ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 1 September 2012

திராவிடஇயக்கத்தினரின் வெட்டி வாதங்களை வேரறுப்பது எப்படி?

ஆகஸ்டு 19 ஞாயிறன்று தேசிய சங்கப் பலகையின் பயிலரங்கம் நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர் சுப்பு அவர்கள் முகநூலில் தெரிவித்த தகவலின் மூலம் விண்ணப்பித்துப் போயிருந்தேன். திருக்குறளும் சிலப்பதிகாரமும் விவாதிக்கப்படும், அந்தப் புத்தகங்களைக் கொண்டு வருதல் சிறப்பு என்று சொல்லியிருந்தார்கள். தமிழய்யாக்களின் சொல்பேச்சுக் கேட்பது  பள்ளிப்பருவத்தில் இருந்தே பழக்கத்தில் இல்லாததால் குறிப்பெழுதிக் கொள்ள ஒரு சிறு ஏட்டை மட்டும் எடுத்துக் கொண்டு போனேன்.


பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் அவர்கள் கூட்டம் துவங்கும் நேரம், நடைமுறைகள் என்று சங்கத்தின் கூட்டம் போல அறிவிக்க, புத்தகம் இல்லாதோர்  போகலாம் என்று சொல்லிவிடுவாரோ என்று  அச்சத்தை எட்டிப்ப்பார்த்தபடி இருந்தேன். ஆனால் பெரியவர் அப்படி ஏதும் சொல்லவில்லை. நீவிர் வாழ்க. இறைவணக்கம் என்றதும் அவரே திருக்குறட்பாக்களை ராகம் போட்டு நன்றாகப் பாடினார். தத்துவப் பாடல்களுக்குப் பொருத்தமான குரல்.

ஸ்வாமி தியாகராஜன் தலைமை ஏற்றார். அவர் திராவிட/பகுத்தறிவு  மாயையில் திளைத்துத் திகட்டி வெளியேறி தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர். இவரது பேச்சு ஒரு வகையில் சூழலுக்கு வித்தியாசமானதாக இருந்தது. திராவிட இயக்கப் பேச்சுப் பாணி இருந்த போதும் தேசியம் பேசினார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களை பல கோணங்களில் ஆய்ந்து பார்த்திருக்கிறார் என்பது அவரது பேச்சில் புலப்பட்டது.

பன்மொழிப் புலவர், முத்தமிழ் வித்தகர், பேரறிஞர், சிந்தனைச் சிற்பி போன்ற திராவிட இயக்கப் பட்டங்களின் உண்மைத் தன்மையை விளக்கினார். ஒரு விஷயம் புரிந்தது. திராவிட இயக்கத் தலைவர்கள், ‘அறிஞர்கள்’ எவருமே சான்றோர் சபையில் திறம் காட்டிப் பேர் பெற்றவர்களல்லர். அதற்குரிய திறமும் அவர்களுக்கு இருந்ததில்லை என்பது விவாதம் தேவைப்படாத உண்மை. தமக்குக் கைதட்டும் ஒரு கூட்டத்தின் முன் பேசி அவர்களால் பாராட்டப் பெற்று தம்மை அறிஞர் போல் காட்டிக் கொண்டவர்கள்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று பள்ளி கல்லூரிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர் பலருக்கு தமிழ் தவிர வேறு மொழியேதும் தெரியாது. அப்படி இருக்கையில் ஒப்பிலக்கணம் கற்றுத்தர அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றார்.

பிறகு பேராசிரியர் ஞான சுந்தரம் வந்தார். பெயருக்கேற்ற அறிவுத்திறம் என்பதை அவர் பேசிய விதத்தில் இருந்தே கண்டு கொள்ள முடிந்தது. ஒரு நூலில் சொல்லப்பட்ட கருத்துக்களை எப்படி ஆராய வேண்டும் என்ற முறையை எளிமையாக விளக்கினார். அந்த விளக்கங்கள் ஸ்ருதிக்கு எப்படிப் பொருள் கொள்வது என்று என் ஆசார்யர் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சொல்லும் விதத்தை அப்படியே ஒத்திருந்தத்து. தமிழிலும் இது தான் முறை போலிருக்கிறது. நாம் தான் இந்த திராவிடக் கூமுட்டைகளைக் கேட்டுக் கேட்டு ஒதுங்கியிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டேன்.  திருக்குறளில் தேசியம் மட்டுமல்லாது தொல் அறத்தின் (ஸநாதன தர்மம்) வாழ்வியல் வழிமுறைகள் நிறைந்திருப்பதை அவர் வலியுறுத்தவில்லை.... எடுத்துக்காட்டினார்.

ஸம்ஸ்க்ருதம்  கற்றவர் திருவள்ளுவர் என்பதை எளிய எடுத்துக்காட்டுகளில் நிறுவினார். இவரிடம் தமிழ் கற்றோர் கொடுத்து வைத்தோர் என்று எண்ணிக் கொண்டேன். எனக்கு பள்ளியில் வாய்த்த தமிழாசிரிய உடன்பிறப்புகளை நினைத்தேன். தலைவிதியை மீண்டும் ஒரு முறை நொந்து கொண்டேன். கழகம் என்பதற்கு சூதாடுமிடம் என்றொரு பொருள் இருப்பதாகச் சொன்னார் பேராசிரியர். அங்கிருந்து வந்தவர்கள் தமிழய்யாக்கள் ஆனபடியால் தான் நமக்கு ஆர்வத்துடன் தமிழ் கற்க வாய்ப்புக் கிட்டவில்லை என்று தேற்றிக் கொண்டேன்.

ஒன்பதாம் வகுப்பில் தமிழக முதல்வர் கருணாநிதி என்று சொன்னதற்காக ஒரு வாரம் வகுப்புக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டேன். டாக்டர் கலைஞர் கருணாநிதி என்று சொல்லவில்லையாம்... கம்பராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்று தினந்தோறும் வலியுறுத்துவார்கள். வால்மீகி என்ற ஆரிய உயர்சாதிக் காரனின் கற்பனையை வாங்கி வழிமொழிந்தான் கம்பன் என்பார்கள். வால்மீகி ஒரு வேடனாக இருந்துதானே ரிஷியாக உயர்ந்தார்? உயர் சாதி எப்படி வந்தது என்று கேட்டால் ”ஐயரே! உனக்கு எல்லாம் தெரியும்னா ஏண்டா பள்ளிகூடத்துக்கு வாரே?  நான் நடத்துறத உக்காந்து கேளு. இல்லாட்டி ஆப்செண்ட் போட்றேன் வெளிய போயிறு.” என்று மிரட்டப்பட்டதை எண்ணிச் சிரிப்பு ஒரு பக்கம் வந்தது.

பிறகு ராஜாராமன் ஐயா அவர்கள் பேசினார். குறளின் உயர்வையும் அது ஏதோ தமிழுக்கு மட்டும் சொந்தம் என்றும் இந்துக்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போல இந்த மூடப் ப்ரக்ருதிகள் முழங்குவது குற்றம் என்றும் நிரூபித்தார். நல்லவை எதுவுமே துறவிகள் ஞானிகள் சொன்னால் நடக்கும் என்று பங்கிம் சந்திரரின் உதாரணத்தைச் சொன்னார்.

பங்கிம் சந்திரர் இராமகிருஷ்ண பரஹம்ஸரை தரிசிக்க வந்தாராம். அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதமாக இவர் I'm Deputy Collector Bankim Chandra Chatterjee என்று சொல்லியிருக்கிறார். பங்கிம் சந்திரன் என்பதற்குப் பொருள் தெரியுமா? என்றாராம் பெரியவர். ஓ தெரியுமே! பிறைச் சந்திரன், என்று சொன்னாராம் பங்கிம் சந்திரர். அது போல ஆங்கிலேயனைப் பார்த்து வளைந்து வளைந்து வணங்கிக் கொண்டிருக்கிறாய் என்று சொல்லிச் சிரித்து விட்டுப் போய் விட்டாராம் அந்த மஹான். அப்புறம் பங்கிம் சந்திரர் வேலையைத் துறந்துவிட்டு எழுதிய தேசபக்த நாவலே ஆனந்த மடம். வந்தேமாதரம் என்ற தேசபக்திப் பாடலையும் அதில் தந்தார் பங்கிம் சந்திரர்.

மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் குறள் சிலப்பதிகாரம் இரண்டையும் பற்றிச் சிறப்பாகப் பேசினார். தகவலகள் பல அள்ளித்தெளித்தமையால் நான் குறிப்பெடுப்பது சற்றே சிரமமாகிப் போனது. (இதுக்குத்தான் அப்பப்போ கொஞ்சம் எழுதி எழுதிப் பழகிக்கணும். சும்மா டைப் அடிச்சுகிட்டே இருந்தா இப்படித்தான்.) ஆனாலும் குமரி அனந்தன் பேசுற மாதிரி இல்லீங்க என்றால் ஒருவர். அவர மாதிரி இவங்க வேட்டி கட்டலைங்க.. புடவை கட்டியிருக்காங்க... குரல் பெண் குரலா இருக்கு, அவர் குரல் மாதிரி இல்லே என்றேன். என்னை ஒரு மாதிரிப் பார்த்தவர் (இவன் லூசோ?!) அதன் பிறகு என்னிடம் பேசவே இல்லை.I hate comparisons என்று அவரிடம் சொல்ல முடியவில்லை.

கவிக்கோ ஞானச் செல்வம் சிலப்பதிகாரம் பற்றிப் பேசினார். ம.பொ.சி அவர்களிடம் குருகுல வாசம் போலிருந்து சிலம்பைக் கற்றவராம். சிலம்பைச் சிதைத்து கருணாநிதி எடுத்த திரைப்படங்கள் பற்றிப் பேச்சு வந்த போது கதையின் அடிப்படையை மாற்றியது கடும் குற்றம் என்று சொன்னார். கண்ணகியின் இடைக்கும் மாதவியின் இடைக்கும் இடைப்பட்டாடிய கோவலனின் கதையே சிலப்பதிகாரம் என்று சொன்ன சிறுமதியாளரிடம் என்ன இலக்கியத்தரம் எதிர்பார்க்க முடியும்?

தம் வசதிக்காக திராவிட இயக்கத்தார் பல விஷயங்களை வெட்டியும் ஒட்டியும் இலக்கியங்களை சிதைப்பது குறித்து மிகவும் கவலைப்பட்டார். சிலம்பை வாசிப்பதே ஒரு கலை என்பதும் எந்த இலக்கியமும் முறையாகக் கற்றுக் கொண்டு படித்தறிந்தால் அதன் மதிப்பே அதிகம் என்றார்.தேசியம் என்று திருக்குறளிலும் சிலம்பிலும் இருக்காது. கலாச்சார விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பாரத த்தின் ஒற்றுமை புரியும் என்றார்.

உணவு இடைவேளையில் புத்தகக் கடைக்குச் சென்றோம் நானும் என் நண்பரும். பல புத்தகங்கள் படிக்காதவை என்ற போதும்  ஏற்கனவே வாங்கிவிட்ட படியால் வாங்கவில்லை. உணவு சுவையாகவும் சூடாகவும் இருந்தது. உணவு முடித்து வரும் sessionகளில் உறக்கம் வராதிருக்க சற்றே உழைத்து விழிக்க வேண்டியதானது.

பத்திரிக்கையாளர் சுப்பு அவர்கள் திராவிட மாயையைத் தோலுரித்தார். அவர் பேசிய விஷயங்கள் சிலவற்றை எழுதினால் துக்ளக் வாசகர்களின் சுவாரசியம் கெட்டுவிடும். ஆனால் அண்ணாத்துரை பேரறிஞர் என்ற பிம்பத்தை இடது கையால் சாதாரணமாகத் தட்டி உடைத்துப் போட்டார். ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களோடு அண்ணா கம்பராமாயணாம் குறித்து நடத்தியது வாதமே அல்ல என்று நிறுவினார். இப்படியெல்லாமா நடக்கும் என்று பல கேள்விகளை எழுப்பியது இப்படித்தான் நடந்தது என்று அவர் பேசிய பேச்சு.

இல. கணேசன் அவர்கள் திருக்குறளிலும் சிலம்பிலும் உள்ள தேசியக் கருத்துக்களை கலாச்சார ஒற்றுமைக்கான சான்றுகளை எடுத்துப் பேசினார். ஓஹோ! அப்ப தேசியக் கட்சிக்காரர்களும் தமிழ் இலக்கியம் எல்லாம் பேசுவாங்க போலிருக்கு!! இங்க என்னமோ அவங்க எல்லாம் இந்தி தவிர வேறெதுவும் பேசமாட்டாங்கன்னு ஒரு படம் காட்றாங்களே.. அதுவும் பொய்யாடா? வெளங்கிருவீங்கடா நீங்க...

ஆக திராவிடம் என்ற பொய் உருவாக்கி வைத்திருக்கும் மாயப் பிம்பத்தை உடைப்பது எப்படி என்று ஒரு அடிப்படை விவரம் தெரிந்தது. திராவிடம் என்பது பொய். அது மாயை, கானல் நீர் போன்றது என்று நான் தெளிவாக இருந்தாலும், அந்த மாயப் பிம்பத்தை உடைக்கும் வித்தை எப்படி என்பதை ஒருவாறு கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளேன். இன்னும் பல கட்டப் பயிற்சி முகாம்கள் இருக்குமாம்.  எதிர்நோக்கி இருக்கிறேன்.  வந்தே மாதரம்.

(இது இரண்டு வாரங்களுக்கு முன் எழுதியிருக்க வேண்டியது. அலுவல்கள் காரணமாக இதைச் தள்ளிக் கொண்டே போய் இப்போது எழுதியுள்ளேன். நிகழ்வுகள் குறித்த குறைகள் தவறுகள் என் நினைவாற்றலின் பாற்பட்டதே. குறைகளுக்கு வருந்துகிறேன்.)

1 comment:

Narayanan said...

good one Sir. keep posting.