ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 27 August 2012

வேதாந்தம் படும் பாடு - பாகம் 2

கீழே உள்ளது இதன் தொடர்ச்சி....

உனக்கெப்படித் தெரியும் என்று கேள்வி வரும். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் வேதாந்தியோ மெய்ஞ்ஞானத் தேடல் உள்ளவனோ அல்ல. கொஞ்சம் விவாதம் செய்வேன். அதற்காகவும் அதன் மூலமும் கொஞ்சம் கற்பேன். என் குருநாதர் போற்றுதற்குரிய நிறைஞானி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் வேதாந்தம் கற்க அடிப்படைத் தேவை என்னென்ன என்று தம் அருளுரை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.


இதோ அந்தக் காணொளி.
ஆசார்யரின் அருளுரைகளைச் சற்றே கூர்ந்து கேட்டுக் கொண்டதால் சிலரது வினைகள் எதிர்வினைகளைக் காணும் போது சிரிப்பு வரும். அவர்கள் தவறு செய்துவிட்டு அது சரியென்று வாதிடுகிறார்கள், மண்டையில் தட்டி பேசாதே என்று சொல்லலாம் என்று  தோன்றும். ஆனால் சபை நாகரிகம் கருதி பேசாதிருந்து விடுவேன். நேர் நேராக சில விஷயங்கள் பேசினால் புளிமா ஆகிவிடுவதால் இப்படி ஒரு பதிவு.

இனிவரும் விஷயங்கள் குருநாதர் அருளுரையில் இருந்து நான் புரிந்து கொண்டவை. இதன் பெருமைகள் அனைத்தும் குருநாதரைச் சார்ந்தது. இதில் குற்றங்குறைகள் ஏதுமிருப்பின் அது என் புரிதலின் குறைபாடே ஆகும்.

வேதாந்தம் கற்பதன் நோக்கம் முக்தி அடைவது. அதாவது இறைவனுடன் இரண்டறக் கலந்துவிடுவது. அதற்கு மிக முக்கியமான சில தேவைகள் உள்ளன. அவை:
  • விவேகம்
  • வைராக்யம்
  • பொறுமை
  • குருவருள்
விவேகம் என்பது என்ன? 

பரப்ரம்ஹம் என்ற இறையை உணர்வதே லட்சியம் என்ற தெளிவே விவேகம்.

வைராக்யம் என்பது என்ன?

பரப்ரம்ஹம் என்ற இறை மட்டுமே நிலையானது. மற்றவை நிலையற்றவை. ஆகவே பரப்ரம்ஹம் குறித்த விஷயங்களில் மட்டுமே நாட்டம் கொள்வேன் என்று தீர்மானமாக இருப்பது. எனக்கு விதிக்கப்பட்டவற்றை நான் செய்கிறேன் பலன் எதிலும் நாட்டம் தேவையில்லை என்று கடமை உணர்வுடன் செயல்படுவது. இது நிஷ்காம்ய கர்மா என்று அறியப்படும்.

பொறுமை என்பது என்ன?

பொறுமை அல்லது பொறுத்தல் என்பது தன்னால் எதிர்வினை செய்ய இயன்ற போதிலும் செய்யாது நடப்பவற்றை கவனித்தபடி இறைச் சிந்தனையுடன் இருத்தல்.  நன்மை, தீமை, சுகம், துக்கம் என்று பிரித்துப் பாராமல் எல்லாவற்றையும் இறைச் சிந்தனையுடன் சகித்துக் கொண்டிருத்தல்.

குருவருள் என்பது என்ன?

ஆன்றவிந்தடங்கிய ஒரு சான்றொன் குரு என்றறியப்படுவார். அதாவது இறை சார்ந்த பல விஷயங்களை ஆய்ந்து, அவற்றை கடைப்பிடித்துத் தேர்ந்து, அத்தகு உயர்நிலையில் இருப்பினும் தன்னடக்கத்துடன்  

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்   
மலையினும் மாணப் பெரிது 

என்ற வள்ளுவன் வாக்குக்கு மூலமாயிருப்பவர் குரு.

அத்தகைய குரு ஒருவர், தான் உணர்ந்து தேர்ந்த இறையை உணர்ந்து தெளிய ஏற்றவன் இவன் என்று தேர்வு செய்து ஒருவனைச் சீடனாக ஏற்று அவனுக்கு அந்த வேதாந்த தத்துவத்தை உபதேசித்து முக்திக்கு ஞான நெறி காட்ட வேண்டும்.

இவையெல்லாம் சேர்ந்த பக்குவ நிலையே வேதாந்த ஞானம் பெற உற்றது. இவையல்லாது கற்ற மற்றதெல்லாம் விற்றதைப் பெற்ற சிற்றறிவே.

No comments: