எனக்கு விடுதலைப் புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்தின் மீது எள்ளளவும் மரியாதை கிடையாது. விடுதலைப் போராட்டத்திற்காகத் துவக்கப்பட்ட இயக்கம் ஒரு தனிமனிதனின் பேராசைகளுக்கு முக்கியத்துவமளித்தது. இன விடுதலைக்காகக் களம் கண்ட மாத்தையா உள்ளிட்ட பல முக்கியத் தளபதிகளைக் கொன்ற வரலாறுடையவர்கள் விடுதலைப் புலிகள். இந்த இயக்கம் ஆதரிக்கத் தக்கதன்று. அமிர்தலிங்கம் தொடங்கி நீலன் திருச்செல்வம் வரை இவர்களுக்கு இணக்கம் காட்டாத தமிழர்களைக் கொன்று போட்டதில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்கள் ஏராளம். இவர்களை நம்பிய ஈழத்து மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு நல்லதோர் தலைவன் இன்று வரை கிட்டவில்லை.
ஆள் முதல் ஆயுதம் வரை போதை மருந்து முதல் போர்த்தளவாடங்கள் வரை கடத்தலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டாலும் நம்புவதற்கு இடம் மிகவிருப்பதும் உண்மை. இது கூட மன்னிக்கப்படலாம். ஆனால் ராஜீவ் காந்தி கொலையும் அதை அவரகள் துடைத்துத் தள்ளியது போலப் பேசிய பாங்கும் அவர்கள் மீதான் சிறிது மீதமிருந்த மரியாதையும் மரிக்கக் காரணமானது. தமக்கு ஆதரவாக இருக்கும் மக்கள் வாழும் நாட்டுடன் நல்லுறவைப் பேண முடியாத ஒரு இயக்கம் எப்படி அரசியல் ராஜதந்திரங்களில் சிறக்க முடியும்? தம்மை வைத்து கெட்ட அரசியல் செய்யும் கூகைகளை நட்பு வட்டத்தில் இருந்து களையெடுக்காது அவர்களை நம்பியோ வேறு காரணங்களுக்காகவோ அவர்களுடன் ஒத்துப் போன நிலைப்படு நகைப்புக்குரியது.
விடுதலைப் புலிகள் இலங்கை அரசின் எதிரிகள். அவர்கள் மீது இலங்கை போர் தொடுத்தது நியாயம். ஆனால் அதில் அப்பாவி மக்களை கொடூரமாகக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றம். தனி ஈழம் மலர்வது லட்சியம் என்று பேசி அது கொண்டு சில குவியல்கள் பணம் சேர்த்தும், சொந்த நாட்டின் ஒரு பகுதியான கச்சத்தீவை இன எதிரி என்று அடையாளப்படுத்திய நாட்டுக்கே விட்டுக் கொடுத்தும் அரசியலில் பிழைத்துக் கிடக்கும் தமிழினத் தலைவர்கள் இந்த மாபாதகத்துக்குத் துணை போனது நம்பிக்கைத் துரோகம்.
இலங்கை இராணுவத் தளபதிகளின் மீதான என் மரியாதை ஜெனரல் டென்சில் கொப்பகடுவா விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை/கண்ணிவெடித் தாக்குதலில் வெடித்துச் சிதறிய போதே சிதறிவிட்டது. அவருக்குப் பிறகு யுத்த தந்திர நிபுணர் என்ற வரையறைக்குள் இலங்கை இராணுவத்தினர் யாருமே வரவில்லை. சமீப காலமாகச் சமபலம் கொண்ட எதிரியுடன் போரிட்டு வெல்லும் வீரத்தைக் கனவிலும் கொள்ளாத சிங்களச் சிப்பாய்களும் அவர்களுக்குத் தலைமையேற்ற ஃபொன்செகாவும் கோழைகளின் பட்டியலில் முதற்பக்கத்தை அலங்கரிப்பவர்கள்.
சீனா மற்றும் பாகிஸ்தானின் உதவியின்றி இலங்கை அரசு இத்தகையதொரு வெற்றியை எண்ணிப்பார்த்திருக்கவும் முடியாது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை தத்தளித்த இராணுவமும் துணிவிழந்த தளபதிகளும் புத்துயிர் பெற்றதற்கும் போரிட்டதற்கும் விடுதலைப் புலிகள் செய்த சில இராஜதந்திரத் தவறுகள் முக்கியக் காரணம். தமிழீழ விடுதலை என்ற தமது லட்சியத்துக்கு எதிராக இலங்கை செய்த இராஜதந்திரப் பிரச்சாரத்தை முறியடிக்காமல் உலக நாடுகளின் நட்பையும் நற்பெயரையும் பெற்ற இலட்சுமண் கதிர்காமரைக் கொன்று போட்டது மோசமான உதாரணங்களில் ஒன்று.
இராஜதந்திர நடவடிக்கைகளை மிகவும் கவனத்துடன் திட்டமிட்டும், நம்பக்கூடாத தலைவர்களை நட்புவட்டத்தில் இருந்து களையெடுத்தும், பேராசைகளைக் கட்டுப்படுத்தியும் இருந்தால் விடுதலைப் புலிகள் உலக மக்களின் மனதை வென்றிருக்கலாம். சிங்களவர்களை வெல்வது அதன்பின் தூசு தட்டும் வேலை. இவ்வளவு இருந்த போதிலும் விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் அவர்களின் சார்பாகப் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இலங்கை அரசு செய்த அடாத செயல்தான் காரணம். மனிதாபிமானம் செத்த மாவோயிஸ்ட் சீனத்தின் உதவியைக் கைக்கொண்டாலும் அவர்களைப் போலவே மனிதாபிமானம் பார்த்தால் எதிரி வளார்ந்து பின்னொரு நாளில் தாக்க வாய்ப்புள்ளது என்று குழந்தைகளைக் கொல்லும் அளவுக்கா போவது? புத்தரின் அழுகையை நிறுத்த என்ன செய்யப்போகிறீர்கள் பிக்குகளே?
முள்ளிவாய்க்கால் போரின் போதும் அதில் பெற்ற வெற்றிக்குப் பிறகும் இலங்கை இராணுவம் நடந்து கொண்ட முறை அவர்கள் அரக்கத்தனம் நிறைந்தவர்கள் என்று பறைசாற்றியது. போர்க்காலங்களில் கொடுங்குற்றங்கள் நடைபெறுவதும் அதனை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தருவதும் ஒவ்வொரு போரின் முடிவிலும் நடைபெறுவது. குற்றங்களுக்குப் படையினரை ஏவிவிட்ட தளபதிகள் தண்டிக்கப்படுவதும் வழக்கம். ஆனால் இலங்கையில் 2009ல் நடைபெற்ற போர்க்குற்றங்கள் சமீபத்திய வரலாற்றில் இரண்டாம் உலகப்போருக்குப் பின் வழக்கொழிக்கப்பட்ட முறைகளைவிட மோசமாக இருக்கிறது. பெண்களைக் கொடூரமாகக் கையாண்டு பின் கொன்று போடுவது உன்னை வென்ற நானே ஆண்மகன் என்று எதிரியிடம் நிரூபிப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இந்தச் சித்திரவதைகள் இல்லாமலே எதிரியைக் கொன்று போடலாம், உயிரிழப்புத் தவிர பெரிய பாதகமில்லை.
ஈழத்து மாந்தர் பலருக்கும் நடந்த விஷயம் இந்தக் கொடூரம் என்றாலும் 12 வயதான சிறுவன் பாலசந்திரன் என்பவனை பிரபாகரன் மகன் என்பதற்காகக் கொன்றிருக்கிறார்கள். அதுவும் உன் தந்தை எமக்கு எதிரி ஆகவே உன்னைக் கொல்வோம் என்று சொல்லிச் சுட்டிருந்தாலும் யுத்த நியாயம் என்று அந்தச் சாவுக்கு ஒரு கௌரவமாவது இருந்திருக்கும். கொல்லமாட்டேன் வா என்று அழைத்துப் போய் அந்தச் சிறுவனுக்கு ஏதோ உணவெல்லாம் கொடுத்து அதன் பிறகு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இந்தச் சிறுவனைப் பார்த்தால் கொல்லத் தோன்றவில்லை. ஏதோ கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் ”போய் விளையாடு போ” என்று அனுப்பி விடலாம் போன்ற முகம். இது மிருகத்தனம் என்று சொல்வதா என்று புரியவில்லை. மிருகங்கள் சற்றே கருணை கொண்டவை. உணவுக்காக அன்றி இப்படி யுத்த வெறி கொண்டு மகிழ்ச்சிக்காகக் கொலை செய்வன அல்ல.
இராஜபக்ஷே அரசு பாலசந்திரன் இறந்தாகக் காட்டப்படும் படங்கள் இட்டுக்கட்டிய கணினி வேலை என்று சொல்கிறது., அப்படி இருந்தால் அநியாயச் சாவில் ஒன்று குறைவு என்று நிம்மதி. ஆனால் இல்லை. இந்தப் படங்கள் உண்மையே என்று நிபுணர்கள் சான்றுரைத்திருக்கிறார்களாம். ஐநா சபை அலங்கோலங்களைக் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டைக் களைய இந்த ஈவிரக்கமற்ற கொலைகளுக்கு நியாயம் வழங்க ஆவன செய்யவேண்டும். செய்யுமா தெரியவில்லை. விடுதலைப் புலிகள் ஒழிந்த பின்னும் இந்திய அரசு தன்னை மதிக்காத இலங்கை அரசை ஏன் தாஜா செய்யவேண்டும் என்பது புரியவில்லை. சீனம் சுற்றுகிறது வங்கக்கடல் வரை வளைக்கிறது என்பது உண்மை தான். ஆனால் சுற்றாதே வளைக்காதே என்று சீனத்திடம் கெஞ்சுவதும் சீனத்தின் அடிவருடி இராஜபக்ஷேவைக் குளிப்பாட்டி மகிழ்வதும் சர்ச்சில் சொன்னது போல முதலை தன்னைத் தின்னாத வரை உயிரோடிருக்கலாம் என்ற நப்பாசையில் முதலைக்குத் தொண்டாற்ற விழையும் முட்டாள்தனம்.
இராஜபக்ஷே அரசை எதிர்த்து இந்திய அரசு களமிறங்குவது நலம். இராஜபக்ஷேவின் மாளிகையில் விருந்துண்டு மகிழ்ந்து ஏப்பம் தவிர வேறு சப்தம் எழுப்பாது சொன்னை திரும்பி இங்கே நின்று வீரம் பேசும் வளவர்களும் கைநிறையப் பரிசு பெற்ற கனிகளும் மனிதாபிமானம் தழைக்க மயிரிழைக்கும் குறைந்த அளவு கூடப் பயன்பெடப் போவதில்லை. ஜெயலலிதா எடுக்கும் முடிவுகள் இவ்விஷயத்தில் திடமாகவும் சரியாகவும் இருக்கின்றன. நாடகக் கம்பெனியார் போடும் டெசோ காட்சிகள் அரங்கு நிறைந்த கூட்டம் கூட்டப்பட்டாலும் அரைக்காசுக்கும் பயனற்றவை. மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கடிதமாவது எழுதவேண்டும். மீனவர் விஷயத்தில் போராடிய பாஜகவின் உதவியைப் பெற்று ஈழத்தமிழர்களின் வாழ்வில் இனியும் நிம்மதிக்கு வழிசெய்ய வேண்டும்.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
No comments:
Post a Comment