ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 6 November 2013

கற்பனை, பிதற்றல், புரட்டு, சூது - பால.கௌதமன்

உலகம் முழுவதும் இந்துக்களாலும், சமணர்களாலும், சீக்கியர்களாலும், இந்திய பண்பாட்டை ஏற்று கொள்ளும் பிற மதத்தவர்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி.  இந்த தீபாவளியைத் தன் ஆத்திரம் தீர முன்னோடி நாளிதழ்களான The Deccan Chronicle, The Asian Age ஆகியவற்றின் Op Ed பகுதியில் அடித்துத் துவைத்திருக்கிறார் கஞ்சன் இலையா என்ற புதின எழுத்தாளர். இவர் ஹைதராபாத், மௌலானா ஆஸாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் Study of Social Exclusion and Inclusive Policy மையத்தின் இயக்குனராக பணி புரிகிறார். தன்னை தலித் விடுதலைக்காக குரல் கொடுக்கும் சமூக சீர்திருத்தவாதி என்று அடையாளம் காட்டிக் கொள்பவர். மதம் மாறிய தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை கிறிஸ்த்துவ மதமாற்றத்தை வேகப்படுத்துவதற்காக முன் வைத்தவர். இந்த நாட்டில் தலித்துக்கள், மனிதர்களாக நடத்தப்படுவதில்லை என்று சர்வதேச அரங்கான Unrepresented People’s Congressல் இந்தியாவிலிருந்து பிரதிநிதிகளை அனுப்பி, நம் நாட்டில் பிரிவினைவாதத்திற்கு உலக அங்கிகாரம் பெற்றுத்தரத் துடியாக துடித்தவர். மனித நேயத்தை பற்றி மாய்மாலம் செய்துவிட்டு மனித உயிர்களை குடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்குபவர். அது மட்டுமா? நான் ஏன் ஹிந்து இல்லை என்ற நூலை எழுதி விட்டு, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரக் கூடாது என்று குரல் கொடுத்த போலி மதச்சார்பின்மை பேசிய மாமேதை.அறிவுப் பூர்வமான விமர்சனங்களாக இவை இருந்திருந்தால், இதைப் பத்திரிக்கைகள் பிரசுரிப்பது தவறல்ல; ஆனால் அவதூறு, வெறுப்பு, காழ்ப்பு, உள் நோக்கம் ஆகியவற்றைச் சுமந்து வந்திருக்கும், ஆதாரமற்ற ஒரு புளுகு மூட்டையை இந்த நாட்டின் பண்பாட்டின் மீது விஷமாகக் கக்குவதைத் தவிர, இந்தக் கட்டுரையில் வேறேதும் காணோமே பராபரமே! நாயின் குணம் குரைப்பது, பாம்பின் குணம் சீறுவது, தேளின் குணம் கொட்டுவது……… இதெல்லாம் அவற்றின் இயல்பு, புரிந்து கொள்ளக் கூடியது; ஆனால் தரமான மேற்க்கூறிய பத்திரிக்கைகள், இப்படிப் பட்ட ஆதாரமற்ற, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் தரமற்ற கட்டுரைகளை வெளியிடுவது வருந்தத் தக்கது.

தீபாவளி, மரணத்தைக் கொண்டாடுகிறது என்று நரகாசுர வதத்தையும், இராவண வதத்தையும் முன்நிறுத்துபவர்கள், வர்த்தமான மஹாவீரர் முக்தியடைந்த பரிநிர்வாண தினமாக சமணர்கள் தீபாவளியை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டதுண்டா? இறைநிலை எய்தும் முக்திக்கு வாயில் மரணம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சமணர்களால் மரணம் கொண்டாடப்படுகிறது. இதைப் போலவே, ”என் கொடுமையிலிருந்து மக்களுக்கு முக்தி கொடுத்து விட்டாய் கண்ணா! என் மரணத்தை மக்கள் என்றென்றும் கொண்டாடட்டும்” என்ற நரகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்கவே தீபாவளி கொண்டாடப்படுவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு கொலை செய்யப்பட்டவரின் வேண்டுகோள் தான் தீபாவளிக்குக் காரணமாயிற்று. தீபாவளியை, மரண விழா என்று அடையாளப் படுத்தி கண்ணனுடனோ, இராமனுடனோ நிறுத்தாமல், மரணத்தைக் கொண்டாடும் பழக்கம், திராவிடர்கள்/ ஆதிவாசிகள்/ சூத்திரர்கள் போன்றோருக்கு இல்லை என்று, ஒரு இனவாதச் சர்ச்சை எழுப்பியது உள்நோக்கம் கொண்டது.

திராவிடர்களின் பண்பாட்டைப் பறைசாற்றுவது சங்க இலக்கிய நூல்கள். நடுகல்லுக்கு எடுக்கும் சடங்குகளையும், மரணத்துக்குப் பின் இந்திர பதவி அடைந்த கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் மன்னனை, இந்திர லோகம் விழா எடுத்து வரவேற்றதையும் சுட்டிக் காட்டும் போது, இவர்கள் எந்த திராவிடன் மரணத்தைக் கொண்டாடுவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள்? அப்படி என்றால் சங்க இலக்கியங்கள் திராவிடர்களுக்கு உரியவை இல்லையா? அதுதான் போகட்டும்; இன்றும், இவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் என்று அடையாளம் காட்டப்படும் சமுதாயத்தினர் மரண ஊர்வலத்தில் மேளம் அடித்துக் கொண்டு செல்கிறார்களே? அன்னிய அடிமைத்தளைகளையும், கொடுங்கோல் ஆட்சிகளையும் அகற்றிய போராட்டங்கள் பல உயிர்த்தியாகங்களைச் சந்தித்துள்ளன. இந்தப் போராட்டங்களின் வெற்றி விடுதலை தினங்களாகவும், நினைவு தினங்களாகவும் உலகம் முழுவதும் கொண்டாடப் படுகின்றன! எனவே சுதந்த்ரதின விழாக்களெல்லாம் தடை செய்யப்பட வேண்டுமோ?

கிறிஸ்துமஸ் என்ற பிறப்பின் திருவிழா, கிறுஸ்துவைக் கொன்ற மரணத் திருவிழாவுக்கு மாற்றாக ஆட்கொண்டதை மேற்க்கோள் காட்டி, தீபாவளியைக் கொண்டாடாதே என்று வாதிடும் இந்த கிறிஸ்துவின் விசுவாசி, ஏசு நாதர் சிலுவையில் அறையப் பட்ட புனித வெள்ளியை கிறிஸ்துவர்கள் கடைபிடிக்கக் கூடாது, அலியைக் கொன்ற முஹர தினத்தை இஸ்லாமியர்கள் அனுஷ்டிக்கக் கூடாது; இந்த 2 நாட்களையும் அரசு விடுமுறைகளிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுப்பாரா?. கொலைக்கும், தியாகத்திற்கும், முக்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்கள் இப்படித் தான் எழுதுவார்கள்! தெரிந்திருந்தாலும், திரித்துத் தான் எழுதுவார்கள்!.

திராவிடர்களும்/ ஆதிவாசிகளும்/ சூத்திரர்களும் மகாபலி, இராவணன், நரகாசுரன் ஆகியோரைப் போற்றி வணங்குகிறார்கள்; அதனால் இவர்களின் கொடும்பாவியை எரித்தால், அந்த மக்களின் மனது புண்படும் என்று பாத்திரங்களுக்கு சாதி சான்றிதழ் வேறு கொடுக்கப்படுகிறது!. இராவணனை முன்னோராகக் கொண்டு வழிபடுபவர்கள் இராஜஸ்தானில் இருக்கும் ஸ்ரீமாலி அந்தணர்கள்; இராவணன் புலஸ்திய மஹரிஷி கோத்திரத்தில் உதித்த, சாமவேத அந்தணன் என்று தான் வால்மீகி இராமாயணமும், கம்ப இராமாயணமும் தெரிவிக்கிறது. அப்படியென்றால், ஸ்ரீமாலி அந்தணர்களை தலித்/ஆதிவாசி/திராவிடர் பட்டியலில் இவர்கள் சேர்த்துக் கொள்வார்களா?

இராமன் பார்த்த மாத்திரத்திலேயே மரத்திலிருக்கும் பறவைகள் அமைதி காத்து அவரது வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொண்டன என்று இராமனின் இறைத்தன்மையை சங்க இலக்கியமான அகநானூறு குறிப்பிடுகிறது.

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த   
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு 70, 13-17)


தமிழ்ச் சங்க இலக்கியங்கள் திராவிட நூல் தானே? அப்படியென்றால், திராவிடர்கள் இராமனைத் தானே ஏற்றுக் கொண்டார்கள்?

சரி, அது போகட்டும், இராவணனை அவர்கள் எப்படி குறிப்பிடுகிறார்கள்?

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை, (புறநானூறு, 378, 17-18)


சங்க இலக்கியமான புறநானூறு, சீதையை அபகரித்த அரக்கன் என்று இராவணனை கொடியவனாகல்லவா பழிக்கிறது!.  புறநானூற்றால் பழிக்கப்படும் இராவணன் எப்படி திராவிட தெய்வம் ஆவான்?

இதற்கெல்லாம் மேலாக, திராவிடர்களின் எதிரி என்று அடையாளம் காட்டப்படும் இராமனின் நாமத்தை கேட்காத காதெல்லாம் ஒரு காதா என்று திராவிட அரசனான சேரன் செங்குட்டுவன் தம்பி, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இராம நாமத்தையே தலையில் வைத்துக் கொண்டாடுகிறாரே! அப்படியென்றால், சேர, சோழ, பாண்டிய மன்னர்களையும் திராவிடர்கள் இல்லை என்று தள்ளி விடலாமா?

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே (சிலப்பதிகாரம் - ஆய்ச்சியர்குரவை)


சங்ககாலப் புலவர்களும் மன்னர்களும், இந்துக்கள். எனவே புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரத்தைக் கூட ஏற்க மாட்டோம் என்று இவர்கள் முரண்டு பிடிக்கலாம். விமோசனம் வேண்டும் என்றால் பௌத்தத்துக்கு மாறுங்கள் என்று பிரச்சாரம் செய்யும் இவர்கள், பௌத்த காவியத்தையாவது ஏற்றுக் கொள்வர்களா? பௌத்த காப்பியமான மணிமேகலை,இராமனை, ”நெடியோன்”- அதாவது, பெரிய கடவுள் என்று சொல்லி விட்டதே! இனி, புத்தரையாவது திட்டாமல் விட்டால் சரி. 

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்குகொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு
(மணிமேகலை, உலக அறவி புக்க காதை, 9-12)


வர்ணத்தில், இராமன் சத்திரியன், இராவணன் அந்தணன். நிலை இப்படி இருக்க, அந்தண இராவணன் எப்படி திராவிடர்களுக்கு தெய்வமானான்?

கருமையும் திடகாத்திரமும் திராவிடத்தின் அடையாளம் என்றால், கருமையைத் தன் பேரிலும், உடலிலும் தாங்கி நிற்கும் சூத்திரனான கார்மேக வண்ணன் கண்ணனை அல்லவா திராவிடர்களின் பிரதிநிதி ஆக்கியிருக்க வேண்டும்? கண்ணனையும், இராமனையும் பார்க்கும் போது இவர்கள் நிறக் குருடர்கள் (colour blind) ஆகி விடுவார்களோ?

சீதைக்கு ஒரு நியாயம், சூர்ப்பநகைக்கு ஒரு நியாயம்; இது எப்படி? ”சூர்ப்பநகையின் மூக்கறுத்த இலக்குவனின் செயலுக்கு பழிவாங்கவே, இராவணன் சீதையைக் கடத்தினான். இருவரும் பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் தான்” என்று ரூம் போட்டு யோசித்து கண்டுபிடித்துள்ளார். ஆஹா, என்ன அறிவு! இராமாயணம் படித்திருந்தால், இந்த வித்தியாசம் புரிந்திருக்கும். இராமனையும், இலக்குவனையும் மணந்து கொள்ள சூர்ப்பநகை வற்புறுத்தினாள்; நாங்கள் இருவரும் மணமானவர்கள், ஆகையால் இந்தக் கோரிக்கையை விட்டு விடு என்று இருவரும் சொன்னார்கள். கேட்க மாட்டேன் என்று சொல்லி, இராம இலக்குவனர்கள் மீது தாக்குதல் தொடுத்த சூர்ப்பநகையின் மூக்கை இலக்குவன் அறுத்ததாக, இராம காதை கூறுகிறது. ஆனால், சீதையை இராவணன் கபடநாடகமாடிக் கடத்திச் சென்றான். எப்படி இந்த இரண்டு செயல்களும் ஒன்றாகும்? இவர்களால் மட்டும் தான் கற்பழிப்பையும், விபசாரத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியும்!.

தீபாவளியைத் தூற்றிக் கட்டுரை எழுதிய இதே கஞ்சன் இலையா அவர்கள், நவராத்திரி விழாவின் போது, மகிஷாசுரனுக்கு விழா எடுத்தார். ஏன் தெரியுமா? மகிஷன் திராவிடனாம்! அப்படி என்றால் துர்கை யார்? ஐரோப்பிய, அரேபிய மேதைகளை மட்டுமே  ஏற்றுக் கொள்ளும் இவர்கள்,  மாக்ஸ் ம்யூலர் என்ற ஜெர்மானியர் மகிஷாசுரனைக் கொன்ற அம்பிகை திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்று தனது Sacred Books of the East- ல் குறிப்பிட்டிருப்பதைக் கூட ஒழுங்காகப் படிக்கவில்லை.

இவர்களால் திராவிட தெய்வம் என்று போற்றப்படும் மகாபலியின் முன்னோர், கொடாரா(கொற்றவை) என்ற பெண் தேவதை என்று மாக்ஸ் ம்யூலர் குறிப்பிடுகிறார். இந்தக் கொற்றவை தான் மகிஷனைக் கொன்றதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இப்படி இருக்க, ஒரு திராவிட தெய்வத்தை எதிர்த்த அசுரனை போற்றும் விழாவை, திராவிட விழா என்று கொண்டாடி தனது முட்டாள் தனத்தை அரங்கேற்றிய கஞ்சன் இலையாவின் செயல் தமிழர்களுக்கு புதியதல்ல. இவரால் அடையாளம் காட்டப்பட்ட திராவிட சித்தாந்தத்தின் முன்னோடி, ஈ.வே.ராமசாமி நாயக்கர் எந்த அடிப்படையும் இல்லாமல், சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்த ஈனச் செயல்களை எல்லாம் செய்து விட்டார். அதைப் பார்க்கும் போது, இவர்கள் எல்லாம் “ஈன இளவல்களே”.

பாமரர்களை அடக்கி ஆள்வதற்காக, உயர் வகுப்பினரும்/சாதியினரும் இதிகாசங்களையும், புராணங்களையும் படைத்தனர் என்றும், அந்த ஆதிக்க வெறியினால் சூத்திரர்களையும், ஆதிவாசிகளையும் இழிவாகச் சித்தரித்துள்ளனர் என்று, படைப்பாளிகளையும் கூட விட்டுவைக்கவில்லை.

யார் அந்த ஆதிக்க வெறியர்கள்?
இராமாயணம் எழுதிய வேடர் குலத்து வால்மீகி!
மகாபாரதம் அருளிய மீனவத் தாயின் மகன் வியாஸன்!,
தமிழில் இராம காவியத்தைச் சமைத்த ஓச்சர் (இசை வேளாளர்) கம்பன்! இந்த மூவரின் சாதியும் ஆதிக்க சாதியோ ! 

இந்த நாட்டில், திராவிடர்கள்/ சூத்திரர்கள்/ ஆதிவாசிகள் போன்றோரை ஞான சூனியங்களாக மேல் சாதியினர் வைத்து விட்டனராம்!, இப்போது தான் அவர்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்களாம்! இந்த அடிமைவாதத்தை இந்தியாவில் பரப்பிய பிராடஸ்டண்ட் பாதிரியார் கால்டுவெல்லின் கூட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஏ.பி. ராட்(AP Rott). 1830ல், தொகுத்த தமிழ்-ஆங்கில அகராதியில், தொல்காப்பியர் என்ற அந்தணனும், அமரசிம்மன் என்ற சூத்திரனும் இல்லையென்றால், தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தைச் சார்ந்த அனைத்துப் படைப்புக்களும் விழலுக்கு இறைத்த நீராயிருக்கும் என்று ஒரு பழமொழிக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்தப் பழமொழி என்ன –

பார்ப்பான் தமிழும், வேளாளன் கிரந்தமும், விழவிழலே.

திராவிட மொழியாம் தமிழுக்கு இலக்கணம் வகுத்தது, ஒரு அந்தணன்; வடமொழியின் அகராதியை தொகுத்தது அமரசிம்மன் என்ற சூத்திரன். இப்படி இருக்க, வருணாசிரமத்துக்கு இன பாகுபாட்டைக் கற்பிப்பது எந்த விதத்தில் நியாயம்?


கம்ப இராமாயணத்தில் அனுமன் இராமனை வணங்க முற்படும்போது, ‘’நீ அந்தணன், என்னை வணங்காதே’’ என்று தடுப்பதாக ஒரு இடம் வருகிறது. அதற்கு அனுமன், ‘’நான் வானர குலம், நீவிரோ மனித குலம்; அதனால் உம்மை வணங்குகிறேன்’’ என்று சொல்கிறான்.

வாலியோ, வானர குலத்தில் சத்திரியன்; இராமனோ மனித குலத்தில் சத்திரியன். அனுமன் வானர குலத்தின் அந்தணன். வசிஷ்டன்; மனித குலத்தில் அந்தணன்; இராவணன் அசுர குலத்தில் அந்தணன்; மகாபலி அசுர குலத்தில் சத்திரியன். இன்றும், அசுர குருவான சுக்ராச்சார்யாரின் கோத்திரத்தில் அந்தணர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதிகாச – புராணங்களில் இடம் பெறும் வர்ண பேதங்களை இனவாதமாகத் திரிப்பது விஷமத்தனமே!

பிராமண வர்ணத்தைச் சார்ந்த இராவணனை, சத்திரிய இராமன் கொன்றதும், கொடுங்கோல் அரசனான நரகாசுரனை சூத்திர வர்ணத்தினனான கண்ணன் வீழ்த்தியதும் சாதிகளில் உயர்வு தாழ்வு பார்க்காதே ! அறத்தை கடைபிடித்து நாம் வாழ வேண்டும்! என்ற செய்திகளை நமக்கு வலியுறுத்துகிறது. இதனை நினைவு கூறவே, தீபாவளி கொண்டாடப்படுகிறது

எந்த அடிப்படை ஆய்வும் இன்றி, வர்ணாசிரமத்தை வைத்து இன அரசியலைத் தோற்றுவித்து, பிரிவினையையும், கசப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தி, வேற்று மதத்தினருக்கு துணை போவதைத் தவிர இந்த இனவாத வாதத்திற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. மரபு அணு ஆராய்ச்சி (genome study) இந்த இனவாதம் ஆதாரமற்றது என்று தூக்கி எறிந்தபின்பும், பகுத்தறிவுப் பகலவர்கள் இந்தக் கொள்கையைப் பரப்புவது கயமையே!

சுற்றுச் சூழல் மற்றும் விபத்துக்களைக் காரணம் காட்டி தீபாவளி முடக்கப்பட வேண்டும் என்று வாதிடுபவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பத்து டெசிபல் அளவுக்கு மேல், தினந்தோறும் 5 முறை ஹார்ன் ஒலிபரப்பிகளைப் பயன்படுத்தி நமாஸ் ஓதும் இஸ்லாமியர்களையும், கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப் பிறப்பு என்ற பெயரில் உலகம் முழுவதும் வாண வேடிக்கைகளை நிகழ்த்தும் கிறிஸ்தவர்களையும் கண்டித்ததுண்டா? 

நம் நாட்டில் எழுதப்பட்ட இதிகாஸ புராணங்கள் அனைத்துமே உயர் வகுப்பினர், அவர்கள் வசதிக்காக எழுதிய கட்டுக் கதைகள் என்று சொல்கிறார்கள் இந்தக் கருத்துக்கந்தசாமிகள்.  இதிகாச புராணங்கள் பொய் என்றால், இராவணன், மகிஷன், நரகன், மகாபலி பற்றி இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட்டுப் போக வேண்டியது தானே! அவர்களுக்கு எல்லாம் ஏன் விழா எடுக்க வேண்டும்? சமுதாயத்தைச் சீரழிக்கவும், வேற்று மதத்தவருக்கு களம் அமைத்துக் கொடுக்கவும், தேசத்தைத் துண்டாடுவதற்கும் ஏதுவாகத் தானே இத்தனை நாடகங்களையும் இவர்கள் அரங்கேற்றுகிறார்கள்?

இந்த நாசகார சக்திகளிலிருந்து நம் நாட்டையும், நம் பண்பாட்டையும் பாதுகாத்து, பாரதத்தை பிரிவினையிலிருந்தும், வறுமையிலிருந்தும், அறியாமையிலிருந்தும் மீட்டு, சமத்துவ சமுதாயம் ஏர்ப்பட தீபாவளித் திருநாளை ஆரவாரத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடுவோம்!.

1 comment:

BaSa.Swaminathan said...

Wow... This is such an interesting piece of article... Well researched... keep it up... I am very proud of you...