்புகின்ற ஸங்கேதம் மற்றொரு கட்சியாருக்குப் பிடிக்கவில்லையானால் அதற்குச் சபை கூடாமல் அவரவர்கள் தனித்தனியாக வெளியே நின்று கொண்டு, பத்திரிகைகளிலும் பேச்சுகளிலும் கூக்குரலிடுவதில் என்ன பிரயோஜனம்? சபை கூடி மெஜாரிடியார் ஒருவித முடிவான தீர்மானம் சொல்லும் வரை இரு திறத்தாரும் தத்தம் ஸங்கேதங்களை மனதிற்குள் வைத்துக்கொண்டு பொறுமையுடன் இருப்பதே சரியாகும்.

காங்கிரஸ் சபைக்கு ஓர் ஸங்கேதந்தான் எதற்காக வேண்டும்? "சாத்தியமாகக் காட்டிய ஒன்றை அபீஷ்டமாக வைத்துக்கொண்டு பாடுபடவேண்டுமே யல்லாது, அனுபவமற்ற வாலிபர்கள் கூச்சலுக்குப் பயந்து நம்மால் சாத்தியப்படாதவாறு அத்தனை உயர்ந்ததாகிய ஓர் அபீஷ்டத்தைப் பற்றிக் காங்கிரஸ் சபையில் உச்சரிக்கவே கூடாது." என்று மிதவாதிகள் சொல்லுகிறார்கள். இந்த மிதவாதிகள் ஆசைப்படுவதாகிய 'குடியேற்ற முறை தழுவிய ஸ்வராஜ்யம்' நாளைக் காலையில் சூரியோதயத்திற்கு முன்பாக நிறைவேறிவிடப் போகிறதா? இது இப்போதிருக்கும் நிலைமையைக் கவனிக்குமிடத்தும் "பரிபூரண ஸ்வராஜ்யம்" எவ்வளவு கஷ்டமோ அதற்குக் கொஞ்சமேனும் குறையாத அளவு கஷ்டமாகத்தான் தோன்றுகிறது. அப்படி யிருக்கச் சாத்தியமாகக் கூடிய விஷயங்களையே விரும்பி முயல வேண்டும் என்று ஞானம் பேசும் இந்த மேதாவிகள் ஏன் ஒரு ஸங்கேதத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களை இம்சை செய்கிறார்கள்?



ஒருவிதமான ஸங்கேதமும் வேண்டாம்; காங்கிரஸ் சபை இதுவரை எப்படி நடந்து வந்ததோ அதுபோலவே இன்னும் நடந்து வரட்டும்; கல்கத்தா காங்கிரஸின் புதிய தீர்மானங்களை மாற்றக் கூடாதென்று பெங்காளத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி, மஜூம்தார்,பூபேந்திரநா தவஸூ முதலிய மிதவாதத்தலைவர்களெல்லாம் ஒப்புக்கொள்கிறார்கள். "அமிதவதிகள்" என்று சொல்லப்படும் சுதேசீயக் கட்சியார் விரும்புவதும் இம்மட்டே யாகும். இவ்வா றிருக்க, வீண் கலகங்கள் ஏன் செய்து கொள்ள வேண்டும்? சிறு குழந்தைகள் கூட "ஒற்றுமை வேண்டும்", "ஒற்றுமை வேண்டும்" என்று கூவிக்கொண்டிருக்கும் இந்நாட்களிலே காங்கிரஸ் சபையில் நீங்காத பிரிவுண்டாகும்படி செய்பவன் எவனாயிருந்தாலும், அவன் மாதாவினுடைய கொடிய கோபத்திற்க்குப் பாத்திரமாவன்.

No comments: